வாங்க ஓடலாம் சென்னை மாரத்தான் - 2014!

மீண்டும் வரவிருக்கிறது சென்னை மாரத்தான். ஆம்! ஈஷா வித்யாவில் இப்போது இது ஒரு முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றாக, தன்னார்வத் தொண்டர்கள் வாழ்க்கையின் அங்கமாக, கிராமப்புற மாணவர்களின் கல்விக்காக ஒரு ஆனந்த ஓட்டம். கிராமப்புற மாணவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் இந்நிகழ்வில் நீங்களும் பங்கேற்பது எப்படி? மேலும் படியுங்கள்!
 

மீண்டும் வரவிருக்கிறது சென்னை மாரத்தான். ஆம்! ஈஷா வித்யாவில் இப்போது இது ஒரு முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றாக, தன்னார்வத் தொண்டர்கள் வாழ்க்கையின் அங்கமாக, கிராமப்புற மாணவர்களின் கல்விக்காக ஒரு ஆனந்த ஓட்டம். கிராமப்புற மாணவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் இந்நிகழ்வில் நீங்களும் பங்கேற்பது எப்படி? மேலும் படியுங்கள்!

நீங்களும் ஓடலாம், மாரத்தான்!

மாரத்தான்! முன்பெல்லாம் மாரத்தான் ஓட்டப்பந்தயம் என்றால் பெரிய விஷயமாக இருந்தது. மற்ற ஓட்டப் பந்தயங்களில் ஓடிப் பயிற்சி பெற்றவர்களே கூட மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ளத் தயங்குவார்கள். ஏனெனில் அதற்குத் தகுந்த உடல்பலமும், மனோபலமும் வேண்டும். மேலும் ஓடிப் பரிசும், பதக்கமும் பெறத்தான் மாரத்தான் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போதைய நவீன உலகில் மாரத்தான் ஓட்டமும் எளிமையாக்கப்பட்டு விட்டது. இப்போது தமிழகத்தில் கூட பல நகரங்களிலும் மாரத்தான் நடத்தப்பட்டு வருவதையும், அதில் ஆண் பெண்கள் வயது வித்தியாசமின்றி, பெரிய பயிற்சிகள் இன்றி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வருவதையும், அதிலும் பலர் ஏதாவது அறக்கட்டளை சார்பாக பங்கேற்று ஓடுவதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். தடகள வீரர்களுக்கு மட்டுமே என்றிருந்த மாரத்தான் ஓட்டம் கொண்டாட்டத்திற்காக ஓடுவோருக்காகவும், சமூக நலனில் அக்கறை கொண்டோருக்காகவுமாக இன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது தான் இப்போதைய மாரத்தான் ஓட்டங்களின் தனிச்சிறப்பு.

இந்த மாரத்தான் பரிசுக்காக அல்ல!

இத்தகைய மாரத்தான் ஓட்டங்களில் வழங்கப்படும் பரிசுகள் வெறுமனே பெயரளவுக்குத்தான். குறிப்பாக, மக்களிடையே, உடல்தகுதியின் மீது விழிப்புணர்வைக் கொண்டு வருவதற்காகவே நடத்தப்படுகிறது. 60 வயதிற்கும் மேற்பட்டோர் கூட இந்த மாரத்தான்களில் பங்கேற்கின்றனர். கடந்த மிகச்சில வருடங்களாக சென்னையிலும் இந்த மாரத்தான் (wipro Chennai marathon) நடத்தப்பட்டு வருகிறது. நடைப்பயிற்சியில் ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர். அதில் பலர் ஏதாவது ஒரு அறக்கட்டளைக்காக, அந்த அறக்கட்டளை சார்ந்த பணிகளுக்கு மக்களின் ஆதரவையும் நன்கொடையையும் பெறும் ஆர்வத்தில், இந்த மாரத்தானில் பங்கு பெறுகின்றனர். இந்த வருடமும் வரும் டிசம்பர் 7ம் தேதி நடக்கவிருக்கும் இந்த சென்னை மாரத்தானில் சுமார் 5000க்கும் மேற்பட்டோர் பங்குபெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 42.2 கி.மீ(முழு மாரத்தான்), 21.1 கி.மீ(பாதி மாரத்தான்), 10 கி.மீ என 3 பிரிவுகள் உள்ளன. இந்த தூரத்தை நீங்கள் ஓடிக் கடக்கலாம், ஓடியும் நடந்தும் கலக்கலாம், 10 கி.மீட் என்றால் முழுவதும் கூட நடந்தே கடக்கலாம். மேலும் இதில் பதிவு செய்தவர்களுக்கு சென்னையில் பல இடங்களிலும் தொடர்ந்து ஆலோசனையும் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

மாரத்தானில் ஈஷா வித்யா!

கடந்த வருடம் ஈஷா வித்யா பள்ளிகளுக்கு நன்கொடை திரட்டுவதற்காக ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் ஆர்வலர்கள் என மொத்தம் 560 பேர் கலந்து கொண்டனர். இந்த வருடமும் நூற்றுக்கணக்கானோர் பதிவுசெய்து வருகிறார்கள். ஈஷாவிற்காக ஓடுபவர்கள் தனியாக இணைந்து நகரின் பல பகுதிகளில் பயிற்சி எடுத்து வருகிறார்கள். ஈஷா வித்யாவின் வாசகங்களைத் தாங்கிய டி-சர்ட்களுடனும் பேனர்களுடனும் ஓடும் இவர்கள், மக்கள் மத்தியில் ஈஷா வித்யா திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர். வார்த்தைகளால் அல்லாமல், தம் உறுதியால் ஏற்படுத்தப் போகும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் இது!

“யாருப்பா இவங்க..?! குரூப்பா இப்படி ஓடுறாங்க..! ஈஷா வித்யானா என்ன?” இப்படியான கேள்விகள் அங்கே கூடியிருக்கும் மக்களிடையே வரும்போது, அது நமது முயற்சிகளுக்கு கிடைக்கும் சிறிய வெற்றியாக இருக்கும். நம் கண்களில் உள்ள உறுதியையும் கால்களின் விடாமுயற்சியையும் பார்த்து, ஈஷா வித்யாவிற்கு யாரேனும் ஒருசிலர் கைகொடுக்க முன்வந்தால், அப்போது நாம் ஓடியதன் முழுப்பலனும் பெற்றுவிட்டதாக எண்ணலாம். கடந்த 4 வருடங்களாக ஈஷா தன்னார்வத் தொண்டர்கள், கிராம குழந்தைகளின் கல்வி நலனிற்காக, இந்தியாவின் பல நகரங்களில் நடக்கும் மாரத்தான் ஓட்டங்களில் பங்கெடுத்து வருகின்றனர். இவர்களின் ஓட்டத்தின் மூலம் 30 வகுப்பறைகளும், 4 கழிப்பறை கட்டிடங்களும் 7 ஈஷா வித்யா பள்ளிகளில் உருவாக்கப்பட்டுள்ளன.

சில நாட்கள் பயிற்சியே கூட போதும். வெறுமனே உங்கள் பெயரை பதிவு செய்துக் கொண்டு, கட்டணம் செலுத்துவதால் மட்டுமே நீங்கள் ஈஷா வித்யாவிற்கு தேவையான நிதியை திரட்ட இயலாது. நீங்கள் ஓடிப் பங்கேற்க வேண்டும். நீங்கள் ஓடுவதன் மூலம் பள்ளிகளுக்கான நிதி திரட்டப்படுவது மட்டுமல்ல, சமுதாயத்தில் இந்த திட்டத்தை பற்றிய விழிப்புணர்வும் ஏற்படும். பல நிறுவனங்களின் பார்வையும் ஈஷாவித்யாவின் மேல் ஈர்க்கமுடியும்.

கடைசித் தேதி நெருங்கிவிட்டது!

போட்டியில் பங்கேற்க, பதிவு செய்வதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30ம் தேதி. எனவே, உடனே பதிவு செய்திடுங்கள்!

இங்கே க்ளிக் செய்வதன் மூலம் பங்கேற்பதற்கு பதிவு செய்துகொள்ளலாம். இதில் பங்கேற்று ஓடுவதற்காக இலவச ஈஷா டி-சர்ட் பெறுவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்.

போட்டிக்கான கட்டணத் தொகை முழுவதும் போட்டி அமைப்பாளர்களுக்கே போய்ச் சேரும், ஈஷா வித்யாவிற்குச் சேராது. உங்கள் நண்பர்களிடமும் சுற்றத்தார்களிடமும் “நான் ஈஷா வித்யாவிற்காக ஓடுகிறேன்; நீங்கள் என்னை ஊக்குவிக்க வாருங்கள்” என்று SMS மூலமாகவும் இ-மெயில் மூலமாகவும் அல்லது நேரடியாகவும் சென்று தெரியப்படுத்துவதன் மூலம்தான், ஈஷா வித்யாவிற்கான உதவிக் கரங்களை நாம் பெற முடியும். உங்கள் மனதிலும் கால்களிலும் உள்ள உறுதியைப் பார்த்து அவர்கள் வழங்கும் நன்கொடை, எங்கோ மூலையில் இருக்கும் கிராமப்புறக் குழந்தைகளின் வாழ்வில் வெளிச்சத்தைக் கொண்டு வரும். இந்தத் தருணத்தில், ஈஷாவிற்கு கை கொடுங்கள் என்று சொல்வதை விட, ஈஷா வித்யாவிற்காக உங்கள் கால்களைக் கொஞ்சம் தயார்படுத்துங்கள் என்று சொல்வதே சரியாக இருக்கும்.

ஈஷா மாரத்தான் குழுவினரிடம் மேலும் தகவல் பெற: 94890 45045
இ-மெயில்: chn.marathon@ishavidhya.org

 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1