ஈஷாவில் ஆதியோகி முன்பாக உலக யோகா தினம் (ஜூன் 21) மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் அதிவிரைவுப் படை மற்றும் BSF படை வீரர்கள், பள்ளி மாணவர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று உப-யோகா பயிற்சிகளைக் கற்றுக்கொண்டனர்.

ஈஷா சார்பில் உலக யோகா தினம் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு உலகம் முழுவதும் சுமார் 1,500 இடங்களில் இலவச யோகா வகுப்புகள் நடைபெற்றன. குறிப்பாக, தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் ஜாதி, மத, இன & மொழி பாகுபாடின்றி பள்ளி& கல்லூரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் யோகா வகுப்புகள் நடைபெற்றன.

இதுதவிர, சென்னை, கோவை, மதுரை, திருச்சி, பாளையங்கோட்டை, புதுச்சேரி உள்ளிட்ட 15 மத்திய சிறைகளில் ஈஷா சார்பில் 2000-க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு யோகா கற்றுக்கொடுக்கப்பட்டன. இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறை கைதிகளுக்கு ஈஷா சார்பில் யோகா கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதியோகி முன் யோகா தின கொண்டாட்டம்…

ஆதியோகி முன்பு நடந்த யோகா தினக் கொண்டாட்டத்தில், கோவை வருமான வரித்துறை தலைமை ஆணையர் திரு.துர்கா சரண் தாஸ், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் திரு.கிருஷ்ணன், அதிவிரைவுப் படை துணை கமான்டென்ட் திரு.சுந்தர குமார், கோவை I.N.S அக்ரானி காமோடர் திரு.அசோக் ராய், BSF துணை கமான்டென்ட் திரு.கமலேஷ் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மேலும், அதிவிரைவுப் படை மற்றும் BSF படை வீரர்கள், ஈஷா ஹோம் ஸ்கூல், ஈஷா சம்ஸ்கிருதி, ஈஷா வித்யா, கோவை பப்ளிக் மெட்ரிகுலேசன் பள்ளி, திருப்பூர் விரிக்‌ஷா பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பிற நாடுகளில் கொண்டாட்டங்கள்…

இவ்வாண்டு அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர், மலேசியா, ரஷ்யா, ஆப்ரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் சுமார் 1,500 இடங்களில் உலக யோகா தினத்தன்று ஈஷா சார்பில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இலவச யோகா வகுப்புகள் வழங்கப்பட்டன.

2019 உலக யோகா தினத்தில் சத்குரு…

உலக யோகா தினமான ஜூன் 21ஆம் தேதியன்று, அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரமான போர்ட் பிளேயரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க Floating Dock எனப்படும் இந்திய கடற்படையின் மிதக்கும் துறைமுகத்தில் கடற்படை தலைமையகத்தின் தலைமை தளபதி, கடற்படை உதவி தலைவர் திரு.பிமல் வர்மா அவர்கள் சத்குருவை வரவேறற்று, சத்குரு வழங்கிய யோகா நிகழ்ச்சியில் தானும் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், கூட்டு சேவை கமேண்ட் (joint services command) பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் 500 பேர் தங்கள் குடும்பத்தாருடன் கலந்துகொண்டு உப-யோகா பயிற்சிகளைக் கற்றுக்கொண்டனர்.

ஈஷா அறக்கட்டளையின் மூலம் நன்கு பயிற்சிபெற்ற ஹட யோகா ஆசிரியர்கள் இந்திய தரைப்படை, கப்பற்படை மற்றும் விமானப்படை மற்றும் கடலோரக் காவல் படை போன்ற பல்வேறு பிரிவினருக்கும் ஜூன் 20ஆம் தேதியன்று மின்னி பே, ஹொடொ, ப்ரிச்குஞ்ச் ஆகிய இடங்களில் யோகா நிகழ்ச்சிகளை வழங்கினர்.

நிகழ்வில் சத்குரு பேசும்போது “நம் இராணுவ வீரர்கள், அந்தமான் நிக்கோபர் தீவுகளில், தங்கள் குடும்பத்தை விட்டு பல மைல் தூரத்தில், தங்கள் உயிரைப் பணயம் வைத்து தேசத்தை காக்கின்றனர். நமது செயல்பாடுகள் இந்த வீரமிக்க படை வீரர்களின் தியாகத்திற்கு உரித்தானது. உள்நிலை நல்வாழ்விற்காக நல்வாழ்வு தரும் யோக கருவிகள் மூலமாக அவர்களை திறமிக்கவர்களாகச் செய்வது மிக மிக முக்கியமானது.” என்று கூறினார்.

மாலையில் நடைபெற்ற மற்றுமொரு நிகழ்வு ஆயுதப் படை வீரர்கள் சத்குருவுடன் கலந்துரையாடும் வாய்ப்பினை பெற்றனர்.

படை வீரர்களுக்கு யோகா…

யோகக் கருவியை வழங்குவதன்மூலம் நம் நாட்டின் படைவீரர்களை உடல், மனம் மற்றும் உணர்ச்சி ஆகியவற்றில் ஆளுமை மிக்கவர்களாக மாற்றும் தனது தொலைநோக்கு பார்வை குறித்து சத்குரு பேசும்போது அடிக்கடி செல்வதுண்டு. இதன் அடிப்படையில் 2018 ஈஷா உலக யோகா தினத்தில் “Yoga for Soldiers” என்ற முழக்கம் பிராதனமாக இருந்தது. உயரமான போர்க்களமான சியாச்சின் பனிமலையில் கடந்த ஆண்டு சத்குரு நம் படை வீரர்களுக்கு யோகா நிகழ்ச்சியை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

பி.எஸ்.எஃப் - உடன் சிறப்பு ஒப்பந்தம்

எல்லைப் பாதுகாப்பு படையினருடன் ஈஷா அறக்கட்டளை ஓர் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தப்படி, இரண்டரை லட்சம் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கு, சத்குருவால் பயிற்சி அளிக்கப்பட்ட ஆசிரியர்கள்மூலம் யோகா சொல்லித் தரப்படும். மேலும், துணை ராணுவப் படையினருக்கு மிகப் பெரிய அளவில் ஹடயோகா வகுப்புகளை நடத்த ஈஷா அறக்கட்டளை நடவடிக்கை எடுத்து வருகிறது.