பெண்ணை மையப்படுத்தி வந்த பாடல்கள் ஏராளம், பெண்ணை மையப்படுத்தி வந்த புலம்பல்களும் ஏராளம். பலரின் புலம்பல்களுக்கும் போராட்டத்திற்கும், வெற்றிக்கும் அடிப்படை காரணமாய் இருக்கும் பெண்களைப் பற்றி சொல்லப்படும் இந்த வாக்கியத்தில் எவ்வளவு உண்மை உள்ளது? ஆவது பெண்ணாலே, அழிவது...? பதில்...

Question: ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலேன்னு ஒரு வாக்கியம் இருக்கே, அது எவ்வளவு உண்மை?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பெண்களைத் தொலைவில் வைத்தே பார்த்துப் பழகிவிட்ட ஆண்கள் சொன்ன வார்த்தைகள் இவை. பெண்ணை முழுமையாக அருகிலிருந்து பார்க்கத் தவறி விட்டவர்களின் பக்குவமற்ற புலம்பல் இது.

உண்மையில், ஆணுக்குப் பெண்ணோ, பெண்ணுக்கு ஆணோ தாழ்ந்தவரில்லை. ஆண், பெண் என்று இருவரையும் வித்தியாசப்படுத்தப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. இரண்டு பேரும் இல்லாமல் குடும்பமோ, சமூகமோ, உலகமோ, எதுவுமே முழுமையடையாது.

ஆனால், ஓர் ஆணால் உணர முடியாத சில நுட்பமான உணர்வுகளை ஒரு பெண்ணால் உணர முடியும். ஆண் தன்னுடைய புத்தியால் செலுத்தப்படுகிறான். பெண்ணோ தன்னுடைய உள்ளுணர்வால் செலுத்தப்படுகிறாள்.

புத்தி என்பது வெளியிலிருந்து சேகரித்து எந்தத் தரத்தில் கிடைத்ததோ, அந்தத் தரத்தில்தான் செயல்படும். உள்ளுணர்வு வெளி அழுக்குகளால் அசிங்கப்படாதது. தூய்மையானது; புத்தியைவிட உயர்வானது. அதனால், பெண்கள் ஆண்களை விட உணர்வுகளில் மேம்பட்டு இருக்கிறார்கள்.

உலகின் பல விஷயங்களை விஞ்ஞானப்பூர்வமாக பகுத்துப் புரிந்து கொள்ள ஆணுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், அவனுக்கு அருகிலேயே இருந்த பெண்ணின் நுட்பமான உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாமல் போனது. புரிந்து கொள்ள முடியாததின் மீது இயல்பாகவே அச்சம் வரும்.

அச்சத்தால் பெண்ணை ஏறிட்டுப் பார்க்க விடாமல், தன் முரட்டுத் தனத்தால் தாழ்த்தி வைத்தான். தன் உடல் வலுவைப் பிரயோகித்து, புத்தியின் தத்திரங்களைப் பயன்படுத்தி, அவளைத் தன் நிழலில் வைத்திருக்க வேண்டியதை எல்லாம் அவன் செய்து முடித்தான்.

அப்படிச் சொல்லப்பட்ட வார்த்தைகள்தான் இவை.

ஆவது நிச்சயமாக ஒரு பெண்ணால்தான், ஓர் உயிரைத் தன்னுள் வைத்து, உருவம் கொடுத்து இந்த உலகுக்கு உங்களைக் கொடுப்பவள் ஒரு பெண்தான்.

ஆனால், அழிவதற்கும் அவளையே பொறுப்பாக்கிப் பார்க்கிறான் என்றால், அப்புறம் அந்த ஆணுடைய பங்களிப்புதான் என்ன?

ஓர் ஆண் பெண்ணை மரியாதையுடன் உரிய மதிப்புடன் கையாளத் தெரியாவிட்டால், அவளால் அழிந்து போகக்கூடும்.

ஆக்குவதோ, அழிப்பதோ ஏதோ ஒரு திறமை பெண்ணிடம் இருக்கிறதே, எல்லாவற்றையும் அவளிடமே ஒப்படைத்துவிட்டு ஒன்றுக்கும் உதவாதவனாகத்தானே ஆண் இருக்கிறான்?

திறமையான ஆண்கள் நிச்சயம் இந்த வார்த்தைகளை அலட்சியம் செய்வார்கள்.

DIVIDSHUB @flickr