2016 விப்ரோ சென்னை மாரத்தானின் (Wipro Chennai Marathon 2016) தொண்டுநிறுவன பங்குதாரராக (Official Charity Partner) ஈஷா வித்யா அறிவிக்கப்பட்டுள்ளது! இதில் நீங்கள் எந்தெந்த விதங்களில் கலந்துகொண்டு ஈஷா வித்யாவிற்கு உதவமுடியும் என்று இப்பதிவைப் படித்து அறிந்துகொள்ளுங்கள்.

இந்த வருட விப்ரோ சென்னை மாரத்தானில் ஈஷா வித்யா தொண்டுநிறுவன பங்குதாரராக அறிவிக்கப்பட்டுள்ளதைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

இது நம்மை கௌரவிப்பதோடு, நம் கையிலிருக்கும் மிகப்பெரிய பொறுப்பாகவும் வாய்ப்பாகவும் திகழ்கிறது. விப்ரோ சென்னை மாரத்தான் தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாரத்தான் ஓட்டமாகும். விப்ரோ சென்னை மாரத்தான் ஓட்டத்தின் நிர்வாகிகளான சென்னை ரன்னர்ஸ் அமைப்பு, ஈஷா வித்யாவை தொண்டுநிறுவன பங்குதாரராக தேர்ந்தெடுத்திருப்பது மூலம், கிராமக் குழந்தைகளுக்குக் கல்வி வழங்கும் ஈஷா வித்யாவின் பணியை ஆதரித்துள்ளது. ஈஷா வித்யா, கடந்த நான்கு ஆண்டுகளாக விப்ரோ சென்னை மாரத்தானில் கலந்துகொண்டு, குழந்தைகளின் கல்விக்காக ஓடுவதில் உற்சாகமும் ஈடுபாடும் காட்டியுள்ளது.

தொண்டுநிறுவன பங்குதாரராக மாரத்தான் நிர்வாகிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது, ஈஷாவின் சமூகநலப் பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதற்கு நிதி திரட்டவும் ஒரு அற்புத வாய்ப்பாக மாறியுள்ளது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

ஈஷா வித்யா, தற்போது 9 பள்ளிகளை நடத்தி வருகிறது. இதில் பயிலும் 7,115 குழந்தைகளில் தோராயமாக 56% குழந்தைகள் உதவித்தொகை மூலம் கல்வி கற்கிறார்கள். ஈஷா வித்யாவின் அங்கமான அரசுப்பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம், தமிழகமெங்கும் உள்ள 56 அரசுப்பள்ளிகளிலுள்ள 40,469 குழந்தைகளும், ஆந்திர மாநிலத்திலுள்ள 460 அரசுப்பள்ளிகளிலுள்ள 38,000 குழந்தைகளும் பயனடைந்துள்ளனர்.

தொண்டுநிறுவன பங்குதாரராக ஈஷா வித்யாவை அறிவித்துள்ளதால், நம் நோக்கத்தைப்பற்றி மாரத்தான் ஓடுவோர் மத்தியில் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்கள் ஆதரவை நன்கொடைகள் மற்றும் தனிநபர்களின் நிதிதிரட்டும் முயற்சிகள் மூலம் பெறமுடியும்.

நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவராக இருந்தாலும், இவ்வருடம் நீங்கள் எங்கு ஓடிக்கொண்டு இருந்தாலும், 2016 டிசம்பர் 11ஆம் தேதியன்று எங்களுடன் இணைந்திடுங்கள்! சென்னை மாரத்தானை, ஈஷா வித்யா இதுவரை கண்டிராத மாபெரும் மாரத்தான் ஓட்டமாக மாற்றிட உதவுங்கள்! ஈஷா யோகா மையத்தின் தன்னார்வத் தொண்டர்கள், ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், குழந்தைகள் மற்றும் ஊழியர்களுடன் சேர்ந்து ஓடுவதற்கு உங்களுக்கான வாய்ப்பு இது. மாரத்தானில் ஓடுவதற்கு பதிவுசெய்துகொள்ள, chn.marathon@ishavidhya.org என்ற மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளுங்கள். ஈஷா வித்யாவிற்காக ஓடும் தன்னார்வலர்களுக்கென பிரத்யேகமான ஒரு பதிவுப்பலகையை (special registration process) அமைத்துள்ளோம். இந்த மின்னஞ்சலைத் தொடர்புகொண்டால் மேலும் தகவல்களோடு தன்னார்வத்தொண்டர்கள் உங்களைத் தொடர்புகொள்வார்கள்.

ஓட்டத்தில் நாட்டம் கொண்டவர்கள், விழாநாளுக்காக ஏற்கனவே தங்களைத் தயார் செய்யத் துவங்கிவிட்டார்கள். சென்னையின் பல ஈஷா மையங்களிலுள்ள தன்னார்வத் தொண்டர்களும் பல பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்திவ்ருகிறார்கள். இதில் அனுபவம்மிக்க மாரத்தான் வீரர்களுடன் இணைந்து பயிற்சி செய்து, அவர்கள் அனுபவத்தை நமக்கான வழிகாட்டுதலாகவும் வழங்கிட வழிவகுத்துள்ளார்கள்.

2016 விப்ரோ சென்னை மாரத்தான் குறித்து விழிப்புணர்வு உருவாக்குவதில் எங்களுடன் இணைந்திடுங்கள் - #RunForIshaVidhya

நீங்கள் இதில் எந்தெந்த வழிகளில் பங்குவகிக்கலாம்:

  • மாரத்தானில் ஓடலாம்
  • ஓடுவதிலும் உடற்பயிற்சியிலும் அனுபவம் இருந்தால் பகிர்ந்துகொள்ளலாம்
  • ஈஷா வித்யாவிற்காக நிதி திரட்டலாம்
  • கார்ப்பரேட் நிறுவனங்களில் ஈஷா வித்யாவிற்காக ஓடும் ஆர்வம் கொண்டவர்களை நீங்கள் அறிந்திருந்தால், அவர்கள் விவரங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்
  • ஈஷா வித்யாவிற்கு நன்கொடை அளிக்கலாம்
  • சமூக வலைதளங்கள் மூலம் ஈஷா வித்யா குறித்த விழிப்புணர்வு உருவாக்கலாம்
  • ஈஷா வித்யாவை ஊக்குவித்து உற்சாகமளிப்போரைச் சேர்ந்து முகநூலில் இதுகுறித்த தகவல்களைப் பதிவேற்றலாம். உங்கள் பதிவில் #RunForIshaVidhya என்ற ஹேஷ்டேகை சேர்த்து அனைவருடனும் சுலபமாக பகிர்ந்துகொள்ளலாம்.

முக்கிய குறிப்பு: ஈஷா வித்யாவிற்கு உதவ விரும்புவோருக்கென பிரத்யேகமான பதிவுப்பலகை அமைக்கப்பட்டுள்ளதால், இதில் பங்குபெற விரும்புவோர் chn.marathon@ishavidhya.org என்ற மின்னஞ்சல் மூலமாக மட்டுமே பதிவுசெய்யவும்.