தேவாரம் என்பது 1200 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் தோன்றிய பக்திப் பாடல்கள். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் இயற்றிய சிவனைப் போற்றும் இப்பாடல்கள், தென்னிந்தியாவில் அப்போது பரவிய பக்தி இயக்கத்திற்கு சான்றாக விளங்குகின்றன. பெரும்பாலான பாரம்பரிய இசை முறைகளுக்கு முன் தோன்றிய தொன்மையான இசையமைப்பில் இப்பாடல்கள் பாடப்பட்டன. பக்திப் பெருக்கை வெளிப்படுத்தும் இப்பாடல்களை, இந்த தேவாரப் பாடல்களை, இன்றைய உலகிற்கு ஓர் அர்ப்பணிப்பாக, ஈஷா சம்ஸ்க்ருதி மாணவர்கள் பாடியுள்ளார்கள்.

சிவனை போற்றிப்பாடும் தொன்மையான பக்திப் பாடல்களின் தொகுப்பான பன்னிரு திருமுறைகளின் முதல் ஏழு திருமுறைகள்தான் தேவாரம். தென்னிந்தியாவின் குறுக்கும் நெடுக்கும் பயணம்செய்து தரிசித்த பல்வேறு கோயில்களை தங்கள் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். இக்கோயில்கள் பெரும்பாலும் தற்போதைய தமிழ்நாட்டில் அமைந்துள்ளவை. இன்றுவரை தமிழகத்தின் பல்வேறு சிவன் கோயில்களில் தேவாரப்பாடல்கள் பாடப்படுகின்றன.

சம்பந்தர் 3 வயதாக இருந்தபோது ஒரு கோயிலுக்கு எடுத்துச்செல்லப்பட்டார். அங்கு சிவனும் பார்வதியும் அவருக்கு காட்சியளித்தனர். குழந்தையை விட்டுச்சென்ற தந்தை சிறிது நேரத்திற்குப்பின் திரும்பியபோது, குழந்தையின் உதடுகளில் பால்த்துளிகள் இருப்பதைக் கண்டார். அது பார்வதி தேவி ஊட்டிய ஞானப்பால். அதைப் பற்றி அவர் தந்தை வினவியபோது அவர் பாடிய பாடல்தான் 'தோடுடைய செவியன்'.

திருஞானசம்பந்தர் ஒரு இளம் துறவியாவார். இவர் 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாலயோகி. அவர் குழந்தையாக இருந்ததால் எதையும் போதிக்கமுடியவில்லை, எனவே தன் ஞானத்தை அழகிய பாடல்களாக வெளிப்படுத்தினார்.