நம் உடலிலுள்ள ஐம்புலன்களைக் கொண்டே இந்த வாழ்க்கையை பலவிதங்களில் அனுபவிக்கிறோம். ஆனால், வாழ்வின் இறுதி தருணத்திலும் கூட நிறைவேறாத ஆசை என்று இருக்கத்தான் செய்கிறது. ஐம்புலன்களால் முழுமையை அடைய முடியாதபோது, முழுமையை அடைய வழி என்ன என்ற கேள்வி எழுகிறது! அதற்கான விடையாய் இந்தக் கட்டுரை அமைகிறது!

சத்குரு:

மனிதனாய்ப் பிறந்த உடனேயே நம் வாழ்க்கை ஏனோ இத்தனை சிக்கலாகிவிட்டது. வேறு எந்த ஒரு உயிரினமாய் இங்கு பிறந்திருந்தாலும், வயிறு நிறைந்துவிட்டால், வாழ்வில் நிறைவு வந்துவிடும். ஆனால் மனிதனாய்ப் பிறந்துவிட்டாலோ, வயிறு காலியாக இருந்தால், ஒரே ஒரு பிரச்சினை - உணவு. வயிறு நிறைந்துவிட்டாலோ, நூறு பிரச்சினைகள்! உலகின் மற்ற எல்லா உயிர்களுக்கும், பிழைப்பு நடந்துவிட்டால், வாழ்க்கை நிறைவடைந்து விடும். ஆனால் ஒரு மனிதனுக்கோ, பிழைப்பு நடந்தபின்தான், வாழ்வே துவங்குகிறது.

ஐம்புலன்கள் மூலம் நீங்கள் உணர்வதெல்லாம், உங்கள் பிழைப்பை சரிவர நடத்திக் கொள்வதற்குத்தான். பிழைப்பைத் தாண்டி நீங்கள் வேறு ஏதோ ஒன்றை நாடினால், அதற்கு இந்த ஐம்புலன்களின் உள்வாங்கும் திறன் போதாது.

ஒரு மனிதன், எப்போதும், இப்போது என்ன நிலையில் இருக்கிறானோ அதை விட இன்னும் சற்று விரிவடைய வேண்டும் என்றே ஏங்குகிறான். ஒவ்வொரு மனிதனும் இயல்பாகவே இப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறான். எல்லைகள் இருக்கிறது என்று ஒரு மனிதன் உணர்ந்த அடுத்த நொடியே அதைத் தாண்டிச் செல்லவேண்டும் என்று அவனுக்குப் பிறக்கும் தவிப்பையும், ஏக்கத்தையும், எந்த வகையான அமைதித் தத்துவங்களாலும் அடக்க முடியாது. உதாரணத்திற்கு, உங்களை 5 x 5 அடி அறையிலே சிறை வைக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தச் சிறையை உங்களால் பொறுத்துக் கொள்ளமுடியாது. எனவே, அடுத்த நாள் ‘உங்களுக்கு விடுதலை’ என்று சொல்லி, அந்த அறையில் இருந்து உங்களை விடுவித்து, 10 x 10 அடி அறையிலே சிறை வைத்தால், சிறை வைத்த முதல் நாள் உங்களுக்கு நன்றாக இருக்கும். ஆனால் அடுத்த நாளே இதையும் உங்களால் பொறுக்க முடியாது. எனவே அதற்கடுத்த நாள் அந்த சிறையிலிருந்து விடுதலை செய்து, 100 x 100 அடி அறையிலே உங்களை சிறை வைத்தால், ஒரு வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். ஆனால் அதன்பின், அதுவும் உங்களுக்குத் துயரத்தையே உருவாக்கும். சிறையின் அளவு எதுவாக இருந்தாலும் சரி, அது எல்லைகள் கொண்டு உங்களைத் தடுக்கிறது என்று தெரிந்த அடுத்த நொடி, உங்களுக்கு அது பிடிக்காது. உங்களில் இருக்கும் ஏதோ ஒன்றிற்கு எல்லைக்குள் கட்டுண்டு இருப்பது பிடிப்பதில்லை. அதற்கு எல்லையின்றி இருக்கவேண்டும், எல்லைகள் தாண்டிச் செல்லவேண்டும்.

எல்லையற்றதைத்தான் விழிப்புணர்வின்றி நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால், அதை அடைய எந்த வழியை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்? ஏதோ ஒன்று எல்லைகள் கொண்டிருக்கும்போது அதை பொருள் தன்மையானது என்கிறோம். எல்லைகள் தாண்டிய பரிமாணத்தை நீங்கள் அடையவேண்டும் என்றால், பொருள்நிலை தாண்டிய ஏதோ ஒரு அனுபவம் உங்களுக்கு நிகழவேண்டும். ஆனால் இப்போது உங்கள் வாழ்க்கை அனுபவம் பொருள்நிலையிலேயே அடங்கி இருக்கிறது. இதற்குக் காரணம், ஐம்புலன்கள் கொண்டு நீங்கள் உணரும் பார்ப்பது, கேட்பது, நுகர்வது, சுவைப்பது, உணர்வது ஆகியவற்றைச் சார்ந்தே உங்களின் வாழ்க்கை அனுபவம் முழுவதும் இருப்பதுதான். இதைத் தவிர வேறு எந்த வகையிலாவது நீங்கள் வாழ்வை உணர்ந்திருக்கிறீர்களா? ‘ஏன், ஒரு அசாத்திய கற்பனை உங்களுக்குத் தோன்றினாலும், அந்தக் கற்பனையைக் கூட இந்த ஐம்புலன்கள் தானே ஊட்டி வளர்க்கின்றன! இந்த ஐம்புலன்கள் அமைக்கப்பட்டிருக்கும் விதத்திலே, இவற்றால் பொருள்நிலை தாண்டிய எதையுமே உணரமுடியாது. பார்ப்பதும், கேட்பதும், நுகர்வதும், சுவைப்பதும், உணர்வதும் பொருள்நிலையின் அடிப்படையில்தான் நடக்கின்றன.

ஐம்புலன்கள், எதையும் குறைவான அளவிலேயே புரிந்துகொள்கின்றன. அவை எதையும் இன்னொன்றோடு ஒப்பிட்டே புரிந்து கொள்கின்றன. உதாரணத்திற்கு நான் ஒரு இரும்புக் கம்பியைத் தொட்டால், என் கைகளுக்கு அது குளிர்ச்சியாக இருக்கும். ஏனெனில், அந்த கம்பியின் உஷ்ணத்தை விட என் உடல் உஷ்ணம் அதிகம். இதுவே என் உடல் சற்றே குளிர்ந்திருக்கும் போது, அந்த இரும்புக் கம்பியை நான் தொட்டால், அதே கம்பி இப்போது எனக்கு சூடாக இருக்கும்! அதாவது, இந்த ஐம்புலன்களால் நாம் பெறுவது உண்மையான அனுபவம் அல்ல. ஐம்புலன்கள் மூலம் நீங்கள் உணர்வதெல்லாம், உங்கள் பிழைப்பை சரிவர நடத்திக் கொள்வதற்குத்தான். பிழைப்பைத் தாண்டி நீங்கள் வேறு ஏதோ ஒன்றை நாடினால், அதற்கு இந்த ஐம்புலன்களின் உள்வாங்கும் திறன் போதாது.

எல்லையற்று விரிவதற்கு பொருள்நிலையிலே முயற்சி செய்வது, நிலவிற்கு நடந்தே செல்ல முயற்சிப்பது போல. அப்படி நீங்கள் நடக்கத் துவங்கினால், இந்த உலகைச் சுற்றி வலம் வரலாமே தவிர்த்து, நிலவிற்குச் செல்லமுடியாது. பௌர்ணமி வரவர, ஒவ்வொரு நாளும் நிலவு பெரிதாகத் தெரியும் நிலையில், அதனருகே செல்வது போன்ற பிரமை உங்களுக்கு உருவாகலாம். ஆனால் நிஜத்தில் நிலவருகே சென்றிருக்க மாட்டீர்கள்... சுற்றிச்சுற்றி வலம் வந்து கொண்டிருப்பீர்கள். இதுதான் இப்போதும் நடந்துகொண்டிருக்கிறது. ஒருமுறை ஆரம்பித்துவிட்டால், எங்கு, எப்படி, எப்போது நிறுத்துவது என்று நமக்குப் புரிவதில்லை.

யோகப் பயிற்சிகளின் அடிப்படை நோக்கம், இந்த ஐம்புலன்கள் தாண்டிய ஒரு அனுபவத்தை உங்களுக்கு வழங்குவதுதான். இந்த ஐம்புலன்கள் தாண்டி நீங்கள் உணர்வதெல்லாம், பொருள்நிலை சார்ந்தவை அல்ல. அது வேறு ஒரு பரிமாணத்தில் இருக்கின்றன. இதையே இன்னொரு விதமாகப் பார்ப்பதென்றால், நீங்கள் பிறந்தபோது, மிகச் சிறிய அளவிலேதான் உங்கள் உடல் இருந்தது. மெதுவாக, நீங்கள் இவ்வளவு பெரிதாக ஆகிவிட்டீர்கள். இதற்காக ஒவ்வொரு வாரமும் எங்கேனும் சென்று உங்கள் உடலை நீட்டிக் கொள்ள பயிற்சிகள் செய்தீர்களா? பின் இது எப்படி இவ்வளவு பெரிதாக வளர்ந்தது? உள்ளுக்குள் இருந்தேதான் இது வளர்ந்தது, இல்லையா? வெளியில் இருந்து உணவு வடிவில் அதற்கு மூலப் பொருட்கள் கொடுத்தீர்கள், ஆனால் உங்கள் உடல் உள்ளிருந்துதான் இத்தனை பெரிதாக உருவானது. ஒரு வாழைப்பழத்தையோ, ஒரு தோசையையோ நீங்கள் உண்டால், மதியத்திற்குள் இந்த வாழைப்பழம் மனிதனாக உருமாறுகிறது. எனவே இந்த உடலை உருவாக்கும் அடிப்படை காரணியே, உங்கள் உள்ளிருந்துதான் செயல்படுகிறது. அது பொருள்நிலை சார்ந்த ஒன்றல்ல. அந்தப் பொருள்நிலை சாரா பரிமாணத்தோடு நீங்கள் தொடர்பில் இருந்தால், அதோடு தொடர்பில் இருப்பது உங்கள் வாழும் அனுபவமாய் மாறிவிட்டால், அதன்பின் உங்களை வேறெதுவும் விரட்ட முடியாது, உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்தான் இருக்கும்.

உங்கள் வாழ்வே அதைச் சார்ந்து இருப்பது போல் அதில் நீங்கள் ஈடுபடவேண்டும். ஆனாலும், எப்போது அந்த விளையாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

இப்போது நீங்கள் வேறொன்றால் செலுத்தப்படுகிறீர்கள், விரிந்திட வேண்டும் என்ற உங்கள் ஏக்கம்தான் தற்போது உங்களை வழிநடத்துகிறது. ஆனால் அது விழிப்புணர்வின்றி வெளிப்படுகிறது. அவ்வளவுதான் பிரச்சினையே. விரிவடைவதும், அதற்கான ஏக்கமும் பிரச்சினை அல்ல... பிரச்சினை விழிப்புணர்வின்றி செலுத்தப்படுவதுதான். உங்களுக்குள் பொருள்நிலை தாண்டிய பரிமாணம் ஒன்று இருக்கிறது. அதுவே பொருள்நிலையிலான உங்கள் உடலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அந்த பொருள்நிலை தாண்டிய பரிமாணம் இன்னும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை அல்லது உங்கள் அனுபவத்தில், உங்கள் புரிதலில் வரவும் இல்லை. ஏனெனில் உங்கள் உள்வாங்கும் திறன் தற்போது உங்கள் ஐம்புலன்களால் கட்டுண்டு இருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

எப்போது உங்கள் உள்வாங்கும் திறன், ஐம்புலன்களின் உணர்வை விட அதிகமாக இருக்கிறதோ அப்போது இயல்பாகவே உங்களுக்குள் இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். அதன்பின் நீங்கள் செய்யும் ஒவ்வொன்றுமே விழிப்புணர்வோடுதான் நடக்கும். உண்பதோ, வேலை செய்வதோ, அல்லது வேறு எதுவாக இருந்தாலும், அவை விழிப்புணர்வோடு நமது தேர்வின் அடிப்படையில் நடக்கும்போது, அழகாக இருக்கும். அப்படியில்லாமல் அந்தச் செயல் விழிப்புணர்வின்றி, உந்துதலின் பேரில் நடந்தால், அது மோசமானதாக இருக்கும். அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

ஒருமுறை பின்லாந்து நாட்டைச் சேர்ந்த இரு செல்வந்தர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அதில் ஒருவர், “என்னிடம் இருக்கும் பணத்தை வைத்து, இவ்வுலகையே வாங்கி விடலாம்” என்றார். அதற்கு மற்றவரோ சற்று சாய்ந்து அமர்ந்து, சில நொடி தாமதித்துவிட்டுச் சொன்னாராம், “ஆனால் எனக்கு விற்கும் எண்ணமில்லை.”

பொருள்நிலை தாண்டிய ஒன்று, உங்களுடைய அனுபவத்தில் வரும்போது, திடீரென உங்கள் ஆசைகள் விழிப்புணர்வான செயல்முறையாகிவிடும். ஆனால் தற்போது ஆசை என்பது உங்கள் விழிப்புணர்வில் இல்லாமல் உங்களைப் பின்னிருந்து செலுத்தும் சக்தியாக மட்டும் இருக்கிறது, அது தற்போது ஒரு நிர்ப்பந்தமான செயல்முறையாகவே இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், நீங்கள் ஆசை என்னும் விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்களே ஒன்றைத் தூக்கி வெளியே போட்டுவிட்டு, அதன்பின்னே விருப்பத்துடன் ஓடி, அதை எடுத்துக் கொள்கிறீர்கள். பிறகு இன்னொரு விளையாட்டு விளையாட விரும்புகிறீர்கள். அப்போது வேறொன்றை வெளியே வீசி, அதன் பின்னே ஓடிச் சென்று, அதை இப்போது எடுத்துக் கொள்கிறீர்கள். நீங்கள் ஆசையைக் கையாள்வது இந்த அளவில்தான் இருக்கிறது.

நீங்கள் கால்பந்து விளையாடினால், அந்த இரு கம்பிகளுக்கு நடுவே பந்தைத் தள்ளுவதில்தான் உங்கள் உயிரே அடங்கியிருக்கிறது என்பது போல் விளையாடவேண்டும். இல்லையெனில் அங்கு விளையாட்டே இல்லை. ‘பந்து அதனுள்ளே சென்றாலும், சரி; செல்லவில்லை என்றாலும் சரி’ என்று நினைத்துக் கொண்டு விளையாடினால், அது கால்பந்து விளையாட்டே அல்ல. விளையாட்டின் அந்த 90 நிமிடங்களிலும்தான் உங்கள் உயிரே அடங்கியிருக்கிறது என்பது போல் விளையாட வேண்டும். அப்போதுதான், அந்த விளையாட்டை வேடிக்கை பார்க்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கும் கூட, அந்த விளையாட்டில் லயித்து அதனோடு ஒன்றிவிடத் தோன்றும்.

உங்கள் ஆசை வெளிப்பட்டவுடனேயே விளையாட்டு ஆரம்பமாகி விடுகிறது. உங்கள் வாழ்வே அதைச் சார்ந்து இருப்பது போல் அதில் நீங்கள் ஈடுபடவேண்டும். ஆனாலும், எப்போது அந்த விளையாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்படியில்லாமல், எங்கு இரண்டு கம்பிகளைப் பார்த்தாலும், அதன் நடுவே ஏதோ ஒன்றைத் தள்ள நீங்கள் முயற்சித்தால், அது முட்டாள்தனம். எப்போது நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று புரியாவிட்டால், அற்புதமான விளையாட்டாய் இருப்பதும் கூட முட்டாள்தனமாக மாறிவிடும். ஆசை என்பது விழிப்புணர்வான செயல்முறையாக மாறும்போது, அது ஒரு அற்புதமான சாதனமாக இருக்கும். அதுவே நிர்ப்பந்தமான செயல்முறையாக இருந்தால், அது நம்மை மிக மோசமாக அடிமைப்படுத்திவிடும். பலருக்கும் இதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

பொருள்நிலை தாண்டிய ஒன்று உங்களுக்கு வாழும் அனுபவமாய் மாறும்போது, உங்களுக்குள் இருக்கும் அந்த எல்லையில்லாப் பரிமாணத்தை நீங்கள் தொடும்போது, திடீரென எல்லாமே விழிப்புணர்வான செயல்முறையாகி விடும். அப்போது உங்கள் ஆசையை உங்களுக்கு வேண்டிய வகையில் எல்லாம் நீங்கள் திருப்ப முடியும். இருப்பதிலேயே மிக பெரிதாக நீங்கள் நினைக்கும் ஒன்றை நோக்கிக் கூட உங்கள் ஆசையைச் செலுத்தலாம். நீங்கள் நினைத்தது நடக்கிறதோ, இல்லையோ, அது முக்கியமல்ல. ஏனெனில் இப்போது நீங்கள் மனநிறைவைத் தேடி அதைச் செய்யவில்லை. உங்கள் மகிழ்ச்சி அந்தச் செயலைச் சார்ந்து இல்லை. நீங்கள் வெறுமனே அந்த விளையாட்டை விளையாடுகிறீர்கள். அந்த விளையாட்டை எப்படி விளையாடினால், அது உங்களுக்குள் எப்படி சந்தோஷத்தையும், வேகத்தையும், கிளர்ச்சியையும் உண்டுசெய்யுமோ, அப்படி அந்த விளையாட்டை விளையாடுகிறீர்கள். இப்படி இருந்தால், ஜெயிப்பதும், தோற்பதும் ஒரு பெரிய விஷயமாக இருக்காது.

உங்கள் அமைதியும் மகிழ்ச்சியும் உங்களுக்குள் உறுதிப்படுததப்பட்ட ஒன்றாக இருந்தால், நீங்கள் நினைத்தது நடந்தாலும், நடக்கவில்லை என்றாலும், நீங்கள் அமைதியாகவும், சந்தோஷமாகவும்தான் இருப்பீர்கள். இனி ஆசை ஒரு கட்டாயமான செயல்முறையாக இருக்காது. நீங்கள் விரும்பும் எந்த விளையாட்டை வேண்டுமானாலும் விளையாடலாம், அது உங்களை எவ்வகையிலும் பாதிக்காது.

உண்பதோ, வேலை செய்வதோ, அல்லது வேறு எதுவாக இருந்தாலும், அவை விழிப்புணர்வோடு நமது தேர்வின் அடிப்படையில் நடக்கும்போது, அழகாக இருக்கும். அப்படியில்லாமல் அந்தச் செயல் விழிப்புணர்வின்றி, உந்துதலின் பேரில் நடந்தால், அது மோசமானதாக இருக்கும்.

ஆனால் உங்கள் உள்நிலையை இதுபோல் நிர்ணயிக்காமல், உங்கள் ஆசை நிறைவேறினால்தான் நிம்மதி, நல்வாழ்வு என்று நீங்கள் நினைத்தால், அப்போது ஆசை ஒரு கட்டாயமான செயல்முறையாக ஆகிவிடும். அதன்பின், ‘ஒருவேளை நான் நினைத்தது நடக்காமல் போய்விட்டால்...’ என்ற எண்ணமே உங்களுக்குள் பெரும் துயரத்தை உண்டு செய்யும். நம் ஆசைகளை ஒரு தெளிவோடு அணுக வேண்டுமென்றால், அதற்கு முதலும் முக்கியமானதுமான படி, நம் வாழ்க்கை அனுபவம் அல்லது வாழ்க்கை பற்றிய புரிதல், பொருள்நிலை தாண்டி சிறிதேனும் விரியவேண்டும். பொருள்நிலை தாண்டிய ஏதோ ஒன்று நம்மைத் தொடவேண்டும், அதை நாம் அனுபவப்பூர்வமாக உணரவேண்டும் என்ற முயற்சியில் தான் நாம் யோகப் பயிற்சிகள் செய்கிறோம். யோகா என்பது வெறும் ஒரு எண்ணமாகவோ, பாடமாகவோ கற்பிக்கப்படாமல், பொருள்நிலை தாண்டிய பரிமாணத்தை அனுபவப்பூர்வமாக உணர்வதற்கான ஒரு எளிய கருவியாகவே வழங்கப்படுகிறது.

எல்லையில்லா சாத்தியத்தை நாடிச்செல்லும் வழியில் உள்ள பல முக்கியமான முட்டுக்கட்டைகளில் ஒன்று, நம் மனம் வேலை செய்யும் விதம். உங்கள் மனதைப் பிரயோகித்து பலவிதமான எல்லைக்கோடுகளை வரைந்து கொள்கிறீர்கள். நீங்கள் இந்த எல்லைகளோடு உங்களை அடையாளம் கொள்ளும்போது, மேலும் பல எல்லைகளை உருவாக்கிக் கொள்கிறீர்கள். உதாரணத்திற்கு, நீங்கள் இந்தியனாக மிக வலிய அடையாளத்தை ஏற்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். பின், உங்களை ஒரு இந்தியனாக நீங்கள் நம்புவதால், இந்த நாட்டின் வடிவமே உங்களுக்குள் ஒரு ஆழமான உணர்வை உண்டு செய்கிறது. இந்தியாவின் வரைபடமே ‘பாரத மாதா’வாகத் தோன்றுகிறது. அதேபோல் உங்களை ஒரு அமெரிக்கராகவோ, ஆஸ்திரேலியராகவோ அல்லது வேறு நாட்டவராகவோ அடையாளம் கொள்ளும்போது, அந்தந்த நாட்டிற்கேற்ப, உங்கள் உணர்வுகளும், ‘எது சரி, எது சரியல்ல’, ‘எது ஏற்கக்கூடியது எது ஏற்கக் கூடியதல்ல’ என்பது போன்ற கட்டுப்பாடுகளும் நிர்ணயமாகி விடுகிறது. அதன்பின் உங்கள் மனம், இப்படி சேகரிக்கப்பட்ட அடையாளங்களைச் சுற்றியே வேலை செய்கிறது. இது வெறும் நாட்டோடு நிற்பதில்லை. உங்கள் மதம், மொழி, இனம், நீங்கள் ஆணா, பெண்ணா என இன்னும் ஆயிரம் ஆயிரம் வழிகளில் இது நீள்கிறது. உங்கள் அடையாளங்கள் ஆழமாக ஆக ஆக, உங்கள் எல்லைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

உங்களுக்குள் உள்ள ஒன்று எல்லையற்றுப் போக ஏக்கம் கொள்கிறது. ஆனால் உங்கள் மனமோ எல்லைகளை வகுத்துக் கொண்டிருக்கிறது. இதனால் கருத்து வேறுபாடுகளும், சண்டை சச்சரவுகளும் மிக எளிதாகக் கிளம்பும். நீங்கள் குழந்தையாக இருந்தபோது, இப்படி எதனோடும் அடையாளம் கொள்ளாதபோது, இந்த உலகம் எப்படி இருக்கிறதோ, அதை அப்படியே பார்த்தீர்கள். அங்கு இந்தியாவும் இல்லை, பாகிஸ்தானும் இல்லை, ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை. எல்லாவற்றையும் உயிராகப் பார்த்தீர்கள். அப்போது, எல்லாமே உங்களுக்குக் குதூகலமாக இருந்தது.

எப்போது எல்லைகளை வகுக்க ஆரம்பித்தீர்களோ, அதன்பிறகு மெதுமெதுவாய் உங்கள் சந்தோஷம் காணாமற் போய், உங்கள் முகம் தொங்கிப் போக ஆரம்பித்துவிட்டது. நீங்கள் ஐந்து அல்லது ஆறு வயதுக் குழந்தையாக இருந்தபோது எடுத்த உங்கள் புகைப்படம் ஒன்றைப் பாருங்கள். அதோடு உங்களின் இன்றைய முகத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், உங்கள் முகம் மெதுமெதுவாய் நீண்டுகொண்டே வந்திருக்கும். இது பூமியின் புவியீர்ப்பு சக்தியினால் என்று நினைத்துக் கொள்ளவேண்டாம்! இந்த தொங்கிய முகம், ஆயிரமாயிரம் வழிகளில் உங்களை நீங்கள் சிறைப்படுத்திக் கொள்வதால் உண்டானது. உங்கள் சுதந்திரத்தில் எது தலையிட்டாலும், தடைவிதித்தாலும் அது இயல்பாகவே காலப்போக்கில் உங்களைத் துயரத்திற்கு உள்ளாக்கும். தடை எங்கு நிகழ்கிறது என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் சுதந்திரமாக செயல்படக்கூடிய உங்கள் திறனில் நீங்கள் எல்லைகளை உருவாக்கினால், ஏன் என்று தெரியாமலேயே உங்கள் முகங்கள் நீண்டுவிடும். உங்கள் சந்தோஷம் அப்படித்தானே காணாமற் போயிருக்கிறது? நீங்கள் தவறாக எதுவுமே செய்யவில்லை. உங்கள் வாழ்க்கையை சரியாகவே நடத்திக் கொண்டு வந்திருக்கிறீர்கள் - படித்தீர்கள், பட்டம் வாங்கினீர்கள், வேலைக்குச் சென்றீர்கள், கல்யாணம் நடந்தது, பிள்ளைகள் பிறந்தார்கள், எல்லாம் சரியாகவே நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் உங்கள் முகம் மட்டும் நீண்டு கொண்டே போகிறது. காரணம், நீங்கள் உருவாக்கிக் கொண்டுவிட்ட அடையாளங்கள் உங்களை ஒரு கட்டுக்குள் இறுக்கி, மெதுமெதுவாய், உங்களுக்கே தெரியாமல், மூச்சுவிடுவதையும் கூட உங்களுக்கு சிரமமாக்கிக் கொண்டிருக்கிறது.