8 மற்றும் 21 நாட்கள் ஹடயோகாவில் மூழ்கித் திளைத்த பங்கேற்பாளர்கள்!

சத்குருவின் வழிகாட்டுதலில் வழங்கப்படும் பாரம்பரிய ஹடயோகா வகுப்புகள் ஆழமாகவும் நுட்பமாகவும் உள்வாங்கிக் கொள்ளும் விதமாக 8 நாட்கள் மற்றும் 21 நாட்கள் நிகழ்ச்சிகளாக வழங்கப்படுகின்றன. சமீபத்தில் ஈஷாவில் நிகழ்ந்த இந்நிகழ்ச்சிகள் பற்றி ஒரு பார்வை!
 

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்திருந்த நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்கள் ஈஷா ஹடயோகா 8 மற்றும் 21 நாட்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். 8 நாட்கள் ஹடயோகா நிகழ்ச்சியில் சுமார் 962 பேரும், 21 நாட்கள் ஹடயோகா நிகழ்ச்சியில், சுமார் 522 பேரும் கலந்துகொண்டனர்.

இதில் சுமார் 22 பேர் எட்டு நாட்கள் நிகழ்ச்சியிலிருந்து 21 நாட்கள் நிகழ்ச்சிக்கு விருப்பத்துடன் மாறினர். சிலர் எட்டு நாட்கள் நிகழ்ச்சியை முடித்துவிட்டு இருபத்தொரு நாட்கள் நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர். வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த பங்கேற்பாளர்களில் பெரும்பாலானோர் சீனர்களாகவே இருந்தனர். இவர்களில் ஒரு பிரிவினர் நிகழ்ச்சியின் இடையே சத்குரு ஸ்ரீபிரம்மா ஆசிரமத்தை பார்வையிட்டு வந்தனர். ஒருசிலர் சூன்ய தியான வகுப்பு மற்றும் இன்னர் இன்ஜினியரிங் வகுப்புகளில் சீன மொழிபெயர்ப்பு உதவியுடன் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியின் முதல் நாளில் நிபா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மருத்துவ பரிசோதனை நடைபெற்ற பின்னரே பங்கேற்பாளர்கள் வகுப்பிற்குள் அனுமதிக்கப்பட்டனர். எனினும் ஆர்வத்துடன் சுமார் 962 பேர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க பதிவு செய்தனர்.

இந்நிகழ்ச்சிகளில் 12 தன்னார்வத் தொண்டர்கள் மட்டுமே இருந்தபோதும், சுமார் 30 யோகா ஆசிரியர்கள் தங்கள் வகுப்புகளை முடித்துவிட்டு தன்னார்வத் தொண்டுபுரிந்தனர். யோகா நடைபெறுவதற்கான ஹால் ஏற்பாடுகள், வெளிப்புற உதவிகள் மற்றும் உணவு பரிமாறும் பகுதிகளில் உதவிகள் என ஹட யோகா ஆசிரியர்கள் பலவிதங்களில் இந்நிகழ்ச்சிக்கு பக்கபலமாக இருந்து சிறப்பாக நடைபெற உதவினர்.

உணவு பரிமாறும்போது தன்னார்வத் தொண்டர்களுடன் பங்கேற்பாளர்களும் இணைந்து ஆர்வத்துடன் பரிமாறினர். இவர்களில் பலர் தினசரி உணவு பரிமாறும் தன்னார்வத் தொண்டில் தங்களை ஆர்வத்துடன் ஈடுபடுத்திக் கொண்டனர். சுவையும் சத்தும் மிக்க பலவிதமான பதார்த்தங்கள் இந்நிகழ்ச்சியில் பரிமாறப்பட்டன. மாம்பழ சீசன் என்பதால் சுவைமிகுந்த மாம்பழங்களும் பங்கேற்பாளர்களின் ருசிக்கு விருந்தாகின.

ஹடயோகா நிகழ்ச்சிகளுக்கு இடையே அவ்வப்போது விளையாட்டுப் போட்டிகளும் நிகழ்த்தப்பட்டன. யோகா நிகழ்ச்சிகளின் நிறைவில் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசையில் பங்கேற்பாளர்கள் உற்சாக நடனமாடி மகிழ்ந்தனர்.