யக்ஷா திருவிழாவின் மூன்றாம் நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் இங்கே உங்களுக்காக!


2
1
3

மூன்றாம் நாள் யக்ஷா கொண்டாட்டத்தில் இன்று, பண்டிட் வெங்கடேஷ்குமார் அவர்களின் ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டு நிகழ்ச்சி, அனைவரையும் ஹிந்துஸ்தானி இசை வெள்ளத்தில் ஆழ்த்தியது. கர்நாடக சங்கீதமே சற்று அந்நியமாய் தோன்றும் இன்றைய நாட்களில், வெங்கடேஷ்குமார் அவர்களின் ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டு, சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அனைவரையும் லிங்கபைரவியின் முன் கட்டிப்போட்டது. அந்த ஒப்பற்ற கலைஞரின் இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, லிங்கபைரவி தேவி உற்சவ மூர்த்தியின் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

ஆயிரக்கணக்கான பொதுமக்களுடன் நிகழ்ச்சியைக் கண்டுகளித்த சத்குரு, நிகழ்ச்சியின் நிறைவில் திரு.வெங்கடேஷ்குமார் அவர்களுக்கும் அவரது இசைக் குழுவினருக்கும் மலர் வழங்கி ஆசி வழங்கினார்.


யக்ஷாவைப் பற்றி அறிய

பண்டிட் வெங்கடேஷ்குமார் அவர்களின் சிறப்புகள்

பண்டிட் வெங்கடேஷ்குமார் அவர்கள் பாரம்பாரிய ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் பாடல் பாடும் நேர்த்தியினால் இசை உலகில் புகழ்பெற்று விளங்குகிறார். மேலும் இவர் தசரா பாடல்கள் பாடுவதிலும், தெய்வீக ராகங்களை பாடுவதிலும் வல்லவர்.

இசை மேதையான திரு.வெங்கடேஷ்குமார் அவர்கள், ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டினை குவாலியர் மற்றும் கிரானா, கரனா வடிவங்களில் கற்றுத் தேர்ந்துள்ளார். இந்த ராகவடிவங்களின் கலவையினை எவ்வித சிரமமுமின்றி வழங்குவதில் வல்லவர்.

கர்நாடக இசையின் நுணுக்கமான வடிவங்களான சர்கம் போன்ற தன்மைகள் இவரிடம் இயல்பாகவே அமைந்திருப்பதை கண்டுணர்ந்த இவரது குரு, இவரின் திறமையை மென்மேலும் மெருகேற்றினார். இவரது கலை திறனுக்கும் சங்கீத கலை சேவைக்கும் பல விருதுகள் இவரை தேடி வந்துள்ளன. அவற்றில் முக்கியமாக “ஸ்வரஸ்ரீ”, “சங்கீத சுதாகரா” “சங்கீத ரத்தினா” போன்றவை ஆகும். இவர் “கர்நாடக ராஜயுத்சபா” விருதை 1999-ல் பெற்றார். “கர்நாடக சங்கீத நாட்டிய அகாடமி” விருதினை 2007-ம் ஆண்டும், 2008-ம் ஆண்டு “வத்சலாச்சல் பீம்சன் ஜோஷி” விருதும், 2009-ல் “கிருஷ்ணஹங்கல்” விருதினையும் பெற்றவர் ஆவார். மேலும் 2012-ம் ஆண்டு “கேந்தர சங்கீத நாடக அகாடமி” விருதினை பெற்றுள்ளார்.