ராசி பார்த்து யோசிப்பவர்களுக்கு...

சனி பெயர்ச்சி, குருபெயர்ச்சி, ஏழரை, செவ்வாய் தோசம் என தங்கள் தோல்விக்கு கிரகங்களை காரணம் சொல்லி காலம் கடத்துபவர்கள் இங்கே ஏராளம். ஜோதிடத்தை நம்பி வாழ்க்கை நடத்துபவர்களின் அறியாமையை வாய்விட்டு சிரிக்கவைக்கும் சங்கரன்பிள்ளை ஜோக்குகள் மூலம் இடித்துரைக்கும் சத்குரு, நம் விதியை நம் கையில் முழுமையாய் எடுப்பதற்கான வழியை விளக்குகிறார் சத்குரு.
 
 

சத்குரு:

“என் ராசி சரியில்லை. எது செய்தாலும் எனக்குத் தோல்விதான்Õ என்று விதியின் மீது பழியைப் போடுவார்கள். “தெய்வ சித்தத்தை எதிர்த்து நேரத்தை வீணடிப்பதைவிட, வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிடுவதுதானே புத்திசாலித்தனம்?” என்று வேதாந்தம் பேசுவார்கள்.

உங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அரசியல்வாதிகள் மட்டுமல்ல, ஜோசியர்களும், சாமியார்களும்கூட ஆசைப்படுகிறார்கள். தங்கள் அன்பினால் கட்டுப்படுத்தத் தெரியாமல், உங்களுக்குள் ஒரு பயத்தையும் குற்ற உணர்ச்சியையும் உண்டுபண்ணிக் கட்டுப்படுத்தப் பார்க்கிறார்கள். உங்கள் வெற்றியையும், தோல்வியையும் நிர்ணயிப்பது உங்கள் தலையெழுத்துதான் என்று அடித்துச் சொல்லி நம்ப வைத்திருக்கிறார்கள்.

தோற்றுப்போனால் உடனே ஜாதகக் கட்டங்களையும், எண் ஜோசியத்தையும் துணைக்கு சேர்த்துக்கொள்வதா?

புத்திசாலிகள் அடுத்த கணம் என்ன செய்வார்கள் என்று கணிப்பது வேண்டுமானால் கடினமாயிருக்கலாம். முட்டாள்களின் முகத்தைப் பார்த்தாலேயே அடுத்து என்ன செய்வார்கள், எவ்வளவு தூரம் போவார்கள் என்று மற்றவர்களால் சொல்லிவிட முடியாதா?

உங்கள் கையாலாகாத்தனத்தை அல்லவா அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்?

தோல்விக்கு உண்மையான காரணம் உங்கள் முட்டாள்தனம்தான் என்று பொறுப்பேற்றுக்கொள்ள ஏன் தயங்குகிறீர்கள்?

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் ஒழுங்காகச் செயலாற்றினால், உங்களுக்குக் கிடைக்க வேண்டியதைக் கிடைக்காமல் செய்து பழிவாங்கிக்கொண்டிருக்க கடவுள் ஒன்றும் சினிமா வில்லன் அல்ல.

விரும்பியது உங்களுக்குக் கிடைக்கவில்லையென்றால், அதற்கு முழுமையான காரணம், நீங்கள்தான்.
சும்மா வறட்டுச் சித்தாந்தம் பேசாமல், அதை நடைமுறைப்படுத்திப் பாருங்களேன்.

உங்களுக்கு சாப்பாடு கிடைக்க வேண்டும் என்பது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுவிட்டதாக வைத்துக்கொள்வோம். உங்களை கவனிக்க ஆட்கள் இல்லாத வனத்தில் போய் உட்காருங்கள். பக்கத்தில் ஒரு கனி விழுந்தால்கூடத் தொடாதீர்கள். கடவுள் விரும்பினால், அவரே வந்து உங்கள் வாய்க்குள் அதைப்  போடுவார் என்று காத்திருந்து பாருங்களேன்.

வெல்வது விதியா, உங்கள் பசியா என்று தெரிந்துவிடும்.

என்னிடம் ஒரு பழைய மாருதி கார் இருந்தது. ஒருவர் அதை வாங்க விரும்பினார்.

“சுவாமிஜி, உங்கள் கார் எண் எனக்கு மிக அதிர்ஷ்டமாக இருக்கும். என்ன விலை சொன்னாலும் வாங்கிக்கொள்கிறேன்”

சிரித்தேன். “எந்த எண்களைச் சொல்கிறீர்கள்? பதிவு எண்களையா? இன்ஜின் எண்களையா?”

அவர் குழம்பினார். அவருடைய ஜோசியரைக் கேட்டுவிட்டு வந்தார். பதிவு எண்தான் முக்கியம் என்றார். ஆங்கில எழுத்துக்களுக்கெல்லாம் ஏதோ எண்ணிக்கை போட்டுக் கூட்டிக் காட்டினார்.

ஜோசியர் குறிப்பிட்ட தேதியில், அவர் குறிப்பிட்ட நேரத்தில், 99,999 ரூபாய் பணம் கொடுத்தார்.

“பேசிய தொகையில் ஒரு ரூபாய் குறைவாக இருக்கிறதே என்று தப்பாக நினைக்காதீர்கள். இதுதான் எனக்கு ராசியான தொகை” என்றார், மிகுந்த தர்மசங்கடத்துடன்..

குறைத்த ஒரு ரூபாய்க்கு பதிலாக விலை உயர்ந்த பரிசுப் பொருளையும் கொடுத்தார்.

“முதலில் ஓட்டிப் பாருங்கள்.. நிறைய பாகங்கள் வெலவெலத்திருக்கும். திருப்தியான பின் வாங்கலாம்“ என்றேன்.

ராசியான எண்தான் முக்கியம் என்று ஓட்டிப் பார்க்க மறுத்துவிட்டார்.

ஒரே மாதம். காரை விற்றுவிட்டார்.

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும், ஏன் உங்கள் மரணத்தின் தருணத்தைக்கூட முற்றிலுமாக நூறு சதவீதம் தீர்மானிப்பது நீங்கள்தான்.
காரை ஓட்டும்போது, முன் இருக்கையின் ஸ்ப்ரிங் விடுபட்டு, பின்னால் சாய்ந்துவிட்டிருக்கிறது. ஏதோ அமானுஷ்ய சக்தி அவரைப் பின்னாலிருந்து இழுத்தது என்று பயந்து காரையே விற்றுவிட்டார்.

காரை எடுத்துக்கொண்டு போனபோது, கோயில் வாசலில் அவர் உடைத்த தேங்காய்க்குப் பலனில்லை. நசுக்கிய எலுமிச்சைகள் வீண். முக்கியமாக அவருடைய ராசியான எண் அவரைக் கைவிட்டுவிட்டது.

அவரைப் போல எதற்கெடுத்தாலும் ஆருடம் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.

கிரகங்கள், பரிகாரங்கள் என்றெல்லாம் பேசுவார்கள்.

உயிரோடு இருக்கும் நீங்கள் செய்யும் முட்டாள்தனங்களுக்கெல்லாம் உயிரற்ற கிரகங்களைக் காரணமாக்குவது எப்பேர்ப்பட்ட கோழைத்தனம்?

விரும்பியது உங்களுக்குக் கிடைக்கவில்லையென்றால், அதற்கு முழுமையான காரணம், நீங்கள்தான். வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்கள்தான் கவனமில்லாமல் தீர்மானித்திருக்கிறீர்கள். ஆசைப்பட்டதற்கு உரியவராக உங்களை நீங்கள் தயார்ப்படுத்திக்கொள்ளவில்லை. அது உங்கள் தவறுதானே தவிர, விதியின் விளையாட்டல்ல.

தன் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து, உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொண்டிருப்பதைத் தவிர கடவுளுக்கு வேறு வேலை இல்லையா? இந்தக் கதைகளையெல்லாம் நம்பிக்கொண்டிருக்க நீங்கள் என்ன சிறு குழந்தையா?

சங்கரன்பிள்ளை ரயிலில் பயணம் செய்தார். எதிரில் ஒரு கிராமத்துப் பெரியவர். படிப்பு வாசனையே அறியாதவர் போல் தோற்றம்.

“பொழுது போக க்விஸ் விளையாடுவோமா?” என்றார், சங்கரன்பிள்ளை. “உங்கள் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லையென்றால், நூறு ரூபாய் தருகிறேன். என் கேள்விக்கு உங்களால் பதில் சொல்ல முடியவில்லையென்றால், நீங்கள் பத்து ரூபாய் கொடுத்தால் போதும்..”

“முதல் கேள்வியை நான் கேட்கிறேன்” என்றார், பெரியவர்.

“மூன்று முகங்களுடன் பன்னிரண்டு கால்களுடன் நீந்தவும் தெரிந்த பறக்கவும் தெரிந்த மிருகம் எது?”

எவ்வளவோ யோசித்தும் சங்கரன்பிள்ளைக்கு விடை தெரியவில்லை. நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்தார். “உங்கள் கேள்விக்கு பதில் என்ன?” என்று கேட்டார்.

பெரியவர் நூறு ரூபாயைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டார். பத்து ரூபாயை எடுத்து நீட்டினார்.

“எனக்கும் தெரியாது”

கடவுளின் சித்தம் என்று பேசுபவர்களில் பலர் இப்படித்தான். அவர்களுக்கே புரியாததை அடுத்தவருக்கு விளக்கிக்கொண்டிருப்பார்கள்.

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும், ஏன் உங்கள் மரணத்தின் தருணத்தைக்கூட முற்றிலுமாக நூறு சதவீதம் தீர்மானிப்பது நீங்கள்தான். இது புரியாமல், வேறு யாரோ எல்லாவற்றையும் கொண்டுவந்து உங்கள் தலையில் கொட்டிவிட்டதாக நினைப்பதை முதலில் நிறுத்துங்கள்.

விழிப்புணர்வுடன் கவனித்து எதையும் கையாளும் திறமை உங்களுக்கு வந்துவிட்டால், அப்புறம் எந்த விதியாலும் உங்களை அசைக்க முடியாது.
உங்களுக்கு நேர்வது ஒவ்வொன்றும் உங்களால் வரவழைக்கப்பட்டதுதான். பிரச்சனை என்னவென்றால், பல சமயம் சற்றும் கவனமில்லாமல் அவற்றுக்கு வழி செய்து கொடுக்கிறோம் என்பதை நீங்கள் உணர்வதில்லை.

விழிப்புணர்வு இல்லாமல் நீங்கள் தூவும் பல விதைகள்தான் விஷச் செடிகளாக உங்களைச் சுற்றி வளர்ந்து நிற்கின்றன. அவற்றை கடவுள் கொண்டுவந்து உங்கள் தோட்டத்தில் நட்டுவிட்டதாகப் பெருமூச்சு விடுவதில் அர்த்தமில்லை.

மழை மலை மீது பொழிகிறது. அருவியாக வீழ்கிறது. கிளை நதிகளாக விரிந்து, ஆழங்களைத் தேடி ஓடி இறுதியில் கடலில் கலக்கிறது.

பிறந்த நிமிடத்திலிருந்தே, நதி கடலுடன் சேர விரும்பிப் பயணம் செய்கிறது என்று சொல்வது கவிதைகளுக்குத்தான் உதவுமே தவிர, அது நதியின் தலையெழுத்தல்ல.

வழியில் அணை கட்டித் தடுத்தால், கடலுடன் சேர முடியவில்லையே என்று நதி தற்கொலை செய்துகொள்ளப் போவதில்லை.

நதியைவிட கடலின் மட்டம் சற்று உயர்ந்து அமைந்துவிட்டால், கடல் நதியைத் தேடி வருமா, நதி கடலைத் தேடிப் போகுமா?

விழிப்புணர்வுடன் கவனித்து எதையும் கையாளும் திறமை உங்களுக்கு வந்துவிட்டால், அப்புறம் எந்த விதியாலும் உங்களை அசைக்க முடியாது. எனவே விதி பற்றிய கட்டுக்கதைகளை வீசியெறிந்துவிட்டு உங்கள் வாழ்க்கையை வாழ வாருங்கள்.

பிறப்பின் காரணமாக, வளர்ப்பின் மூலமாக சில அடிப்படை குணங்களை நீங்கள் விரும்பியோ, விரும்பாமலோ சேகரித்துக் கொண்டுவிட்டீர்கள். அந்த குணாதிசயங்கள் உங்கள் பாதையை ஓரளவிற்குத் தீர்மானிக்கின்றன. ஓரளவிற்குத்தான். மற்றபடி, கவனத்தோடு செயல்பட்டால், உங்கள் தலையெழுத்தை உங்கள் விருப்பப்படி திருத்தி எழுதிக்கொள்ள முடியும்.

தனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லிக்கொண்ட ஒரு அறிவு ஜீவியிடம் சங்கரன்பிள்ளை வந்திருந்தார்.

“எனக்கு அழகானதொரு மகள் இருக்கிறாள். எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறாள். ஆனால், அவளுக்கு ஒரு பிரச்சனை. காலையில் எழுந்ததும் மந்தமாக இருக்கிறாள். சாப்பிட்டதையெல்லாம் வாந்தி எடுத்துவிடுகிறாள். இதற்கு என்ன காரணம்?”

அறிவு ஜீவி கண்மூடி சற்று நேரம் யோசித்துவிட்டுக் கேட்டார்.

“உன் மகள் பால் குடிப்பதுண்டா?”

“உண்டு. சிறந்த பசுவிடமிருந்து சுத்தமாகக் கறக்கப்படும் மிகத் தரமான பாலை மட்டும்தான் அவளுக்குக் கொடுக்கிறோம்“ என்றார், சங்கரன் பிள்ளை.

“அங்கேதான் பிரச்சனை” என்றார், அறிவுஜீவி. “வயிற்றுக்குள் போனதும், பால் தயிராகிவிடும். இரவு படுக்கையில் உன் மகள் புரளும்போது அந்தத் தயிர் கடையப்பட்டு வெண்ணெய் திரளும். உடம்புச் சூட்டில் அந்த வெண்ணெய் உருகி நெய்யாகிவிடும். அந்த நெய் ரசாயன மாற்றத்தால் சர்க்கரையாகிவிடும். அந்தச் சர்க்கரை ரத்தத்தில் கலக்கும்போது ஒரு போதை பிறக்கும். காலையில் அந்த போதை தெளிவதற்குள் எழுந்திருப்பதால்தான் உன் மகளுக்கு அந்தப் பிரச்சனை”

விடை புரிந்துகொள்ள முடியாத சூழ்நிலைகளுக்கெல்லாம் விதியின் மீது பழியைப் போட்டுத் தப்பித்துக்கொள்வதும் இந்த அறிவு ஜீவி சொன்ன காரணத்தைப் போல அர்த்தமில்லாததுதான்.

திறமையைப் பயன்படுத்தாமல், வேறு காரணங்களால் மேலே வந்தவர்கள் அந்த நிலை எப்போது பறிபோகுமோ என்ற அச்சத்தில்தான் வாழ முடியும்.
எந்த மனிதருக்கும் வெளி சூழ்நிலை எல்லாத் தருணங்களிலும் நூறு சதவீதம் விரும்பியபடி  அமைந்துவிடுவதில்லை. மாற்ற முடியாத சூழ்நிலையை எதிர்த்து நின்றால், அமைதி காணாமல் போகும். மூளை ஸ்தம்பித்து நிற்கும்.

மாறாக அதை உள்ளபடி ஏற்றுக்கொண்டால், அடுத்து என்ன செய்வது என்று புத்திசாலித்தனமாக யோசிக்க முடியும். இதற்காகத்தான் விதி என்று சொல்லிவைத்தார்கள்.

ஆனால், விதி என்றால் எதையும் சகித்துக்கொண்டு செயலற்று இருப்பது என்று நீங்கள் தவறாக நினைத்துவிட்டீர்கள்.

சரியாகப் புரிந்துகொள்ளுங்கள். நான் எந்தச் சூழ்நிலையையும் சகித்துக்கொள்ளச் சொல்லவில்லை. சகித்துக்கொள்வது என்பது விருப்பத்தோடு செய்வதல்ல, கட்டாயத்தினால் செய்வது.

அமைதியாக ஏற்றுக்கொண்டு, விதியை உங்களுக்கேற்ப மாற்றிக்கொள்வது எப்படி என்று செயலாற்றத்தான் சொன்னேன்.

சங்கரன்பிள்ளை தன் மூன்று நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து, பல தொழில்கள் செய்து பார்த்தார். எந்தத் தொழில் செய்தாலும் நஷ்டமாகிக்கொண்டே இருந்தது.

சங்கரன்பிள்ளை நண்பர்களைக் கூட்டினார்.

“நகரத்தில் எல்லோரும் பிரமாதமாகச் சம்பாதிக்கிறார்கள். ஆட்டோக்களைவிட டாக்ஸியில் செல்வதையே விரும்புகிறார்கள். நாம் ஒரு டாக்ஸி வாங்கிவிடலாமே?” என்றார்.

நண்பர்கள் சம்மதித்தனர்.

இருக்கும் பணத்தையெல்லாம் திரட்டி, ஒரு காரை வாங்கினார்கள். டாக்ஸிக்குரிய மஞ்சள் கறுப்பு வண்ணம் அடித்தார்கள்.

டாக்ஸியை ரயில்வே ஸ்டேஷன் வாசலில் நிறுத்தினார்கள். எத்தனையோ பயணிகள் வந்தார்கள். வேறு வேறு வாகனங்கள் பிடித்துப்போனார்கள். இவர்களுடைய டாக்ஸிப் பக்கமே வரவில்லை.

“ரயிலில் வருபவர்கள் கஞ்சப்பயல்கள். ஏர்ப்போர்ட்டில் சவாரி கிடைக்கும்” என்றார், சங்கரன்பிள்ளை.

கடவுளே வந்து சொன்னாலும், என் விதியை நான்தான் தீர்மானிப்பேன் என்ற உறுதி உங்களுக்கு வரவில்லையென்றால், உங்கள் வாழ்க்கை அதன் போக்கிற்குத்தான் நடக்கும்.
விமான நிலையத்தின் வாசலிலும் நிறுத்திக் காத்திருந்தார்கள். அங்கேயும் ஒரு வாடிக்கையாளர்கூட வரவில்லை.

பெரிய பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் வாசல்களிலும் நிறுத்திப் பார்த்தார்கள். மற்ற வண்டிகள் எல்லாம் நிரம்பினவே தவிர, இந்த வண்டிக்கு யாருமே வரவில்லை.

அங்கே, இங்கே அலைந்து பார்த்ததில், பெட்ரோல்தான் தண்ணீர் போல் செலவானது.

கடைசியில் ஒரு கிளி ஜோசியரிடம் வண்டியைக்கொண்டு நிறுத்தினார், சங்கரன்பிள்ளை. தங்கள் பிரச்சனையைச் சொன்னார்.

கூண்டுக்குள் இருந்த கிளி சிரித்தது.

“அட முட்டாள்களே, பார்ட்னர்கள் நான்கு பேரும் எப்போதும் வண்டியில் உட்கார்ந்திருந்தால், டாக்ஸி நிரம்பிவிட்டது என்றுதானே எவனும் நினைப்பான்? எந்த வாடிக்கையாளன் வருவான்? இதற்குப் போய் ஜோசியரிடம் வந்து நிற்கிறீர்களே?”

இப்படித் தொழில் செய்தால், எந்த நட்சத்திரத்தால் சங்கரன் பிள்ளையின் தலையெழுத்தை சரிசெய்ய முடியும்?

நீச்சல் தெரியாமல் தண்ணீரில் குதித்தால், எப்போதாவது ஒருமுறை தற்செயலாக நீங்கள் தப்பிக்கலாம். ஆனால், அதை உங்கள் நட்சத்திரப் பலன் என்று கருதி, மறுபடியும் முயற்சி செய்தால், உயிருக்கு உத்தரவாதம் கிடையாது.

அதேபோல், தற்செயலாகக் கிடைத்த வெற்றி நிலைத்திருக்கும் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை.

திறமையைப் பயன்படுத்தாமல், வேறு காரணங்களால் மேலே வந்தவர்கள் அந்த நிலை எப்போது பறிபோகுமோ என்ற அச்சத்தில்தான் வாழ முடியும். வெளியில் காலெடுத்து வைப்பதற்குக்கூட நாள் நட்சத்திரங்களைப் பார்க்கத்தான் தோன்றும்.

திறமையினால் மேலே வந்தவர்களுக்கு இந்த அச்சம் இருக்காது. எதிர்பாராத காரணத்தால் சறுக்கல் வந்தால்கூட, மறுபடி எப்படி எழுவது, எப்படி நிமிர்வது, எப்படி வளர்வது என்று அவர்களுக்குத் தெரியும்.

உங்களுக்கு ஒரு தொழில் செய்ய விருப்பம் வந்தால், அந்தத் தொழிலின் அடிப்படை நுணுக்கங்களை முழுமையாக முதலில் புரிந்துகொள்ளுங்கள். அதை விடுத்து, வேறு யாரோ நான்கு பேர் செய்வதைப் பார்த்து ஆசைப்பட்டு நீங்களும் அதே தொழில் செய்தாலோ, உங்கள் நட்சத்திரப் பலன்களைக் கேட்டு அதன்படி தொழில் ஆரம்பித்தாலோ, வெற்றி நிரந்தரமாக இருக்காது.

உங்கள் திறமையை நம்பி தொழிலைத் துவங்குவீர்களா, எண்களை நம்பி தொழிலைத் துவங்குவீர்களா? என்ன கேவலம் இது?

உங்களுக்கு ராசியான எண் 1 என்று சொன்னால், ஒரு கண்ணையே குருடாக்கிக்கொண்டு விடுவீர்களா? ஒரு கையையும், ஒரு காலையும் வெட்டி எறிந்துவிடுவீர்களா?

மற்ற கிரகங்களின் அதிர்வுகள் பூமியின் மீது சிறிதளவு பாதிப்பை ஏற்படுத்தும்தான். ஆனால், மனதில் சமநிலையில் இருப்பவர்களை இந்த கிரக அதிர்வுகள் எந்த விதத்திலும் பாதிக்க முடியாது.

கிழமைகளும், தேதிகளும், எண்களும் நம் வசதிகளுக்காக நாம் உருவாக்கியவை. அவை நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கவிடலாமா?

திருமண வாழ்வு சரியாக அமையாவிட்டால், அதற்குக் காரணம் இங்கே இருக்கும் இரண்டு முட்டாள்கள். எங்கேயோ இருக்கும் ஒன்பது கிரகங்களல்ல.
வரப்போகும் இருபது வருடங்களுக்கான பலன்களை உங்களுக்கு எழுதிக் கொடுக்கிறாரே, ஜோசியர், அடுத்த ஐந்தாவது நிமிடம் அவருக்கு என்ன நடக்கப் போகிறது என்பதாவது அவருக்குத் தெரியுமா?

எதையோ செய்ய ஆசைப்பட்டீர்கள். ஜோசியரிடம் போனீர்கள்.

வெற்றி கிடைக்கும் என்று அவர் சொல்லிவிட்டால், அலட்சியத்தால் முழுத் திறமை காட்டமாட்டீர்கள். வெற்றி கிடைக்காது என்று சொல்லிவிட்டால், சலிப்பினால் முழு மூச்சுடன் ஈடுபடமாட்டீர்கள்.

அரைகுறையாக இப்படி வேலை செய்தால், விரும்பியது எப்படிக் கிடைக்கும்?

ஆசைப்பட்டதை அடைய வேண்டுமானால், உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள். விளையாடுவதற்கு முன்பாகவே முடிவைத் தெரிந்துகொள்ள நினைக்காதீர்கள். உங்கள் செயல்களுக்கான பொறுப்பை நீங்களே ஏற்றுக்கொள்ளத் துணியுங்கள்.

நீங்கள் வளர வேண்டுமானால், விதி பற்றிய பயமுறுத்தல்களிலிருந்து முதலில் வெளியே வர வேண்டும்.

கடவுளே வந்து சொன்னாலும், என் விதியை நான்தான் தீர்மானிப்பேன் என்ற உறுதி உங்களுக்கு வரவில்லையென்றால், உங்கள் வாழ்க்கை அதன் போக்கிற்குத்தான் நடக்கும். விரும்பியதை அடைய வேண்டும் என்ற தீவிரம் உங்களுக்கு இருந்தால், உங்கள் விதியைக் கடவுளிடமிருந்து பறித்து, நீங்களே கையாள முடியும்.

நீங்கள் நூறு சதவீதத்தையும் எதிர்பார்த்துத் திட்டமிடுங்கள். திறமையைப் பயன்படுத்துங்கள். சூழ்நிலைகளைப் புரிந்து, அவற்றுக்குத் தக்கவாறு கவனமாய் விழிப்புணர்வுடன் செயலாற்றுங்கள். எல்லா கிரகங்களும், நட்சத்திரங்களும் உங்களுக்குச் சாதகமாக வேலை செய்யத் துவங்கிவிடும்.

உங்கள் உடலின் மீது உங்களுக்கு ஆளுமை இருந்தால், உங்கள் வாழ்க்கையின் இருபது சதவீத விதி உங்கள் கைக்கு வந்துவிடும். மனதை ஆளத் தெரிந்து கொண்டுவிட்டால், ஐம்பதிலிருந்து அறுபது சதவீதம் வரை விதி உங்கள் சொல்படி கேட்கும். உங்கள் உயிர்சக்தியை முழுமையாக ஆளக் கற்றுக்கொண்டுவிட்டீர்களென்றால்..

எந்தக் கருப்பையில் உதிக்க வேண்டும், எப்படி வாழ வேண்டும், எப்படி இறக்க வேண்டும் என்று எல்லாவற்றையும் நீங்கள் விரும்பிய வண்ணம் அமைத்துக்கொள்ள முடியும்.

உயிர்சக்தி என்றால் என்ன? உங்களுடைய ஒவ்வோர் அசைவுக்கும் ஏதோ ஒரு சக்தி தேவைப்படுகிறதே, அதுதான் உயிர் சக்தி. அதில் மிகச் சொற்பப் பகுதியை வைத்துக்கொண்டு நீங்கள் அன்றாட வேலைகளைச் செய்துவிட முடிகிறது. அதை முழுவதுமாகக் கிளர்த்து எழுப்பினால், நினைத்துப் பார்க்க முடியாததை எல்லாம் நீங்கள் சாதிக்க முடியும்.

கேள்வி: ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யலாமா?

சத்குரு:

உங்களுடன் வாழப் போகிறவரை நீங்கள் அல்லவா தெளிவுடன் தேர்ந்தெடுக்க வேண்டும்?

'இந்தப் பெண் எனக்குப் பொருத்தமானவளா? இந்த ஆணுடன் நான் வாழலாமா?' என்று யாரோ ஒரு மூன்றாம் நபரிடம் ஆலோசனை செய்வது ஆபாசமாக இல்லை?

கட்டங்களைப் பார்த்து அவர் செய்து வைத்தத் திருமணங்களில் எவையெவை விபத்துகளாக முடிந்திருக்கின்றன என்ற பட்டியலை உங்களிடம் காட்டியிருக்கிறாரா?

உங்கள் வாழ்க்கையை ஜோசியம், ஜாதகம் என்று ஏன் அடுத்தவர் கையில் ஒப்படைக்கிறீர்கள்?

உங்கள் கணவனுடன் சண்டை வந்தால் காரணம் நட்சத்திரங்கள் என்பீர்கள். உங்கள் மனைவியுடன் சேர்ந்து வாழத் தெரியாவிட்டால், கிரகங்கள் மீது பழியைத் தூக்கிப் போடுவீர்கள்.

திருமண வாழ்வு சரியாக அமையாவிட்டால், அதற்குக் காரணம் இங்கே இருக்கும் இரண்டு முட்டாள்கள். எங்கேயோ இருக்கும் ஒன்பது கிரகங்களல்ல.

கணவன் மனைவி இருவரும் மனதால் பொருந்திவிட்டால், தெளிவுடன் வாழ்க்கையை வாழத் தயாராகிவிட்டால், நட்சத்திரங்களும், கிரகங்களும் என்ன செய்ய முடியும்?

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1