வீட்டுத் தோட்டம் தரும் அளவில்லா நன்மைகள்!
‘வீடு’ என்ற சொல் வெறும் கட்டிடத்தை மட்டும் குறிப்பதல்ல; மனிதர்கள் ஒன்றுகூடி வசிக்கும் இடமே வீடாகும். கூடவே மரம் செடிகொடிகள் இருந்தால்தானே வீட்டில் உள்ளவர்கள் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும்?! இங்கே விட்டுத் தோட்டம் அமைத்து அதன்மூலம் வாழ்வாதாரத்தைப் பெறும் ஒரு மனிதரைப் பற்றி சில வார்த்தைகள்!
 
 

பூமித் தாயின் புன்னகை! -இயற்கை வழி விவசாயம்-பகுதி 24

‘வீடு’ என்ற சொல் வெறும் கட்டிடத்தை மட்டும் குறிப்பதல்ல; மனிதர்கள் ஒன்றுகூடி வசிக்கும் இடமே வீடாகும். கூடவே மரம் செடிகொடிகள் இருந்தால்தானே வீட்டில் உள்ளவர்கள் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும்?! இங்கே வீட்டுத் தோட்டம் அமைத்து அதன்மூலம் வாழ்வாதாரத்தைப் பெறும் ஒரு மனிதரைப் பற்றி சில வார்த்தைகள்!

ஈஷா விவசாயக் குழுவின் தென் மாவட்ட பயணத்தில் சுசீந்திரம் செல்வம் அவர்களின் பண்ணையை பார்வையிட்ட பின், அவரது நண்பர் திரு. சுப்பிரமண்யம் அவர்களின் பண்ணைக்கு எங்களை அழைத்துச் சென்றார்.

எளிய வீட்டில் சிறிய தோட்டம்

நாகர்கோவிலில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது அசம்பு மலை. இந்த அசம்பு மலையின் அடிவாரத்தில் உள்ளது சுப்பிரமண்யம் அவர்களின் காட்டுப்புதூர் கிராமம், அவரது இல்லத்தில் எங்களைக் கவர்ந்தது அவரது வீட்டுத் தோட்டம்தான்.

எங்க தோட்டத்துல தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணி, கொடிப்பசலை, செடிப்பசலை போன்ற கீரை வகைகளும், அவரை, பாகல், சுரை, கத்தரி போன்ற காய்கறிகளும் வைச்சிருக்கேன். கை வைத்தியத்துக்கு துளசி, தூதுவளை, சோற்றுக்கற்றாழை வச்சிருக்கேன்.

நகரங்களில் வாங்கிய இடத்தில் ஒரு அடி நிலத்தைக்கூட விடாமல் மொத்த இடத்திலும் வீட்டைக்கட்டுவது தற்போது வாடிக்கையாகி விட்டது, இந்த நிலை தற்போது பெரும்பாலான கிராமங்களிலும் பரவி வருகிறது. ஆசைக்கு சில மரங்கள் வைக்கவோ அல்லது அழகுக்கு ஒரு தோட்டம் அமைக்கவோ யாரும் விரும்புவது இல்லை.

நமது வீட்டில் சில மரங்களை நாமே வளர்த்து அதில் வந்து அமரும் பறவைகளைப் பார்ப்பது ஒரு அழகு, அந்த மரத்தில் கிடைக்கும் பழங்களைச் சுவைப்பது ஒரு ஆனந்தம்... இதை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

இதையெல்லாம் நாம் மறந்து போனாலும் சுப்பிரமண்யம் அவர்கள் மறக்காமல் வீட்டுத் தோட்டத்தை அமைத்திருக்கிறார். அன்றன்றைக்குத் தேவையான காய்கறிகளையும் கீரைகளையும் அவரது வீட்டுத் தோட்டத்தில் இருந்தே எடுத்துக்கொள்கிறார். இதைப் பற்றி அவர் தெரிவித்தவை.

"எங்க தோட்டத்துல தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணி, கொடிப்பசலை, செடிப்பசலை போன்ற கீரை வகைகளும், அவரை, பாகல், சுரை, கத்தரி போன்ற காய்கறிகளும் வைச்சிருக்கேன். கை வைத்தியத்துக்கு துளசி, தூதுவளை, சோற்றுக்கற்றாழை வச்சிருக்கேன்.

காய்கறி விற்கிற விலையில் நல்ல காய்கறி சாப்பிடணும்னா, அவங்கவங்க வீட்ல சின்னதா காய்கறித் தோட்டம் அமைக்கிறது அவசியம், பெண்கள் வீட்டுத் தோட்டத்தில் கொஞ்ச நேரம் வேலை செய்யறது அவங்க உடல் நலத்துக்கும் நல்லது" என்று அவரது இயற்கை ஆர்வத்தை வெளிப்படுத்திக் கொண்டே எங்களுக்காக ஒரு பப்பாளிப் பழத்தை பறித்தார்.

"அட சாமி... இங்க பாத்தீங்ளா இந்த அண்ணா எவ்வளவு வெகரமா வீட்டுத்தோட்டம் போட்ருக்காப்டி! வீட்ட கட்டிப்பாரு, கல்யாணத்த பண்ணிப்பாருன்னு சொல்லுவாங்க இல்லீங்கோ...? அதைய கேட்டுப்போட்டு ஒட்டுக்க அல்லா இடத்துலயும் வீட்ட கட்டிப்போட்டா, பொறவு எங்கிருந்துங்கோ தோட்டம் போடமுடியும்? அதானுங்க ரோசன பண்ணி மொதல்லயே இடத்த விட்டுப் போட்ருக்காரு"

நாட்டு ரக நெல்லி

பப்பாளி, வாழை, தென்னை, சீதா, கொய்யா போன்ற மரங்களுடன், ஒரு நாட்டு ரக பெரு நெல்லி மரத்தையும் வீட்டில் காண முடிந்தது. நாட்டுக் காய் என்பதால் ஹைபிரிட் காயைப் போல் பெரிதாக இல்லை, சற்று சிறிதாகவே இருந்தது எனினும் நல்ல சுவையுடன் இருந்தது.

நெல்லிக்காயின் கொட்டையை எடுத்துட்டு வத்தலா காய வச்சுக்குவோம், இந்த நெல்லி வத்தல புளிக்கு பதிலா பயன்படுத்துவோம், குழம்பும் நல்ல சுவையா இருக்கும்.

சுப்பிரமணி அவர்களின் துணைவியார் பப்பாளிப் பழத்தை நறுக்கி எங்களுக்குக் கொடுத்தார், பப்பாளித் துண்டுகளை உண்டுகொண்டே பேச்சைத் தொடர்ந்தோம். "நாட்டு ரக நெல்லியின் மதிப்பு யாருக்கும் தெரியலைங்க, யாரும் விரும்பி வாங்கறதில்லை, அதனால் நெல்லிக்காயின் கொட்டையை எடுத்துட்டு வத்தலா காய வச்சுக்குவோம், இந்த நெல்லி வத்தல புளிக்கு பதிலா பயன்படுத்துவோம், குழம்பும் நல்ல சுவையா இருக்கும்."

"எந்த பொருளையும் நான் வீணாக்கிறதில்லைங்க, எப்படி பயன் படுத்தமுடியுமோ அப்படி பயன்படுத்திடுவேன்." என்று கூறியவர், தொடர்ந்து நேந்திரங்காய் பொடி பற்றியும் விவரித்தார்.

நேந்திர வாழைப் பொடி

"தோட்டத்தில் நேந்திர வாழைதான் அடிக்கடி போடுவேன், வித்தது போக எப்படின்னாலும் சில தார்கள் மீந்து வீணாகிடும். வாழைக்கு நல்ல விலைகிடைக்காதபோது, வாழைத்தாரை வெட்டி சிப்ஸ் போட்டுக் காய வச்சிருவேன். இந்த சிப்ஸ் சில மாசத்துக்கு கெடாம இருக்கும். இந்த சிப்ஸை அரைச்சு மாவா வச்சுக்கலாம். இந்த மாவு நல்ல சத்தானது, கஞ்சி செய்து சாப்பிடலாம், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த சிப்ஸை நிறைய பேர் என்னிடம் வாங்கிச் செல்கிறார்கள், இதன் மூலம் ஒரு கணிசமான வருமானமும் வருது."

வாழைக்கு நல்ல விலைகிடைக்காதபோது, வாழைத்தாரை வெட்டி சிப்ஸ் போட்டுக் காய வச்சிருவேன். இந்த சிப்ஸ் சில மாசத்துக்கு கெடாம இருக்கும். இந்த சிப்ஸை அரைச்சு மாவா வச்சுக்கலாம்.

"ஐயோ சாமி... புளிக்கு பதிலா நெல்லிக்காயா! ஐடியா சூப்பரா இருக்குதில்லீங்கோ?! இனிமே இந்த கள்ளிப்பட்டி கலைவாணி வீட்டுலயும் நெல்லிக்கா ரசம் மணக்க போகுதுங்ணோவ். அட நாகர்கோயில் காரவுகளுக்கு நேந்திரம் சிப்ஸ் போட சொல்லித்தரணுமாக்கும்? இருந்தாலும் வேஸ்ட் பண்ணாம செஞ்சு அதைய வியாபாரம் செய்றது பெரிய விசயமுங்ணா!"

வீட்டுத் தோட்டம் தரும் அளவில்லா நன்மைகள்!, veettu thottam tharum alavilla nanmaigal

வீட்டுத் தோட்டம் தரும் அளவில்லா நன்மைகள்!, veettu thottam tharum alavilla nanmaigal

வீட்டுத் தோட்டம் தரும் அளவில்லா நன்மைகள்!, veettu thottam tharum alavilla nanmaigal

குளத்து வண்டல் மண்

வீட்டுத் தோட்டத்தை பார்வையிட்டுவிட்டு வாழைத் தோட்டத்துக்குச் சென்றோம், வாழைத்தோட்டத்தில் ஒவ்வொரு வாழையின் அடியிலும் வண்டல் மண் கொட்டியிருந்ததைக் காணமுடிந்தது. அதைப் பற்றி சுப்பிரமண்யம் அவர்கள் தெரிவித்தவை,

"தோட்டம் மலையடிவாரத்தில் இருக்கிறதால மழைகாலத்துல இந்த வழியாத்தான் தண்ணீர் போகும், தண்ணீர் போகும்போது கொஞ்சம் மண்ணும் சேந்தே போகுது. இந்த நிலம் மணல் கலந்த கரிசல் பூமி அதனால நுண்ணூட்டத்துக்காக குளத்துல இருந்து வண்டலை எடுத்து வாழைக்கு போட்டிருக்கேன்."

"இரண்டு தலைமுறைக்கு முன்பெல்லாம் பயிர் இல்லாத காலங்களில் விவசாயிங்க ஏரியையும் குளத்தையும் மராமத்து செய்வாங்க. ஏரி அல்லது குளத்தைத் தூர் வாரிட்டு அந்த மண்ணை விளைநிலத்தில் போடுவாங்க, இதனால விவசாய பூமி வளமாகிடும், ஏரியையும் செலவே இல்லாமல் தூர் வாரிடுவாங்க."

தொடர்ந்து அவர் இயற்கை விவசாயத்திற்கு வந்தது பற்றியும் விவரித்தார். "நான் எந்த இயற்கை விவசாய வகுப்புக்கும் போகலை, ஆனா நண்பர்கள் இயற்கை விவசாயம் செய்யறத பார்த்து படிப்படியா இயற்கை விவசாயத்துக்கு மாறிட்டேன். நண்பர் செல்வம் அவர்களின் ஆலோசனைப்படி கடந்த ஒன்றரை வருஷமா இயற்கை விவசாயம்தான் செய்யறேன்."

"ஒரு ஏக்கரில் வாழை இருக்கு, ஜீவாமிர்தம், ஆட்டு எரு, புண்ணாக்குக் கரைசல் மட்டும்தான் தருகிறேன், கிடைக்கிற இலைதழைகளை மூடாக்கா போட்டுருவேன். ஆத்துப் பாசனம் என்பதால் தண்ணீர் தொடர்ந்து கிடைக்காது, மூடாக்கு இருக்கிறதனால தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியுது. வாழையில் ஊடுபயிரா தட்டைபயறு, உளுந்து, சோளம் எல்லாம் போடுவேன்."

"அட நம்மூர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க இல்லீங்கோ... ஆடு மேச்சமாதிரியும் ஆச்சு அண்ணனுக்கு பொண்ணு பாத்த மாதிரியும் ஆச்சுன்னு! அதுமாறி நிலத்துல மண்ண போட்ட மாதிரியும் ஆச்சு, குளங்கள தூர் வாருன மாறியும் ஆச்சுங்கோ! இயற்கையோட இயைந்து போனோம்னா அல்லாமே இங்க சரியா வருமுங்கணா!"

ரப்பர் சாகுபடி

"இது தவிர இரண்டு ஏக்கரில் ரப்பர் மரமும் போட்டிருக்கேன். மலை சார்ந்த பகுதின்றதால ரப்பர் மரம் நல்லா வருது. ரப்பர் மரத்தை ஏக்கருக்கு 300 மரம் வரையில் வைக்க முடியும். 5 வருஷம் வளர்ந்த மரத்தில் இருந்து சீசன் நேரத்துல ஒரு நாள் விட்டு ஒரு நாள் ரப்பர் பால் எடுக்க முடியும். கிடைக்கிற பாலை ரப்பர் ஷீட்டாக செய்து விற்கிறேன்."

"ரப்பர் ஷீட் எந்த அளவு மெல்லியதாக இருக்குமோ அந்த அளவுக்கு நல்ல விலை கிடைக்கும். 300 மரத்தில் இருந்து 10 ரப்பர் ஷீட் கிடைக்கும். மரம் முற்றினபிறகு பால் அதிகமா கிடைக்கும். வறட்சி காலத்தில் அதிக பால் வராது, வருமானமும் கிடைக்காது. ரப்பர் மரத்திற்கு தண்ணீர் அதிகம் தேவைப்படாது, இயற்கையாக கிடைக்கிற தண்ணீரே ரப்பருக்கு போதுமானதா இருக்கு, நான் தண்ணீர் எதுவும் பாய்ச்சுவதில்லை."

ரப்பர் பால் எப்படி எடுக்கவேண்டும் என்பதையெல்லாம் எங்களுக்கு செய்து காண்பித்தார், பல தோட்டங்களில் வேலியில் மீன் வலைகளைக் கட்டியிருந்தார்கள் பார்க்க வித்தியாசமாக இருந்தது.

வீட்டுத் தோட்டம் தரும் அளவில்லா நன்மைகள்!, veettu thottam tharum alavilla nanmaigal

காட்டுப்பன்றி கட்டுப்படுத்த வழிமுறை

"மலையோரம் என்பதால் காட்டுப்பன்றி தொல்லை இருக்கு. பக்கத்தில் கடற்கரை இருக்கிறதால பழைய மீன் வலைகள் நிறைய கிடைக்கும், அந்த மீன் வலைகளை வேலியோரங்களில் கட்டிவிடுகிறேன். இதனால் பன்றிகளின் ஊடுருவலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் ஓரளவு கட்டுப்படுத்த முடிகிறது."

இயற்கை விவசாயத்தில் இன்னும் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது, படிப்படியாகத் தெரிந்துகொள்வேன் என்று ஆர்வமோடு தெரிவித்த திரு. சுப்பிரமண்யம் அவர்களை, இயற்கை இடுபொருள் தயாரிப்புப் பயிற்சிக்கு வருமாறு அழைப்பு விடுத்து நன்றி கூறி விடைபெற்றோம்.

தொடர்புக்கு:
திரு. சி. சுப்பிரமண்யம்: 9345672375

தொகுப்பு:
ஈஷா விவசாய இயக்கம்: 8300093777

 

'பூமித் தாயின் புன்னகை! – இயற்கை வழி விவசாயம்' தொடரின் பிற பதிவுகள்

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1