Question: சத்குரு! நான் ஆன்மீகப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். இப்படியிருக்கும்போது, எனது தேவைகளையும் ஆசைகளையும் அதாவது உண்ணுதல், உறங்குதல், உடலுறவு போன்றவற்றை தவிர்க்க வேண்டுமா?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நீங்கள் மனிதனின் அடிப்படைத் தேவைகளையும், தவிர்க்க முடிகின்ற அவனுடைய ஆசைகளையும் போட்டு குழப்பிக் கொள்கிறீர்கள். உணவும் உறக்கமும் அடிப்படைத் தேவைகள்.

மேன்மையான, நிலையான ஒன்று தருகின்ற இன்பத்தை உணர்ந்துவிட்டால், ஏற்கெனவே உடைந்து நொறுங்கிக் கிடக்கின்ற குப்பைகளை பொறுக்க மாட்டீர்கள்.

அவைகள் ஆசைகளோ, விருப்பங்களோ அல்ல. பசித்தால் உணவு உட்கொள்கிறீர்கள். களைத்தால் உறங்குகிறீர்கள். இவைகள் நீங்கள் உயிர் வாழத் தேவையானவை. இவை தவிர மூன்றாவதான உடல் இச்சை பற்றி பார்ப்போம். உடலுறவு என்பதை திறந்த மனத்துடன் அணுகிப் பார்ப்போம். உடலுறவு கொள்ள வேண்டும் என்பது உங்கள் ஆசையல்ல. ஒரு பக்கம் உங்கள் உடம்பில் சுரக்கும் ரசாயனங்களால் (ஹார்மோன்கள்) நீங்கள் உந்திவிடப் படுகிறீர்கள். அது உங்கள் அறிவை சிறைப்படுத்திவிடுகிறது.

இன்னொருபுறம் உடலுறவு என்பது உங்களுக்கு அபரிமிதமான தேக சுகத்தை அளிக்கிறது. வேறொரு வகையில் பார்த்தால் நீங்கள் இன்னொரு உயிரிடம் தவிர்க்க முடியாமல் ஒன்றாகிவிடத் துடிக்கிறீர்கள். ஆனால் எவ்வளவு நீங்கள் முயற்சித்தாலும் இன்னொருவரோடு ஒன்றாகிவிட முடிவதில்லை. இந்த உண்மையை நிதர்சனமாக உணர்வதென்பது, ஒன்று மரணத் தருவாயில் நிகழலாம், அல்லது இப்போதே விழிப்புணர்வோடு அந்த அனுபவத்தை அடைவதற்கான மாற்று வழிகளைத் தேடலாம்.

"இந்நிலையில் நான் உடலுறவைத் தவிர்த்துவிட வேண்டுமா?" என்று நீங்கள் வினவக்கூடும். இல்லை, தேவையில்லை. உண்மையில் நீங்கள் எதையும் துறக்கத் தேவையில்லை. நான் எப்போதும் சொல்லி வருவதைப்போல, நீங்கள் குழந்தையாய் இருக்கும்போது ஏதாவது ஒரு பொம்மையோடு சொந்தம் கொண்டாடினீர்கள். பஞ்சாலான கரடி பொம்மையையோ (Teddy) (Barbie doll) அல்லது 'பார்பி' பொம்மையோ அதை நீங்கள் எங்கு சென்றாலும் உடன் கொண்டு சென்றீர்கள். அந்த கரடி பொம்மையானது உங்களுக்கு உங்கள் அப்பாவைவிட, அம்மாவைவிட கடவுளை விட ஏன் எல்லாவற்றையும் விட முக்கியமானதாக இருந்தது.

அப்போது நான் உங்களிடம் "பஞ்சாலான இந்த பொம்மை ஒரு பெரிய விஷயமா அதை தூக்கி எறிந்துவிடு" என்று சொல்லியிருந்தால் கேட்டிருப்பீர்களா? நிச்சயமாக மாட்டீர்கள்.

ஆனால் நீங்கள் வளர்ந்த பிறகு உலகை புரிந்து கொண்ட பிறகு, பொம்மைகளை விட சுவாரஸ்யமான பல விஷயங்கள் இங்கு இருக்கின்றன என்று தெரிந்த பிறகு, சிறுவயதில் நீங்கள் கொண்டாடிய அந்த பொம்மை எங்கு கிடக்கிறது என்பதுகூட உங்களுக்கு தெரியாமல் போய்விடலாம். ஒரு காலத்தில் உங்களுக்கு வாழ்க்கையில் மிக முக்கியமாக இருந்த ஒரு விஷயம் இன்று முற்றிலும் மறக்கப்பட்டு உங்கள் கவனத்திலேயே இல்லாத ஒன்றாக மாறிவிட்டது. அந்தப்பொருள் இல்லாதிருப்பது இப்போது உங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.

ஆசைகளின் கதியும் இதுதான். அதைவிட உயர்ந்த ஒன்று இருக்கிறது என்பதை அறியாதபோது கரடி பொம்மையை கட்டிக்கொண்டு அழுதீர்கள். வேறொன்றின் பெருமையையும் சுவையையும் தெரிந்து கொண்ட பிறகு பொம்மைகளின் மீதான கவர்ச்சி இயல்பாகவே உதிர்ந்துவிட்டது. ஆன்மீக முன்னேற்றப் பாதையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாது அமர்ந்து கவனமுடன் மூச்சு விடுவதே கூட எத்தனையோ விஷயங்களைவிட பல மடங்கு அற்புதமான, ஆட்கொள்ளும் படியான அனுபவமாகிவிடும். மேன்மையான, நிலையான ஒன்று தருகின்ற இன்பத்தை உணர்ந்துவிட்டால், ஏற்கெனவே உடைந்து நொறுங்கிக் கிடக்கின்ற குப்பைகளை பொறுக்க மாட்டீர்கள்.