எப்படி அமைந்தது நான்காம் நாள் யக்ஷா?! இதோ உங்கள் முன்னே விழாவின் தொகுப்பு!


Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

திரு. N.விஜய்ஷிவா அவர்களின் கர்நாடக வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நாதவடிவமாக உள்ள சிவனைப் போற்றிப் பாடப்படும் பாடலுடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து "இன்னும் பாரா முகம் உமக்கு ஏனய்யா..." என்று பழனிமுருகனை வேண்டிப் பாடப்பட்ட ஓர் அழகிய பாடல் விஜய்ஷிவா அவர்களினால் பாடப்பட்டது.

"சிவனுக்கும் பார்வதிக்கும் நாட்டியப் போட்டி. பார்வதி வெல்லப்போகும் நிலையில், சிவன் ஒரு தந்திரம் செய்தார்; தன் காதணியை கீழே விழவைத்து, அதனை தன் காலால் எடுத்துக் காதில் மாட்டினார். ஒரு பெண் என்பதால் பார்வதியால் இதனைச் செய்ய முடியாமல் போயிற்று. எனவே சிவன் நாட்டியத்தில் வென்றார். இந்நிகழ்வை வர்ணிக்கும் விதமாக திரு.பாபநாசம் சிவன் அவர்களின் பாடலைப் பாடவிருக்கிறேன்" இப்படி ஒவ்வொரு பாடலுக்கு முன்னும் விஜய்ஷிவா வழங்கிய உரை, அவரது இசையைப் போலவே அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து பல தெய்வீக இன்னிசை தொடர, மக்கள் இசை மழையில் கரைந்தனர்.


யக்ஷாவைப் பற்றி அறிய

திரு. N.விஜய்ஷிவா அவர்களின் சிறப்புகள்

திரு. N.விஜய்ஷிவா அவர்கள், கர்நாடக வாய்ப்பாட்டு மற்றும் மிருதங்க வாத்திய இசையில் மேதையாவார். இசைக்கலைஞர் விஜய்ஷிவா அவர்கள் தம்முடைய நான்கு வயதிலேயே ராகங்களின் வகைகளை தன் தனித்தன்மைமிக்க உள்ளுணர்வின் மூலமாக அறியும் திறனை பெற்றவர். இவரது முதல் இசைப் பயிற்சியினை தனது தாயாரும் கர்நாடக இசைக்கல்லூரி வாய்ப்பாட்டு கலைஞருமான “ஸ்ரீமதி அகிலாஷிவா” அவர்களிடம் கற்றார். பின்னர் அவர் T.K.ஜெயராமன் மற்றும் T.K.பட்டம்மாள் போன்ற இசை மேதைகளிடம் இசை பயின்றார்.

விஜய்ஷிவா அவர்கள் மிருதங்கம் இசைப்பதிலும் வல்லவர். மிருதங்க இசைப்பயிற்சியை இவர் கும்பகோணம் “ராஜப்பா அய்யரிடம்” பெற்றார். இந்தியாவின் முக்கிய மையங்களில் எல்லாம் தன் இசைநிகழ்ச்சிகளை வழங்கி வரும் விஜய்ஷிவா அவர்கள், இசைத்துறையில் பல பட்டங்களை பெற்றுள்ளார். புவனேஸ்வரில் சங்கீத இசை விழாவில் மிருதங்க வித்வானாகவும், சென்னை சங்கீத நாடக அகாடமியில் வாய்ப்பாட்டு இசை கலைஞராகவும், தன் இருவேறு இசை பரிமாணங்களை வெளிப்படுத்தி தன் இசை திறமையினை நிரூபித்திருக்கிறார். அமெரிக்கா, சிங்கப்பூர், கனடா போன்ற பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். மேலும், இசைத்துறையில் வளரும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், சங்கீத ரசிகர்களுக்காகவும் இவர் பாரம்பாரிய இசை இளைஞர் சங்கம் (YACM) என்ற ஒன்றினை நிறுவி அதன் செயலாளராகவும் உள்ளார்.