பூமித் தாயின் புன்னகை! -இயற்கை வழி விவசாயம்-பகுதி 10

திருப்பூர் வட்டத்தில் உள்ள நத்தக்காடையூர் கிராமத்தில் இயற்கை விவசாயி திரு. மகேஷ்குமார் அவர்களை ஈஷா விவசாயக்குழு, சந்தித்தது. கூடவே கொங்குதமிழில் கள்ளிப்பட்டி கலைவாணி சொல்லும் வெள்ளந்தி பேச்சுகளும்..

தென்னை வைத்து விண்ணைத்தொடும் இயற்கை விவசாயி!, Thennai vaithu vinnai thodum iyarkai vivasayi

தென்னங்கன்றுகளை மூன்று ஏக்கரில் நடவு செய்துள்ளார் திரு.மகேஷ்! இடைவெளி 30 x 28 என்ற அளவில் உள்ளது. தென்னங்கன்றுகளுக்கு இடையே ஊடுபயிராக கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. சொட்டு நீர் மூலம் கரும்புக்கு தண்ணீர் பாய்ச்சுகிறார்.

தென்னங்கன்றுகளை மூன்று ஏக்கரில் நடவு செய்துள்ளார் திரு.மகேஷ்! இடைவெளி 30 x 28 என்ற அளவில் உள்ளது. தென்னங்கன்றுகளுக்கு இடையே ஊடுபயிராக கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. சொட்டு நீர் மூலம் கரும்புக்கு தண்ணீர் பாய்ச்சுகிறார்.

கடந்த ஆண்டு பயிர்செய்த கரும்பு அறுவடைக்குப்பின் தற்போது மறுதாம்பாக வளர்ந்துள்ளது. கடந்த ஆண்டு முதல் வெட்டில் மூன்று ஏக்கருக்கு 160 டன் கரும்பு கிடைத்துள்ளதாகவும் தற்போது மறுதாம்புக் கரும்பில் சிறிது கூடுதல் மகசூல் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

கரும்புக்கு வரிசைக்கு வரிசை மூன்றரை அடி இடைவெளி விடப்பட்டுள்ளது. இடைவெளியில் கரும்பின் சோகையே மூடாக்காக போடப்பட்டுள்ளது.

“அட திருப்பூர்க்காரவுங்க எப்பவுமே வெகரமாத்தே இருப்பாங்கோ. பனியன் கம்பெனியெல்லாம் வர்றதுக்கு முன்னாடி அல்லாரோட பூமியும் விவசாய நிலந்தானுங்கண்ணா! உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’னு பாரதியார் சொல்லிப்போட்டு போயிருக்காரில்லிங்கோ... அதய கரெக்ட்டா கடைபிடிக்குறது நம்ம திருப்பூர்தானுங்க.”

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தண்ணீர் குறைவாக உள்ள பகுதிகளில் மூடாக்கு இடுவது மிக அவசியம் என்பதை இயற்கை விவசாயிகள் நன்கு அறிவார்கள். மூடாக்கு இடுவதினால் தண்ணீர் செலவு குறைகிறது, காற்றோட்டம் உண்டாகிறது, மூடாக்கு சிதையச் சிதைய மண்ணில் மக்கின் அளவு கூடுகிறது, இதனால் மண்ணின் ஈரப்பதம் தொடர்ந்து தக்கவைக்கப்படுகிறது.

கரும்புக்கு ‘குப்பை எரு’ அடியுரமாக இட்டுள்ளார். மாதம் இரண்டு முறை ஜீவாமிர்தத்தை சொட்டுநீருடன் கலந்து விடுகிறார். முழுமையாக இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துகிறார்.

“குப்பைய நாம போடுற எடத்துல போடோணுமுங்க. கெரகத்துக்கு நம்ம ஊர்நாட்டுல ரொம்ப பேரு கண்ட எடத்திலயும் குப்பைய போட்டு ரவுசு பண்ணிகிட்டு திரியிறாங்கோ. விவசாய நிலத்துல குப்பதானுங்க ரொம்ப முக்கியமானது! குப்பைய போட்டுத்தான் குன்றிமணி வாங்கோணும்னு அந்தக்காலத்துல என்ற அம்மாயி அடிக்கடி சொன்னது கரெக்டுதானுங்களே?!”

தென்னை நட்ட முதல் மூன்று ஆண்டுகள் வரை அதில் ஊடுபயிர்கள் நன்கு வளரும், அதன்பின் இலைகள் பெரிதாக வளர்ந்து போதிய சூரிய ஒளி கிடைக்காததினால் ஊடுபயிர்கள் பயிர் செய்ய இயலாது. இவரது நிலத்தில் தனியாக ஒரு ஏக்கரில் 110 வளர்ந்த தென்னை மரங்கள் உள்ளன, 30 x 30 இடைவெளியில் உள்ள மரங்களுக்கு இடையில் மொந்தன் மற்றும் பச்சை நாடான் வகை வாழையை ஊடுபயிராக நட்டுள்ளார்.

உயிர் மூடாக்காக காராமணி, பாசிப்பயறு, கம்பு போன்றவற்றை பயிர் செய்துள்ளார்.
வேலி மற்றும் வரப்போரங்களில் மலைவேம்பு, மகாகனி போன்ற மரங்களை (Timber Trees) நட்டுள்ளார். மேலும், நாட்டு மாடுகளை பாதுகாப்பதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார் திரு.மகேஷ். இவர் விவசாயிகளுக்கு நாட்டுமாடுகள் கிடைக்க உதவிவருகிறார்.

தென்னை வைத்து விண்ணைத்தொடும் இயற்கை விவசாயி!, Thennai vaithu vinnai thodum iyarkai vivasayi

தென்னை வைத்து விண்ணைத்தொடும் இயற்கை விவசாயி!, Thennai vaithu vinnai thodum iyarkai vivasayi

“பிள்ளைய பெத்தா கண்ணீரு தென்னைய வச்சா இளநீருன்னு சொல்லுவாங்க இல்லிங்களா? நம்ம நெலத்துல தென்னைய வச்சுப்போட்டு சரியா பரமாரிச்சோம்னாக்கும் கண்ணீர் விடுறதுக்கு அவசியமே வராதுங்கண்ணா! மாடு மேய்க்க மேய்க்க, நாடும் சேந்தே வளரும்னு என்ற அப்பாரு சொல்லும்போது எதோ சிரிப்பா தெரியுமுங்கண்ணா. இப்பதானுங்க புரியுது நாட்டு மாடு எவ்வளவு முக்கியமுன்னு! அட நம்ம இளவட்ட புள்ளைங்க அல்லாரும் சல்லிகட்டுல கலக்கிப்புட்டாங்கோ பாத்தீங்ளா?! நாட்டு மாடு இருந்தாதானுங்க விவசாய பூமி செழிக்கும்.”

திரு.மகேஷ் தன்னுடைய பகுதியில் உள்ள ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயிகளை ஒருங்கிணைத்து “நல்லமுது” என்ற இயற்கை விவசாயக் கூட்டமைப்பை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறார்.

இதன் மூலம் மதிப்புக்கூட்டிய விளைபொருட்களை நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்கிறார், இதனால் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கிறது என்று தெரிவித்தார்.

மகேஷ்குமார் அவர்களுக்கு ஈஷா விவசாயக் குழு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு விடைபெற்றது.