யக்ஷா திருவிழாவின் இரண்டாம் நாள் கொண்டாட்டத்தின் ஒரு தொகுப்பு இங்கே!


ஈஷா யோகா மையத்தில் ஏழு நாட்கள் கொண்டாடப்படும் இசை மற்றும் நாட்டியத் திருவிழாவான 'யக்ஷா' கொண்டாட்டத்தில் இரண்டாம் நாள் இரவான நேற்று, திரு.V.V.சுப்பிரமணியம் அவர்களின் கர்நாடக வயலின் இசை நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது.

நேற்றைய நிகழ்ச்சியில், திரு.V.V.சுப்பிரமணியம் அவர்களின் கர்நாடக வயலினிசை நிகழ்ச்சி செவிகளுக்கு குழுமை சேர்த்தது. சிவ கல்யாணி ராகத்தில், தான் உருவாக்கிய புதியதொரு சாகித்யத்தை சத்குருவின் முன் அரங்கேற்றிய சுப்பிரமணியம் அவர்கள், தொடர்ந்து பல நெஞ்சை அள்ளும் ராகங்களில் வயலினிசையை வழங்கினார். V.V.சுப்பிரணியம் அவர்களுடன் அவரது சகோதரர் திரு.V.V.ரவி அவர்கள் வெகுசிறப்பான துணை வயலினிசையை வழங்கினார்.

'திறமைசாலியாக இருந்தாலும் சாமர்த்தியசாலியாக இருந்தாலும் பணக்காரராக இருந்தாலும் தெய்வீக அருள் இல்லையென்றால் அவையெல்லாம் வீணாகிவிடும்; எனவே நான் வழங்கவிருக்கும் இசைக்கு சத்குருவின் அருள் துணை நிற்க வேண்டும்' என்று கூறி தன் இசைக் கச்சேரியைத் துவக்கிய V.V.சுப்பிரமணியம் அவர்களுக்கும் அவரின் குழுவினருக்கும் நிகழ்ச்சியின் நிறைவில் சத்குரு தனது இதயம் கனிந்த ஆசிகளை வழங்கி அருள்செய்தார்.
7

வயலின் வழியாக இசை விருந்து படைத்த சுப்பிரமணியம் அவர்களின் இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, லிங்கபைரவி தேவி உற்சவ மூர்த்தியின் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.


யக்ஷாவைப் பற்றி அறிய

திரு.V.V.சுப்பிரமணியம் அவர்களின் சிறப்புகள்

கர்நாடக இசை சங்கத்தின் முன்னோடியும், சங்கீத இசைக்கலைக் குடும்பத்திலிருந்து வந்தவருமான V.V. சுப்பிரமணியம் அவர்கள் தனது தந்தையிடம் இருந்து ஆரம்ப பாடங்களைக் கற்ற சங்கீத கலாநிதி பேராசிரியர் T.N.கிருஷ்ணன் அவர்களின் தந்தையான திருப்பணித்துறை நாராயண ஐயரிடமும் சங்கீதம் பயின்றவராவார்.

V.V. சுப்பிரமணியம் அவர்கள், முதல் இசை அரங்கேற்றத்தினை தனது 11-ம் வயதில் துவங்கினார். இவரால் சில வர்ணங்கள், கீர்த்திகள், தில்லானாக்கள், பஜன்கள், ஆங்கில இசைக்குறிப்புகள் போன்றவற்றோடு பிரியதராஜ்ஜகி, ராதாபிரியா மற்றும் சஞ்சாரி என்ற ராகங்களும் இவரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் “வயலின் வரலாறு” என்ற புத்தகத்தினையும் “சுவாதி திருநாள்” என்று அழைக்கப்படும் நூலினையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க சிறப்புகளாகும்.