உங்க கிட்ட ஒரு பேட்டி கிடைக்குமா?!
பேட்டி எடுக்கணும்னா ஒரு சினிமா நட்சத்திரத்தையோ அல்லது அரசியல்வாதியையோ எடுத்தால், அந்தப் பேட்டி எல்லோர் கவனத்தையும் ஈர்க்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் இவர் போன்றவரை எடுத்தால் அது எப்படியிருக்கும்?! யார் அவர்? அந்த சுவாரஸ்ய பேட்டியை க்ளிக் செய்து படியுங்கள்!
 
mattu mane
 

பேட்டி எடுக்கணும்னா ஒரு சினிமா நட்சத்திரத்தையோ அல்லது அரசியல்வாதியையோ எடுத்தால், அந்தப் பேட்டி எல்லோர் கவனத்தையும் ஈர்க்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் இவர் போன்றவரை எடுத்தால் அது எப்படியிருக்கும்?! யார் அவர்? அந்த சுவாரஸ்ய பேட்டியை க்ளிக் செய்து படியுங்கள்!

"உங்க கிட்ட கொஞ்சம் பேசலாமா...?" என்றவுடன் "பால் கரக்க வேண்டியிருக்கே!" என்று பிடிகொடுக்காமல் சென்று, அந்தச் செவலைப் பசுவின் மடியைப் பிடித்து லாவகமாகக் கரந்து கொண்டிருந்த பிச்சைமுத்து அண்ணாதான் ஈஷா மாட்டு மனையின் நாயகன். சில நிமிடங்கள், அவர் பால் கரக்கும் நேர்த்தியை ரசித்த நாம், அப்படியே அவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

உங்க சொந்த ஊர் எது...?

"மணப்பாறை. தெரியுமா...?!"
"ஓ... தெரியுமே! மணப்பாற மாடுகட்டி... அந்தப் பாட்டுல வர்ற ஊருதான?" என்றவுடன் முகத்தில் பற்றிக்கொண்ட புன்னகையைத் தொடர்ந்து, கேள்விக்கான பதில்கள் மள மளவென வரத் துவங்கின, அவர் கரக்கும் பாலைப் போலவே!

சின்ன வயசில இருந்தே இதே வேலைதான் பாக்குறீங்களா?

எங்க ஊர்ப் பக்கம் மாடுங்க அதிகம். எங்க வீட்டிலயும் நிறைய மாடுங்க வச்சிருந்தோம். அதனால, சின்ன வயசில இருந்தே மாடுகளப் பாத்துக்கறதே என்னோட வேலையாயிருச்சு.

மற்ற இடத்துல நீங்க மாடுங்களப் பாத்துக் கிட்டதுக்கும், ஈஷா'ல பாத்துக்கறதுக்கும் ஏதாவது வித்யாசம் இருக்கா?

ஆமா! கண்டிப்பா வித்யாசம் இருக்குது. இங்க எல்லோரும் அதுங்கள மாடுங்களாவே பாக்கறதில்ல, ஏதோ கூடப்பிறந்த மனுசங்களையும், குழந்தைங்களையும் பாத்துக்கறது மாதிரி அவ்வளவு அன்பா, அக்கறையா பார்த்துக்கறாங்க. ஆசிரமத்தில் இருக்கற நெறய பேர் இங்க வந்து அப்பப்ப மாடுகளக் கொஞ்சிட்டுப் போவாங்க. என்னோட சேர்ந்து இந்த கொட்டாய் எல்லாம் க்ளீன் பண்ணுவாங்க, சாணி கூட அள்ளுவாங்க. ஈஷா ஸ்கூல் குழந்தைங்க, கொஞ்சம் நேரம் கிடைச்சா கூட, இங்க வந்து கன்னுக்குட்டிகளோட பேசிட்டுப் போவாங்க.

உங்க கிட்ட ஒரு பேட்டி கிடைக்குமா!

எதாவது ஒரு மாடு கொஞ்சம் சோர்வா தெரிஞ்சாக் கூட, உடனே அதுக்கான மருத்துவம் பாத்துடணும், வேற இடங்கள்ல அப்படியில்ல. அதுவுமில்லாம இங்க மாடுகளுக்குக் கூட இல, தழைன்னு நாட்டு வைத்தியம்தான், டாக்டரைக் கூப்பிடறதில்ல. மடிநோய் எல்லாம் கூட ஈஸியா குணப்படுத்திடுவோம். சின்ன வயசிலேர்ந்து மாடுங்க கூடவே வளர்ந்திருந்தாலும், இங்க வந்து புதுசு புதுசா நிறையக் கத்துக்கிட்டேங்க.

சரி! பசு மாடுகள் கிட்ட இருந்து பால் கரக்குறீங்க. இந்தக் காள மாடுகளுக்கு ஈஷா'ல என்ன வேலை இருக்கு. அதெல்லாம் சும்மாதான் இருக்குமா?

யாரு சொன்னாங்க சும்மா இருக்குன்னு?! காளை மாடுங்கல்லாம் எவ்வளவு வேலை செய்யுதோ அந்த அளவுக்கு நல்லா சாப்பிட்டு ஆரோக்கியமா இருக்கும். இங்க இருக்குற ஏழெட்டு மாட்டு வண்டியில இந்த தேங்காய், மட்டைகள்... அப்புறம் இந்தச் சாணம் எல்லாத்தையும் கொண்டுபோய் சேக்க வேண்டிய இடத்துல சேக்குறது இதுங்களோட வேலதான்.

மாட்டுச் சாணத்த எல்லாம் என்ன பண்ணுவீங்க?

எல்லாம் உரம்தான்! இங்க இருக்குற மரங்களுக்கு உரமா போடுறோம். மாட்டுப் பால்ல இருந்து மள்ளு வரைக்கும் எல்லாத்தையும் பயன்படுத்துறோம்.

மள்ளுன்னா என்ன?

மாட்டோட கோமியம். அதத்தான் இந்த ஊர்ப்பக்கம் மள்ளுனு சொல்றாங்க.

இங்க மொத்தம் எத்தனை வகையான மாடுங்க இருக்கு?

காங்ரேஜ், தார்பார்க்கர், கிர், சாகிவால், காங்கேயம், ஓங்கோல், சிந்தி, ரெட்-காந்தாரி, காராம் பசு... இப்படி பல வகைல இருக்கு... ஆனா பெரும்பாலும் எல்லாமே நாட்டு மாடுங்கதான்,

ஏன் குறிப்பா நாட்டு மாடுங்களயே வளர்த்தறீங்க?

அதுங்களுக்குதான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்கு. அதுங்க பால், மூத்திரம் எல்லாத்திலயும் மருத்துவகுணம் நெறஞ்சிருக்கு. சீமை மாட்டுப் பால் குடிச்சா நோய் வரும், நாட்டுப்பசு பால்ல நோய் போயிரும்.

காராம்பசு கூட இருக்குதா?

ஆமா! இந்தக் காராம் பசுவ நம்ம ஊர்ப்பக்கம் அதிகமா பாக்க முடியாது. இதோட பால், குடிச்சா பல நோய்களுக்கு மருந்தா இருக்கும்னு சொல்றாங்க!

ஆமாமா... சத்குரு கூட காராம் பசுவப் பத்தி பேசியிருக்காங்க. சத்குரு மாடுகளப் பத்தி இங்க வந்து விசாரிப்பாரா?

இந்தப்பக்கம் போகும்போது நமஸ்காரம் பண்ணுவேன். "என்னப்பா மாடுங்கல்லாம் எப்படியிருக்கு"னு விசாரிச்சுட்டுப் போவாரு.

ஒரு மாடு எவ்வளவு நாள் வாழும்னு தெரியுமா?

"கன்னு 5; காளை 5; எருது 5; கிழடு 5ன்னு எங்க தாத்தா சொல்லுவாரு. அதாவது, கன்னுக்குட்டியா 5 வருஷம் இருக்கும்(வளரும் பருவம்). காளையா 5 வருஷம் இருக்கும் (வேலைகளைப் பழகும் பருவம்). எல்லா வேலைகளையும் நமக்காகச் செய்யும் எருதா 5 வருஷம். வயது முதிர்ந்து கிழடாக 5 வருஷம் இருக்கும்." என்று கூறிக் கொண்டே கட்டியிருந்த ஒரு கன்றுக் குட்டியை அவிழ்த்து விட, அந்தக் கன்று அத்தனைப் பசுக்கள் கட்டியிருந்த அந்த இடத்தில் சரியாக தன் தாய்ப் பசுவிடம் சென்று பால் அருந்தியது.

வியப்பாகப் பார்த்த நம்மிடம், கன்னுக்குத் தெரியாதா தாயோட வாசன...?! என்று அவர் புன்னகைக்க... நமஸ்காரம் சொல்லி விடை பெற்றோம்.

 
 
 
 
Login / to join the conversation1
 
 
4 வருடங்கள் 6 மாதங்கள் க்கு முன்னர்

thanks to pitchaimuthu Anna...

4 வருடங்கள் 6 மாதங்கள் க்கு முன்னர்

இந்த மாதிரி சாமானியர்களின் உரையாடல் ஒரு தனி சுகம். நம்மை எங்கோ கூட்டிக்கொண்டோண்டு செல்கிறார்கள். சாமானியர்களுக்கும் இங்கு இடம் உண்டோ என்பதில் மிக்க மகிழ்ச்சி