வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் ஆண்டு கூட்டம்
வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் அமைப்பு - இது விவசாயிகளை ஒன்றிணைத்து, அவர்களது பொருட்கள் அவர்களிடமிருந்து நேரடியாக சந்தைப்படுத்த செய்யப்படும் ஒரு முயற்சி. இவ்வருட பேரவையின் சந்திப்பிலிருந்து சில துளிகள்...
 
 

வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் அமைப்பு - இது விவசாயிகளை ஒன்றிணைத்து, அவர்களது பொருட்கள் அவர்களிடமிருந்து நேரடியாக சந்தைப்படுத்த செய்யப்படும் ஒரு முயற்சி. இவ்வருட பேரவையின் சந்திப்பிலிருந்து சில துளிகள்...

வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் அமைப்பின் ஆண்டுவிழா பொதுக்குழு கூட்டம் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில் வெகு சிறப்பாக நேற்று (அக்டோபர் 2) நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு இறைவணக்கத்துடன் துவங்கிய விழாவில், நிறுவன ஆலோசகர் திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரை நல்கினார். உழவன் உற்பத்தியாளர் பங்குதாரர்கள், பகுதி பொறுப்பாளர்கள், இயக்குனர்கள், ஈஷா நிறுவனத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் என அனைவருக்கும் வரவேற்பு தெரிவித்தார்.

இந்த உழவன் உற்பத்தியாளர் அமைப்பு, விவசாயிகளின் வாழ்க்கையில் ஒரு புது விடியலைக் கொண்டு வந்துள்ளது. கடந்த 24 மாதங்களில் 1000 பங்குதாரர்களை கொண்ட அமைப்பாக வளர்ந்திருக்கிறது.

தலைவர் திரு.விஸ்வநாதன் அவர்கள், 2014-2015க்கான அறிக்கையை வாசித்து தகவல்களை பகிர்ந்துகொண்டார். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு இயக்குநர்கள் விளக்கமளித்தனர். அமைப்பின் எதிர்காலதிட்டம் பற்றியும் உத்தேச திட்டங்கள் பற்றியும் விபரங்கள் தெரிவிக்கப்பட்டது. அலுவலக நிர்வாக பொறுப்பினை கையாளும் திரு.ரா.ரவிகுலராமன் நன்றியுரை வழங்கினார். விழாவில் ஈஷா கிராமிய கலைக்குழுவினரின் சார்பாக கலைநிகழ்ச்சிகள் அரங்கேறின.

உழவன் உற்பத்தியாளர் அமைப்பு

ஈஷா அறக்கட்டளையின் முயற்சியால், வெள்ளியங்கிரி சுற்றுவட்டார விவசாயிகளின் நலன்காக்க, 2013ல் 250 பங்குதாரர்களுடன் துவங்கப்பட்ட இந்த உழவன் உற்பத்தியாளர் அமைப்பு, விவசாயிகளின் வாழ்க்கையில் ஒரு புது விடியலைக் கொண்டு வந்துள்ளது. கடந்த 24 மாதங்களில் 1000 பங்குதாரர்களை கொண்ட அமைப்பாக வளர்ந்திருக்கிறது. 12 பேர் கொண்ட இயக்குநர்களால் வழிநடத்தப்படும் இந்த அமைப்பின் பணியாளர் குழுவின் அலுவலகம், பூலுவப்பட்டியில் இயங்கி வருகிறது. விவசாயிகளின் விளைச்சலைப் பெருக்கவும், பருவகாலத்திற்கேற்ப தேர்வு செய்து விவசாயத்தை மேற்கொள்ளவும் இந்த அமைப்பு விவசாயிகளுக்கு வழிகாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

விவசாய விளைப்பொருட்களை இடைத்தரகர் குறுக்கீடு இன்றி சந்தைப்படுத்துதல், மதிப்பு கூட்டு பொருட்களை உருவாக்குதல், கள உதவிகள், இடுபொருட்களுக்கான நியாயவிலைக் கடைகள், விவசாய உற்பத்திக்கான பயிற்சிகள் என பலவிதங்களில் உழவன் உற்பத்தியாளர் அமைப்பு விவசாயிகளுக்கு உறுதுணை புரிந்துவருகிறது.

2014-2015 ல் வெள்ளியங்கிரி உ.உ. அமைப்பின் சாதனைகள்:

கடந்த ஆண்டு தேங்காய் விற்பனை செய்வதில் இருந்த தடைகளை களையும்வண்ணம், இடைத்தரகர்களின் குறுக்கீடு இல்லாமல் கேரள வியாபாரிகளிடம் நேரடியாக விற்பனை செய்ததால் தென்னை விவசாயிகள் பெரும் லாபம் ஈட்டமுடிந்துள்ளது. சென்ற ஆண்டு கையாளப்பட்ட மொத்த தேங்காய்களின் எண்ணிக்கை 1.5 கோடி ஆகும். அதேபோல் பாக்கு விற்பனையிலும் வாழப்பாடி வியாபாரிகளைத் தொடர்புகொண்டு, நல்ல விலைக்கு விற்பனையாகும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 600 டன் அளவிற்கு பாக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இந்த விற்பனை அளவினை அதிகரிப்பதற்கான முயற்சிகளையும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உருவாக்கும் வழிமுறைகளையும் வெள்ளியங்கிரி உற்பத்தியாளர்கள் அமைப்பு விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.

சென்ற ஆண்டு கையாளப்பட்ட மொத்த தேங்காய்களின் எண்ணிக்கை 1.5 கோடி ஆகும். 600 டன் அளவிற்கு பாக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

2015 ஜூன் மாதம் பூலுவபட்டியில் துவங்கப்பட்டுள்ள விவசாய இடுபொருட்களுக்கான கடைகளின் மூலம் இயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், விதைகள் என அனைத்து இடுபொருட்களையும் விவசாயிகள் நியாயமான விலைகளில் பெற்று வருகின்றனர்.

மேலும், பயிர்களில் ஏற்படும் நோய்தாக்குதல்களிலிருந்து பயிர்களைக் காக்கும் வழிமுறைகளை வழங்கும்விதமாக விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி வல்லுநர்களிடமிருந்து சிறப்பு பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று, கடந்த அக்டோபர் மாதத்தில், தென்னை மற்றும் பாக்கு விவசாயிகளுக்கு அதிக விளைச்சலை உண்டாக்கும் வழிமுறைகளை வழங்கும்படியாக, கேரளா காசர்கோடு-மத்திய தென்னை ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

விவசாய இயந்திர உபகரணங்களைக் கையாளும் முறை, சோலார் உலை கலன்களை உபயோகிக்கும் முறை, மழைநீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்கும் முறை என பல்வேறு தொழிற்நுட்பங்களை விவசாயிகள் அறியும்வண்ணம் உ.உ.அமைப்பின் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. 30 காய்கறி விவசாயிகளுக்கு மானியத்தில் சொட்டுநீர் பாசன அமைப்பு வழங்க ஏற்பாடு செய்துதரப்பட்டுள்ளது.

மேலும், உழவன் உற்பத்தியாளர் அமைப்பின் விவசாய உற்பத்தியாளர்கள் மூலமாக விளைவிக்கப்பட்ட தேங்காய்களிலிருந்து, ரசாயனக் கலப்பற்ற தேங்காய் எண்ணெய் ஏப்ரல் 2015 முதல் விற்பனை செய்யப்படத் துவங்கியுள்ளது. பெண்களுக்கென வீடுகளில் காய்கறி தோட்டம் அமைக்கும் முறையினை கற்றுக்கொடுப்பதன் மூலம் பெண்களின் வருமானத்திற்கு உ.உ.அமைப்பு வழிசெய்கிறது.

உழவன் உற்பத்தியாளர் அமைப்பு செயல்படும் முறையினை அறிந்துகொண்டு, தாங்களும் அதனைப் பின்பற்றும் நோக்கில், கேரளா, சின்ன தடாகம், பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம், நெகமம், தூத்துக்குடி, கொல்லிமலை, சுல்தான் பேட்டை ஆகிய பகுதிகளிலுள்ள விவசாயிகள் ஈஷாவிற்கு வந்து பயிற்சி பெற்று செல்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு வேளாண் கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் வந்திருந்து, உ.உஅமைப்பு செயல்படும் விதத்தினை அறிந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1