செந்தில், 10 வருடங்களாக ஈஷாவில் பணிபுரிந்து வருபவர், ஈஷா அருகிலுள்ள சிறிய கிராமமான செம்மேட்டைச் சேர்ந்தவர், வயது 31

வாழ்க்கையின் சூழல் எவ்வாறாயினும் சத்குருவின் வார்த்தைகள் அடங்கிய புத்தகங்கள்தான் என்னை வழி நடத்துகின்றன. சாதாரணமாய் அவருடன் பேசிய ஆரம்ப காலங்களில் சத்குருவுடனான நெருங்கிய தொடர்பை விட சந்திக்க இயலாத இத்தருணத்தில்தான் மேலும் நெருக்கத்தை உணர்கிறேன். ஆரம்பகாலத்தில் சத்குருவை என் வாழ்வாதாரமாக மட்டுமே பார்த்த நான் இன்று என் வாழ்க்கையின் முழுக்கணத்திலும் வியாப்பித்திருக்கும் சத்குருவை உணர்கிறேன். வெள்ளியங்கிரியின் அதிர்வலையில் பிறந்ததின் பேறு இன்று சத்குருவின் வருகையால்தான் புரிதல் சாத்தியமானது.

பவானி மற்றும் கார்த்திக், ஈஷா ஹோம் ஸ்கூலில் முழு நேர தொண்டாற்றும் சிங்கப்பூர் தம்பதியினர், வயது 39, 41

அவர் வார்த்தைகளுக்குள்ளோ அல்லது உணர்வுகளுக்குள்ளோ நிரப்ப முடியாதவர். எங்களை முழுமையாய் தழுவி ஆள்பவர். எங்களுடையது என்று எதுவெல்லாம் உள்ளதோ அவை அனைத்தையும் வாரி அர்ப்பணிப்பாய் அவர் பாதத்தில் இடும் மகா உன்னத நிலையில் உள்ளவர் எங்கள் குரு.

எங்களுக்கு அவர் வழங்கியுள்ள சாத்தியங்களின் மகத்துவங்களை எங்களால் முழுமையாக உணரக் கூட முடியாத நிலையில்தான் நாங்கள் உள்ளோம். அவர் அருளில் இருப்பதை மட்டுமே நாடி ஈஷா மையத்தில் வாழ்கிறோம்

எதியோப்பியா நாட்டுக்காரர், எழுத்தாளர், ரூத் பாலோஸ், வயது 35

நான் ஒருமுறை சத்குருவின் கண்களை பார்த்தேன், என் முழு உடலும் நடுங்கத் தொடங்கிவிட்டது, கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடிக் கொண்டே இருந்தது. அப்போது ஏதோ கண்ணிற்கு புலப்படாத அன்புக் கரங்கள் என்னை ஆரத்தழுவி என்னை அன்புக் கடலில் ஆழ்த்துவதை போல் உணர்ந்தேன். அப்போது கண்களில் கண்ணீருடன், உடலில் நடுக்கத்துடன் முழுவதும் அன்பு மயமாய் இருந்தேன். பல வருடங்களுக்கு பின்பு இன்றும் அவருடைய இருப்பு (Presence) என்னை முழுவதும் ஆட்கொண்டு என்னை மீண்டும் மீண்டும் அந்த அன்பு வளையத்திற்குள் அழைத்துச் செல்கிறது. இந்த அன்பு, அனைத்தையும், முற்றிலும் ஏற்றுக் கொள்வதாயும், தூயதாகவும் இருந்து, ஒருக்கணம் வேறொன்றுமே இல்லா ஓர் அதிஅற்புத நிலைக்கு என்னை கொண்டு செல்கிறது.

எனக்கு சத்குரு என்பவர், நம்மால் புரிந்துக் கொள்ள இயலாத அன்பாய்தான் புலப்படுகிறார். அவருடைய அந்த எல்லையற்ற அன்பை நான் சுவைத்திருக்கிறேன். அவரை போல் வேறொருவர் கிடையாது.

நஞ்சப்பன், கட்டிடத் துறை டெக்னீஷியன், வயது 60, கடந்த 2 வருடங்களாக ஈஷாவில் பணிபுரிகிறார்

சத்குருவை நான் வெறும் உடலாக பார்க்கமுடியவில்லை. ஒரு ரிஷியாக பார்க்கிறேன். பிறப்பு, இறப்பு அற்ற மகான் அவர் என்று தோன்றுகிறது. அவரது குழந்தைப் பார்வை என்னை வசீகரிக்கிறது. சத்குரு இருக்கும் இடங்களில் ஒரு சக்தியை உணரமுடிகிறது. மனம் உணர்வற்ற நிலை ஏற்படுகிறது. பொருள் சேர்க்கும் ஆசையில் வேலைக்கு வந்த நான் போதும் என்ற மனதுடன் இருக்கிறேன்.

அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ் மாநிலத்தில் வாழும் டிசைனர், திரு. ஸ்காட் ஸ்கால்வின்ஸ்கி, வயது 42

விலைமதிப்பிட முடியாத ஏதோ ஒன்றை சத்குரு எனக்கு வழங்கியுள்ளார். இந்த வாழ்வை உள்ளது உள்ளபடி புரிந்துக் கொள்ளும் ஆற்றலையும், என் உள்நிலை வளர்ச்சியின் மூலம் வாழ்வை முற்றிலும் மாறுபட்ட ஓரு பரிமாணத்தில் உணரவும் வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

அவருடைய வார்த்தைகள் உண்மையானவை. அவருடனான இந்த பந்தம் இரத்த பந்தங்களுக்கெல்லாம் மேலானது. சத்குரு தான் என் தந்தை, என் தாய், என் சகோதரன், என் தோழன், என் ஆசிரியர்.... என் குரு... வார்த்தைகளால் என் நன்றியை வெளிப்படுத்த இயலாது.