யாருக்கு வாக்களிப்பது..?
இப்போது உங்கள் (அமெரிக்கர்களின்) பிரச்சனை, எனது வாக்குகளை பெறும் அளவுக்கு இவர் தகுதியானவர் தானா என்று பார்ப்பதற்கு பதிலாக, என்ன நடந்தாலும் என் வோட்டை இந்த கட்சிக்கு மட்டும்தான் பதிவுசெய்வேன் என்ற முன்முடிவோடு இருப்பதுதான்.
 
யாருக்கு வாக்களிப்பது..?, Yarukku vakkalippathu?
 

அமெரிக்க சுற்று பயணத்தில் சுவாரசியமான கேள்விக்கு சத்குருவின் பதில்.

வடஅமெரிக்கா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இன்னர் இஞ்சினியரிங் புத்தக வெளியீடும் சத்குருவுடன் சத்சங்கமும் சமீபத்தில் நிகழ்ந்தது. இன்னர் இஞ்சினியரிங் புத்தகம் மூலமாக தங்கள் வாழ்க்கையில் எளிதாக செயலாற்றும் வாய்ப்பை மேற்கத்திய நாடுகளில் உள்ள மக்களுக்கு சத்குரு வழங்கியுள்ளார். இன்னர் இஞ்சினியரிங் புத்தகம் வாங்கிய வாசகர்கள் சத்சங்கத்தில் கலந்து கொண்டு சத்குருவிடம் நேரில் புத்தகத்தில் கையெழுத்து பெறும் வாய்ப்பையும் பெற்றனர். புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 16 அன்று துவங்கி 17 நகரங்களில் நடைபெற்ற சத்சங்கங்களில் எல்லா தரப்பு மக்களும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் முழு ஈடுபாட்டுடனும் கலந்து கொண்டனர்.

சிகாகோ நகரில் சத்குரு

அமெரிக்க சுற்று பயணத்தின் ஒரு பகுதியாக சிகாகோ நகரில் நடந்த சத்சங்கத்தில் தான் இந்த கேள்வி சத்குருவிடம் முன் வைக்கப்பட்டது.

இப்போது உங்கள் (அமெரிக்கர்களின்) பிரச்சனை, எனது வாக்குகளை பெறும் அளவுக்கு இவர் தகுதியானவர் தானா என்று பார்ப்பதற்கு பதிலாக, என்ன நடந்தாலும் என் வோட்டை இந்த கட்சிக்கு மட்டும்தான் பதிவுசெய்வேன் என்ற முன்முடிவோடு இருப்பதுதான்.

தேர்தல் சமயத்தில பலருக்கும் வரும் குழப்பம் போலவே, இது வரை இல்லாத அளவுக்கு அமெரிக்க அதிபர் தேர்தலில் நடக்கும் சர்ச்சைகளை பார்த்து, "யாருக்கு வோட்டு போட வேண்டும்" என்ற கேள்வியை ஒருவர் சத்குருவிடம் கேட்டார்.

கேள்வியின் ஆழத்தை முழுமையாக தொட்டு சத்குரு அளித்த தீர்க்கமான பதில் அமெரிக்கர்களுக்கு மட்டுமல்ல, தலைவர்கள், கட்சிகள் பின்னால் தங்கள் வாழ்க்கையை தேடும் உலக மக்கள் அனைவருக்காகவும் தான்..

“இப்போது உங்கள் (அமெரிக்கர்களின்) பிரச்சனை, எனது வாக்குகளை பெறும் அளவுக்கு இவர் தகுதியானவர் தானா என்று பார்ப்பதற்கு பதிலாக, என்ன நடந்தாலும் என் வோட்டை இந்த கட்சிக்கு மட்டும் தான் பதிவு செய்வேன் என்ற முன்முடிவோடு இருப்பது தான்.

என்ன நடந்தாலும் ஒரே கட்சிக்கு வோட்டு போடும் மனநிலையால் தான் மக்களிடையே இரு பிரிவுகள் உருவாகிறது. பலர் ஒரே கட்சிக்கு வாக்கு அளிக்க காரணம், அவரது தாத்தா, தந்தை என தொடர்ந்து அதே கட்சிக்கு வாக்கு அளித்து வந்தது தான்.

Democracy என்பதை தென்னிந்தியாவில், தமிழ் மொழியில் ஜனநாயகம் என்று குறிப்பிடுவோம். மக்களின் ஆட்சி என்று இதற்கு அர்த்தம். நமது வாக்கை பதிவு செய்யும் போது நாம் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது, நாம் தேர்ந்தெடுப்பது நமக்கான தலைவரை அல்ல, நமது பிரதிநிதியை என்பதை தான். நமது லட்சியங்களை அவர் மூலமாக நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கையில் தான் அவரை நாம் தேர்ந்தெடுக்கிறோம்.

ஜனநாயகம் என்ற சக்தி சிறப்பாக செயல்பட தகுதியான ஒருவரை தானே நாம் தேர்வு செய்ய வேண்டும். தகுதியை மட்டுமே பார்த்து வாக்களித்து சரியான மனிதரை தேர்ந்தெடுக்கும் போது தான் ஜனநாயக முறையின் உண்மையான வலிமை வெளிப்படும். வோட்டு போடுவதுடன் உங்கள் கடமை முடிந்து விடாது. தேசம் நல்ல முறையில் வளர ஒவ்வொரு குடிமகனும் தன்னால் முடிந்த வகையில் ஜனநாயகத்துக்கு தேவையான பங்களிப்பை தினமும் வழங்க வேண்டும். பொறுப்புள்ள குடிமக்கள் எந்த வகையில் தங்கள் பங்களிப்பை வழங்க முடியும் என்று தெரிந்து வைத்திருக்க வேண்டும் தானே.

உலகின் முதன்மையான தேசமாக இருப்பதால் இன்றைய சூழ்நிலையில் அமெரிக்காவுக்கு பொறுப்பு அதிகமாவே இருக்கிறது. உதாரணமாக அமெரிக்கர்கள் நீல நிற ஜீன்ஸ் அணிந்தால் உலகில் பாதி பேர் நீல ஜீன்ஸ் அணிந்து கொள்கிறார்கள். அமெரிக்கர்கள் கொஞ்சம் கிழித்து விட்டு கொண்டால் மற்றவர்களும் கொஞ்சம் கிழித்து கொள்கிறார்கள். எனவே ஒரு வகையில் யார் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர் உலகில் முதன்மையான தலைவராக இருப்பார். இது மிக பெருமையானதாக இருக்கும் அதே சமயம் பெரும் பொறுப்பும் சேர்ந்தே வருகிறது.

தனிமனிதர்களின் அயராத உழைப்பின் மூலமாகவே இன்றைய நிலைக்கு அமெரிக்கா செழித்து வளர்ந்துள்ளது. ஆனால் எதிர்பாராதவிதமாக இந்த தேசம் தடம் மாறி உலகம் முழுக்க பல சிக்கல்களில் சிக்கிக் கொண்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் பல போர்களில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், சில நாடுகளையும் அழித்துள்ளது. கடந்த காலங்களில் நடந்த இரண்டு உலகபோர்களை பார்த்து இந்த கொடுமைகள் நடக்க எப்படி அப்போது வாழ்ந்த மக்கள் இடம் கொடுத்தார்கள் என்று ஆச்சரியம் அடைந்தது உண்டு. ஆனால் அதே நிகழ்வுகள் இப்போது நடக்கும் போது நமது பொறுப்பு இல்லை என்று நினைத்துக்கொண்டு கைகட்டி வேடிக்கை பார்க்கிறோம். நம் வாசலுக்கு வந்தால் அது நம் பொறுப்பு ஆகி விடும் தானே. நாம் பார்க்க நடப்பது நம் வாசலுக்கு வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?

கடந்த காலங்களில் ஆட்சி மாற்றம் நடக்க வேண்டும் என்றால், பல்லாயிரக்கணக்கானவர்கள் இரத்தம் சிந்த வேண்டி இருந்தது. நாம் இன்றும் அதே போல வேல் கம்பு வைத்துக் கொண்டு போர் செய்வது இல்லை. இன்று நம்மிடம் இருக்கும் ஆயுதங்களை கொண்டு போர் நடந்தால், ஜெயித்தவர்கள் கூட மிஞ்ச மாட்டார்கள். இலட்ச கணக்கில் வீரர்களையும், கோடிக்கணக்கில் பணத்தையும் இழந்து போர் செய்வதற்கு பதிலாக, டாக்டர்களையும் இன்ஜினியர்களையும் அந்த நாட்டு மக்களுக்கு தேவையான தொழில்நுட்ப வல்லுநர்களையும் அந்த நாடுகளுக்கு அனுப்பிவைக்கலாம். போருக்கு செலவு செய்வதை விட இதற்கு பத்தில் ஒரு பங்கு முதலீடே போதும், உலகம் உங்கள் வசம் வந்து விடும்.

இந்த உலகில் வாழும் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்க 36 பில்லியன் டாலர் போதும் என்று யுனெஸ்கோ மதிப்பிட்டுள்ளது. 2008 ம் ஆண்டின் ஐநா கணக்கின்படி வருடத்திற்கு 30 பில்லியன் டாலரில் இந்த பூமியில் இருந்தே பசியை துரத்தி விடலாம். இதை நீங்கள் நிகழ்த்தினால் இந்த உலகமே உங்களை நேசிக்கும் தானே. கற்பனையில் கூட எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு அமெரிக்காவுக்கு நன்றியுணர்வும் திறமையும் தேடி வரும் தானே. இந்த தேசம் எல்லா திசைகளிலும் இருந்தும் திறமையை இறக்குமதி செய்து வளர்ந்து உள்ளது. உலகம் முழுவதும் திறமையை ஊக்குவித்து வளர்ப்பதன் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியும் தானே.

உலக நாடுகள் அனைத்தின் இடையே பரஸ்பர நல்வாழ்வை நோக்கமாக அமைத்து கொண்டால் நம் அனைவருக்கும் வளமான எதிர்காலம் உறுதி தானே.

வெற்றியை துரத்தி கொண்டே பின்னால் ஓடிய காலம் முடிந்து விட்டது என்று அனைவரும் உணர வேண்டும். நமது நோக்கம் போரிலிருந்து நல்வாழ்வு நோக்கி திரும்புவதற்கு நாம் அனைவரும் சேர்ந்து நிற்க வேண்டிய தருணம் இது. ஒருவர் மீது ஒருவர் குறை கூறி விவாத போர் புரிவதற்கு பதிலாக, நமது நல்வாழ்வுக்கு தேவையான ஆரோக்கியமான கருத்துக்களை முன் வைத்து பேச வேண்டும் என வேட்பாளர்களை கேட்டுக் கொள்வோம்.

எங்களுக்கு போர் தேவையில்லை, நல்வாழ்வு தான் தேவை என்று ஓங்கி ஒலிக்கும் நம் குரலை யார் ஏற்கிறாரோ அவருக்கே நம் வாக்கு என்று நாம் முடிவு செய்வோம்.

அன்பான அமைதியான ஆனந்தமான உலகம் மலர்வதற்கான காலம் கனிந்துள்ளது. நாம் இதனை நிகழச்செய்வோம்.”

என்று சத்குரு முடிக்க, அரங்கம் அமைதியில் ஆழ்ந்தது. சத்குருவின் எளிய நேரடியான தீர்வு அனைவரையும் மெய்மறக்கச் செய்திருந்தது. மெல்ல தம்நிலை வந்த மக்கள் எழுச்சியுடன் எழுந்து நின்று அரங்கம் அதிர தங்கள் கரகோஷத்தால் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சில சுவாரசியங்கள்:

  • சத்குரு அரங்கில் நுழையும் போது பலரும் எழுந்து நின்று கைகூப்பி நமஸ்காரம் செய்து வரவேற்றனர்.

namaskaram

  • சத்குருவின் சத்சங்கத்தில் கலந்து கொண்டவர்களில் பலர், குறிப்பாக தெற்காசிய நாடுகளில் இருந்து அமெரிக்கா சென்றவர்கள், சிகாகோவில் விவேகானந்தர் உரையாற்றிய நிகழ்ச்சி தம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை என்று குறிப்பிட்டனர்.
  • 1893 செப்டம்பரில் சர்வ சமய மாநாட்டில் கலந்து கொண்டு விவேகானந்தர் உரையாற்றிய Art Institute of Chicago, வுக்கு மிக அருகில் Chicago Symphony Orchestra Centre ல் சத்குருவின் சத்சங்கம் நிகழ்ந்தது.
  • மிக வேகமாக அனைவரையும் ஈர்த்து வரும் சத்குரு அமெரிக்கர்களிடையே ஆன்மீகத்தில் அதிகம் அறியப்பட்டவராக இருக்கிறார்.
  • அவரவர் தன்மைக்கு ஏற்ப புரிதல் இருக்கும் என்ற சத்குருவின் வாக்கை அமெரிக்கர்கள் மெய்ப்பித்துள்ளனர். ஆம். அவர்களுக்கு பிடித்தவாறு ஆன்மீக rock star என சத்குருவை செல்லமாக குறிப்பிடுகின்றனர்.
  • அடுத்த நாள் வேலை நாளாக இருந்தும், சத்சங்கம் நிறைவடைந்த பின் இரவு 10 மணியிலும் வரிசையில் அமைதியாக நின்று மக்கள் இன்னர் இஞ்சினியரிங் புத்தகத்தில் சத்குருவிடம் கையெழுத்து பெற்று சென்றனர்.

இன்னர் இஞ்சினியரிங் புத்தகம்

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1