தேனீ, நாட்டு மாடு, இயற்கை விவசாயம்... அசத்தும் தாராபுரம் விவசாயி!
முழுநேர விவசாயியான திரு.ஜெகதீஷ் அவர்களை ஈஷா விவசாய இயக்கத்தினர் சந்தித்தபோது, அவர் பகிர்ந்துகொண்ட சில சுவாரஸ்ய தகவல்களை கள்ளிப்பட்டி கலைவாணியுடன் இங்கே கேட்டறியலாம்!
 
தேனீ, நாட்டு மாடு, இயற்கை விவசாயம்... அசத்தும் தாராபுரம் விவசாயி!, Thenee nattu madu iyarkai vivasayam - asathum tharapuram vivasayi
 

பூமித் தாயின் புன்னகை!-இயற்கை வழி விவசாயம்- பகுதி 2

முழுநேர விவசாயியான திரு. ஜெகதீஷ் அவர்களை ஈஷா விவசாய இயக்கத்தினர் சந்தித்தபோது, அவர் பகிர்ந்துகொண்ட சில சுவாரஸ்ய தகவல்களை கள்ளிப்பட்டி கலைவாணியுடன் இங்கே கேட்டறியலாம்!

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பால் வியாபாரியாக இருந்த திரு.ஜெகதீஷ், தற்போது இயற்கை விவசாயம் செய்து வருகிறார். தாராபுரம் வட்டத்தில் உள்ள சின்னக்காம்பாளையத்தில், நான்கு ஏக்கர் நிலத்தில் காய்கறிகள், முருங்கை, வெங்காயம், மக்காச்சோளம் போன்றவற்றை பயிர் செய்கிறார், தேனீ வளர்ப்பும் செய்கிறார்.

ஏனுங்க கேட்டீங்களா... ‘வேப்பங்கொட்ட கைநிறைய, வெள்ளாம வயல் நிறைய’னு எங்க ஊருப்பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்கோ! நம்ம ஜெகதீசு அண்ணாவும் அதையத்தான் சொல்றாருங்க. இன்னும் என்ன சொல்றாருன்னு கேளுங்க...

வெங்காயத்தில் சிறப்பாக மகசூல் எடுக்கும் இவர், வெங்காயத்தில் இலைப்பேனை கட்டுப்படுத்துவதில் வேப்பங்கொட்டை கரைசல் சிறப்பாக செயல்படுவதாக கூறுகிறார்.

ஏனுங்க கேட்டீங்களா... ‘வேப்பங்கொட்ட கைநிறைய, வெள்ளாம வயல் நிறைய’னு எங்க ஊருப்பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்கோ! நம்ம ஜெகதீசு அண்ணாவும் அதையத்தான் சொல்றாருங்க. இன்னும் என்ன சொல்றாருன்னு கேளுங்க...

தேனீ, நாட்டு மாடு, இயற்கை விவசாயம்... அசத்தும் தாராபுரம் விவசாயி!, Thenee nattu madu iyarkai vivasayam - asathum tharapuram vivasayi

"இலைபேனுக்கு தீர்வு"

பொதுவாக, வேதி மருந்துகள் இல்லாமல் வெங்காயம் சாகுபடி செய்வது சிரமம் என்று மக்கள் கருதுகின்றனர். வெங்காயத்துக்கு நீர் பாய்ச்சாமல் "வாட விடும்போது தான் இலைபேன் தாக்குதல் ஆரம்பமாகிறது" என்றும், இலைப்பேன் இருப்பதை கண்டவுடன் வேம்பங்கொட்டை கரைசல் அடித்துவிட வேண்டும் என்றும் ஜெகதீஷ் கூறுகிறார்.

வெங்காயம் நட்டு 25வது நாள் முதல் 50 நாட்களுக்குள்தான் இலைப்பேன் தாக்குதல் அதிகம் இருக்கும். 15வது நாளில் வேப்பங்கொட்டை கரைசலை அடிப்பதும், 25வது நாளில் பத்திலை கஷாயம் அடிப்பதும் அவசியம் என்கிறார்.

பாத்தீங்களா... பொதுவா மக்கள் நினைக்குறது எதுவா வேண்ணா இருக்கலாமுங்க! ஆனா உண்மைனு ஒன்னு இருக்குதில்லீங்க?! ‘நோய் நாடி நோய்முதல் நாடி’னு நம்ம வள்ளுவரய்யா சொல்லிவச்சுட்டு போயிருக்காருல்லீங்க... அதுமாதிரி நம்ம ஜெகதீசு அண்ணா பயிர்கள்ல எதுனால நோய் வருதுனு பாக்க சொல்றாருங்ணா!

"வேப்பங்கொட்டை கஷாயம் தயாரிக்கும் முறை"

(200 லிட்டர் கரைசலுக்கான அளவு)

வேப்பம் முத்து (தூள் செய்தது) -10 கிலோ
நாட்டு மாட்டு கோமியம் -10 லிட்டர்
தண்ணீர் -10 லிட்டர்

இவைகளை இரண்டுநாள் ஊறவைத்து வடித்தெடுத்தால் 20 லிட்டர் கரைசல் கிடைக்கும். அதில் 180 லிட்டர் தண்ணீர் கலந்து 200 லிட்டர் கரைசல் தயாரித்துக்கொண்டு வெங்காயத்திற்கு ஸ்பிரே செய்யலாம். இந்த அளவு இரண்டு ஏக்கர் பயிருக்கு இரண்டு முறை அடிப்பதற்கு போதுமானது.

வெங்காய சாகுபடிக்கு கடைசி உழவின்போது, ஏக்கருக்கு
100 கிலோ வேப்பம் புண்ணாக்கு
100 கிலோ கடலை புண்ணாக்கு
100 கிலோ ஆமணக்கு புண்ணாக்கு இடுவதாகவும்
அதன் பிறகு வேறு எந்த அடி உரங்களையும் இடுவதில்லை எனவும் தெரிவித்தார்.

"ஊடுபயிராக காய்கறிகள்"

thenee-nattu-madu-iyarkai-vivasayam-asathum-tharapuram-vivasayi-3

வெங்காயத்தின் இடையே ஊடுபயிர் செய்திருக்கிறார். ஊடுபயிராக வெண்டை, சோளம், செடி அவரை உள்ளது. வெங்காயம் 60 நாள் பயிராகும். வெங்காயம் நட்டு 30 நாள்கழித்தே ஊடுபயிர் நடவேண்டும்.

வெங்காயத்தில் ஊடுபயிராக 30வது நாளில் வெண்டையையும், இனிப்புச் சோளத்தையும் விதைத்துள்ளார். வெங்காயம் 60வது நாளில் அறுவடைக்கு வரும்போது வெண்டை காய்க்கத் துவங்கியிருக்கும், சோளம் நட்டு 70 வது நாளில் சோளம் பறிக்க இயலும். கொத்தவரை மற்றும் மிளகாய் போன்றவையும் ஊடுபயிராக பயிரிட்டுள்ளார்.

“இந்த கள்ளிப்பட்டி கலைவாணி மாதிரியே அண்ணனும் ஊடுபயிர் விவசாயம் செய்றாங்க பாத்தீங்களா?! சும்மாவா சொல்லிருக்காங்க பெரியவங்க... ‘ஊடுபயிர் விதைச்சுப் பாரு, உக்காந்து பணத்த எண்ணிப்பாரு’னு!

"வருடம் ஒருமுறை உழவு"

ஊடுபயிர்கள் அடுத்தடுத்து தொடர்ந்து பயிர் செய்வதினால் பலவிதங்களில் நன்மை ஏற்படுகிறது. முக்கியமாக வருடத்திற்கு ஒருமுறை உழுதாலே போதுமானது. ஊடுபயிர் உயிர் மூடாக்காகவும் செயல்பட்டு நீர் ஆவியாவதை தடுக்கிறது. ஒரு பயிர் இருக்கும்போதே மற்றொரு பயிர் நடுவதால் அறுவடைக்கான கால அளவை குறைக்க முடிகிறது என்று, ஊடுபயிர்களின் அவசியத்தை விளக்கினார்.

செடி முருங்கையை ஒரு ஏக்கரில் பயிர் செய்திருக்கும் திரு.ஜெகதீஷ், எட்டு அடி இடைவெளியில் நட்டுள்ளார்; ஏக்கருக்கு 18 முதல் 20 டன் மகசூல் கிடைப்பதாகக் கூறுகிறார்.

"ஈக்கள் கவனம்"

முருங்கைக்கு அருகில் ஈரமான சாணியை போட்டு வைக்கக்கூடாது, ஏனெனில் அதில் ஈக்கள் முட்டையிட்டு பல்கி பெருகுகின்றன, இந்த ஈக்கள் முருங்கைக்காயை கடித்து சொத்தை ஏற்படுத்துகிறது.

"காய்ப்பை அதிகரிக்கும் தேனீ"

தேனீ வளர்ப்பு பெட்டிகள் வைத்திருக்கிறார். தோட்டத்தை சுற்றி நிறைய தேனீக்கள் இருக்கின்றன. மகரந்த சேர்க்கைக்கு தேனீக்கள் அவசியம் என்றும், தேனீக்கள் வளர்க்கத் தொடங்கியபிறகு முருங்கையில் நிறைய காய்கள் பிடிப்பதாகவும் கூறுகிறார்.

“அட சாமி... ‘இலையில் சோறு போட்டு ஈயைத் தூர ஓட்டு!’னு சின்ன வயசுல பாடம் படிச்சோம் இல்லீங்களா?! ஆனா... நம்ம விவசாயத்துல எல்லா ஈக்களையும் விரட்டக் கூடாதுங்க. அந்த இரசாயன மருந்தடிச்சீங்கன்னா ஒட்டுக்க எல்லா ஈயும் ஓடிப்போயிரும். இருக்க வேண்டிய ஈ நம்ம வயல்ல இருந்தாகணுமுங்க. அதத்தான் நம்ம ஜெகதீசு அண்ணா செய்யுறாரு!

பால் விற்பனையில் நல்ல அனுபவம் உள்ளதால், நாட்டு மாட்டு பண்ணை அமைக்கவிருப்பதாகவும் அதன் மூலம் ஆரோக்கியமான A2 புரதம் உள்ள பாலை மக்களுக்கு தரமுடியும் என்ற தனது விருப்பத்தையும் தெரிவித்தார்.

ஈஷா ஜீரோ பட்ஜெட் 8 நாள் பயிற்சிபட்டறையில் கலந்து கொண்டதன் மூலம் பல தொடர்புகள் கிடைத்துள்ளது. இதனால் விற்பனை வாய்ப்புகளும் ஆலோசனைகளும் கிடைத்துள்ளது என்கிறார்.

அட... நம்ம காங்கேயம் மாட்டுப் பால குடிச்சு வந்தா கேன்சரே சரியாகும்னு சொல்றாங்க! இந்த நாட்டு மாடுகளல்லாம் கைவிடுறது நாயமுங்களா, நீங்களே சொல்லுங்கண்ணா! நாட்டு மாட்டுப் பண்ணை வைக்கணும்னு சொல்ற ஜெகதீசு அண்ணாவ பாராட்ட வேணாமுங்களா?!

தொடர்புக்கு:
திரு. ஜெகதீஷ் -9843083380, 9788011250

'பூமித் தாயின் புன்னகை! – இயற்கை வழி விவசாயம்' தொடரின் பிற பதிவுகள்

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1