வறட்சியில் தென்னை பராமரிப்பு... ஒருநாள் நிகழ்ச்சி - ஒரு பார்வை!
ஈஷா விவசாய இயக்கத்தின் சார்பில் கடந்த 19, மார்ச் 2017 அன்று வறட்சியில் தென்னை சாகுபடி என்ற பயிற்சி பொள்ளாச்சி, ஆனைமலை வட்டம் வேட்டைக்காரன் புதூரில் உள்ள திரு. வள்ளுவன் அவர்களின் சத்குரு சந்நதி பண்ணையில் நடைபெற்றது, இந்த பயிற்சியில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர், நிகழ்ச்சியைப் பற்றிய தொகுப்பு உங்களுக்காக.
 
 

நமஸ்காரம், ஈஷா விவசாய இயக்கத்தின் சார்பில் கடந்த 19, மார்ச் 2017 அன்று வறட்சியில் தென்னை சாகுபடி என்ற பயிற்சி பொள்ளாச்சி, ஆனைமலை வட்டம் வேட்டைக்காரன் புதூரில் உள்ள திரு. வள்ளுவன் அவர்களின் சத்குரு சந்நதி பண்ணையில் நடைபெற்றது, இந்த பயிற்சியில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர், நிகழ்ச்சியைப் பற்றிய தொகுப்பு உங்களுக்காக.

எங்க தென்காசியில தண்ணிக்கு பஞ்சமில்ல, பழைய குற்றாலத்துல தண்ணி விழுந்தா எங்க விவசாய நிலத்துல தண்ணி நிறைஞ்சு வத்துறதுக்கே மூணுமாசம் ஆகும். ஆனா இந்த வருஷம் அநியாயத்துக்கு வறட்சியாகிப் போச்சு! ஆனாலும், பாலேக்கர் ஐயா சொன்ன நீர் மேலாண்மை விசயத்த கடைபிடிச்சதுனால, பக்கத்துல இருக்குறவங்க கிணத்து மட்டத்தவிட எங்க கிணத்துல தண்ணி கொஞ்சம் அதிகமாவே இருக்கு.”

அரசு பள்ளி தலைமை ஆசிரியரான தென்காசியைச் சேர்ந்த திருமதி.ராணி அவர்கள் நிகழ்ச்சியின் சக பங்கேற்பாளர் திருப்பூரைச் சேர்ந்த சுமதி தங்கமணி அவர்களிடம் பெருமையும் மகிழ்ச்சியும் பொங்க இப்படி சொல்லிக்கொண்டிருந்தார்.

காடுபோன்றே ஒரு தென்னந்தோப்பு

அந்த தென்னந்தோப்பிற்குள் நாம் செல்லும்போது வெறும் தென்னை மரங்களை மட்டும் காண்பதில்லை! மாறாக, பலவகை மரங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் நடப்பட்டிருப்பதை பார்க்க முடியும். மேலும், குறிப்பாக நாம் காண்பது, தென்னை மரத்திற்கு இரண்டு பக்கமும் 7 அடி தொலைவில் ஒன்றரை அடி ஆழம், ஒன்றரை அடி அகலம் மற்றும் 6 அடி நீளத்தில் குழி வெட்டப்பட்டு அதில் போடப்பட்டிருக்கும் மூடாக்கு. தென்னை மரங்களைச் சுற்றி பொதுவாக நம் மக்கள் வட்டப்பாத்தி கட்டி தண்ணீர் விடுவார்கள்; விரும்பினால் அந்த வட்டப்பாத்தியிலேயே மூடாக்கை போடுவார்கள். ஆனால், திரு.வள்ளுவன் அவர்களின் பண்ணை அதிலிருந்து வித்தியாசப்பட்டிருக்கிறது!

மண்ணியல் ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றுள்ள திரு.சரவணன் அவர்கள் நிகழ்ச்சியில் ஆற்றிய உரை பங்கேற்பாளர்களுக்கு மண்வளம் குறித்த புதிய தரிசனத்தை தந்தது என்றே சொல்ல வேண்டும்.

மொத்தத்தில் அந்த தென்னந்தோப்பானது காட்டில் உள்ளதைப் போலவே பல்லடுக்கு பயிர்முறையோடு அமைந்திருக்கும் ஒரு கச்சிதமான மாதிரி பண்ணையாக இருக்கிறது!

ஈரோடு சென்னிமலையைச் சேர்ந்த திரு.வெங்கடேஷ் அவர்கள் இந்த பண்ணையை பார்வையிட்டுவிட்டு, தனது நண்பர் பல்லடம் சதீஷ் அண்ணாவுடன் தேநீர் இடைவெளியில் தீவிர ஆலோசனையில் இருந்தார். அதாவது, தனது 20 ஏக்கர் தென்னந்தோப்பில் வள்ளுவன் அவர்களின் பண்ணையில் உள்ளதுபோலவே மகோகனி, காயா, கிளைரிசிடியா ஆகிய மரங்களை ஊடுபயிராக நடலாமா? அல்லது வேறு ஏதாவது மரவகையை நட்டு புதிய கண்டுபிடிப்பை சத்தமில்லாமல் நிகழ்த்தலாமா? என்பதுதான் அது!

பல்லடுக்கு பயிர்முறையில், தோப்பினுள் பயிர் வளர்ச்சிக்கு உகந்த நுண் தட்பவெப்ப சூழலை (Micro climate) உருவாக்கும் விதத்தில் இவ்வகை மரங்கள் நடப்பட்டுள்ளன, அதே நேரத்தில் அந்த மரங்கள் டிம்பர் வேல்யூ கொண்டதாகவும் இருக்கின்றன. ஆனால், வெங்கடேஷ் அவர்கள் அந்த மரங்கள் காய் கனிகளை தரக்கூடியதாகவும் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற நோக்கில் இந்த சிந்தனையை முன்வைத்தார்.

அன்னூரைச் சேர்ந்த திரு.கார்த்திக் அவரது தாத்தா நட்டு வளர்த்த 300 தென்னை மரங்கள் வறட்சியால் மடிந்துகொண்டிருப்பதை சோகத்துடன் சக பங்கேற்பாளரிடம் பதிவு செய்தாலும், வள்ளுவன் அவர்களின் பண்ணையை பார்த்த பிறகு புதிய மரக்கன்றுகளை நட்டு ஐந்தடுக்கு முறையை செயல்படுத்திட ஆர்வம் கொண்டிருப்பதை பார்க்கமுடிந்தது!

இவர்களைப் போலவே அங்கு வந்திருந்த பலரும் தென்னை பராமரிப்பு குறித்தும், பல்வேறு தொழிற்நுட்ப அம்சங்கள் குறித்தும் தெளிவு பெற்றுச் சென்றனர்.

குறிப்பாக, மண்ணியல் ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றுள்ள திரு.சரவணன் அவர்கள் நிகழ்ச்சியில் ஆற்றிய உரை பங்கேற்பாளர்களுக்கு மண்வளம் குறித்த புதிய தரிசனத்தை தந்தது என்றே சொல்ல வேண்டும்.

மண்வளம் குறித்த புதிய தரிசனம்

கீழே பூமி! மேலே வானம்! எல்லாம் அவன் செயல், நம்ம கையில என்ன இருக்கு?” இப்படி நம் அக்கம் பக்கத்தில் பலர் அலட்டிக்கொள்ளாமல் சொல்லிவிட்டு கடந்து போவதைப் பார்க்கலாம். ஆனால் முனைவர் திரு. சரவணன் அவர்களின் கூற்றுப் படி, மேலேயும் மண்தான், கீழேயும் மண்தான்! அதாவது அவர் சொல்வது நிலத்தின் மேல் மண் மற்றும் அடியில் பல அடுக்குகளில் அமைந்துள்ள கீழ் மண், இந்த மொத்த மண் கண்டமுமே ஒன்றோடொன்று தொடர்பில் உள்ள மண் அடுக்குகளாலானது. மேல் மண்ணில் ஏதேனும் சத்து பற்றாக்குறை ஏற்படும்போது, கீழ் அடுக்கு மண்ணிலிருந்து அதனை நிவர்த்தி செய்ய மேல் நோக்கி சத்துக்கள் நகர்ந்து வரும், நுண்துளைவழி உயர்வு மற்றும் மண்புழு முதலிய உயிரினங்களின் செயல்பாட்டின் வாயிலாக!

அந்த வகையில் திரு.வள்ளுவன் அவர்களின் பண்ணையில் தான் செய்த மண் கண்ட ஆராய்ச்சியில், சத்துக்கள் பயிர் வளர்ச்சிக்கு போதுமான அளவில் இருந்ததோடு (வேதிப்பண்பு), உகந்த இயற்பியல் மற்றும் உயிரியல் தன்மை கொண்ட மண்கண்டமாகவும் இருப்பதாக குறிப்பிடுகிறார்.

வள்ளுவன் அண்ணா பின்பற்றும் தானியங்கி நீர் பாய்ச்சும் தொழிற்நுட்பத்தை தனது பண்ணையில் செயல்படுத்தினால், தனது தொழிலில் கவனம் செலுத்த கூடுதல் நேரம் கிடைக்கும் என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் சென்னிமலை வெங்கடேஷ் அவர்கள்.

அதென்ன உகந்த இயற்பியல் தன்மை?... அதவாது காற்று மண்ணில் உட்புகும் வகையில் நிறைய நுண்ணிய துளைகளுடன், கெட்டியாக இல்லாமல் பொலபொலப்பாகவும் மிருதுவாகவும் இருப்பது! இதற்கு முக்கிய காரணம் பயிர்கழிவுகளாலான மூடாக்கு நன்கு போடப்பட்டிருப்பதே என்பதை அவர் பதிவு செய்தார். இம்மண்கண்டம் முழுவதும் அதிக அளவு ஈரப்பதம் இருப்பதை பார்ப்பதாக குறிப்பிட்ட முனைவர் சரவணன் அவர்கள், அதற்குமே மூடாக்குதான் முக்கிய காரணம் என்பதையும் தெரிவித்தார்.

ஈரப்பதம் உள்ள இடத்தில்தான் நுண்ணுயிர்கள் வளரும் சூழல் இருக்கும். அதோடு அங்கக கரிமங்களின் செறிவு இந்நிலத்தில் அதிகமாக இருப்பதையும் குறிப்பிடும் அவர், இது மண்வாழ் நுண்ணுயிர்கள் மற்றும் சிற்றுயிர்களின் பெருக்கத்திற்கு நன்கு வழிவகுத்துள்ளது என்பதையும் தெளிவுபடுத்தினார். ஆகமொத்தத்தில் இம்மண்ணில் வேதியியல் தன்மை (சத்துக்களின் செறிவு) மட்டுமல்லாமல், இயற்பியல் தன்மையும் உயிரியல் தன்மையும் (இம்மூன்றும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை!) ஒருங்கே மேம்பட்டு மண்ணை செழிக்கச் செய்துள்ளதை அவர் பதிவுசெய்தார்.

தொடர்ந்து அவர் மண்ணின் உப்புத்தன்மை குறித்து சொல்கையில், அருகிலிருந்த ரசாயன உரமிடப்பட்ட பண்ணையின் மண்ணிலுள்ளதில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே இந்த மண்ணில் உப்புத்தன்மை இருப்பதாகவும், இதனால், மண்ணின் EC (electrical conductivity) அளவு குறைவாக இருப்பதால், பயிர்களின் வேர்கள் சத்துக்களை உட்கிரகிப்பதற்கு குறைந்த அளவு ஆற்றலை மட்டுமே பயன்படுத்தும் வகையில் மண்சூழல் உருவாகியுள்ளதையும் புரியவைத்தார். இதன் மூலம் சேமிக்கப்பட்ட ஆற்றல் பயிர் விளைச்சலில் போய் சேர்வதையும் விளக்கினார்.

மண்ணிற்கு தழைச் சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து மட்டுமே இருந்தால் போதும் என்ற மனநிலையில் இரசாயன உரங்களை இட்டு வரும் மக்களுக்கு முனைவர் சரவணன் அவர்களின் இந்த கருத்து போய் சேர்ந்தால் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதை நம்மால் உணர முடிந்தது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த பங்கேற்பாளர்களும் மண்ணின் தன்மைகள் பற்றிய புதிய தெளிவை அடைந்ததை நாம் பார்க்க முடிந்தது.

மதுரையைச் சேர்ந்த திரு.கங்காதரன் அவர்கள் இன்னும் மூன்று ஆண்டுகளில் திரு.வள்ளுவன் அண்ணாவின் இந்த பண்ணையைப் போன்று தனது பண்ணையின் ஒரு பகுதியை மாற்ற ஆவன செய்யப்போவதாக உற்சாகத்துடன் தெரிவித்தார்.

வள்ளுவன் அண்ணா பின்பற்றும் தானியங்கி நீர் பாய்ச்சும் தொழிற்நுட்பத்தை தனது பண்ணையில் செயல்படுத்தினால், தனது தொழிலில் கவனம் செலுத்த கூடுதல் நேரம் கிடைக்கும் என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் சென்னிமலை வெங்கடேஷ் அவர்கள்.

இங்கே பண்ணையில் வளர்க்கப்படும் வாத்துகள் நத்தைகளை தின்று இயற்கை சமநிலையை நிலைநாட்டி, தென்னைக்கும் நன்மை செய்வதைப் போல, வேறு ஏதாவது இதுபோன்ற பறவைகளை வளர்க்க முடியுமா என்ற ரீதியில் ஒருசிலர் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

அனைத்திற்கும் மேலாக, வள்ளுவன் அவர்களின் பண்ணையில் வளர்க்கப்படும் தேனீக்கள் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் அனைவரிடமும் இருந்ததை பார்க்கமுடிந்ததோடு, அதனை எப்படி பெறுவது, வளர்க்கும் முறை என்ன என்பது போன்ற பல்வேறு கேள்விகளை பங்கேற்பாளர்கள் முன்வைத்தனர்.

இந்நிகழ்ச்சி மூன்று நாட்கள் நிகழ்ச்சியாக இருந்திருந்தால் இன்னும் எங்கள் தெளிவும் புரிதலும் ஆழமாக இருக்குமே என்ற ஏக்கத்தையும் வேண்டுகோளையும் தெரிவித்தனர் பலர். இது ஆரம்பம் மட்டுமே... அடுத்தமுறை நிச்சயமாக காலநீட்டிப்பு செய்யப்படும் என்று வாக்களித்தனர் ஈஷா விவசாய குழுவினர்.

இந்த பயிற்சியை குறித்து மேலும் பல தகவல்கள் நமது குழுவினருடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளப்படும்.

நன்றி,

ஈஷா விவசாய இயக்கம்

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1