டாக்டர் சாட்சி சுரேந்தர், ஈஷா ஆரோக்யா:

லோஹிப் ஜீன்ஸும், ஹிப் ஹாப் டான்ஸும் என பச்சைத் தமிழ் இளைஞர்களும், இளைஞிகளும் தொலைக்காட்சியில் கலாச்சார சேவை ஆற்றி வரும் நிகழ்ச்சி அது. நிகழ்ச்சிக்கு இடையில், “எங்க.. வாழைப்பழம்.. சொல்லுங்க!” எனப் பழத்தின் பெயரை சரியாக உச்சரிக்கும் ஒரு கடினமான (?!) போட்டியைத் துவக்குகிறார் நிகழ்ச்சித் தொகுப்பாளர்.

உலகில் மொத்தம் 3000 வாழை வகைகளாம்! இந்தியாவில் பரவலாகப் பயிரிடப்படுவது 30! அளவிலும், ருசியிலும், ஊட்டச்சத்திலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை!

பல மாடர்ன் “மைனர்கள்” திக்கித் திணறி, “வா... லைப்.. ப..ல..ம்” என மேல்மூச்சு வாங்கி முழி பிதுங்கினர். “சே.. பசங்கதான்பா இப்டி.. நம்ம பொண்ணுங்க எவ்ளோதான் மாடர்னா இருந்தாலும்... தமிழ்ல கெட்டி!” என எனக்கு நானே மனதை தேற்றிக்கொண்டேன்.

ஆனால், அந்த எண்ணத்தை அடுத்த கணமே மாற்றிக்கொண்டேன்! ஆமாங்க.. நம் ஐ ஃபோன் பெண்கள், அட்சரசுத்தம் பிசகாமல், “வா... யை... பை..ய..ம்” என நீட்டி முழக்கியபோது, அது ‘கவுண்டமணி-செந்தில்’ வாழைப்பழக் காமெடியை மிஞ்சிவிட்டது!

இப்படி காலம்காலமாக, பரிகாசம் செய்யப்பட்டாலும், வாழைப்பழத்திற்கு நம் அன்றாட வாழ்வில் ஓர் அன்பான இடம் உண்டு. ஏனெனில், ஆயிரம் பழவகைகள் இருந்தாலும், நம் வழக்கு மொழியில் ‘பழம்’ என்ற பொதுப் பெயரைச் சொன்னால், அது வாழையையே குறிக்கிறது.

“நைட்டு ஒரு பழம் சாப்டா.. காலைல கஷ்டமில்லாம டவுன்லோட் பண்ணிடலாம்!” என ஜீரண மண்டல நண்பனாய் நம் சமூகம் அடையாளப்படுத்துவதும் வாழையைத்தான்.

உலகில் வாழையின் தோற்றமும் அதன் முக்கிய பயிரிடு பூமியாய் விளங்குவதும் இந்தியாவின் கிழக்குக் கடற்கரை மாநிலங்கள் மற்றும் மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட தென்கிழக்கு நாடுகள். உலகில் மொத்தம் 3000 வாழை வகைகளாம்! இந்தியாவில் பரவலாகப் பயிரிடப்படுவது 30! அளவிலும், ருசியிலும், ஊட்டச்சத்திலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை!

பூவன் பழம்: அளவில் சிறியவை. ஒரு வாழைக்குலையில் 100 முதல் 150 பழங்கள் உண்டு. மூலநோய்களுக்கு உகந்தது.

பேயன் பழம்: வயிறு மற்றும் குடல் புண்கள் ஆறும். உடல்சூடு தணியும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மலைப்பழம் (பச்சைப் பழம்): குழந்தைகளின் வெரைட்டி. இரத்த விருத்தி செய்யும்.

ரஸ்தாளி: மருத்துவ குணங்கள் குறைவெனினும், ருசியில் உயர்ந்தது. பழங்களைக் கொண்டு தயாரிக்கும் இனிப்புகள், சாலட்களில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

மாந்தன்: உடல் வறட்சியைப் போக்கும்; காமாலையைத் தடுக்கும்.

நேந்திரம்பழம்: பச்சையாகவோ, அவித்தோ, சிப்ஸ் வடிவிலோ உண்ணப்படுகிறது. குடற்புழுக்கள் நீக்குகிறது. புரதம் அதிகம் உண்டு.

கற்பூரவள்ளி: வாழை ரகங்களிலிலேயே மிக இனிப்பானது. நீண்ட நாட்களுக்கு வைத்து உண்பது கடினம்; கனிந்து முற்றிவிடும்.

செவ்வாழை: நோய் எதிர்ப்பு சக்தி; உடலில் தாது பலமும் அதிகரிக்கும்.

கதளி: (பூவன் பழத்தின் ரகம்): ஆன்டி ஆக்சிடென்ட் தன்மை உள்ளதால் செல்களின் செயல்பாட்டை சீர்செய்கிறது.

எலைச்சி: சிறியவையாயினும் மிகச் சுவையானவை; மலச்சிக்கலுக்கு சிறந்தது.

கேவென்டிஷ்: ஏற்றுமதி ரக வாழை; பளபள மஞ்சள் நிறமும்; மிக நீண்ட நாள் கெடாத தன்மையும் கொண்டது. இந்த வகையைச் சுற்றி பல சர்ச்சைகள் உண்டு.

வாழை உற்பத்தியில் உலகில் முதலிடம் யாருக்கு தெரியுமா? இந்தியர்களுக்குத்தான். உலகின் மொத்த உற்பத்தியில் 20 சதவீதம். இந்தியாவில் முன்னிலை வகிப்பதோ நம் தமிழகம்தான். இதில் மற்றொரு ஆரோக்கியமான சங்கதி யாதெனில், நம் சுயதேவைக்காகவும், உள்ளூர் சந்தை விற்பனைக்காகவும் மட்டுமே பெரும்பாலான உற்பத்தி பயன்படுகிறது. வாழைப்பழ விவசாயமும், வணிகமும் “நமக்கு தேவையானதை நாமே உற்பத்தி செய்தலும், வணிகப்படுத்தலும்” என்கிற “சுதேசி” நிலையை இன்னும் இழந்துவிடாமல் இருக்கிறது என்பதற்கு ஓர் அத்தாட்சி. ஓர் நம்பிக்கை.

இதற்கு முக்கிய காரணமாய் விளங்குவது, ‘வாழையை ஒரு வகைப் (Mono variety- Mono culture) பயிராக அல்லாமல், பல வகைப் பயிராக (Poly Variety - Poly culture) விளைவிப்பதே’ என்கின்றனர் விவசாய வல்லுனர்கள். மேலும், “இதனால், பயிர்களில் ஒருவகை நோய்வாய்ப்பட்டாலும், மற்றொரு வகை சாகுபடிக்கு கைகொடுத்து விடுகிறது.” இதனால் விவசாயிக்கும் பாதுகாப்பு, நுகர்வோருக்கும் பலவித சுவை, பலவித ரகம்.

மரபணு மாற்றம் எனும் வணிகவெறி அரக்கன்!

ஆயிரம் பழவகைகள் இருந்தாலும், நம் வழக்கு மொழியில் ‘பழம்’ என்ற பொதுப் பெயரைச் சொன்னால், அது வாழையையே குறிக்கிறது.

நம்ம பழத்திற்கும் கத்தி வைக்க காத்திருக்கிறான் ‘மரபணு மாற்றம்’ (Genetically Modified-GM) எனும் பேரரக்கன். ‘மரபணு மாற்றம்’ என்பது அறிவியல் போர்வையில் ஒளிந்து இயற்கையையும், விவசாயத்தையும், ஆரோக்கியத்தையும் வேட்டையாடும் அரக்கன் என்பது ஊரறிந்த இரகசியம்!

அமெரிக்க வாழைப்பழங்கள் ஒருவகை பயிர்முறையை (Mono-culture) சார்ந்த, கேவெண்டீஷ் எனும் வகை. இதனை கரீபியத்தீவுகளைச் சேர்ந்த பல நாடுகளில் ஏகாதிபத்திய சாகுபடி செய்து, அமெரிக்க கண்டம் முழுதும் சந்தைப்படுத்துவது ஒரு குறிப்பிட்ட பன்னாட்டு நிறுவனம். உலக வாழைப்பழ இறக்குமதியில் முதலிடம் வகிக்கும் வட / தென் அமெரிக்க கண்டங்களின் சந்தைகளை தன் கோரப்பிடிக்குள் கையகப்படுத்த எத்தனை அடக்குமுறைகள், அதனால் எத்தனை உள்நாட்டு போர்கள்.

“ஒரு வாழை பழத்திற்கு போரா? உண்மைதான். பனிப்போர் கால உள்குத்து வணிக அரசியலும், இன்றும் அமெரிக்க நாட்டை “பனானா நேஷன்” என கிண்டல் செய்வதுமே இதற்கு சாட்சி. இந்த “கேவென்டிஷ்” பழத்தைத்தான் மரபணு மாற்றி, நம் ஊர் பெயரிலேயே (எ.கா. பெங்களூரு வாழை) நம் நாட்டில் அறிமுகம் செய்யும் முயற்சிகள் திரைமறைவில் அரங்கேறி வருகின்றன.

நமது புரிதலுக்காக மரபணு மாற்றம் (GM) குறித்து மிக சுருக்கமாய் சொல்வதெனில்:

  • “எந்த நோயும் GM வாழையை தாக்காது. 100% இலாபத்திற்கு உத்திரவாதம்” இது காப்புரிமை பெற்ற கம்பெனி விவசாயிக்கு ஊட்டும் தேன் தடவிய நஞ்சு.
  • “GM வாழைதான் உங்கள் குடும்ப ஆரோக்கியத்தின் மிகச் சிறந்த நண்பன்” என GM வாழைக்கு பளபள பெயர் கொடுத்து விளம்பரம். இது நுகர்வோர் காதில் பூ சுத்தும் சமாச்சாரம்.
  • GM வாழைகள் ஒருமுறைதான் பூத்து கனிக்கும். பொதுவாக, வளர்ந்த வாழைக்கு அருகில் அடிவாழையாக, தன்னைத் தானே இனபெருக்கும் திறன் GMக்கு இருக்காது. அதனால், ஒவ்வொரு முறையும் விதைக்காக விவசாயி கம்பெனியிடம் கையேந்தும் சூழல் உண்டாகும்.
  • நுகர்வோருக்கு கம்பெனி நிர்ணயிக்கும் அதிக விலையில் வாங்க வேண்டிய கட்டாயம்.
  • இவை அனைத்திற்கும் மேல், பூச்சியே அரிக்காத (அதாவது பூச்சிக்குக் கூட உண்ணப் பிடிக்காது என வைத்துக் கொள்ளலாம்). 3 மாதம் ஆனாலும் கெடாத ஒரு வஸ்து இந்த மண்ணில் உண்டானால், இயற்கையின் சமநிலையும், உண்போரின் உடல்நிலையும் சீர்கெட்டுப் போகும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
  • மரபணு மாற்ற பயிர்களால் மண் மலடாகும், உடல் கேன்சரின் வாசலாகும் என்பதை மனதில் நன்றாக பதித்துக் கொள்ளுங்கள். நாலு பேருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

“மரபணு மாற்ற பயிர்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை” எனும் நடுவண் அரசின் முடிவு நம்பிக்கை அளிப்பதுதான். இருப்பினும், நுகர்வோராகிய நாம் சூப்பர் மார்க்கெட்டின் பளபள வாழையைத் தவிர்த்து, தள்ளுவண்டியின் பலபல ரக வாழையை வாங்கிப் புசிப்பதுதான் நம் அன்பிற்குரிய வாழையையும், வாழ்வையும் காப்பது.

கூடுதலாக, என் அன்பு வேண்டுகோள்...

தமிழுக்கு “ழ” அழகல்லவா?

“வாழைப்பழம்“ என நீங்களும், உங்கள் குழந்தைகளும் திருத்தமாய் உச்சரித்தால், தமிழும் வாழும் அல்லவா?

அதனால், இனி “நோ, பனானா!”

“எங்க சொல்லுங்க, வாழைப்பழம்!”