ஆன்மீகம், ஆகம சாஸ்திரம் - வேறுபாடு என்ன?
ஆலயங்களை நிர்மாணிப்பதற்கும் அவற்றில் நடத்தப்படும் தினசரி பூஜைகளுக்கும் உள்ள விதிமுறைகளே 'ஆகமசாஸ்திரங்கள்'. ஆலயங்கள் போலவே பழமையானவை இந்த சாஸ்திரங்கள். இந்த ஆகம சாஸ்திரத்திற்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள வேறுபாட்டினை தெளிவுபடுத்துகிறார் சத்குரு...
 
 

ஆலயங்களை நிர்மாணிப்பதற்கும் அவற்றில் நடத்தப்படும் தினசரி பூஜைகளுக்கும் உள்ள விதிமுறைகளே 'ஆகமசாஸ்திரங்கள்'. ஆலயங்கள் போலவே பழமையானவை இந்த சாஸ்திரங்கள். இந்த ஆகம சாஸ்திரத்திற்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள வேறுபாட்டினை தெளிவுபடுத்துகிறார் சத்குரு...

சத்குரு:

ஆகம சாஸ்திரம் என்பது சில குறிப்பிட்ட இடங்களை சக்திமிக்க ஸ்தலமாக உருவாக்கும் விஞ்ஞானமாகும். அதாவது அடிப்படையில் புனிதமில்லாத ஒன்றை புனிதமாக்கும் விஞ்ஞானம் என்று சொல்லலாம். காலப்போக்கில் இந்த முயற்சியில் பல்வேறுவிதமான பைத்தியக்காரத்தனங்கள் புகுந்துவிட்டன. எனினும் இது ஒரு கல்லை கடவுளாக்கும் கலையாகும்.

ஆன்மீகம் என்பது வரையறுக்கப்பட்ட எல்லைகளை கடந்து செல்லும் நிலைதான். அப்பயணம் முற்றிலும் வேறுவிதமானது.

ஆகம சாஸ்திரங்களின் நடைமுறை ஆழ்ந்த பொருள் பொதிந்த ஆனால், அகநிலை சம்பந்தப்பட்ட விஞ்ஞானமென்பதால் அதில் மிகைப்படுத்தப்பட்டுவிடக் கூடிய மற்றும் தவறாக புரிந்துகொள்ளப்படக்கூடிய சாத்தியங்கள் அதிகம். இதனால் கால ஓட்டத்தில் ஆகம சாஸ்திரமென்பது அபத்தமான ஒரு நடைமுறையாகிவிட்டது. சாஸ்திரம் என்ன சொல்கிறது, எப்படி செயல்படுகிறது என்பது பற்றிய சரியான தெளிவில்லாத காரணத்தால் ஜனங்கள் முட்டாள்தனமான ஒரு செயலாக இதை மாற்றிவிட்டனர். எனினும் முறைப்படி இதை அணுகினால் உருவத்தில் கல்லாக இருக்கின்ற வஸ்துவை சூட்சுமமான ஒரு சக்தியாக மாற்றிவிடும் தொழில்நுட்பமாக இது ஆகிவிடும்.

நம் தேசத்தின் சக்தி பீடங்கள்

நம் தேசத்தில் பல கோவில்கள் இருக்கின்றன. இவைகள் பிரார்த்தனைக்கான இடங்கள் அல்ல. உண்மையில் அவைகள் சக்தி பீடங்களாகும். நமது பாரம்பரியத்தின் பிரகாரம், முன்னோர்கள் வழிபாட்டுக்காகவோ, கோரிக்கைகளை கடவுளிடம் சமர்ப்பிப்பதற்காகவோ நம்மை கோவிலுக்கு போகச் சொல்லவில்லை. மாறாக அவர்கள் சொன்னதெல்லாம் கோவிலுக்குச் சென்றால் நாம் அங்கு சற்று நேரமாவது அமர வேண்டும் என்பதுதான். ஆனால் நாம் இப்போது சம்பிரதாயத்திற்காக உட்கார்ந்து உடனே எழுந்துவிடுகிறோம்.

அவர்கள் நம்மை உட்காரச் சொன்னதன் நோக்கமே வேறு. அங்கே அமர்ந்து அப்புனித இடத்தின் விஷேசத்தன்மையை நாம் உள்வாங்க வேண்டும் என்பதே அது, பிரார்த்தனை அல்ல. கோவில் என்பது ஒருவர் எதிர்பார்ப்பது நிகழும் இடம் அல்ல. மற்றவர்களின் வழிகாட்டுதலில் நீங்கள் பிரார்த்தனை செய்யுமிடமுமல்ல. கோவில் என்பது நீங்கள் அமர்ந்து வெவ்வேறு நிலைகளில் உள்ள உங்கள் சக்தியை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை நல்கக்கூடிய ஆற்றல் நிறைந்த ஸ்தலங்களாகும். நீங்கள் பல்வேறு சக்திக் கூறுகள் பின்னிப் பிணைந்த மனிதனாக இருப்பதால் விதவிதமான மனிதர்களுக்கு அவரவர்களின் தன்மைகளுக்கு ஏற்ப வாய்ப்புகள் வழங்கக்கூடிய அற்புத அமைப்பாக கோவில்கள் உருவாக்கப்பட்டன.

கேதார்நாத்தின் மாந்த்ரீக கோவில்

உதாரணத்திற்கு 'கேதார்நாத்' கோவிலை எடுத்துக்கொள்வோம். அது மிகவும் சக்தி வாய்ந்த ஸ்தலமாகும். அதன் ஆற்றல் ஆன்மிகமயமான ஒன்றாகும். ஆனால் அதற்குப் போகும் வழியில் 'சித்துவேலை'களுக்கான ஒரு சிறிய ஆலயமும் உள்ளது. யாராவது மாயமந்திர வித்தைகளை செய்ய விரும்பினால் அவர்கள் அக்கோவிலுக்குச் செல்வார்கள். ஏனெனில் அவ்விடம் அதுபோன்ற செயல்களுக்கு உகந்ததாகும்.

ஆன்மீகம் மற்றும் மாந்த்ரீகம் - இவை இரண்டிற்குமான மாறுபாட்டை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மாந்த்ரீகம் என்பது ஒரு தொழில்நுட்பத்தை கையாளும் திறமை போன்றது. அது ஸ்தூலமான சக்திகளைக் கொண்டு செய்கின்ற ஒன்றாகும். நவீன விஞ்ஞானத்தில் தொழில்நுட்ப சாதனங்களைக் கையாள்வதைப் போல. உதாரணமாக உங்கள் வீட்டிலுள்ள தொலைக்காட்சியை நீங்கள் இயக்கினால் உலகின் வேறொரு பகுதியில் நிகழ்வதை வீட்டிலிருந்தே பார்க்க முடிகிறதல்லவா, அதுபோலத்தான். இப்போது இது சாத்தியமாகிவிட்டாலும் கொஞ்சம் யோசித்து பார்த்தால் இது அற்புதமான ஒரு நிகழ்வாகும்.

சாஸ்திரமும் செல்போனும்

சுமார் 200 வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த மக்களுக்கு இப்போது நாம் பார்க்கும் தொலைக்காட்சி வியப்புக்குரிய ஒன்றாய் இருக்கும் அல்லவா? இந்த அற்புதத்தை நாங்கள் விரும்பினால் உங்கள் அறிவு மற்றும் உங்கள் வாழ்க்கையின் எல்லைக்குட்பட்டு, சரியாக இதன் சூட்சுமத்தை புரிந்துகொண்டு நீங்கள் செய்து காட்ட முடியும். ஆகம சாஸ்திரமும் TV, Cell Phone தொழில்நுட்பத்தைப் போன்ற ஒரு அறிவியல்தான். இது பாமரனுக்கு அதிசயமாய் தோன்றுகிறது. மேற்சொன்ன ஆன்மிக சாஸ்திர நடைமுறை இவ்வுலகின் ஆளுமைக்கும் விதிகளுக்கும் உட்பட்டது அல்ல, தொழில்நுட்ப விஞ்ஞானமும் அல்ல. அது நீங்கள் செய்கின்ற ஒரு செயலில் முழுமையாக உங்களை கரைத்துக் கொண்டு அதுவே நீங்களாகிவிடுகின்ற ஒன்றாகும். இது உலகின் இருப்பில் இருந்து நழுவி வேறொரு பரிணாமத்திற்கு சென்றுவிடுவதாகும். உண்மையான ஆன்மீகம் என்பது வரையறுக்கப்பட்ட எல்லைகளை கடந்து செல்லும் நிலைதான். அப்பயணம் முற்றிலும் வேறுவிதமானது.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1