தண்ணீரை சிறப்பாய் கையாள விழிப்புணர்வளிக்கும் பசுமைப் பள்ளி இயக்கம்!
ஈஷா பசுமைப் பள்ளி இயக்கத்தின் தன்னார்வத் தொண்டர்கள், பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகளில் தண்ணீர் வீணாவது குறித்து அறிவியல் பூர்வமாகவும் அனுபவப் பாடமாகவும் விழிப்புணர்வை வழங்குவது பற்றிய ஒரு பதிவு...
 
 

இன்று நிலத்தடி நீரின் அளவு வெகுவாக வற்றிவிட்டதைப் பார்க்கிறோம். சில இடங்களில் 1000 அடிக்கு போர்வெல் போட்டாலும் வெறும் காற்றுதான் வருகிறது. இந்நிலையில் நம் அன்றாட செயல்பாடுகளில் தண்ணீர் வீணாகாமல் பயன்படுத்துவது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகிறது. இதனை வலியுறுத்தி பள்ளிகளில் ஒரு விழிப்புணர்வுப் பயிற்சியை வழங்கி வருகிறது ஈஷா பசுமைப் பள்ளி இயக்கம்!

பசுமைப் பள்ளி இயக்கத்தின் தன்னார்வத் தொண்டர்கள் பள்ளிகளுக்குச் சென்று அங்கு மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் ஆசிரியர்களுக்கும் முறையான தண்ணீர் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை வழங்குகின்றனர்.

200 லிட்டர் தண்ணீர் வீணாகிறது என்றால், அது 2000 பறவைகளுக்கு போதுமான குடிநீராகும்
குறிப்பாக, தண்ணீர் தொட்டிகளிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் பிரிந்துசெல்லும் தண்ணீர் குழாய்களில் ஏற்படும் சிறு சிறு கசிவுகள் எப்போதும் நம்மால் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை! இதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக கசிவு ஏற்பட்டுள்ள ஒரு குழாயில் வெளியேறும் நீரின் அளவு ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு என்பதை மாணவர்களை கண்டறியச் சொல்கிறார்கள். அவர்கள் கணக்கிடும் அளவைக் கொண்டு ஒரு நாளுக்கு எவ்வளவு லிட்டர் வீணாகிறது என்பதை கணக்கிடச் சொல்கிறார்கள். அந்த அளவு 200 முதல் 1000 லிட்டர் வரைகூட இருக்கும் என்பதை அந்த மாணவர்களும் ஆசிரியர்களும் உணரும்போது அதிர்ச்சி அடைகிறார்கள். உதாரணத்திற்கு 200 லிட்டர் தண்ணீர் வீணாகிறது என்றால், அது 2000 பறவைகளுக்கு போதுமான குடிநீராகும் என்பதை தன்னார்வத் தொண்டர்கள் மாணவர்களுக்கு உணர்த்துகிறார்கள். இதனால் அவர்களிடத்தில் உண்டாகும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அவர்களை உடனே அதுகுறித்து சிந்திக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் தூண்டுகிறது.

இதுகுறித்த ஈஷா பசுமைப் பள்ளி இயக்கத்தின் தன்னார்வத் தொண்டர் ஒருவர் கூறுகையில், “நாங்கள் செல்லும் பள்ளிகளில் குழாய் கசிவுகள் வழியாக வீணாகும் தண்ணீரின் அளவை கணக்கிட்டு அறிந்ததும், பெரும்பாலான பள்ளிகளில் புதிய குழாய்களை உடனடியாக மாற்றிவிடுகிறார்கள். மேலும் தொடர்ந்து எதிர்காலத்தில் இதை கவனத்தில் கொள்வதாகவும் கூறுகிறார்கள்” என்றார்.

பொதுவாக மாணவப்பருவம் என்பது விளையாட்டும் குறும்பும் நிறைந்தது என்பதால், சில மாணவர்கள் கவனக் குறைவாக தண்ணீர் குழாய்களை சரியாக மூடாமல் செல்வர்; சிலரோ விளையாட்டுத் தனமாக குழாய்களை சேதப்படுத்தவும் செய்வர். ஆனால், இந்த விழிப்புணர்வு வகுப்பில் கலந்துகொண்ட பின் அவர்களிடத்தில் பெரும் மாற்றத்தைக் காணமுடிகிறது. அவர்களுக்கு தண்ணீரின் முக்கியத்துவமும் அவை வீணாகும் அளவும் கவனத்தில் வருவதால், குழாய்கள் சரியாக மூடப்படாமல் இருந்தால் உடனடியாக அதனை மூடிவிடுகிறார்கள். மேலும், தண்ணீரிலுள்ள தாதுப்பொருட்கள் பற்றியும் அவை எந்தெந்த விகிதத்தில் இருக்க வேண்டும் என்பதையும் எடுத்துக்கூறும் பசுமைப் பள்ளி இயக்கத்தினர், அதற்காக பிரத்யேகமான ஒரு தண்ணீர் பரிசோதனையையும் அங்கே மேற்கொண்டு, அதன்படி சில ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.

தண்ணீரிலுள்ள குளோரைடு, புளூரைடு, இரும்புத் தாது மற்றும் தண்ணீரிலுள்ள காரத்தன்மை மற்றும் அமிலத்தன்மை போன்ற 13 வகையான அளவீடுகளைப் பரிசோதனை செய்யும் முறையானது மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. அந்த அளவுகளுக்கு ஏற்ப கடின நீரை மென்மையான நீராக்குவது போன்ற நுட்பங்கள் பற்றியும் அவர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள். பொதுவாக தண்ணீரில் கிருமி நாசினியாக குளோரின் கலப்பது வழக்கமாக உள்ளது. ஆனால், இதனை எந்த அளவில் கலக்க வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. இதுகுறித்த விழிப்புணர்வையும் பசுமைப் பள்ளி இயக்கத்தினர் பள்ளிகளில் வழங்குகின்றனர்.

ஈஷாவின் பசுமைப்பள்ளி இயக்கம்

நாம் பள்ளிக்கூடத்தில் பழகும் பழக்கங்களும் கற்ற பாடங்களும் நம் வாழ்நாள் உள்ளவரை மறப்பதில்லை. அவை ஒவ்வொன்றும் பசுமரத்தாணி போல நெஞ்சில் பதிந்தே கிடக்கின்றன. அந்த வகையில், பள்ளிப் பருவத்திலேயே ஒரு மாணவன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வைப் பெற்றால் எப்படியிருக்கும்...?! அந்த மாணவனால் வருங்கால தலைமுறையின் சுற்றுச்சூழல் நிச்சயம் காக்கப்படும். ஆம்! இதற்காக ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் பள்ளிகளில் மேற்கொண்டுள்ள முயற்சியே பசுமைப் பள்ளி இயக்கம்.

ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து பசுமைப்பள்ளி இயக்கத்தை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்தில் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் மூலம் 2,200 பள்ளிகளின் சுமார் 1லட்சம் மாணவர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். இந்த இயக்கமானது குழந்தைகளுக்கு இயற்கையோடு தொடர்பிலிருக்கும் வாய்ப்பினை நல்குவதோடு, அவர்களை சிறப்புமிக்க தலைமுறையாய் உருவாக்கி, இன்று 35 லட்சம் மரக்கன்றுகளை நடச்செய்துள்ளது.

பசுமைப்பள்ளி இயக்கத்தில் இணைந்துள்ள பள்ளி மாணவர்கள் தாங்களாகவே நாற்றுப் பண்ணைகளை உருவாக்குகின்றனர். புத்தகப் பாடமாக கற்பிக்கப்படாமல், விதைகளைச் சேகரித்து மண்ணில் ஊன்றுவதிலிருந்து, அது கன்றாக வளர்ந்து மரமாகும் வரை தாங்களே பராமரித்து வளர்ப்பதால், அந்த மாணவர்களுக்கு மரங்கள் உற்ற தோழனாகி விடுகின்றன. இதனால் அவர்களிடம் மரங்களை வெட்டக் கூடாது என அறிவுறுத்த வேண்டிய அவசியமிருக்காது.

இதுகுறித்து மேலும் தகவல் பெறுவதற்கு கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும். 94425 90062

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1