Question: மருத்துவ விஞ்ஞானத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு எவ்வளவோ தூரம் முன்னேறி விட்டோம். ஆனால், நோய்களும், நோயாளிகளும் குறைந்ததாகத் தெரியவில்லையே. எங்கே தவறு நிகழ்கிறது?

சத்குரு:

இந்தப் பூமியில் 150 வருடங்களுக்கு முன்பு நீங்கள் வாழ்ந்திருந்தால் எந்த அளவு உடல் உழைப்பு கொடுத்திருப்பீர்களோ, அதில் நூற்றில் ஒரு பங்குதான் இன்றைக்கு உழைக்கிறீர்கள். விஞ்ஞான வளர்ச்சியால், உங்கள் மூளைதான் அதிகம் வேலை செய்கிறதே தவிர, உங்கள் உடல் பயன்படுத்தப்படாமல் சோம்பிக் கிடக்கிறது. அப்புறம் அது எப்படி ஆரோக்கியமாக இருக்கும்? அன்றைக்கு 60 வயது மனிதன் செய்த வேலைகளைக் கூட இன்றைக்கு 20 வயது இளைஞனால் செய்ய முடியாது.

அன்றைக்கு 60 வயது மனிதன் செய்த வேலைகளைக் கூட இன்றைக்கு 20 வயது இளைஞனால் செய்ய முடியாது.

எனக்குப் பொதுவாகவே காட்டில் நடக்கப் பிடிக்கும். ஒரு நாளைக்கு 20, 30 கிலோ மீட்டர் நடந்தால், நாளின் முடிவில் ஒரு கவளம் பழைய சோறுகூட அமுதமாய் இருக்கும். ஒருமுறை, சிறு குழுவாக சிலர் காட்டுக்குள் நடந்தோம். விடாமல் மழை பெய்ததால், எங்களால் அடுப்பு மூடிச் சமைக்க முடியவில்லை. காட்டினுள் வெகு தூரம் சென்றுவிட்டோம். அங்கு ராணுவத்தினர் கூடாரம் அடித்துத் தங்கியிருந்தனர். அங்கிருந்த அதிகாரி எங்களை வரவேற்று உணவு உபசரித்தார்.

"சில ரகசிய கோப்புகளுடன் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் இந்தக் காட்டில் விழுந்து சிதறிவிட்டது. ஹெலிகாப்டரைக் கண்டுபிடித்து அந்த ரகசியங்களை மீட்பதற்காக ஆறு வாரங்களாக ஒவ்வொரு பகுதியாக நடந்து கொண்டு இருக்கிறோம். நீங்கள் எதற்காக வந்தீர்கள்?" என்று அவர் கேட்டார்.

"நடக்க ஆசையாக இருந்தது. சும்மா ஜாலியாக வந்தோம்" என்று நான் சொன்னபோது, பக்கத்தில் இருந்த சிப்பாயின் வாய் பிளந்தது.

"என்னது..! ஜாலியாக வந்தீர்களா? ஆறு வாரமாக நடந்து நடந்து எங்கள் கால்களெல்லாம் கொப்புளங்கள். நீங்கள் என்னவென்றால் ஜாலியாக நடப்பதாகச் சொல்கிறீர்கள்!"

ராணுவத்தில் போர் இல்லாத நாட்களிலும் வீரர்களுக்குக் கடுமையான பயிற்சிகள் கொடுப்பதற்குக் காரணமே, அந்த அளவு இயங்கிக் கொண்டு இருந்தால்தான் உடல் திறனோடு செயல்படும் என்பதுதான்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

Question: வசதியாக வாழ்வதற்காகத்தானே மனிதன் பல விஷயங்களைக் கண்டு பிடித்தான்? அவற்றைத் துறந்துவிட்டு, மறுபடி காட்டு வாழ்க்கைக்கு எப்படிப் போக முடியும்?

சத்குரு:

கிளப் ஒன்றில், உடல் சுருங்கிப்போன மனிதர் ஒருவர் லேசாக இருமிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.

அவரிடம் ஓர் இளைஞன் வந்தான். "பெரியவரே! நீங்கள் அன்றாடம் 10 சிகரெட்டுகளாவது பிடிக்கிறீர்கள். ஆறு கோப்பையாவது மது அருந்துகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். அத்தனையும் தாண்டி, தள்ளாத வயது வரை வாழ்ந்திருக்கிறீர்கள். எனக்கு நிறைய அறிவுரைகள் சொல்லும் என் அப்பாவிடம் உங்களை அறிமுக்கபடுத்த விரும்புகிறேன். வருகிறீர்களா, தாத்தா?" என்றான்.

"தாத்தாவா? எனக்கு 20 வயதுதான் ஆகிறது, பிரதர்!" என்று பதில் வந்தது.

இப்படி 20 வயதிலேயே உங்கள் உடலுக்கு 60 வயதின் மூப்பு வரவேண்டுமா, யோசியுங்கள். இதேபோல் எல்லோரும் சோம்பியிருந்தால், சில தலைமுறைகள் கழித்து முழுமையான உறுப்புகள் இருந்தாலும், உடல் ஊனமுற்றுப் போய்விடும்.

Question: ஆரோக்கியமாக இருக்க என்னதான் வழி?

சத்குரு:

ஒரு ஜுனியர் டாக்டர், தன் சீனியரைத் தேடி போனார். "என்னிடம் வந்துள்ள நோயாளி இடைவிடாமல் வாந்தி எடுக்கிறார். எல்லாச் சோதனைகளும் செய்து பார்த்துவிட்டேன். என்ன நோய் என்றே புரியவில்லை" என்றார்.

"அவர் டென்னிஸ் ஆடுபவரா என்று விசாரி! ஆடாதவர் என்றால், தினம் ஒரு மணி நேரம் டென்னிஸ் பயிற்சி செய்ய வேண்டும் என்று சொல்" என்றார் சீனியர்.

"ஆடுபவராக இருந்தால்..?

"ஆறு மாதததுக்கு டென்னிஸ் ஆடக்கூடாது என்று சொல்!" என்றார் சீனியர்,

இன்றைக்கு உடல்நலம் அப்படித்தான் இருக்கிறது. பலர் தேவைக்கு அதிகமாக வேலை செய்து உடம்பைக் கெடுத்துக் கொள்கிறார்கள். வேறு பலர் தேவையான அளவுகூட வேலை செய்யாமல், உடம்பைக் கெடுத்துக் கொள்கிறார்கள்.

ஆரோக்கியம் என்பது உருவாக்கப்படுவதில்லை. அதுதான் உடலின் அடிப்படைய இயல்பு. அதை உணராமல் நோய்களை வரவேற்பது நாம்தான்.

உடம்பை ஒழுங்காகப் பயன்படுத்தினாலே, நூற்றில், எண்பது நோயாளிகள் எளிதாகக் குணமாகிவிடுவார்கள். மிச்சம் இருக்கும் இருபதில் பத்து நோயாளிகள் தங்கள் உணவுப் பழக்கத்தைச் சீராக்கிக் கொண்டால், அவர்களைவிட்டும் நோய்கள் விலகிவிடும். ஒரு சமூகத்தில் நூற்றில் தொண்ணூறு பேர் இப்படி ஆரோக்கியமாக இருந்துவிட்டால், மிச்சமுள்ள பத்து பேரின் நோய்களை வெகு சுலபமாகச் சமாளித்துவிடலாம்.

இதயம், மூளை எதையுமே நீங்கள் முழுமையாகப் பயன்படுத்துவதில்லை. உடல், மனம் தவிர, உங்கள் உயிர்ச் சக்தியையும் முழுமையாகப் பயன்படுத்தத் துவங்கினீர்கள் என்றால், உங்கள் வாழ்வில் பல அற்புதங்கள் நிகழும்.

உங்கள் உள்ளங்கையை ஒரு நாளைக்கு ஆயிரம் தடவை திறந்து மூடினால் போதும்... ஒரே மாதத்தில் அந்தக் கை எத்தனை திறனுள்ளதாக மாறுகிறது என்று பார்ப்பீர்கள். அரைகுறையாக மூச்சுவிடாமல், முழுமையாகச் சுவாசிப்பதற்கு பிராணாயாமா பயின்று அதைப் பழக்கமாக்கிக் கொண்டால், உங்கள் நுரையீரல்கள் இப்போது இருப்பதை விடப் பல மடங்கு சிறப்பாகச் செயல்படுவதைக் கவனிப்பீர்கள்.

தினந்தோறும் உடல், மனம், உயிர்ச் சக்தி இந்த மூன்றுக்கும் உரிய பயிற்சிகள் கொடுத்துப் பயன்படுத்தினீர்கள் என்றால், ஆரோக்கியமே உங்கள் வாழ்க்கையின் அமுதமான துணையாகும்!