Question: சத்குரு, அகங்காரத்தை விடுதல் - தன்னை உணர்தலுக்கு அவசியம் என்கிறார்கள். அதைப் பற்றிச் சொல்லுங்கள்...

சத்குரு:

உங்களுக்குள் அகங்காரம் இருக்கிறதா? எங்கே இருக்கிறது என்று காண்பியுங்களேன்?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
Question: கேள்வியாளர்: உள்ளுக்குள்ளே...

சத்குரு:

உள்ளேயா? சரியாகக் காண்பியுங்கள். உங்களுக்குள் உள்ள சில பகுதிகள் அழகாக இருக்கலாம். சில பகுதிகள் அருவறுப்பாக இருக்கலாம். அருவறுப்பான பகுதிகளை மிஸ்டர் அகங்காரம் என அழைக்கிறீர்கள். அருவறுப்பாக ஏதோவொன்றை செய்துவிட்டால், உடனே அது நானல்ல, அது மிஸ்டர் அகங்காரம் என்கிறீர்கள். உங்கள் அருவறுப்பான பகுதிகளை நீங்கள் பார்க்க விரும்பவில்லை. இவையெல்லாம் மிஸ்டர் அகங்காரம் செய்தது எனச் சொல்ல விரும்புகிறீர்கள். ஏதாவது நல்லது செய்யும்போது மட்டும் "இது நானே செய்தது" (அனைவரும் சிரிக்கின்றனர்), இல்லையா?

நீங்கள் கோவிலுக்குப் போனாலும் சரி, வேலைக்குப் போனாலும் சரி, உங்களிடம் இருப்பதை வைத்துத்தான் நீங்கள் செயல்பட முடியும்.

தனிநபர் (individual) என்ற வார்த்தையின் மூலச்சொல் ‘பிரிக்க முடியாதது’ (indivisible). இதை நீங்கள் பிரித்தால் உடல்நலம் இழப்பீர்கள். எனவே, "நான்-எனது அகங்காரம்" என இருவேறாக பிரிப்பதை மனக்கோளாறு என்றே சொல்லவேண்டும்.

மனக்கோளாறு முற்றாத, சிகிச்சை தேவையில்லாத ஒரு நிலையில் தற்போது நீங்கள் இருக்கலாம். ஆனால், உடல்நலம் குறையத் துவங்கிவிட்டது. நல்லது நடக்கும் போதெல்லாம் அது நான், மோசமானது நடக்கும் போதெல்லாம் - அது எனது அகங்காரம். இதைத்தான் சிறிய அளவிலான மனக்கோளாறு என்கிறேன்.

அகங்காரம் என்பது இப்போது எல்லோரும் பயன்படுத்தும் வார்த்தையாகிவிட்டது. சரி, சொல்லுங்கள், உங்கள் ஒரு அம்சத்தையாவது "இது என் அகங்காரம்" என நீங்கள் முத்திரை குத்த முடியுமா? அப்படி ஒன்று இருக்கிறதா? எது அருவருப்போ அதை உடனே என் அகங்காரம் என்கிறீர்கள். ஏனெனில், நான் அருவருப்பாக இருக்கக் கூடியவன் என்பதைக்கூட ஒப்புக்கொள்ள நீங்கள் விரும்பவில்லை. அன்பான, மகிழ்ச்சியான ஒரு செயல் செய்யும்போது இது என் அகங்காரம் என்று சொல்கிறீர்களா? அப்போது மட்டும் "இது நான்", என்கிறீர்களே! இது தட்டிக்கழிக்கும் தந்திரம்.

ஆன்மீகம் பற்றி படிக்க வேண்டாம் என்று நான் எப்போதுமே மக்களுக்கு சொல்லி வந்திருக்கிறேன். ஆன்மீகம் சம்பந்தமானதை படிக்கவேண்டாம், ஏனெனில் உண்மையில்லாத விஷயங்களை யூகிக்கும் கணத்தில் மனப்பிரம்மைக்கு உள்ளாகிறீர்கள். உங்களுக்கு உண்மையில்லாத எதையும் யூகித்துக் கொண்டால், உண்மைக்கு அருகில் செல்லமாட்டீர்கள். மனப்பிரம்மைதான் நிகழும். உங்கள் கையில் தற்போது என்ன இருக்கிறதோ அதை மட்டும் வைத்து வேலை செய்யலாம். எங்கோ இருப்பதை வைத்து கற்பனையில் லயிக்க வேண்டாம்.

நீங்கள் கோவிலுக்குப் போனாலும் சரி, வேலைக்குப் போனாலும் சரி, உங்களிடம் இருப்பதை வைத்துத்தான் நீங்கள் செயல்பட முடியும். உங்கள் சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் வைத்துதான் நீங்கள் வேலை செய்கிறீர்கள், இல்லையா? பக்தியுணர்வு மகத்தான வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. நான் அன்புடன் இருப்பது - எனக்குள் வித்தியாசத்தை உண்டாக்குகிறது. வேறொருவர் என் மீது அன்பு செலுத்துகிறாரா இல்லையா என்பது பற்றி யாருக்கும் கவலையில்லை. நீங்கள் ஒருவர் மீது அன்பு செலுத்துகிறீர்கள், அதனால் உங்கள் வாழ்க்கை அனுபவம் அழகாகிறது. அவர் உங்கள் மீது அன்பு செலுத்துவதும், செலுத்தாததும் மாற்றம் ஏற்படுத்தாது.

அமெரிக்காவில் ஈஷா மையம் இருக்கிறது. அந்தப் பகுதி தீவிர கிறிஸ்த்துவர்கள் வாழும் பகுதி. மாலை 6 மணிக்கு மேல் உங்கள் காரை அவர் வீட்டிற்கு முன்னே நிறுத்திவிட்டால், துப்பாக்கியுடன் வெளியே வந்துவிடுவார்கள் (சிரிக்கிறார்). அவர்கள் என்னிடம், "கடவுள் என்னை நேசிக்கிறார்" என்பார்கள். அதற்கு நான், "நீங்கள் வாழும் விதத்தைப் பார்த்தால், கடவுளால் மட்டுமே உங்களை நேசிக்க முடியும்," என்றேன். (அனைவரும் சிரிக்கின்றனர்)

வேறு யார் நேசிப்பார்கள்? (சிரிக்கிறார்). கடவுள் உங்களை நேசிப்பது ஒரு பெரிய விஷயமே அல்ல. நீங்கள் வாழும் விதத்தால் உங்களை நேசிக்காமல் யாரும் இருக்க முடியாது, அதுபோல் வாழ்வதுதான் வாழ்க்கை வாழ அழகான வழி. கடவுள் உங்களை நேசிக்கிறார் என்று இந்த பூமியில் வாழும் எந்தவொரு முட்டாளும் சொல்லிக்கொள்ள முடியும். அதில் என்ன பெருமை இருக்கிறது?

நீங்கள் ஒரு தனி நபர், உங்களுக்குள் இரு நபர்கள் இல்லை. ஒருவர்தான் இருக்கிறார், இல்லையா? இருவரை உருவாக்காதீர்கள். இருவரை உருவாக்கும் கணத்திலேயே மனநோயை நோக்கிச் செல்கிறீர்கள். அகங்காரம் என்பது எங்கும் இல்லை, ஆத்மா என்பது எங்கும் இல்லை. எதுவும் எங்கும் கிடையாது. நீங்கள் மட்டுமே இருக்கிறீர்கள். அதிக வார்த்தைகளை நீங்கள் உருவாக்கும்போது, உங்களுக்குள் அதிக பைத்தியத்தை உண்டாக்கிக் கொள்கிறீர்கள். உண்மையில் நீங்கள் மட்டும்தான் இருக்கிறீர்கள் என்பதைப் பாருங்கள்.