"ஆள் பாதி, ஆடை பாதி !"
ஒரு மனிதரைப் பார்த்தாலே நம் மனம் எடைபோடத் துவங்கிவிடுகிறது. பெரும்பாலும் அவரின் குணாதிசயத்தை அவரது வெளிப்புற தோற்றத்தைப் பார்த்து எடைப் போடுகிறோம். இப்படி நாம் எடைபோடுவது சரிதானா? இதற்கு சத்குரு சொல்லும் விளக்கம் என்ன...
 
 

ஒரு மனிதரைப் பார்த்தாலே நம் மனம் எடைபோடத் துவங்கிவிடுகிறது. பெரும்பாலும் அவரின் குணாதிசயத்தை அவரது வெளிப்புற தோற்றத்தைப் பார்த்து எடைப் போடுகிறோம். இப்படி நாம் எடைபோடுவது சரிதானா? இதற்கு சத்குரு சொல்லும் விளக்கம் என்ன...

சத்குரு:

காந்தி பாதி ஆடைதான் அணிந்திருந்தார். அதனால், அவர் குறைந்துவிட வில்லை. பல யோகிகள் குறைவான ஆடைகள்தான் உடுத்துகிறார்கள். அதனால் அவர்கள் மேன்மை குறைந்து விடுவதில்லை.

இந்த வாக்கியம் என் வாழ்வில் நிகழ்ந்ததொரு சம்பவத்தை நினைவுக்குக் கொண்டு வருகிறது.

ஒருமுறை குன்னூரிலிருந்து ஊட்டிக்குப் பயணம் செய்தபோது, வழியில் தெருவோரம் ஒரு பெண்மணியை கவனித்தேன். நாற்பது வயது இருக்கலாம். கிழிந்து போன அரைகுறையான உடை அணிந்திருந்தார். மூடப்படாத மார்புகளுடன் குளிரில் நடுங்கிக் கொண்டு அவள் அமர்ந்திருந்தாள்.

அவள் நிலை கண்டு வண்டியிலிருந்து இறங்கி பேச்சு கொடுத்தேன். விரக்தியாகப் பேசினாள். சற்று மனநிலை தவறியவராகத் தெரிந்தார். நான் மேலே சட்டை அணிந்திருக்கவில்லை. அங்க வஸ்திரம்தான் போர்த்தியிருந்தேன். அதை எடுத்து அவர் மீது போர்த்தினேன்.

ஏதோ ஒரு தானம் செய்யும் பெருமைக்காக அதைச் செய்யவில்லை. இந்தியாவில் அப்படிச் செய்ய ஆரம்பித்தால், அதற்கொரு முடிவு இராது. ஆனால், அந்தக் கணத்தில், அந்தப் பெண்மணி என்னிடம் அந்தச் செயலைத்தான் வெளிக் கொணர்ந்தாள். இதை கவனித்த என் மனைவி விஜி மிகவும் நெகிழ்ந்து போனாள்.

ஒரு மனிதனிடம் தொண்ணூறு சதவிகிதம் சத்து இருந்தால், மீதி பத்து சதவிகிதத்துக்கு ஆடை உதவலாம். பாதிச் சத்து மட்டுமே இருந்தால், எப்படிப் போதும்?

ஆனால், சிலரைப் பார்த்தால், பாதியாவது ஆள் இருந்தால் பரவாயில்லையே என்று தோன்றுகிறது. அவர்கள் வெறும் ஆடையாகத்தான் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். வேறு சிலரோ தாங்கள் கவனிக்கப்பட வேண்டும் என்று குறைவான ஆடைகளுடன் உலா வருகிறார்கள்.

இதை ஆடை உடுத்துவதைப் பற்றி மட்டுமே எடுத்துக் கொள்ளாமல், உங்களை சமூகத்தின் கண்களில் துல்லியமானவராக வழங்குங்கள் என்று சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1