ஆன்மீகம் ஜோதிடம் - என்ன வித்தியாசம்?
ஜோதிடரிடம் போனால் பரிகாரம் செய்ய ஆன்மீகத்தை நாடச் சொல்கிறார். ஆன்மீகத்தை நாடும்போது, "எனக்கு இது நடக்குமா என்று பார்த்துச் சொல்லுங்கள்" என்ற எதிர்பார்ப்புடன் ஜோதிடத்தையும் ஆராய்கிறோம். இது இரண்டும் ஒன்றைச் சார்ந்ததா அல்லது இரு வேறு துருவங்களா? இவைகளுக்குள் உள்ள வித்தியாசம் என்ன? - தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்...
 
 

ஜோதிடரிடம் போனால் பரிகாரம் செய்ய ஆன்மீகத்தை நாடச் சொல்கிறார். ஆன்மீகத்தை நாடும்போது, "எனக்கு இது நடக்குமா என்று பார்த்துச் சொல்லுங்கள்" என்ற எதிர்பார்ப்புடன் ஜோதிடத்தையும் ஆராய்கிறோம். இது இரண்டும் ஒன்றைச் சார்ந்ததா அல்லது இரு வேறு துருவங்களா? இவைகளுக்குள் உள்ள வித்தியாசம் என்ன? - தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்...

சத்குரு:

என்னிடம் பலர் அடிக்கடி கேட்கிற கேள்விகளில் ஒன்று அவர்கள் வாழ்வின் சுழற்சி பற்றியது. ஒரேவிதமான வாழ்க்கைச் சூழலை அடிக்கடி பலரும் சந்திக்கிறார்கள். ஒரேவிதமான சூழலைப் பலமுறை தாண்டி வர வேண்டியிருக்கிறதென்றால், நீங்கள் ஒரே இடத்தை சுற்றிச் சுற்றி வருவதாகப் பொருள்.

இந்த சுழற்சிகள் உங்களை எப்படிக் கட்டுப்படுத்துகின்றன என்பதை ஜோதிடம் சொல்கிறது. இந்த சுழற்சிகளிலிருந்து எப்படி விடுபடுவது என்பதை ஆன்மீகம் சொல்கிறது.

நீங்கள் ஈஷா யோகா மையம் வர வேண்டுமென்றால் இருட்டுப்பள்ளம் என்னும் இடத்தைக் கடந்து வரவேண்டும். நீங்கள் வரும் வழியில் அடிக்கடி இருட்டுப்பள்ளம் எனும் பகுதி தென்பட்டால் அதே இடத்தில் நீங்கள் சுற்றிக் கொண்டிருப்பதாகப் பொருள்.

மனித வாழ்வை நீங்கள் உடல் சார்ந்ததாக மட்டும் பார்த்தால், ஒவ்வொரு விநாடியும் உடல் மரணம் நோக்கிச் சென்று கொண்டிருப்பது புரியும். உடல் சார்ந்து மட்டும் நீங்கள் வாழ்வைப் பார்ப்பீர்களென்றால், அது முதலில் விளையாட்டாகத் தெரியும். பிறகு இன்பமயமாகத் தெரியும். அதன்பிறகு ஒவ்வொரு மூட்டிலும் வலி வந்து வாழ்க்கையே நரகமாகத் தென்படும்.

நல்லவேளையாக மனித வாழ்வென்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல.

உங்கள் வாழ்வின் பிற பரிமாணங்கள் ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றலாம் அல்லது வளரலாம். ஒரேவிதமான சுழற்சி என்று பலரும் சொல்வது அவர்கள் வாழ்க்கைச் சூழல்களைத் தான்.

பெண்களுக்கு உடல்சார்ந்த சில சுழற்சிகளும் உண்டு. ஒவ்வொரு மாதமும் வரும் அத்தகைய சுழற்சிகள் ஒரு நினைவூட்டலாகவும் ஒரு விதத்தில் ஒரு வாய்ப்பாகவுமே வருகிறது. எவ்வளவு மோசமான சூழலும்கூட மாறுவதற்கான ஒரு வாய்ப்புதான்.

அத்தகைய மாதாந்திர சுழற்சிகள் ஆண்களுக்கு இல்லாததால் அவர்கள் பெண்களை விட உயர்ந்தவர்கள் என்று பொருளல்ல.

மனிதகுலம் உருவான காலத்தில் காடுகளில் வசிக்கையில் தங்கள் சமூகத்தைக் காக்கிற பொறுப்பு ஆண்களிடம் இருந்தது. எனவே ஆண்கள் உடலமைப்பே அவ்விதமாக உருவானது.

ஒருவகையில் பார்த்தால் ஆண்களுக்கு மனத்தளவில் அத்தகைய மாத சுழற்சிகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. பெண்களுக்கு உடலளவில் மாற்றங்கள் தென்படுவதால் அவர்கள் எச்சரிக்கையாக இருக்க முடியும். ஆனால் ஆண்கள் இந்த வகையில் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியுள்ளது.

பொதுவாக மனிதர்களுக்கு இத்தகைய சுழற்சிகள் எப்போது வருகின்றன என்பதைப் பார்த்தால், நீங்கள் நல்ல சமநிலையில் இருக்கும் மனிதரென்றால் பன்னிரண்டு அல்லது பன்னிரண்டேகால் ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்தகைய சுழற்சி வருகிறது.

உங்கள் சமநிலை சரியாக இல்லையென்றால் மூன்றாண்டுகளுக்கொரு முறை அந்த சுழற்சி வருகிறது.

உங்கள் சமநிலை மிகவும் பாதிப்புடன் இருந்தால் பதினாறு மாதங்களுக்கொருமுறை கூட அத்தகைய சுழற்சிகளை எதிர்கொள்ள நேரும்.

ஏனெனில் பூமியே ஒரு சுழற்சியில்தான் பயணம் செய்கிறது. நிலவும் ஒரு சுழற்சி வயப்பட்டு சுழல்கிறது.

நீங்கள் போதிய விழிப்புணர்வுடன் எங்கே போகிறீர்கள் என்னும் விழிப்புணர்வை விதைத்துக் கொள்ள முடியாவிட்டால் சிறிய சுழற்சிகளுக்குள் ஆட்படுவீர்கள்.

உண்மையில் சுழற்சிகள் பலவகை. இருப்பதிலேயே மிகப் பெரிய சுழற்சி 144 ஆண்டுகள் கொண்டது. 144 ஆண்டுகளுக் கொருமுறை நிகழும் ஒரு கும்பமேளா கூட உண்டு. நாம் வாழ்கிற காலத்திலேயே சமீபத்தில் அது நடந்தது கூட நாம் பெருமை கொள்ளத்தக்க விஷயம்.

உங்களுக்குள் போதிய விழிப்புணர்வு இல்லையென்றால் உங்கள் சமநிலை மிகவும் பாதிப்புடன் இருந்தால், மிகச்சிறிய சுழற்சிகளை உணர்வீர்கள். ஒரேவிதமான சூழ்நிலை அடிக்கடி ஏற்படுவதாய் உணர்வீர்கள். எல்லோருமே இந்த சுழற்சிக்கு உட்பட்டவர்கள்தான்.

இந்த சுழற்சியை சிக்கிக் கொள்ளக் கூடிய பிணைப்பாக ஆக்கப்போகிறீர்களா, அடுத்த நிலைக்கான வளர்ச்சிக்குப் பயன்படுத்தப் போகிறீர்களா என்பது உங்களைப் பொறுத்தது.

ஜோதிடத்திற்கும் ஆன்மீகத்திற்கும் என்ன வித்தியாசமென்றால், இந்த சுழற்சிகள் உங்களை எப்படிக் கட்டுப்படுத்துகின்றன என்பதை ஜோதிடம் சொல்கிறது. இந்த சுழற்சிகளிலிருந்து எப்படி விடுபடுவது என்பதை ஆன்மீகம் சொல்கிறது.

இந்த சுழற்சிகள் இருப்பதை ஆன்மீகம் மறுப்பதில்லை. ஆனால் அவற்றிலிருந்து விடுபடும் வழிகளை நாம் கண்டறிந்து சொல்கிறோம்.

இந்த சுழற்சிகள் குறித்த விழிப்புணர்வுடன் நீங்கள் வாழ்ந்தால், ஒருவிதமான சமநிலை, ஒருவிதமான வெற்றி, நலவாழ்வு, சுபிட்சம் ஆகியவை ஏற்படும். அதேநேரம் இந்த சுழற்சியைக் கடந்து விடுதலையை நோக்கி நீங்கள் போக வேண்டுமென்றால் அதற்கு வேறுவிதமான அணுகுமுறை தேவைப்படுகிறது.

இப்போது என்ன நிலையென்றால், உங்களுக்கு உலகியல் சார்ந்த விருப்பங்களும் நிறைவேற வேண்டும். விடுதலையும் வேண்டும். இதற்கான சக்திமிக்க நிலை ஒன்று ஈஷாவில் உள்ளது.

வேத முறைப்படியோ, யோக முறைப்படியோ போனாலும் கூட சாத்தியமற்ற ஒன்று இங்கே சாத்தியமாகியிருக்கிறது.

எனவே உங்கள் சுழற்சிகளைத் தீவிரமாகக் கண்காணித்து அதற்கேற்ப உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள தேவையானதை நீங்கள் செய்ய வேண்டும். ஒன்று நீங்கள் சுழற்சிகளுக்கு உட்பட வேண்டும். அல்லது சுழற்சிகள் மீதேறி சவாரி செய்ய முடியும்.

நான் அதைத்தான் செய்கிறேன். உங்களாலும் அது முடியும்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1