வாழையில் ‘முக்கோண வாழை நடவு’

வாழை சாகுபடியில் ‘முக்கோண வாழை நடவு’ என்ற புதிய உத்தியை இயற்கை வேளாண் விஞ்ஞானி சுபாஷ் பாலேக்கர் அறிமுகப்படுத்தியுள்ளார். இதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி, நல்ல இலாபம் ஈட்டிவரும் ஒரு பெண் விவசாயியின் அனுபவப்பகிர்வு உங்களுக்காக!
vaazhaiyil-mukkona-vaazahi-nadavu
 

‘முக்கோண வாழை நடவு’ என்பது இயற்கை வேளாண் விஞ்ஞானி சுபாஷ் பாலேக்கர் அறிமுகப்படுத்திய புதிய உத்தியாகும். குறைவான நிலத்தில் அதிக வாழை கன்றுகளை நடும் விதமாக இந்த நடவு முறையை அவர் வடிவமைத்துள்ளார். இந்த வாழை நடவு முறையை பின்பற்றி இயற்கை விவசாயத்துக்கு மாறிய மூன்றே ஆண்டுகளில் வாழை சாகுபடியில் வெற்றி கண்டுள்ளார் மேட்டுப்பாளையம் பெண் இயற்கை விவசாயி கிருஷ்ணவேணி.

மேட்டுப்பாளையத்தில் இருந்து 8 கி.மீ. தூரமுள்ள நெல்லித்துறை என்ற கிராமத்தில் அமைந்துள்ளது அவரது தோட்டம். காலை வேளையில் அவரது தோட்டத்துக்கு சென்றோம். அங்கு காங்கேயம் மாடுகளை பராமரித்துக் கொண்டிருந்த கிருஷ்ணவேணி நம்மோடு பேச ஆரம்பித்தார்.

“கோயம்புத்தூர் தானுங்க எங்க சொந்த ஊரு. நான் எம்.எஸ்சி. சைக்காலஜி படிச்சுருக்கேன். என்னோட வீட்டுக்காரரு முன்னாள் ராணுவ வீரர். எங்க குடும்பம் பாரம்பரிய விவசாய குடும்பங்க. நான் கல்யாணமானதும் குடும்ப நிர்வாகத்தைதான் கவனிச்சுக்கிட்டு இருந்தேன். சில வருஷங்களுக்கு முன்பு ஈஷா யோகா கிளாஸில் கலந்துக்கிட்டேன். அப்போது சத்குரு ஒரு வீடியோவில் இயற்கை விவசாயத்தின் சிறப்பை பற்றி பேசியிருப்பதை பார்த்தேன். அதன் பின்புதான், வீட்டில் சும்மாவே இருக்கிற நாமும் இயற்கை விவசாயம் செய்தால் என்ன? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.

“வழக்கமான முறையில் வாழை நடவு செய்தால் ஒரு ஏக்கருக்கு 700 முதல் 800 வாழை தான் நட முடியும். இ்ந்த முக்கோண நடவில் 1200 முதல் 1300 வாழை வரைக்கும் நடலாம்.

அதனால் ஈஷா விவசாய இயக்கத்தோட ஏற்பாட்டுல சுபாஷ் பாலேக்கர் நடத்திய ‘ஜீரோ பட்ஜெட்’ இயற்கை விவசாய பயிற்சி வகுப்பில் கலந்துகிட்டேன். அந்த வகுப்பை முடிச்சத்துக்கப்பறம் என்னோட நம்பிக்கை இன்னும் அதிகமாச்சு. எங்கள் நாலரை ஏக்கர் நிலத்தில் நானே இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சேன்.

இதுக்கு முன்னாடி இந்த இடத்தை எங்களிடமிருந்து குத்தகைக்கு வாங்கியவர் ரொம்ப வருஷமா ரசாயன விவசாயம் செஞ்சிக்கிட்டு இருந்தாரு. இருந்தாலும் நான் இயற்கை விவசாயத்துல துணிஞ்சு இறங்கினேன். பாலேக்கர் ஐயா சொல்லிக் கொடுத்த மாதிரியே முக்கோண நடவு முறையில் நாலரை ஏக்கரிலும் வாழை போட்டுருக்கேன்” என்ற கிருஷ்ணவேணி, முக்கோண வடிவில் நடப்பட்டிருந்த வாழைகளுக்கு நடுவே நம்மை அழைத்து சென்று சுற்றி காண்பித்தார்.

அவருடைய வாழைத் தோட்டம் மிக நேர்த்தியான அழகுடன் காட்சியளித்தது. வாழை தார்கள் நன்கு திரட்சியாக வளர்ந்திருந்தன. நாலரை ஏக்கரில் 5,800 வாழைகள் நிற்கின்றன. அவைகளில் பாதி நேந்திரம், பாதி கதளி.

“வழக்கமான முறையில் வாழை நடவு செய்தால் ஒரு ஏக்கருக்கு 700 முதல் 800 வாழை தான் நட முடியும். இ்ந்த முக்கோண நடவில் 1200 முதல் 1300 வாழை வரைக்கும் நடலாம். அதனால் நமக்கு அதிக லாபம் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் வாழைகளுக்கு இடையில் ஊடுபயிரும் போடலாம்.

நான் இப்போது ஊடுபயிராக தட்டப்பயிறு, உளுந்து, மக்காச்சோளம், வெங்காயம், மிளகாய் எல்லாம் போட்டிருந்தேன். அந்த வருமானத்தோடு வாழையிலும் நல்ல வருமானம் கிடைக்குது. முதல்முறையாக வாழை நடவு செய்யும்போதுதான் கன்றுகளை வெளியே இருந்து விலை கொடுத்து வாங்கவேண்டியது இருக்கும். பின்பு அதிலிருந்து மருந்தாம்பு எடுத்து அடுத்த வாழை வந்துரும். முக்கோண முறையில் வாழை நட்டால் எல்லா செலவும் போக குறைஞ்சது ஏக்கருக்கு 1 லட்சம் ரூபாய் லாபம் பாத்திடலாம்” என்றார்.

ஜீவாமிர்தத்தை தொடர்ந்து பயன்படுத்துவதால் தன்னுடைய நிலத்தில் மிருதுத்தன்மை அதிகரித்து இருப்பதாக கூறிய அவர், மாதம் ஒரு முறை ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தத்தை தண்ணீருடன் கலந்து தோட்டத்துக்கு பாய்ச்சுகிறார். இதனால் அவரது தோட்டத்தில் மண் புழுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், பயிருக்கு கனிமச்சத்து கிடைப்பதற்கு மாதம் ஒரு முறை மீன் அமிலமும் பயன்படுத்துகிறார்.

“ரசாயன விவசாயம் செய்யும் எங்கள் பக்கத்து தோட்டத்துக்காரர் ஆரம்பத்தில் நான் இயற்கை விவசாயம் செய்வதைப் பார்த்து கிண்டல் பண்ணிக்கிட்டே இருப்பார். காய்ப்பு பெருசா இருக்காது, வேலை அதிகம், லாபம் பார்க்க முடியாது என்றெல்லாம் சொல்வார். ஆனால் வாழைத்தார் நல்லா திரட்சியா வளர்ந்ததுக்கப்பறம் அவரே பார்த்து ஆச்சரியப்பட்டார். இப்போது அவரும் இயற்கை விவசாயத்துக்கு வரும் ஆர்வத்தில் இருக்கிறார். சீக்கிரமாக நம்ம பக்கம் சாய்ந்துவிடுவார்” என நம்பிக்கை பொங்க பேசினார் கிருஷ்ணவேணி.

பயிரிடும் முறை

முதலில் 5 கொத்து உழவும் அடுத்து 9 கொத்து உழவும் போட்டு பூமியை சமப்படுத்த வேண்டும். பின்னர், ஏக்கருக்கு 1,200 வாழைக் கன்று என்ற விகிதத்தில் வாழை கன்றுகளை பீஜாமிர்தத்தில் நனைத்து நட வேண்டும்.

முதல் வரிசையில் 6-க்கு 6 அடி இடைவெளி விட்டு நேராக கன்றுகளை நட வேண்டும். 2-வது வரிசையில் முதல் வரிசையின் முதல் கன்றில் இருந்து நான்கரை அடி பின் தள்ளி பக்கவாட்டில் 3 அடி இடைவெளி விட்டு முதல் கன்றை நட வேண்டும். பின்னர், அந்த முதல் கன்றில் இருந்து தலா 6 அடி இடைவெளியில் 2-வது வரிசை முழுவதுமாக கன்றுகளை நட வேண்டும். இப்படி நட்டால் முதல் வரிசையில் உள்ள முதல் வாழைக்கும் 2-வது வரிசையில் உள்ள முதல் வாழைக்கும் இடையில் 6 அடி இடைவெளி கிடைக்கும்.

இதையடுத்து, 3-வது வரிசையில் முதல் வரிசையில் முதல் கன்றில் இருந்து 9 அடி பின் தள்ளி (பக்கவாட்டில் 3 அடி இடைவெளி விடக்கூடாது) முதல் கன்றை நட்டு அதில் இருந்து தலா 6 அடி இடைவெளியில் அந்த வரிசை முழுவதும் மரக்கன்றுகளை நட வேண்டும். இதன்பிறகு 4-வது வரிசையில் 2-வது வரிசையை போன்றே மீண்டும் நான்கரை அடி பின் தள்ளி பக்கவாட்டில் 3 அடி இடைவெளி விட்டு முதல் கன்றை நட வேண்டும். பின்னர் முதல் கன்றில் இருந்து தலா 6 அடி இடைவெளிவிட்டு அந்த வரிசை முழுவதும் கன்றுகளை நட வேண்டும். இவ்வாறு நடும்போது தோட்டம் முழுவதும் ஒரு முக்கோண அமைப்பு உருவாகி இருக்கும்.

விதை விதைப்போம்...

நன்றி: தினத்தந்தி

ஈஷா விவசாய இயக்கம் நடத்தும் களப் பயிற்சிகளில் கலந்துகொள்ள 83000 93777 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

குறிப்பு: இந்த கட்டுரை தினத்தந்தி நாளிதழில் வெளியானது

ஈஷா விவசாய இயக்கம் பற்றிய விவரங்களுக்கு முகநூல் மற்றும் Youtube channelலில் இணைந்திடுங்கள்!

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1