பாலுணர்வு... காதல்... கடவுள்! பகுதி 1

ஆணும் பெண்ணும் காதலிக்கிறார்கள், உடல்நிலையிலும் உணர்ச்சிநிலையிலும் வாழ்க்கையிலும் ஒன்றிணைகிறார்கள். இது எவ்வளவு அற்புதமான விஷயம்! இப்படியெல்லாம் நாம் எண்ணிக்கொள்கிறோம். ஆனால், உண்மை என்ன...? எந்த அளவிற்கு ஆணும் பெண்ணும் ஒத்த இயல்புடையவர்கள்? பாலுணர்விற்காக செய்யப்படும் அலங்காரம்தான் காதலா? சத்குருவின் இந்த உரையில் விடைகாணலாம்.

சத்குரு:

வாழ்க்கையின் இருமை நிலை

வாழ்க்கை, இருவேறு பரிமாணங்களுக்கு இடையில் நிகழ்கிறது. ஒன்று இருமையற்ற நிலையாகிய ஒருமை. மற்றொன்று இருமை. வாழ்வின் பெரும்பாலான உருவாக்கங்கள் எல்லாமே இந்த இருமைநிலையின் அடிப்படையில்தான் நிகழ்கிறது. ஏனெனில், இரண்டு என்று இருந்தாலே அது பலவாகப் பெருகும். ஒன்று என்றால் ஒன்றுதான் அது. இருமை என்பது ஒளியும் இருளும் போல, ஆணும் பெண்ணும்போல, வாழ்வும் இறப்பும் போல. இருவேறு தன்மைகள் இருப்பதாலேயே எல்லா விளையாட்டுக்களும் நிகழ்கின்றன. ஒன்று மட்டும் இருந்தால் எந்த விளையாட்டும் நிகழாது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
பாலுணர்வின் நோக்கம் நல்லது. ஆனால், அதை மேற்கொள்ளும் முறை பயனற்றது.

உருவாக்கங்கள் அனைத்துமே இருமை நிலையில்தான் வேர் கொண்டுள்ளன. இருமைநிலை வரும்போதுதான் பாலுணர்வுத்தன்மை வருகிறது. பாலுணர்வு என்று சொன்ன மாத்திரத்தில் பெரும்பாலும் ஆண்களுக்கு பெண்களின் நினைவும், பெண்களுக்கு ஆண்களின் நினைவும் வரக்கூடும். அப்படியல்ல. பாலுணர்வு என்று சொன்னால், இருமைநிலையில் இருப்பவை ஒன்றை ஒன்று சந்திக்க முயல்கின்றன. அந்த அடிப்படையில் இயற்கை சிலவற்றை நிகழ்த்திக் கொள்கிறது. பிறப்பு, அந்த குறிப்பிட்ட உயரினத்தின் நீட்சி ஆகியன அதன் மூலம் நிகழ்கின்றன. பறவைகள் பறத்தலும் இந்த வகைமையைச் சார்ந்ததுதான். எப்போதுமே ஒன்றாக இருந்ததுதான் இரண்டாக பிரிந்திருக்கிறது. எனவே, அவை மீண்டும் ஒன்று சேர விரும்புவது இயல்பு. அதற்கான ஏக்கம் எப்போதும் இருக்கிறது. நீங்கள் இளமையாக இருக்கும்போது உங்கள் அறிவை, உங்கள் சுரப்பிகள் கையகப்படுத்தினால், உடல் சார்ந்த பாலுணர்வுதான் உங்கள் வழியாக இருக்கும். நீங்கள் நடுத்தர வயதை எட்டும்போது உங்கள் அறிவை உணர்வுகள் கையகப்படுத்தினால், அன்புதான் உங்கள் வழியாக இருக்கும். நீங்கள் இதையெல்லாம் கடந்துபோகிற நிலையில், மேம்பட்ட விழிப்புணர்வு நிலையில் ஒன்றுபடுதல் நிகழ்கிறது. இதை 'யோகா' என்றும் 'தெய்வீகம்' என்றும் சொல்கிறோம். இதற்குப் பல பெயர்கள் உண்டு.

மனிதகுலத்தின் இருவேறு சக்திநிலைகளை நாம் ஆண்மையென்றும் பெண்மையென்றும் அழைக்கின்றோம். அவை எப்போதும் ஒன்றுசேர முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. அதே நேரம், அந்த ஏக்கத்தைத் தவிர இருவருக்கும் பொதுவாக வேறு எதுவும் இல்லை. அவர்கள் ஒரேநேரத்தில் காதலர்களாகவும், பகைவர்களாகவும் இருக்கிறார்கள். இருவரும் எதிரெதிர் தன்மைகளில் இருப்பதால், இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இருவருக்கும் இடையிலான ஒற்றுமைகளைத் தேடினால், அது கிடைப்பதே இல்லை. ஆனால், எதிரெதிர் தன்மைகளுக்கான ஈர்ப்பு எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. எதிரெதிர் தன்மைகள் என்று நீங்கள் அழைப்பது, பொதுத்தன்மைகள் வாய்ந்ததல்ல. எப்போதும் ஒன்றோடொன்று தொடர்புடையது.

பாலுணர்வு என்று நாம் சொல்வதெல்லாமே இரண்டு எதிரெதிர் தன்மைகள், ஒன்று சேர்வதற்கு செய்கிற முயற்சி. பாலுணர்வின் நோக்கம் நல்லது. ஆனால், அதை மேற்கொள்ளும் முறை பயனற்றது. நீங்கள் எப்போதுமே ஒன்றுசேரப் போவதில்லை. அந்த முறை, இன்பம் தருவதாக இருக்கிறது, எனவே அது மக்களை ஈர்க்கிறது. ஆனால், ஒருமை எப்போதும் ஏற்பட்டதேயில்லை. எனவே, உணர்வுநிலையிலும், அறிவுநிலையிலும் ஒன்றுசேர முயல்வதன் மூலம், ஒரு பொதுத்தன்மையை கண்டடைய முற்படுகிறீர்கள். இருவருக்கும் ஒரே மாதிரியான ரசனைகள் இருக்கின்றன, ஒரே நிறம் பிடித்திருக்கிறது, ஒரேவிதமான ஐஸ்க்ரீம் பிடிக்கும் என்பதுபோல் பல பொதுத்தன்மைகளைத் தேடுகிறீர்கள். உண்மையில் இரண்டு பேருக்கு மத்தியில் பொதுத்தன்மைகளே கிடையாது. எதிரெதிர் தன்மைகளை ஏற்று ரசிக்கத் தெரியாவிட்டால் அந்த உறவு பயனற்றதாகிறது.

உடல் சார்ந்த ஓர் எளிய செயலை அழகானதாக்க அதைச் சுற்றி எத்தனையோ அலங்காரங்களைச் செய்கிறீர்கள். அந்த அலங்காரங்கள் இல்லாமல், அந்த உடல் சார்ந்த செயலை நிகழ்த்த பலருக்கும் விருப்பம் இல்லை. பலர் அதனை நேரடியாக எதிர்கொள்ள முடியாமைக்குக் காரணம், அதை ஆபாசமாகவும் மிருகத்தனமாகவும் உணர்கிறார்கள். அந்தச் செய்கை அடிப்படையானதும் உடல் சார்ந்ததும் என்பதாக உணர்கிறார்கள். அதுதான் உண்மை. இந்த உண்மையை அலங்காரங்களால் மறைக்கிறார்கள். கூடவே அதற்கு உணர்வுரீதியான அடையாளத்தையும் சேர்க்கிறார்கள். ஏனெனில், உணர்வு சாராதபோது அது ஆபாசமாகத் தெரிகிறது.

பால்தன்மையும் பாலுணர்வும்...

பால்தன்மை என்பது இயல்பானது. பாலுணர்வு உங்களால் உருவாக்கப்பட்டது. பால்தன்மை உங்கள் உடலிலேயே இருக்கிறது. பாலுணர்வோ உங்கள் உளவியல் சார்ந்தது. இன்றைய உலகில் பால்தன்மை என்பது ஆரோக்கியமானதாக இல்லை. அது உடல் சார்ந்ததாக மட்டும் இருக்கிறவரையில் சிக்கல் இல்லை. அது எப்போது உங்கள் மனதுக்குள் புகுகிறதோ அப்போதே அது வக்கிரமடைகிறது. உங்கள் வாழ்வில் அது சின்னஞ்சிறிய அம்சம்தான். ஆனால் இன்றோ, அது உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய அம்சமாகிவிட்டது. சிலரைப் பொறுத்தவரை அதுதான் அவர்கள் வாழ்க்கையாகவே இருக்கிறது.

இன்றைய நவீன உலகத்தைப் பார்த்தீர்களானால், பெரும்பாலும் மனித சக்தியில் 90% பாலுணர்வு தேடலில் செலவாகிறது, அல்லது பாலுணர்வைத் தவிர்ப்பதில் செலவாகிறது. எப்படியானாலும் அது இன்று பெரிய விஷயமாகிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் அளவில் இருப்பதென்னவோ ஒரு சிறிய வித்தியாசம் தான். அதை பலரும் இன்று பெரிதாகக் கருதுகிறார்கள்.


அடுத்த வாரம்...

ஆண் பெண் ஈர்ப்பு எதனால் ஏற்படுகிறது என்பதைப் பற்றியும், பாலுணர்வு, பாலுறவு பற்றியும் பேசுகிறார் சத்குரு...

'பாலுணர்வு... காதல்... கடவுள்!' தொடரின் பிற பதிவுகள்