சத்குருவிடம் கேட்கப்பட்ட இரண்டு கேள்விகள்... அதற்கு அவர் அளித்த பதில்கள் இங்கே...

Question: அடுத்தவருக்குப் பணிந்துபோவது பலவீனம் அல்லவா?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பணிவு என்பது தலைக்குனிவு அல்ல... மேன்மையான கௌரவம்! கோவைச் சிறையில் நான் வகுப்பு எடுத்தபோது, ஒரு கொலைக் குற்றவாளியைக் காட்டினார்கள். 'சிறையில் அவன்தான் தாதா. மற்றவர்கள் உணவைப் பறித்துத் தின்பான். எதிர்ப்பவர்களின் கையைக் காலை முறிப்பான்' என்றெல்லாம் சொன்னார்கள். விருப்பமில்லாமல்தான் வகுப்புக்கு வந்தான். ஆனால், ஒரு வாரத்துக்குள் அவன் முற்றிலும் கரைந்துவிட்டான்! அதன்பின், சிறையில் ஒருமுறை கைகலப்பு நடந்தது. அவன் தன் பலத்தைப் பிரயோகித்திருக்கக்கூடிய சந்தர்ப்பத்திலும் அமைதியாக இருந்தான். உடலில் சில காயங்களுடன் என் எதிரில் வந்து நின்றான்.

"இத்தனை நாட்கள் எதிர்ப்பவரை எல்லாம் அடித்துத் துவம்சம் செய்திருக்கிறேன். அப்போதெல்லாம் என்னைவிடப் பலசாலி வந்துவிடுவானோ என்று அச்சம் இருந்தது. இன்றைக்கு எதிர்ப்புக் காட்டாமல் நின்றபோது, முன்னெப்போதையும் விட மிகச் சக்தி வாய்ந்தவனாக உணர்ந்தேன்!" என்றான். பணிவு ஒருபோதும் பலவீனம் அல்ல... அதுதான் பலம்! உங்கள் பலத்தைக் காட்ட நினைப்பதுதான் பலவீனம்!

Question: நீங்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவரா? உங்களுக்கும், எனக்கும் என்ன வித்தியாசம்?

சத்குரு:

கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாகத் தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள், அகங்காரத்தின் உச்சியில் இருப்பவர்கள். உண்மையில், அவர்கள்தான் கடவுளிடம் இருந்து மிகத் தொலைவில் இருப்பவர்கள்.

ஞானம் என்பது சிலருக்கு மட்டுமே சாத்தியம் என்று உங்களுக்குச் சொல்லப்பட்டிருந்தால், அதைவிட மாபெரும் பொய் ஏதும் இல்லை. மனிதப் பிறவி எடுத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்தப் பேருண்மையை அனுபவித்து உணர்தலுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

எனக்குச் சாத்தியமாகும் என்றால், அது உங்களுக்கும் சாத்தியமாகும். எப்படி?

அதற்காகத்தான் யோகா. யோகா என்றால் தலைகீழாக நிற்பதல்ல. இன்னொன்றுடன் ஐக்கியமாவது.

உங்களைப் பிரபஞ்சத்திலிருந்து தனிமைப்படுத்திச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் கதவின் தாழ் எங்கிருக்கிறது என்று உணர்த்திவிடும் விஞ்ஞானம்தான், யோகா.

உங்களுக்குள்ளே இருப்பதும், வெளியே இருப்பதும் ஒன்றே என்பதை நீங்கள் என்னைப்போல அனுபவபூர்வமாக எப்போது உணர்ந்து கொள்கிறீர்களோ, அப்போதே இதன் முன் அனுபவித்திராத பேரானந்தத்தை அனுபவிப்பீர்கள்.

அதன்பின், எனக்கும், உங்களுக்கும் ஏது வித்தியாசம்?