வெஜிடபிள் கோகனட் மில்க் கூட்டு
 
 

கர்நாடக இசைக் கலைஞரும், பிரபல நடிகர் விஜய்யின் தாயாருமான திருமதி. ஷோபா சந்திரசேகர் தன்னுடைய உணவு அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்...

திருமதி. ஷோபா சந்திரசேகர்

நான் சிறு வயதிலிருந்தே அசைவ உணவை விரும்பி சாப்பிடுவேன். அதே போல் உடல் நலமும் அடிக்கடி சீர்கெடும். டாக்டர், மருந்து, மாத்திரை என இருந்திருக்கிறேன். திருமணமாகி விஜய் பிறந்து, அப்புறம் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. நாங்கள் எல்லோரும் என் பெண்ணின் மேல் மிகுந்த அன்பு வைத்திருந்தோம். அவள் சிறுமியாக வளர்ந்தபோது, திடீரென்று அவளுக்கு ஒரு பெரிய நோய் என்றார்கள். எங்கள் கதறல்கள் எதற்கும் செவி கொடுக்காமலே இறந்து போனாள்.

இந்த சம்பவம் என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது என்றுதான் சொல்ல வேண்டும். விஜய் வளர்ந்து பெரிய நடிகனாகி, திருமணம், குழந்தைகள் என 'செட்டில்' ஆனான். நான் என் பார்வையை ஆன்மீகத்தில் திருப்பினேன். சத்குரு அவர்களை தரிசித்தேன். சம்யமா வரை நானும், என் கணவரும் பயிற்சிகளை முடித்தோம்.

இந்த சமயத்தில்தான் ஈஷாவில் கொடுத்த உணவுகள் என்னைக் கவர்ந்தது. வகுப்புகளின்போது அங்கே சாப்பிட வேண்டிய சூழ்நிலை. பயிற்சிகளும், அந்த சாத்வீக உணவுகளும் என்னுள் நிறைய மாற்றங்களைச் செய்தன. எனக்கு அடிக்கடி வந்து கொண்டிருந்த உடல் தொந்தரவுகள் கொஞ்சம் கொஞ்சமாக என்னை விட்டு விலகியதை உணர்ந்தேன்.

வீட்டிற்கு வந்த பிறகும் அசைவ உணவை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டேன். ஈஷா உணவுகளைப் போன்றே சாத்வீகமான உணவுகளைத் தேடித்தேடி சாப்பிட ஆரம்பித்தேன். 'உயிர்ச்சத்துள்ள உணவுகளே நமக்கு உடலில் ஆற்றலைக் கொடுக்கும்' என்று சத்குரு சொல்வார். நிறைய பழங்களை சாப்பிட ஆரம்பித்தேன். முன்பு மாதிரி இல்லாமல் என்னுடைய உடல் லேசாக இருப்பது போல் உணர்ந்தேன். அதேபோல் நிறைய வேலை செய்ய முடிந்தது. சுறுசுறுப்பாக இருந்ததால் இன்னும் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. பார்க்கப்போனால் கர்நாடக இசையை முறையாகப் பயின்று முறையாக மேடைக்கச்சேரி செய்யும் அளவிற்கு உயர்ந்தேன். என் வாழ்க்கையே உணர்வு மயமானதாக மாறிவிட்டது.

நல்ல உணவுகளும், யோகாவும் இந்த அளவு ஒருவரின் வாழ்க்கையையே உயிருள்ளதாக, உற்சாகமானதாக மாற்றும் என்பதை நினைக்கும்போது பிரமிப்பாகத்தான் இருக்கிறது. இப்போது எங்கள் குடும்பத்தில் அனைவருமே என்னைப் பின்பற்றுகிறார்கள். வெளிநாடுகளுக்குப் போனால் கூட என் உணவு முறைகளை மாற்றிக் கொள்வதில்லை. நாம் முயற்சி எடுத்துத் தேடினால் உலகின் எந்த மூலையிலும் சிறந்த சைவ உணவு கிடைக்கும்.

நான் அடிக்கடி விரும்பி செய்யும் இரண்டு ரெசிபிக்களை இங்கே கொடுத்திருக்கிறேன்.

ஆப்பிள் அண்ட் பனானா சாலட்

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் - 1
பெரிய பெங்களூரு வாழைப்பழம் - 1
பால் - 1 மேஜைக்கரண்டி
வீட் பிரெட் - மூன்று ஸ்லைஸ்
தேன் - தேவையான அளவு
பொடித்த முந்திரி - 2 தேக்கரண்டி
நறுக்கிய பேரீச்சை - 4
தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி

செய்முறை:

  • ஆப்பிள் மற்றும் வாழைப்பழத்தை விருப்பமான வடிவத்தில் நறுக்கிக் கொள்ளவும்.
  • இதில் பிரெட்டை உதிர்த்து சேர்க்கவும்.
  • பிறகு தேன், பால், முந்திரி மற்றும் பேரீச்சையை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  • பரிமாறும் முன் தேங்காய்த் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.
  • மாலை நேரத்தில் சாப்பிட சத்தான உணவு இது.
  • இதை சப்பாத்தி நடுவில் வைத்து ரோலாகவும் செய்யலாம்.

வெஜிடபிள் கோகனட் மில்க் கூட்டு

தேவையான பொருட்கள்:

நறுக்கிய கேரட் - 2
நறுக்கிய உருளைக்கிழங்கு - 1
பச்சைப் பட்டாணி - 1 கைப்பிடி
நறுக்கிய காலிஃபிளவர் - ¼ கப்
நறுக்கிய பீன்ஸ் - 5
இஞ்சி விழுது - ½ தேக்கரண்டி
நசுக்கிய மிளகு - ½ தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 1
தேங்காய் பால் - 1 கப்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - சிறிதளவு

தாளிக்க:

எண்ணெய் - 2 தேக்கரண்டி
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
பட்டை - 1
சோம்பு - ¼ தேக்கரண்டி

செய்முறை:

  • வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், தாளிக்க கூறியுள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும்.
  • இத்துடன் காய்ந்த மிளகாய், இஞ்சி விழுது மற்றும் காய்கறிகள் சேர்த்துத் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும்.
  • தண்ணீர் வற்றியதும், நசுக்கிய மிளகு மற்றும் தேங்காய் பால் சேர்த்து பொங்கி வந்ததும் இறக்கி கொத்தமல்லித் தழை தூவி சாதம் (அ) தேங்காய்ப்பால் சாதத்துடன் பரிமாறவும்.
  • இதை சப்பாத்தி, பிரெட்டுடனும் சாப்பிடலாம். மிகவும் ருசியாக இருக்கும்.
 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1