மும்பையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணி புரிந்த டாக்டர் மஞ்சுஸ்ரீ நாயர் அவர்கள், கடந்த ஏழு ஆண்டுகளாக ஈஷா யோகா மையத்தில் தங்கியிருந்து தன்னார்வத் தொண்டு புரிந்து வருகிறார். மும்பையிலிருந்து கோவை நோக்கி அவரை ஈர்த்த அந்த சக்தியைக் குறித்து, அவரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட அந்த அற்புதமான சம்பவத்தைப் பற்றி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். மேலும் படிக்க...

டாக்டர் மஞ்சுஸ்ரீ நாயர், ஈஷா யோகா மையம்.

அது 2004ம் ஆண்டு பிப்ரவரி மாதம். நான் மும்பையில் அறுவைச்சிகிச்சை நிபுணராகப் பணிபுரிந்து கொண்டிருந்தேன். என் வேலை, என் சின்னஞ்சிறிய குழந்தை, இரண்டையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. எனவே மனதளவில் எனக்கு ஆதரவு தேவைப்பட்டது. அப்போது மிகவும் அதிர்ஷ்டவசமாக, என் வீட்டிலிருந்து சிறிது தூரத்திலேயே, 'இன்னர் இன்ஜினியரிங்' வகுப்பு நடப்பதாக அறிந்தேன். குறிப்பாக அந்த வகுப்பிற்கு 'முயற்சியின்றி வாழ்தல்' என்று உபதலைப்பு சூட்டப்பட்டிருந்தது. அது என்னை மிகவும் கவர்ந்தது. எனவே அந்த வகுப்பில் சேர்ந்தேன். சத்குரு அந்த வகுப்பை எடுத்தார். இன்னமும் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டி சில மாதங்களிலேயே ஈஷா யோகா மையம் வந்து 'ஹோல்னெஸ்' வகுப்பில் பங்கு பெற்றேன். எனது உடல், மனம், உணர்ச்சி என்று பல விஷயங்களில் நான் பெருமளவு மாற அந்த வகுப்பு எனக்கு பெரும் உதவியாக இருந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எனவே சில மாதங்கள் கழித்து, ஈஷா யோகா மையம் சென்று 3 மாதம் தங்கிவரலாம் என்று நினைத்து, ஆசிரமத்திலும் முன்னதாகவே அனுமதி பெற்று கிளம்பத் தயாரானேன். ஆனால் நான் கிளம்புவதற்கு சற்று முன்னால், நீண்ட காலமாக உடல் நலம் சரியில்லாமல் இருந்த என் தந்தை திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருடைய இரத்தத்தில் சர்க்கரை அளவு தொள்ளாயிரத்து எண்பத்தி மூன்று மில்லிகிராம்கள் இருந்தது. மருத்துவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துவிட்டார்கள். என் குடும்பத்தினரும், உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் அவருடைய சில உள்ளுறுப்புகளாவது செயலிழந்துவிடலாம் என்று மிகவும் பயந்துவிட்டார்கள்.

அதனால் நான் கனத்த மனதுடன், ஆசிரமத்திற்க்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் இப்படியெல்லாம் நடத்துவிட்டதால் என்னுடைய பயணத்திட்டங்கள் மாறிவிட்டன என்றும், என்னால் முடியும்போது அங்கு வருவதாகவும் எழுதியிருந்தேன். அதற்கு, 'உங்களால் எப்போது முடியுமோ அப்போது வாருங்கள். சத்குருவின் ஆசிகள் உங்களுடன் இருக்கும்' என்று பதில் வந்தது. இது என் தந்தையை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல் நாளன்று நடந்தது. என் தந்தை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நான் அதற்கு வெளியே பார்வையாளர்கள் காத்திருக்கும் அறையில் இருந்தேன். என் தந்தை அடிக்கடி நோய்வாய்ப்பட்டுக் கொண்டிருந்ததால், நானும், என் குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலுடன் இருந்தோம். நான் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்தேன். குழந்தையையும் கவனித்துக் கொண்டிருந்தேன். எனவே மிகவும் களைப்புடன் இருந்தேன்.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், மிகவும் களைப்பாக இருந்ததால், இரண்டு வினாடிகளுக்கு என் கண்களை மூடினேன். அப்போது திடீரென்று, எனக்குள் அந்தக் காட்சி தோன்றியது. சத்குரு கட்டிலில் உட்கார்ந்திருக்கிறார்...என் தந்தை படுத்திருந்த கட்டிலில் உட்கார்ந்திருக்கிறார், என் தந்தையின் கால் அருகே உட்கார்ந்து கொண்டு அவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறார், சத்குருவின் முதுகுப்பகுதி என் கண்ணுக்குத் தெரிகிறது. அவரை என்னால் மிகச் சுலபமாக அடையாளம் காண முடிந்தது, அவருடைய தலைமுடி, அவருடைய சால்வை. அது மிகவும் சிறுநேரக் காட்சிதான். அதற்கு நான் எந்தவிதமான முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. ஐசியூவுக்குள் என் தந்தை பாதியளவு நினைவுடன் அனுமதிக்கப்பட்டிருந்தார். மாலையில் என் சகோதரர் வந்து எனக்கு இரண்டு மணி நேரம் ஓய்வு கொடுத்தார். எனவே நான் வீட்டுக்குச் செல்லத் தீர்மானித்தேன்.

மருத்துவமனையின் படிக்கட்டுகளில் இறங்கி கீழே செல்லும்போது, பக்கத்திலிருந்த ஒரு புத்தகக் கடைக்குச் செல்ல வேண்டும் என்று விளக்க முடியாத ஒரு ஆர்வம் திடீரென்று ஏற்பட்டது. அங்கு சென்று புத்தகம் எதுவும் வாங்க விரும்பவில்லை. ஆனால் அந்தப் புத்தகக்கடைக்குச் செல்ல வேண்டும் என்று காரணம் இல்லாமலேயே விரும்பினேன். அந்தப் புத்தகக் கடைக்குள் நுழைந்தவுடன் என் கண்ணில் பட்ட முதல் விஷயம், சத்குருவின் புகைப்படத்துடன் இருந்த ஈஷா யோகா பயிற்சி வகுப்புப் பிரசுரங்கள்தான். அந்த சத்குருவின் புகைப்படம் 'ஞானத்தின் பிரமாண்டம்' புத்தகத்தின் அட்டைப்படத்திலும் இருக்கும். அந்தப் படத்தைப் பார்த்தவுடனேயே எனக்கு ஒரு ஆறுதலான உணர்வு ஏற்பட்டது. அதன் பிறகு அங்கு எதுவும் வாங்கவேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. இருந்தாலும், ஒரு ஆர்வத்தில் அந்த புத்தகக்கடைக்காரரிடம், யார் இந்த பிரசுரங்களை அங்கு கொண்டு வந்து வைத்தார்கள் என்று கேட்டேன். ஏனென்றால் ஈஷா அப்போது மும்பையில் அவ்வளவு பிரபலமாக இல்லை. அதற்கு அவர், 'ஓ! யாரோ வந்து, இவற்றை வைத்துவிட்டுச் சென்றார்கள். இந்த நிகழ்ச்சி இங்கு சீக்கிரம் நடக்க இருக்கிறதாம்' என்று சாதாரணமாகச் சொன்னார்.

புத்தகக் கடையை விட்டு வெளியே வந்து, வீட்டுக்குச் சென்று கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டேன். பிறகு மருத்துவமனைக்கு, தூங்கும் நேரத்துக்கு சற்று முன்பாகச் சென்றேன். ஐசியூவுக்குச் சென்று என் தந்தையைப் பார்த்தபோது, அப்போதும் அவர் பாதி நினைவுடன்தான் இருந்தார். என்னைப் பார்த்தவுடன் அவர், 'எங்கே அந்த தாடி வைத்த மருத்துவர்?' என்று முணுமுணுத்தார். அவர் என்ன சொல்கிறார் என்பதை என்னால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. அங்கு தாடி வைத்த மருத்துவர் யாருமே இல்லை. ஐசியூவிலிருந்த அத்தனை மருத்துவர்களையும் எனக்குத் தெரியும். நானே ஒரு மருத்துவர் என்பதால் அங்கிருந்த அத்தனை மருத்துவர்களையும் தெரிந்து வைத்திருந்தேன். அவர்களில் தாடி வைத்த மருத்துவர் யாரும் கிடையாது. அதனால் அவரிடம், 'நீங்கள் ஓய்வெடுங்கள், அமைதியாக இருங்கள்' என்று சொன்னேன். ஆனால் அவர் விடுவதாக இல்லை. மீண்டும் மீண்டும் 'அந்த தாடி வைத்த மருத்துவர் எங்கே'? என்று கேட்டார். அப்போது அவர் பாதி மயக்கத்தில் இருந்தார். வேறு பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார். அதனால் அவர் சொன்னதற்கு நான் பெரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

அடுத்த நாள் எங்களுக்கு ஒரே ஆச்சரியம்! அவருடைய இரத்தத்தில் சர்க்கரை அளவு சீரடையத் தொடங்கியது. அவருடைய உள்ளுறுப்புகள் சரியாக செயல்படத் தொடங்கின. காலை ஒன்பது, பத்து மணிக்கெல்லாம் எவ்வளவோ தேறியிருந்தார். அப்போது அவர் அதிக விழிப்புடன் இருந்தாலும், தான் சொல்வதை அவரால் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. பேச்சு கொஞ்சம் குளறலாக இருந்தாலும் அதிக விழிப்புடன் இருந்தார். எனவே நான் அவரிடம், 'இப்போது எப்படி இருக்கிறீர்கள்,¢முந்தைய தினம் இரவு எப்படி இருந்தது' என்று கேட்டேன். அதற்கு அவர், 'ஓ! நான் நேற்றிரவு கொஞ்சம் கூட கண்களை மூடவே இல்லை' என்று சொல்லிவிட்டு, உடனேயே, 'எங்கே அந்த தாடி வைத்த மருத்துவர், அந்த சர்தார்ஜி மருத்துவர், அவர் என்னை தூங்கவே விடவில்லை' என்று மீண்டும் கேட்க ஆரம்பித்துவிட்டார். அந்த ஐசியூ பிரிவில் எந்த மருத்துவரும் தாடி வைத்திருக்கவும் இல்லை, அல்லது எந்த ஒரு சர்தார்ஜியும் அங்கு மருத்துவராகவும் இல்லை. அதே நேரத்தில் முந்தின நாள் மாலை, என் மனத்திரையில் தோன்றிய 'சத்குரு என் தந்தையின் கட்டிலில் உட்கார்ந்திருந்திருக்கும்படியான அந்தக் காட்சி' என் நினைவிற்கு வந்தது. அதை எப்படி... எப்படி விளக்குவதென்றே எனக்குத் தெரியவில்லை. என்ன நடந்திருக்கலாம் என்று மெதுவாக இப்போது கூட்டிக் கழித்து பார்க்க ஆரம்பித்தேன். அவ்வளவுதான், என் உடலெல்லாம் புல்லரித்து விட்டது.

ஆனால் என் தந்தை மீண்டும் மீண்டும் 'சர்தார்ஜி டாக்டர் எங்கே' என்று கேட்டதால், 'சரி பரவாயில்லை, இப்போது தூங்குங்கள், நாம் அப்புறம் சந்திக்கலாம்' என்று சொல்லிவிட்டு வந்தேன். அடுத்த நாள் அனைவரின் எதிர்பார்ப்புக்கும் மாறாக அவர் ஐசியூவிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வார்டுக்கு மாற்றப்பட்டார். அவர் உடல்நலம் நன்றாகவே இருந்தது. முழு விழிப்புநிலையில் இருந்தார். அவருடைய பேச்சும் இயல்பாகிவிட்டது. அன்று மாலை நானும், அவரும் மட்டும் அவருடைய அறையில் உட்கார்ந்திருந்தோம். என் தந்தை அதற்கு முன் சத்குருவை பார்த்ததே இல்லை. நான் ஈஷா யோகா வகுப்பை முடித்திருக்கிறேன் என்பதும் ஈஷா யோகா மையத்துக்கு ஓரிரு முறை வந்திருக்கிறேன் என்பதும் தெரியும். ஆனாலும் அவருக்கு சத்குரு அறிமுகம் இல்லை. என்னுடைய கைப்பையில் எப்போதுமே நான் சத்குருவின் சிறிய படத்தை வைத்திருப்பேன். எனவே அதை எடுத்து அவருக்குக் காண்பித்தேன். அதைப் பார்த்துவிட்டு அவர்... அவர் ஒரு குழந்தையைப் போல தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார். சத்குருவை அவர் முன்பின் பார்த்ததில்லை என்றாலும், அந்த புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, 'இவர்தான் அவர். இவர்தான் நான் அன்றிரவு போவதிலிருந்து தடுத்தார். இவர்தான் என்னை அன்று போகவிடவில்லை. இவர்தான் என் உயிரைக் காப்பாற்றினார்' என்று சிறு குழந்தையைப் போல விசித்து, விசித்து அழுதார். முன்பின் பார்த்திராத ஒருவர், நீண்ட தாடி, டர்பன் ஆகியவற்றுடன் இருந்ததால் அவரை ஒரு சர்தார்ஜி என்று நினைத்திருக்கிறார். ஆனால் இப்போது சத்குருவை என் தந்தை மிகத் தெளிவாக அடையாளம் கண்டு கொண்டார்.

அந்த மருத்துவமனையில் இருந்த வரை, அந்தப் புகைப்படத்தை தன் மார்புடனேயே வைத்திருந்தார். மெதுவாக என் தந்தையின் மோசமான உடல்நிலை மாறி, ஒருவிதமாக ஸ்திர நிலைக்கு வந்தது. அப்போது அவருக்கு ஒரு பெரிய அறுவை சிகிச்சை ஒன்றும் நடந்தது. அப்போதும் நான் அந்த பாரத்தை சத்குருவின் திருவடிகளில் சமர்ப்பித்துவிட்டேன். என் தந்தை அறுவை சிகிச்சை முடிந்து ஒரு இளைஞனைப் போல வெளியே வந்தார். என் தந்தை சத்குருவை நேரில் சந்தித்ததே இல்லை. இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்ததற்கு தர்க்கரீதியான காரணங்கள் எதுவும் சொல்ல முடியவில்லை. ஆனால் சத்குரு எனக்காக, என் தந்தைக்காக, என் குடும்பத்துக்காக அங்கே வந்து இருந்தார் என்பதில் மட்டும் எனக்கு சந்தேகமே இல்லை. ஏதாவது ஒரு விஷயத்தை அவருடைய திருவடிகளில் நான் சமர்ப்பித்துவிட்டால், பிறகு அவர் அதை கவனித்துக் கொள்கிறார். அப்படிப்பட்ட ஒரு குருவின் அருட்கொடைக்குக் கீழே வாழ்வதைத் தவிர வேறெந்த புத்திசாலித்தனமான, விவேகமான செயலையும் என்னால் கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை. என் வாழ்க்கையை சத்குருவின் அருட்கொடைக்குக் கீழே நான் வாழ விரும்பியதற்கு, அந்த நிகழ்ச்சி மிகப் பெரிய தாக்கமாக என் வாழ்வில் அமைந்தது.

ஆனால் அதற்கும் முன்னதாகவே, நான் ஆசிரமத்திற்கு வந்து 'வைபவ் ஷிவா' என்னும் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். நிகழ்ச்சி முடிந்தவுடன் 'யார் வேண்டுமானாலும் பகுதி நேரமாகவோ அல்லது ஆசிரமத்திற்கு வந்து முழு நேரமாகவோ தன்னார்வத் தொண்டு செய்யலாம்' என அறிவிப்பு செய்தார்கள். எனவே நான் மெதுவாக சத்குருவிடம், 'நான் கூட இங்கு வந்து இருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'ஆமாம், சிறிது காலத்தில் நீ இங்கு வந்துவிடுவாய்' என்றார். இது நடந்தது 2004 நவம்பரில். 2005 ஜூன் மாதம் நான் இங்கே என் குழந்தையுடன் வந்துவிட்டேன். என் பையன் இங்கு ஹோம் ஸ்கூலில் நன்றாகப் படிக்கிறான். என் கணவர் எனக்கு எல்லா விதத்திலும் மிகவும் ஆதரவாக இருக்கிறார். என் வாழ்க்கையில் நான் எதைச் செய்தாலும், இந்த அருள்தான் என்னை செலுத்தும் சக்தியாக இருக்கிறது. இதுதான் என் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் தீர்மானிக்கிறது. நாம் வாழும் இந்த காலத்திலும், இப்படிப்பட்ட ஒரு மகான் நம்மிடையே வாழ்ந்து, அனைவரும் எளிதில் அவரை அணுகும் விதத்தில் இருக்கிறார் என்று மட்டுமே என்னால் நிச்சயமாக சொல்லமுடியும். அவருக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை. அவ்வளவுதான்.

நான் ஆசிரமத்தில் இருக்கும் பல துறைகளிலும் தன்னார்வத் தொண்டு புரிந்திருக்கிறேன். ஆனால் தன்னார்வத் தொண்டு என்பது இங்கிருப்பதற்கான ஒரு வழிதான். மற்றபடி நான் என்ன செய்கிறேன் என்பது முக்கியமல்ல. என் குருவின் அருளுக்குப் பாத்திரமாகி, ஒரு பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில், சக்தியூட்டப்பட்ட இந்த அற்புதமான மலையடிவாரத்தில் வசிப்பது என்பதே மிகப் பெரிய வரம். ஆன்ம வளர்ச்சிக்காக தங்களையே அர்ப்பணித்துக் கொண்ட மக்களுடன் சேர்ந்து வசிக்கும் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. நன்றி.