ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டுள்ள பலர் சந்நியாசம் ஏற்று சென்றுள்ளனர். அதற்காக, அப்பாதையை ஏற்காதவர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் இல்லை என்று அர்த்தமல்ல. பலருக்கு ஆர்வம் இருந்தாலும், கல்யாணம், குடும்பம், குழந்தைகள் என பல சூழ்நிலைகளின் காரணமாக, அவர்களால் இதற்கென தனிப்பட்ட முயற்சிகள் எடுக்க முடிவதில்லை. இருப்பினும், இவர்கள் இருக்கும் இடத்திலேயே, வளர்ச்சிக்கு சாசுவதமான சூழ்நிலையை எப்படி உருவாக்கிக் கொள்வது என்று இதில் விவரிக்கிறார் சத்குரு...

Question: உண்மையை உணர வேண்டும் என்ற ஏக்கமும், ஆன்மீக நாட்டமும் இருந்தால், நாங்கள் ஆசிரமம் வரவேண்டும் என்றும் கூட கட்டாயமில்லை என்று நீங்கள் சொன்னீர்கள். அப்படியெனில், எங்களுடன் நீங்கள் எத்தகைய தொடர்பு வைத்துக் கொள்வீர்கள்? அதோடு, அடுத்த பிறவி எடுக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சுற்றி வளைத்து, "என் முக்திக்கு 'காரண்டி' தருவீர்களா?" என்று கேட்கிறீர்கள். முக்தி பெறுவதற்கு ஒருவர் எப்போதும் உங்கள் அருகில் இருக்கவேண்டும் என்றில்லை. இது பல வழிகளில் நடக்கமுடியும். அருகில் ஒருவர் இருந்தால், அது ஆழமாய் செல்வதற்கு தொடர்ந்து இருக்கும் வழிகாட்டுதலாய் அமையும். அதற்காக ஆசிரமவாசிகள் அருகில் அமர்ந்து, இதை செய்யுங்கள், அதை செய்யுங்கள் என்று நான் தினமும் வழிகாட்டுகிறேன் என்று அர்த்தமில்லை.

தேவைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மை, வளைந்து கொடுக்கும் தன்மை ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம்.

சக்தி நிறைந்த இடங்களில் வாழ சிலர் விரும்புவதற்குக் காரணம், தங்கள் புத்திக்கு புலப்படாதது தங்கள் மேற்பரப்பு உயிரணுக்களுக்கேனும் புரியட்டும் என்பதால்தான். இக்கணத்தில், 'இங்கிருக்கும் வெப்ப அளவு என்ன?' என்று நான் உங்களிடம் கேட்டால், உங்கள் கைப்பேசியில் 'இன்டெர்நெட்'டை ஆன் செய்து, தட்ட ஆரம்பித்துவிடுவீர்கள். ஆனால் உங்கள் மேற்பரப்பு அணுக்களோ, இங்கிருக்கும் வெப்பநிலையை அறிந்து, அதற்கு ஈடுகொடுக்கும் வண்ணம் தேவையான வேலைகளை உடனுக்குடன் செய்து கொண்டிருக்கின்றன. மேற்பரப்பில் இருக்கும் அணுக்களும் கூட உங்களைவிட அதிக புத்திசாலித்தனம் கொண்டிருக்கின்றன. இவையே இப்படி எனில், இன்னும் ஆழத்தில் இருக்கும் அணுக்களுக்கோ இன்னும் பற்பல விஷயங்கள் தெரியும்.

நம் ஆசிரமம் போல் சக்தி நிறைந்த சூழலில் வாழும் மக்கள், 'என்ன நடந்திடுமோ' என்ற தடுமாற்றம் இன்றி, முதிர்ந்த மனநிலையில், ஒரு தெளிவோடும், நிதானத்துடனும் வாழ முயல்கிறார்கள். ஏனெனில் வாழ்க்கை என்பது 'என்ன ஆகுமோ?' என்ற பயத்துடன் வாழ்வதற்கு அல்ல. முடிவில் மரணம் தான் நிகழும் என்று தெரிந்திருந்தாலும், இந்தப் பயணம் அழகாகவும், அற்புதமாகவும் இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புவதில்லையா? இந்தப் பயணம் அற்புதமாய் இருக்க வேண்டுமெனில், அதை அனுமதிக்கும் இடத்தில் நாம் வாழ வேண்டும். அனுமதிக்கும் இடம் என்றால், அங்கிருக்கும் சமூகம், சக்திநிலை, மனிதர்கள் என எல்லாமே இதற்கு இணக்கமாய் இருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்று மனிதர்கள் வாழும் பல சமூகங்கள் இதை ஆதரிப்பதில்லை.

அறிவிற்குப் புரியும் தர்க்கவாதங்கள் தாண்டி, எதை எவர் செய்தாலும், அவரை முத்திரை குத்தி தனி இடம் ஒன்றில் அடைத்து விடுவார்கள். இது தான் இன்றைய உலகின் நிலை. ஆனால் நேபாளம், பலி, காசி போன்ற இடங்களோ, இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இடங்கள். மறைஞானத்தின் ஆழ்ந்த, அற்புத அனுபவங்களை ஒருவர் பெறுவதற்காகவே உருவாக்கப்பட்டவை. பக்தபூரில் இரண்டடிக்கு ஒரு கோவில் இருக்கும். அங்கு தென்படும் ஒவ்வொரு தெய்வமும், இந்த வாழ்க்கை தாண்டிய ஒன்றை உங்களுக்கு ஒவ்வொரு அடியிலும் நினைவுறுத்திக் கொண்டே இருக்கும்.

இன்று அவ்விடத்தில் பலர் சுற்றிப்பார்க்க வந்தவர் போல் நடந்து செல்கிறார்கள். ஆனால் ஒரு காலத்தில், அங்கு எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு மந்திரம் இருந்தது. ஒரு வகையான வழிபாடு இருந்தது. மனிதர்களிடம் அதற்கேற்ற மனநிலை இருந்தது. நம் இந்தியாவின் கோவில் அமைப்பில், பிரதான தெய்வம் தவிர பிரகாரத்தில் பத்திற்கும் மேற்பட்ட சந்நிதிகள் இருக்கும். அக்கோவிலின் பிரதான தெய்வத்திடம் செல்லும்போது, உதாரணத்திற்கு சிவன் என்று வைத்துக் கொள்வோம். சிவனிடம் செல்லும்போது அவர்கள் ஒருவகையாக இருப்பார்கள். அங்கிருந்து நகர்ந்து அவர்கள் தேவியை தரிசித்தால், அவளிடம் முற்றிலும் வேறு வகையில் இருப்பார்கள். இப்படி இந்த மிகமிகச் சாதாரணமானவர்களும் கூட ஒவ்வொரு சந்நிதியிலும், ஒவ்வொரு தெய்வத்திடமும் வெவ்வேறு வகையாக இருப்பதை பார்க்குபோது பிரமிப்பாய் இருக்கிறது. ஒவ்வொரு கடவுளையும் எப்படி ஆராதிக்க வேண்டும், அணுக வேண்டும் என்பது அவர்கள் இரத்ததில் ஊறியிருக்கிறது.

இது போல் தேவைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மை, வளைந்து கொடுக்கும் தன்மை ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம். இதனால் தான் நம் கலாச்சாரத்தில் இது போன்ற இடங்களை உருவாக்கினார்கள். ஒவ்வொரு இடத்திலும், முற்றிலும் வேறுபட்டவராய் நீங்கள் மாறவேண்டும். இப்படி ஒருசில நிமிடங்களிலேயே விழிப்புணர்வோடு, தேவைக்கு ஏற்ப உங்களை நீங்கள் முழுவதுமாய் மாற்றிக் கொள்ள முடிந்தால், உங்கள் உணர்வுகள் ஓரளவிற்கு நிதானம் பெற்றிடும்.

பரிச்சயமான ஒன்றை மட்டும் அனுமதிக்கும் குடும்பமாய் அன்றி, எல்லோருக்கும் சுதந்திரம் கொடுக்கும் குடும்பமாய் இருந்திடுங்கள்.

உங்கள் உணர்வுகள் நிதானத்துடன் இருந்தால், அப்போது புதியதை, அற்புதமானவற்றை நீங்கள் தேட ஆரம்பித்து விடுவீர்கள். அதிசயம், அற்புதம் என்பது, இதுவரை நீங்கள் அறியாத ஒன்றிற்கே ஏற்படும். ஆனால் இப்பொழுதோ தர்க்கரீதியானவற்றை தவிர வேறெதையும் நீங்கள் ஏற்பதில்லை, காரணம் இன்றைய சமுதாயங்கள் பரிச்சயமானவற்றை மட்டுமே ஆதரிக்கின்றன. தப்பித்தவறி அவர்கள் அறிந்திருந்தவற்றைத் தாண்டி வேறேதேனும் நடந்துவிட்டால், அதை அழித்திடவே அவர்கள் முனைகிறார்கள்.

இவ்வகையில் உங்கள் விருப்பத்திற்கு துணைபோகும் இடத்தில் வசிப்பது நல்லது தான். என்றாலும், அது போன்ற இடத்திற்கு நீங்கள் சென்றுதான் ஆகவேண்டும் என்று கட்டாயமில்லை. நீங்கள் வாழும் வீட்டையே அதுபோல் மாற்றிக் கொள்ளலாம். வீடு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படித்தான் நடந்து கொள்ளவேண்டும் என்ற கட்டுப்பாடுகளை கொஞ்சம் தளர்த்தி, அங்கு பரிச்சயம் அல்லாதவற்றையும் ஏற்று, குடும்பத்தினருக்கு எப்படி வேண்டுமோ அப்படி இருக்க அனுமதியுங்கள்.

நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் மட்டுமே அவர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று கட்டாயமில்லை. அவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், நீங்கள் உங்கள் வழியில் செல்லுங்கள். என் குடும்பதையே எடுத்துக் கொண்டால், முன்பு என் பெற்றோரோ அல்லது பின்னர் என் மனைவி, குழந்தையோ, பரிச்சயமான ஒன்று மட்டுமே எங்கள் குடும்பத்தில் நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தால், இந்நேரம் அவர்களுக்கு பித்துப் பிடித்திருக்கும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் நான் வெவ்வேறு வகையில் நடந்து கொள்வேன். இதுபோன்ற ஒருவருடன் வாழ்வது மிகக் கடினம். ஒரு நொடி மிக அற்புதமானவராய், ஆனால் அடுத்த நொடியே 'யாரடா இவன்' என்று நினைப்பது போல் முற்றிலும் வேறு வகையாக மாறிவிடுவேன். பரிச்சயம் இல்லாத ஒன்றை அவர்கள் தடுக்க நினைத்திருந்தால், இன்று நான் இங்கு இருந்திருக்க முடியாது. இது தான் நிஜம். எப்போதும் ஒரேவிதமாக இருப்பது எனக்கு சாத்தியமல்ல.

இது வேண்டுமென்றே குழப்பம் உண்டாக்கவோ, பிரச்சனை செய்வதற்கோ அல்ல. இது வானிலை போல, அன்று எனக்குள் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதைப் பொறுத்து அமையும். 'இன்று நான் மௌனத்தில் இருப்பேன்', 'இன்று நான் மந்திரம் உச்சரித்துக் கொண்டிருப்பேன்', 'இன்று வேறொன்றை என்னுள் நிகழ்த்திக் கொண்டிருப்பேன்' என்று நான் அறிவிப்பதில்லை. சில நாட்கள் நான் நன்கு பேசிக் கொண்டிருப்பேன். நாம் பேசுவோம், பாடுவோம், ஆடுவோம், விளையாடுவோம். அடுத்த நாளும் நீங்கள் அதையே எதிர்பார்ப்பீர்கள், ஆனால் அதுபோல் நடந்து கொள்ளமாட்டேன். இது வேண்டுமென்றே உங்களை குழப்புவதற்காக நான் செய்வதல்ல. எனக்குள் நான் வேறு ஏதோ நிகழ்த்திக் கொண்டிருந்தேன் என்றால், அடுத்த மூன்று நாட்களுக்கு நான் ஒரு வார்த்தை கூட பேசமாட்டேன். உங்களை பார்க்கமாட்டேன், கண்டுகொள்ளவும் மாட்டேன். நீங்கள் இருப்பதைக் கூட அங்கீகரிக்க மாட்டேன். இது அனைத்தையும் கண்ணைக் கூட சிமிட்டாமல் அவ்வளவு அழகாக சமாளித்தவர் என் மனைவி. அந்த உறுதுணை மட்டும் எனக்கு கிடைத்திருக்காவிட்டால், ஒன்று, குடும்பத்தில் இருந்து நான் வெளியேறி இருப்பேன், இல்லை, நான் செய்யவிருந்த காரியத்தை கைவிட்டிருக்க நேர்ந்திருக்கும் (அதை மறந்திருப்பது சாத்தியமன்று, எனினும்).

அதனால் பரிச்சயமான ஒன்றை மட்டும் அனுமதிக்கும் குடும்பமாய் அன்றி, எல்லோருக்கும் சுதந்திரம் கொடுக்கும் குடும்பமாய் இருந்திடுங்கள். இது கூடாது, அது முடியாது, இது தவறு என்று தடை போடுவதை விடுத்து, எல்லோரும் தம் விருப்பத்திற்கேற்ப வாழக்கூடிய இடமாய் குடும்பத்தை உருவாக்குங்கள். அதுபோன்ற குடும்பமாய் இருப்பது பெரிய சவால் தான் எனினும்... அவ்வாறு இருந்து பாருங்கள்!