கேள்வி: என் திருமணம் மிக எளிமையாக நடக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால், நான் ஒரே மகன் என்பதால், அதை ஆடம்பரமாக நடத்த வேண்டும் என்று என் பெற்றோர் அடம் பிடிக்கிறார்கள். அவர்களைச் சந்தோஷப்படுத்துவதற்காக என் லட்சியத்தை விட்டுக் கொடுப்பதா?

சத்குரு: ஆடம்பரமான திருமணம் பற்றிய கேள்வியாக மட்டுமே இருந்திருந்தால், இதை வேறுவிதமாக அணுகலாம். ஆனால், 'என் சந்தோஷம் முக்கியமா, என் பெற்றோரின் சந்தோஷம் முக்கியமா?' என்று கேட்கிறீர்கள். இதற்கு நான் என்ன பதில் சொன்னாலும், அதைத் தவறாகப் புரிந்துகொண்டு உங்களுக்கு ஏற்றபடி திரித்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

அடுத்தவர் மகிழ்ச்சியில் உங்களுக்கு மகிழ்ச்சி என்பதால்தானே அவர் விருப்பப்படி நடக்க முனைகிறீர்கள்?

அடுத்தவர்களுக்காகவிட்டுக்கொடுக்கப்படும் சந்தோஷம்...?!

ஒன்று மட்டும் நிச்சயம்... இன்னொருவரின் சந்தோஷத்துக்காக விட்டுக் கொடுப்பதாகச் சொல்வது வெறும் கண்துடைப்பு. உண்மையில் இன்னொருவருடைய மகிழ்ச்சி உங்களுக்கு வேதனை தரும் என்றால், அதைச் செய்ய விரும்புவீர்களா? அடுத்தவர் மகிழ்ச்சியில் உங்களுக்கு மகிழ்ச்சி என்பதால்தானே அவர் விருப்பப்படி நடக்க முனைகிறீர்கள்?

சமூகத்தில் நீங்கள் தனி ஆள் அல்ல. எத்தனையோ பேர் உங்களுக்குத் தேவைப்படுகிறார்கள். அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க, சாதுர்யமாக நீங்கள் பலவிதமானக் காய்களை நகர்த்துகிறீர்கள்.

உங்கள் மகிழ்ச்சியை உத்தேசித்துதான் அடுத்தவரின் மகிழ்ச்சியை நீங்கள் முன்வைக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையின் ஒரு பேரம் அது. ஏதோ ஒன்றைத் தியாகம் செய்வது கூட உங்கள் மன விருப்பத்தினால்தானே? அதை யாருக்காகவோ செய்வதாக ஏன் உங்களை ஏமாற்றிக்கொண்டு, வேண்டாவெறுப்பாகச் செய்கிறீர்கள்?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நீங்கள் ஒருவிதமாகச் செய்ய நினைத்தீர்கள். உங்கள் பெற்றோர் வேறுவிதமாகச் செய்ய சொன்னார்கள். அவர்களின் விருப்பத்துக்கு மதிப்பு கொடுப்பது என்று முடிவு செய்துவிட்டால், அதை ஆனந்தமாகச் செய்யுங்களேன். எதற்காகப் புலம்பிக்கொண்டே செய்கிறீர்கள்.

"என் விருப்பப்படி செய்தால், அவர்கள் காயப்பட்டுப் போவார்கள். அவர்கள் விருப்பப்படி செய்தால், என்னைக் குற்ற உணர்வு தாக்கும், அதுதான் குழப்பம்!"

தெளிவான முடிவு எடுக்கமுடியாத போதெல்லாம் பொறுப்பை மற்றவர் தலையில் கட்டிவிட்டு, அவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக உங்கள் மனம் உங்களை ஏமாற்றுகிறது, அதுதான் விஷயம்!

இந்த மாதிரி புத்திசாலி…?!

மரணப் படுக்கையில் இருந்த தொழிலதிபர், தன் மகன்களை அழைத்தார், "என் சொத்தை உங்களுக்கு பிரித்துக் கொடுக்கிறேன். ஆனால், நான் சம்பாதித்த பணம் என்னுடன் வரவேண்டும் என்று விரும்புகிறேன். எனவே, என்னைப் புதைக்கும்போது, கூடவே ஆளுக்கு ஒரு லட்சம் பணத்தை வைத்துப் புதையுங்கள்" என்றார்.

அவர் இறந்த பிறகு, அவர் உடலைப் புதைத்துவிட்டுத் திரும்பும் வழியில் மூத்தவன் சொன்னான்... "நான் தவறு செய்துவிட்டேன். அப்பா இனிமேல் எண்ணிப் பார்க்கப் போகிறாரா என்ன என்று வெறும் பத்தாயிரம்தான் கவரில் வைத்தேன்!

உங்கள் மகிழ்ச்சி எது என்று தேர்வு செய்யும் உரிமை உங்களிடம்தான் இருக்கிறது.

இளையவன் சொன்னான்... "சேச்சே! இப்படியெல்லாம் அப்பாவை ஏமாற்ற எனக்கு இஷ்டமில்லை. நான் நேர்மையாக ஒரு லட்சத்துக்கு செக் எழுதி வைத்துவிட்டேன்!"

யார் புத்திசாலி? அடுத்தவரின் சந்தோஷத்தைக் காரணமாகச் சொல்லிக்கொண்டே, இரண்டாவது மகனைப்போல் காரியத்தை சாதித்துக்கொள்ளும் புத்திசாலிகள் இருக்கிறார்கள்.

உங்கள் மகிழ்ச்சி எது என்று தேர்வு செய்யும் உரிமை உங்களிடம்தான் இருக்கிறது.

உங்கள் சந்தோஷம் எது? அது உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதில் இருந்தால், அதன்படி செய்யுங்கள். அல்லது அடுத்தவர் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதாக இருந்தால், அதன்படி முடிவு எடுங்கள்.

நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைவிட, அதை எப்படிச் செய்கிறீர்கள் என்பதுதான் உங்கள் வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிக்கும்.

வாழ்க்கை ஒரு நீரோட்டமாக மாறட்டும்!

ஆனால், எந்தவிதமான முடிவு எடுத்தாலும், அதற்கு ஒரு பின்விளைவு உண்டு என்பதை மறக்காதீர்கள். எது என்னவாக இருக்கும் என்பது பற்றிய தெளிவான சிந்தனை உங்களுக்கு வேண்டும். உங்களுக்கு ஏற்றதொரு பின்விளைவு கிடைக்க வேண்டும் என்றால், அதற்கேற்ற செயலில் இறங்குங்கள். முடிவு செய்துவிட்டால், எப்படிப்பட்ட பின் விளைவு வந்தாலும், அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளத் தயாராகுங்கள்.

நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைவிட, அதை எப்படிச் செய்கிறீர்கள் என்பதுதான் உங்கள் வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிக்கும்.

வாழ்க்கையை ஒரு நீரோட்டம் போல் வைத்துக்கொள்ளுங்கள். இதுதான் சரி, இது தப்பு என்று எதனுடனாவது உங்களைப் பிணைத்துக் கொண்டீர்கள் என்றால், பாறை போல் இறுக்கமாகிவிடுவீர்கள்.

எந்தக் கருத்துடனும், எந்தத் தீர்மானத்துடனும், எந்த உணர்ச்சியுடனும் உங்களை உறைய வைத்துக்கொள்ளாதீர்கள். பாறை போல் இறுக, இறுக... புதிய அனுபவங்களை எதிர்கொள்ளும் திறனை இழந்துவிடுவீர்கள். உங்களை நீங்களே ஊனப்படுத்திக் கொண்டவராகி விடுவீர்கள்.

அதேபோல், சந்தோஷம் இல்லாமல் எதையும் செய்யாதீர்கள். ஆனந்தமாக இல்லாதிருப்பது மாபெரும் குற்றம். எதைச் செய்தாலும் அது உங்கள் ஆனந்தத்தின் வெளிப்பாடாக அமைந்துவிட்டால், இது சரியா, அது சரியா என்ற சந்தேகங்களே எழாது. இதுபோன்ற கேள்விகளும் மறைந்துவிடும்!