ஈஷா யோகா வகுப்பின்போது, நிலக்கடலை சாப்பிடுவதன் முக்கியத்துவத்தை சத்குரு கூறுகையில் "ஒரு நிலக்கடலை விதை இந்த முழு உலகையுமே பசுமையாக்கி விடக் கூடிய ஆற்றல் பெற்றது" என்று கூறுவார். அதிலுள்ள உண்மையை இன்னும் ஆழமாக எடுத்துரைப்பதாக உள்ளது விதை பற்றிய இந்த எழுத்து! விதை என்பது எவ்வளவு பிரம்மாண்டமானது?! தொடர்ந்து படியுங்கள்!

ஒரு காகம் தன் எச்சத்தின் மூலம் எத்தனை விதைகளை விதைத்திருக்குமென்று கணக்கிட்டுப் பார்த்தால், அது ஒரு மனிதன் சாப்பிட்டுவிட்டு வீணாகத் தூக்கி எறிந்த விதைகளை விட அதிகமாகவே இருக்கும். பறவைகள் தன் எச்சத்தின் மூலம் ஒரு புறம் விதைக்க, விலங்குகள் இடம்பெயர்தல் மூலம் தன் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் விதைகளை நிலங்களில் தூவுகின்றன. காற்றும் நீரும் விதைகளைக் கொண்டு சென்று, உலகின் பல்வேறு இடங்களில் சேர்க்கின்றன். வண்டுகளும் தேனீக்களும் பட்டாம்பூச்சிகளும் மகரந்தச் சேர்க்கைக்கு வித்திடுகின்றன.

இப்படி, இயற்கையில் அனைத்து ஜீவராசிகளும் மரங்களையும் தாவரங்களையும் பெருகச் செய்வதில் தங்களுக்கான பங்கை ஆற்றி வருகின்றன. மனிதர்களாகிய நாம் நம் பங்கிற்கு என்ன செய்கிறோம்?! காய்களையும் பழங்களையும் சாப்பிடுகிறோம்; மரங்களை வெட்டுகிறோம்; பெருகி வரும் மக்கள் தொகையால், பல அரிய தாவர மற்றும் விலங்கினங்களை அழிக்கிறோம். மரத்திலிருந்து விழும் ஒவ்வொரு விதையும் அந்த மரத்தின் ஒரு துளியாகவே உள்ளது. அந்த ஒரு துளிக்குள் ஒரு முழு மரமும் இருப்பதுதான் இயற்கையின் விந்தை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஈஷா பசுமைக் கரங்களுக்கு விதைகள் கொடுங்கள்!

ஈஷா அறக்கட்டளையின் பசுமைக் கரங்கள் திட்டம் மூலம், தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகமெங்கும் 50 கி.மீ. சுற்றளவிற்கு ஒன்றென, மொத்தம் 85 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ளது.

நீங்கள் கொய்யாவை ருசித்துச் சாப்பிடுங்கள்; மாங்கனியை உண்டு மகிழுங்கள்; நெல்லிக்கனியை நாவினிக்க சுவையுங்கள். ஆனால் அதன் விதைகளை மட்டும் ஈஷா பசுமைக் கரங்களிடம் சேர்த்திடுங்கள்! ஒரு எலுமிச்சம் பழத்திலுள்ள விதைகளிலிருந்து சுமார் 12 எலுமிச்சை செடிகளை உருவாக்க முடியும். நாவல் பழத்தின் ஒரு விதையிலிருந்து மட்டும் 8 நாவல் மரங்கள் வளரும் என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம்! விதைகளுக்குள் விருட்சங்கள் ஒளிந்து கிடக்கின்றன.

விதைகளின் தன்மை...

எலுமிச்சை விதைகள் பழத்திலிருந்து எடுத்த 1 வாரத்திற்குள் நடப்பட வேண்டும். அதில் சாம்பலைச் சேர்த்து பாதுகாத்தால் இன்னும் சிறிதுகாலம் தாக்குப்பிடிக்கும். வேப்ப விதைகளை மூன்றிலிருந்து 6 மாதங்களுக்குள் நடப்பட வேண்டும். நாவல் பழ விதைகள் பழத்திலிருந்து எடுக்கப்பட்ட 2 நாட்களுக்குள் நடப்பட வேண்டும். மாவிதைகள் 15 நாட்களிலும் கொய்யா விதைகள் 16 நாள் வரையிலும் தாக்குப் பிடிக்கும். எனவே இதுபோன்ற பழவிதைகள் உங்கள் கையில் கிடைக்கும்போது, குறிப்பிட்ட நாட்களுக்கு நாற்றுப் பண்ணைகளில் சேர்த்திடுங்கள். வசதி வாய்ப்புகள் இருப்பின், நீங்களே நட்டு வளருங்கள்.

என்ன பயன்...?!

சரி..! இதனால் நமக்கு என்ன லாபம்; என்ன பயன்? இந்தக் கேள்வி எப்போதும் நம்மிடையே கேட்கப்படும் முதன்மையான கேள்வியாகிவிட்டது. கல்வி கற்றாலும், கல்யாணம் செய்தாலும், குழந்தை பெறுவதென்றாலும்... அதனால் எனக்கு என்ன கிடைக்கும் என்பதே மனித மனோபாவமாக மாறிவிட்ட இந்தக் காலத்தில், விதைகளைச் சேகரியுங்கள் என்று சொல்லும் போது அதே கேள்வி வருவதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நிச்சயம் நமக்கு பசுமையான தமிழகம் கிடைக்கும் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். உலக வெப்பமயமாதல் என ஒருபுறம் மிகப் பெரிய அச்சுறுத்தல்; தண்ணீர்ப் பற்றாக்குறை என இன்னொரு புறம் அபயக்குரல்; இப்படி நம் செவிகளை வந்தடையும் எச்சரிக்கை மணிகளுக்கு இப்போதாவது நாம் காதுகொடுத்தே ஆகவேண்டும். அதற்கு, மரம் நடுவதும் மரக்கன்றுகளை உருவாக்குவதுமே சிறந்த தீர்வாக இருக்கும்.

ஈஷா பசுமைக் கரங்களுடன் உங்கள் கரங்களையும் இணைத்திடுங்கள். உங்கள் ஊரின் அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளின் விதைகளைக் கொண்டு சேர்ப்பதற்கும், குறைந்த விலையில் பல அரிய வகை மரக்கன்றுகளைப் பெறுவதற்கும் 94425 90062 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

இதுவரை வீணே வீழ்ந்திருந்த நாம் இனி, விதைபோல் முளைத்தெழுவோம்! விருட்சங்களாவோம்!

Bruce Guenter@flickr, joka2000@flickr, La.Catholique@flickr, Tatters@flickr, the yes man@flickr