பொங்கல் என்றால் வருங்காலத் தலைமுறை உணவு வகை என்றுதான் நினைத்துக் கொள்ளுமோ என்னவோ? அப்படியொரு இக்கட்டான திசையில் இன்று நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். கிராமங்களில் கூட இந்நிலை நிலவுவது வருத்தத்தையே உண்டு பண்ணுகிறது. இவ்வருடம் ஈஷா யோகா மையத்தில் நாம் எடுத்த சில சீரிய முயற்சியினால் கிராமங்களில் பொங்கல் கொண்டாட்டங்கள் புத்துயிர் பெற்றன. தொலைக்காட்சிப் பெட்டியே கதியென்று கிடந்தவர்கள், கொண்டாட்டத்தின் உண்மையான ருசியை உணர்ந்தனர்...

“வீட்டில் பொங்கல் வைத்து மாட்டினை அலங்கரித்து ஆற்றங்கரைக்குப் பூப்பறிக்க செல்கிறார்கள் பெண்கள்! பூப்பறிக்க செல்லும்போது அவரவர் வீட்டில் செய்த பலகாரங்களை எடுத்து சென்று, நதிக்கரையில் பெரியவர்களும் குழந்தைகளும் அமர்ந்து இனிப்புகளை பகிர்ந்துண்ண, பெண்கள் பாட்டுப் பாடி கும்மியடிக்க “...அட இது சினிமா ஷூட்டிங்" என்றெதுவும் நினைத்து விட வேண்டாம். இந்த உயிரோட்டமான பொங்கல், ஈஷா தன்னார்வத் தொண்டர்களின் செயலால் இப்போது நம் தமிழக கிராமங்களில்!

தொலைக்காட்சி பெட்டியின் சப்தம் வீட்டையே ஆக்கிரமிக்க, யாரோ ஒருவர் ஆடுவதையும் பாடுவதையும் பார்த்து ரசிப்பதுதான் பொங்கல் என்றாகிவிட்ட நிலையில் இதோ இந்த கும்மி சப்தம் நம் கலாச்சாரத்தை மீண்டும் உயிர்த்தெழச் செய்ய வந்துவிட்டது.

இப்படித்தான் கொண்டாட்டமாய் குதூகலமாய் இருந்த நம் கலாச்சாரம் அந்நிய ஆக்கிரமிப்பிற்கு பின் உயிரிழந்த சடங்காகி விட்டது. சத்குருவின் அருளால் இன்று 40 கிராமங்களில் விளையாட்டு, பாரம்பரிய பொங்கல் கொண்டாட்டம் என்று இவ்வருடப் பொங்கல் அமர்க்களப்பட்டது.

தீனம்பாளையம் குப்பனூர் போன்ற பல கிராமங்களைச் சேர்ந்த பல அணிகள் வாலிபால் டோர்னமெண்ட்டில் மோதின. விறுவிறுப்பான இந்த டோர்னமெண்ட் மாட்டுப் பொங்கல் தினத்தன்று நிறைவுப் பெற்றது.

சுமார் 10 நாட்களுக்கு முன்னரே இதற்கான முன்னேற்பாடுகளில் இறங்கிவிட்ட நம் தன்னார்வத் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று அழைப்பிதழ் கொடுத்து இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர்.

கரகாட்டம், பின்னலாட்டம், களியல், தப்பாட்டம் என்ற நம் பாரம்பரிய நடனங்களை குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஆர்வமாக அரங்கேற்ற, 12 கிராமங்களில் எல்லா வயதினரும் கலந்து கொள்ளும் வகையில் கேளிக்கை விளையாட்டுகள் பொங்கலுக்கு முந்தைய வாரமே துவங்கி சிறப்புடன் நடைபெற்றன. விளையாட்டில் வென்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

மற்றுமொரு சிறப்புப் பரிசாக, கோவையைச் சுற்றியுள்ள கிராமப்புறத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவியருக்கு "சத்குரு ஸ்ரீ பிரம்மா அறக்கட்டளை" சார்பாக ரூ. 10 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. பொங்கலையொட்டி ஊர் மக்களுக்கு கிடைத்த மற்றுமொரு பொங்கல் சிறப்புப் பரிசு இது.

இந்த விளையாட்டு நிகழ்ச்சிகளே இவர்களுக்குப் புத்துணர்வூட்டும் பெரிய பொங்கல் பரிசாக அமைய, பரிசை எதிர்பார்க்காத இந்த உள்ளங்கள் தங்களது நன்றியுணர்வை உற்சாகமாய், அன்பாய் வெளிப்படுத்திக் கொண்டிருப்பது நமக்கு தனி உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.

இந்த மாபெரும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் எவ்வளவு பேர் தெரியுமா? 20 கிராமங்கள், 800 நடனக் கலைஞர்கள், நான்கு நாட்டுப் புறக் கலைகள், 42,000 மக்கள்! அத்தனையும் ஒரே நாளில்!

இத்திசையில் நாம் பயணம் செய்தால் நம் கலாச்சாரம் உயிர்பெறும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.