Question: சத்குரு, எனக்கு இந்தியாவிலேயே இருக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் இங்கே கிடைப்பதைப்போல பத்து மடங்கு சம்பளம் கிடைக்கிறது என்று என் அண்ணன் அமெரிக்காவுக்குப் போய்விட்டான். என்னைப் போன்ற இளைஞர்களுக்கு இந்தியாவில் எந்த எதிர்காலமும் இல்லையா? அடுத்த தலைமுறையிலாவது இந்தியா பேர் சொல்லும் அளவுக்கு முன்னேறுமா?

சத்குரு:

இந்தக் கேள்வி வேடிக்கையாக இருக்கிறது.

எனக்கு சங்கரன்பிள்ளைத்தான் நினைவுக்கு வருகிறார்.

இருட்டை விரட்ட விளக்கை ஏற்றாமல், 'எப்போது வெளிச்சம் வரும்?' என்று யாரிடமாவது கையைக் காட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பதா புத்திசாலித்தனம்?

கோடைக்காலம். சங்கரன்பிள்ளை கிராமத்துக்குக் குடி பெயர்ந்தார். ஆறு போகும் பாதை மணல் வெளியாகக் காய்ந்து கிடந்தது. அங்கே ஒரு குடிசை அமைத்து மனைவி மக்களுடன் வசித்து வந்தார்.

மழைக்காலம் வந்தது. ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எல்லாவற்றையும் சுருட்டி எடுத்துக் கொண்டு போன வெள்ளம் சங்கரன்பிள்ளையின் குடிசையையும் விட்டு வைக்கவில்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வெள்ளம் வடிந்தது. சங்கரன்பிள்ளை ஒவ்வொன்றாகத் திரட்டினார். மறுபடி அதே இடத்தில் குடிசை அமைத்தார். இயல்பான வாழ்க்கைக்கு மீண்டும் திரும்ப அவருக்கு ஆறு மாத அவகாசம் பிடித்தது. அதற்குள் அடுத்த மழை வந்தது. வெள்ளம் புரண்டது. குடிசையை அக்கக்காகக் கலைத்து அடித்துப் போனது. சங்கரன்பிள்ளை மீண்டும் பல மாதங்கள் போராடி குடிசையை அதே இடத்தில் அமைத்தார். அடுத்த வெள்ளத்திலும் குடிசை பறிபோனது.

சங்கரன்பிள்ளை ஒரு ஜோசியக்காரனைத் தேடி போனார். தன் ஜாதகத்தைக் காட்டினார். "ஜோசியரே, என் குடிசையை இன்னும் எத்தனை வருடங்களுக்கு இப்படி ஆறு அடித்துக் கொண்டு போகும் என்று பார்த்துச் சொல்ல முடியுமா?" என்று கேட்டார்.

நீங்கள் விழிப்புணர்வுடன், ஆனந்தத்துடன், கவனத்துடன் செயல்பட்டால், உங்களைச் சுற்றி நூறு பேர் பொலிவுறுவார்கள். அவர்களைச் சுற்றி பத்தாயிரம் பேர் வலுப்பெறுவார்கள். அது பத்து லட்சமாக சொற்ப நேரத்தில் பெருகிவிட முடியும்.

ஆறு புரண்டு வரும் பாதையில் குடிசையை அமைக்கக்கூடாது என்ற புத்திசாலித்தனம் இருந்திருந்தால், சங்கரன் பிள்ளை ஏன் ஜோசியரைத் தேடிப் போகப் போகிறார்?

சங்கரன் பிள்ளையைப் போல்தான் நீங்களும் என்னிடம் ஆருடம் கேட்கிறீர்கள்.

இன்றைக்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க உங்களுக்குப் பொறுப்பு இல்லை. ஆனால், ஐம்பது வருடங்களுக்குப் பிறகு, தேசம் என்ன ஆகியிருக்கும் என்று ஆருடம் கேட்பீர்கள், அப்படித்தானே?

உங்களைப் போன்ற பொறுப்பற்றவர்கள் இருக்கும் வரை நீங்கள் இருக்கும் தேசத்துக்கு எப்படி விடிவு காலம் பிறக்கும்? இருட்டை விரட்ட விளக்கை ஏற்றாமல், 'எப்போது வெளிச்சம் வரும்?' என்று யாரிடமாவது கையைக் காட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பதா புத்திசாலித்தனம்?

என்ன நடக்கும் என்று மற்ற கிரகங்களை எல்லாம் கவனித்துக் கணக்குப் போடுவதை விடுத்து, நீங்கள் வாழும் கிரகத்தைக் கொஞ்சம் பொறுப்புடன் கவனியுங்கள்.

தேசத்தை விடுங்கள். எந்தத் தீவிரமான நோக்கமும் இல்லாமல், ஐம்பது வருடங்களில் நீங்கள் என்ன ஆகியிருக்க முடியும்?

நாளைய பொழுதை நீங்கள் விரும்பியபடி அமைத்துக் கொள்ள உங்களுக்குத் துப்பில்லாதபோதுதான், ஜாதகக்கட்டை எடுத்துக் கொண்டு புறப்படுகிறீர்கள்.

நாளைய பொழுதை நீங்கள் விரும்பியபடி அமைத்துக் கொள்ள உங்களுக்குத் துப்பில்லாதபோதுதான், ஜாதகக்கட்டை எடுத்துக் கொண்டு புறப்படுகிறீர்கள்.

இந்த பூமியில் தலைவிதிகளை மாற்றி எழுதியவர்கள் அனைவரும் அந்தந்த கணத்துக்குத் தேவையானதைத்தான் கவனித்து ஆசையுடன் செயல்பட்டார்கள். ஐம்பது, ஐநூறு, ஐயாயிரம் வருடங்கள் கழித்து வேறு யாராவது அதைச் செய்து முடிக்கக்கூடும் என்று அவர்கள் காத்திருக்கவில்லை.

முன்னெப்போதும் இல்லாத அளவு இன்றைக்கு நமக்கு எல்லாம் சாதகமாக இருக்கிறது. ஒன்றாக இணைந்து செயலாற்ற மொழியோ, கலாச்சாரமோ, தொலைவோ ஒரு பொருட்டாக இல்லாத அளவு விஞ்ஞானம் வசதிகளை வழங்கி இருக்கிறது.

நீங்கள் விழிப்புணர்வுடன், ஆனந்தத்துடன், கவனத்துடன் செயல்பட்டால், உங்களைச் சுற்றி நூறு பேர் பொலிவுறுவார்கள். அவர்களைச் சுற்றி பத்தாயிரம் பேர் வலுப்பெறுவார்கள். அது பத்து லட்சமாக சொற்ப நேரத்தில் பெருகிவிட முடியும்.

பத்து லட்சம் பேர் கவனத்துடன் பொறுப்பு உணர்வுடன் முழுமையான ஈடுபாட்டுடன் செயலாற்றினால், அதைப் போன்றதொரு வலுவான சக்தி உலகில் வேறு கிடையாது.

தோற்க முடியாத ராணுவப் படையை வைத்திருப்பதல்ல, வலுவான சக்தி. சரியான வழிகாட்டுதலுக்காக மற்றவர்கள் உங்களை நிமிர்ந்து பார்க்கிறார்களே, அதுதான் எல்லாவற்றிலும் சிறந்த வலுவான சக்தி.

அது இருந்தால், பல கோடி மக்களை இன்றைக்கு இப்பொழுதே எண்ண முடியாத உயரத்துக்கு எடுத்துச் சென்றுவிடலாம். இந்த மாற்றத்தை சட்டம் இயற்றிக் கொண்டு வர முடியாது. தலைவர்களால் வலுக்கட்டாயமாகத் திணிக்க முடியாது. ஒவ்வொரு தனிமனிதனும் தன் பொறுப்பை முழு மனதுடன் ஏற்று, ஆனந்தமாகச் செயலாற்றத் துவங்கினால், இந்த தேசத்தை என்ன... பூமி உருண்டையையே உங்கள் விருப்பப்படி மாற்றிவிடலாம்.

இன்னும் எதற்காகக் காத்திருக்கிறீர்கள்?