இமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள்! - எழுத்தாளர் அஜயன் பாலா -பகுதி 7

குளிர், மழை போன்ற புறச்சூழல்களை சமாளிப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்திருந்தாலும், உடல் மற்றும் உள்நிலையில் முன்னேற்பாடுகள் செய்திராதநிலையில், கேதார் நடைபயணத்தை மேற்கொண்ட எழுத்தாளர் சந்தித்த தடைகள் என்னென்ன என்பதை அவரே விவரிக்கிறார். கொட்டும் மழையில் குதிரை சவாரி... எப்படி தடைபட்டது என்பது சுவாரஸ்யம்! தொடர்ந்து படித்தறியுங்கள்!

திரு. அஜயன் பாலா:

இமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள்! - எழுத்தாளர் அஜயன் பாலா, writer ajayan balaதடைகற்கள்தான் வெற்றி படிகற்கள்.

சாதாரண ஆற்று நீர்தான். அணைகள் கட்டி தடுக்கப்படும்போது ஆற்றல் கொண்ட மின்சாரமாக மாறுகிறது.

அதேபோலத்தான் ஆன்மீக வாழ்விலும் இயற்கையின் வாசல் தேடி நமது மனம் என்னதான் ஆன்மீகத்தில் தீவிர முனைப்பாக இருந்தாலும், சிலசமயம், நம்மையும் மீறி சில முட்டுக்கட்டைகள் விழும். கண்ணை மூடினாலும் தியானம், சித்திக்காது. இடத்தை மாற்றி உட்கார்ந்தாலும் மனம் வெறுமையிலும் ஏமாற்றத்திலும் உழலும். உண்மையில் மனம் அப்போது படும் அவஸ்தைகள் எல்லாமே ஆன்மீக பாதையில் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான தயாரிப்புகள் என்பதை சற்று நிதானமாக யோசித்தால் புரிந்துகொள்ளலாம்.

என்னுடன் வந்த சக பேருந்துவாசிகள் அனைவரும் வேகமாக ஏறுவதை பார்க்கையில் பொறாமையாக இருந்தது. கிட்டதட்ட 50 வயதான ஒரு அம்மா கூட துணிச்சலாக ஏறினார். ஆனால் என்னால் முடியவில்லை. இப்படியே திரும்பிவிடலாமா என்று கூட ஒரு எண்ணம் உள்ளுக்குள் பந்தை உருட்டியது.

இந்த இமயமலை பயணத்தின் முக்கிய இரண்டு மலையேற்றங்களுள் ஒன்றான கேதார்நாத் பயணமும் அதுபோல பல தடைகளை உள்ளடக்கியதாக இருந்தது. இந்த தடைகள் நம்மை உள்முகமாக வெவ்வேறு தளங்களில் முன்னேற்றும் சூட்சும குணங்கள் கொண்டவை என்பதை நான் பிற்பாடு உணர்ந்துகொண்டேன். சொல்லப்போனால் கேதார்நாத் மலையில் ஏறி அதன் உச்சியில் பனிசூழ்ந்த மலையின் நடுவில் காணப்படும் சிவலிங்கத்தை தரிசிப்பது யோக வாழ்வின் மகத்தான சாதனை என்றும்கூட சொல்லலாம். காரணம் மலையேறும்போது நான் எதிர்கொண்ட அனுபவங்கள் அத்தகையவை. அத்தடைகள் என் நம்பிக்கைகளின் ஆணிவேரை அசைத்தன. எனக்குள்ளிருந்த கொஞ்ச நஞ்ச ஆணவமும் அக்கணத்தில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியது. உடல், உள்ளம், உயிர் ஆகிய மூன்றிலும் ஸ்திரத்தன்மை முழுவதுமாக உருக்குலைந்தது. இத்தனைக்கும் என் குழுவிலிருந்த பலரும் கால்நடையாக மலையேற நானோ குதிரை மூலம் பயணித்தேன். அந்த அனுபவம் என் வாழ்வில் மறக்க முடியாதது. இப்போது நினைத்தாலும் மனதில் மருட்சிகளை உண்டாக்கவல்லது. அதை விவரிக்கிறேன், நீங்களும் என்னோடு பயணியுங்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

முந்தின நாள் இரவு குப்தகாசி கோவிலில் நடந்த சத்சங்கத்திலேயே மலையேற முடியாதவர்கள் முன்பே பெயர் கொடுத்தால் டோலி அல்லது குதிரைகள் ஏற்பாடு செய்யப்படும் என ஈஷா தொண்டர்கள் அறிவித்தனர். 14 கி.மீ. நெட்டுகுத்து மலையேற்றம் எனக்கு சாத்தியப்படாது. பயணக்கட்டுரை எழுதுவதற்காக ஆன்மீகத்துக்குள் வந்தவன், முறையாக யோக பயிற்சி கூட இல்லை. 14 கி.மீ எப்படி ஏற முடியும். உண்மையில் அப்போதே சொல்லியிருக்கலாம், ஈகோ தடுத்துவிட்டது. மறுநாள் காலை நான்கு மணிக்கே குப்தகாசி விடுதியிலிருந்து புறப்பட்டோம். புறப்படுவதற்கு முன் கடும்குளிரிலிருந்து பாதுகாக்க உடலை இறுக்கும் தெர்மல் ஆடைகளை அணிந்துகொண்டோம். அதன்மேல் வழக்கமாக அணியும் ஆடைகளுடன் ஸ்வெட்டர், ஜெர்க்கின், மங்கிகேப் ஆகியவற்றுடன் மறக்காமல் மழைக்கு பாதுகாப்பாக ப்ளாஸ்டிக் உறைகளையும் எடுத்துக்கொண்டோம். அன்றாட உபயோக பொருட்களுடன் க்ளுக்கோஸ், பிஸ்கட்டுகள், மாத்திரைகளையும் முதுகுப்பையில் எடுத்துக்கொண்டோம். தவிர மற்ற பெரிய சுமைகள் அனைத்தையும் அங்கேயே ஒரு அறையில் மொத்தமாக போட்டுவிட்டு இதர அறைகளை காலிசெய்துகொண்டு பேருந்தில் ஏறினோம். சரியாக 1 மணி நேரத்தில் கௌரிகுண்ட் வந்தது. அதுதான் கேதார்நாத் மலையடிவாரம்.

தலைமேல் விழுந்த நீர்பாறைகள்! , Thalaimel vizhuntha neerpparaigal

kedarnath

அங்கு இறங்கிய அடுத்த நிமிடம் மழைகொட்ட துவங்க அனைவரும் அவரவர் முதுகு பையிலிருந்து தயாராக கொண்டு வந்த நீலநிற ப்ளாஸ்டிக் மழை உறைகளை எடுத்து தலை மற்றும் உடல் முழுவதையும் மறைத்துக்கொண்டோம். மலையேற்றத்துக்கு உதவியாக அங்கேயே மூங்கில் கழிகள் ஐந்து ரூபாய்க்கு விற்றார்கள். அடுத்த நிமிடம் கொட்டும் மழையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கேதார்நாத் மலைப்பயணம் துவங்கியது. துவக்கத்தில் கொஞ்ச தூரத்துக்கு நம்மூர் கோவில் வாசல்களில் காணப்படுவது போல இரண்டு பக்கமும் நெரிசலான கடைகள். இதில் எண்ணற்ற தேநீர் மற்றும் உணவு விடுதிகள். இருபக்கமும் இக்கடைகள் எங்கள் பின்னால் வேகமாக நகர, கொட்டும் மழையில் தடியை ஊன்றியபடி குறுகலான படிக்கட்டுகளில் நாங்கள் மேலே ஏறினோம்.

ம்ம், ஹூம்... அரை கி.மீ. ஏறியவுடனே எனக்கு கால் வலிக்க தொடங்கிவிட்டது. என்னால் வலி தாங்க முடியவில்லை. பற்றாக்குறைக்கு மூச்சிறைக்க துவங்கியது. யோக பயிற்சிகளை முழுமையாக செய்தால் மட்டுமே சுலபமாக மலையேற முடியும் என என்னை இப்பயணத்துக்கு அழைத்த பாலச்சந்தர் அண்ணா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. பின்னால் இழுக்கும் முதுகு பையின் சுமை, சோவென கொட்டும்மழை என எல்லாமே சேர்ந்துகொள்ள பெரும் அசதி. பிளாஸ்டிக் உறையில் வழிந்து தண்ணீர் முகத்தின் வழியாக உடலை வேறு தொப்பமாக்கிவிட்டிருந்தது. என்னுடன் வந்த சக பேருந்துவாசிகள் அனைவரும் வேகமாக ஏறுவதை பார்க்கையில் பொறாமையாக இருந்தது. கிட்டதட்ட 50 வயதான ஒரு அம்மா கூட துணிச்சலாக ஏறினார். ஆனால் என்னால் முடியவில்லை. யாரோ என் முதுகில் அமர்ந்து அழுத்துவதைபோல அப்படி ஒரு பாரம். இப்படியே திரும்பிவிடலாமா என்று கூட ஒரு எண்ணம் உள்ளுக்குள் பந்தை உருட்டியது.

ஆனாலும் வைராக்கியத்துடன் எழுந்துகொண்டு தடியை ஊன்றி வேகமாக நடைபோட்டேன். எனக்கு முன்னே மழையையும் பொருட்படுத்தாமல் பலரும் ஏறிக்கொண்டிருந்தனர். கூட்டம் கூட்டமாக பழனி மலையில் பார்ப்பது போல குழந்தை குட்டிகளுடன் வட இந்தியர்கள் ஏறிக்கொண்டிருந்தனர். எங்களுக்கென பிரத்யேக அடையாள அட்டைகள் கழுத்தில் மாட்டிக்கொள்ள தரப்பட்டிருந்ததால் கூட்டத்தில் ஒருவரை ஒருவர் அடையாளம் காண வசதியாக இருந்தது. அப்பாடா கொஞ்ச தூரத்தில் கடைகள் முடிந்து, வனப்பகுதியும் மலைகளும் காட்சி கொண்டது. பாதை அகலமானது. சற்று தொலைவில் எங்களது வழியை அடைத்தப்படி நூற்றுக்கணக்கான குதிரைகள் நின்று கொண்டிருந்தன. வீம்புக்கு பார்த்தால் ஆகாது, மழை வேறு, பேசாமல் குதிரையில் ஏறிவிட வேண்டியதுதான். குதிரைகளுக்காகவே பயணக்குழுவால் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு ஈஷா தொண்டர் மூலம் 1200 ரூபாய்க்கு ஒரு குதிரையும் பேசி அமர்த்திக்கொண்டேன். தட்டுத்தடுமாறி என் முதல் குதிரையேற்றத்தை நிகழ்த்தினேன். குதிரை ஓட்டுபவன் ஒரு 56 வயது தோற்றத்தில் இருந்தான். ஆனால் விசாரித்தபோது 42 என தெரிய வந்தது. முகத்தில் அத்தனை சுருக்கம். மெல்ல உடலை அசைத்தப்படி குதிரை நகரத் துவங்கியது. எனக்கு முன்பாக பலர் குதிரையிலும் டோலியிலும் ஏறிக்கொண்டிருந்தனர்.

கிட்டத்தட்ட இரண்டு கி.மீ நடந்தபின் ஓரிடத்தில் குதிரைகள் கூட்டமாக நின்றன. காரணம், மழை காரணமாக ஒரு திருப்பத்தில் அருவி 'சோ' வென பாதையின் குறுக்கே கொட்டிக் கொண்டிருந்தது. அசுர வேகம் என்பார்களே அப்படி ஒரு வேகம்.

மனம் கொஞ்சம் நடுங்க ஆரம்பித்தாலும் கொஞ்சம் ஆசுவாசம். கற்களை மட்டும் பாதையாக கொண்ட அந்த செங்குத்து மலையில் சம்போ சிவ சம்போ! என கத்தியபடி அனைவரும் ஏறினர். எங்கள் குதிரை அப்படி ஒன்றும் மோசமானதில்லை. கொஞ்சம் வேகமாகவே நடக்க துவங்கியது. குதிரைக்காரன் வாலை முறுக்கியபடி பின்னாலேயே ஓடிவந்தான். மெல்ல எனக்கு முன்னால் சென்றவர்களையெல்லாம் நான் ஓவர்டேக் செய்து பின்னால் தள்ளி முன்னேறிக் கொண்டிருந்தேன். அப்பா இனி கால்வலி இல்லை, சுலபமாக 14 கி.மீ சேர்ந்துவிடலாம் என நினைக்க, ஆனால் அது என் முட்டாள்தனம் என்பதை அடுத்து வந்த ஒரு திருப்பம் உணர்த்தியது.

ஒரு திருப்பத்தில் என் கண்முன் மிகப்பெரிய மலை விரிந்தது. அப்போதுதான் நான் ஏறும் மலையின் உயரம் என்னை திடுக்கிட வைத்தது. கீழே குனிய தடுப்புக்கம்புக்கு அப்பால் அதளபாதாளம். ஒரு கல் சரிந்து குதிரை வேகமாய் முதுகை ஆட்டினால்கூட போதும் அவ்வளவுதான். வயிறுக்குள் பந்து உருண்டது. கொடுமையான மழைகாரணமாக கீழே வெள்ளம் பெருக்கெடுத்து கீழே சரிந்து கொண்டிருந்தது. நாம் பேசாமல் கால்வலியை பொருட்படுத்தாமல் நடந்து சென்றால் கூட முழுகவனத்துடன் கால் வைக்க முடியும். ஆனால் இப்போது எல்லாமே குதிரையின் கையில்.

கிட்டத்தட்ட இரண்டு கி.மீ நடந்தபின் ஓரிடத்தில் குதிரைகள் கூட்டமாக நின்றன. காரணம், மழை காரணமாக ஒரு திருப்பத்தில் அருவி 'சோ' வென பாதையின் குறுக்கே கொட்டிக் கொண்டிருந்தது. அசுர வேகம் என்பார்களே அப்படி ஒரு வேகம். அருவி நீர் பாதையில் கொட்டி பாதையை அறுத்தப்படி கீழே பாய்ந்து கொண்டிருந்தது. குதிரைகள் அருவிக்குள் புகுந்து வெளியே வர வேண்டும், கொஞ்சம் தப்பினால் அருவி தண்ணீருடன் போக வேண்டியதுதான். ஆனால் குதிரைகளோ கொட்டும் அருவிகளை பார்த்து மிரண்டு போய் கனைத்தன. நடந்து சென்றவர்கள் இருவர் இருவராக கைகோர்த்து அருவிக்குள் புகுந்து வேகமாக வெளியேறிக் கொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாமல் நான் கீழே இறங்கினேன். அருவிக்குள் நடந்து செல்வதும் கொஞ்சம் சிரமமான காரியம்தான் என்பதை அருகில் சென்றதும் உணர்ந்தேன். சட்டென என் பின்னால் வந்த நபர் என் கைகளை இறுக்க பற்றினார். திரும்பி பார்த்தேன் அவரோ என்னை விட அதிகம் பயப்படுபவராக இருந்தார். உள்ளுக்குள் ஒரு தெம்பு பிறக்க அவரிடம் என் கையை விட்டுவிடாதீர்கள் என்றேன். இருவரும் அருவியை நெருங்கினோம். தலைமேல் பொதபொதவென நீர்பாறைபோல கொட்டித் தள்ளியது. வெளியே நடுங்கிக்கொண்டே வந்தபோது என்னுள் ஏதோ ஒன்று தொலைந்து போயிருந்ததை உணர்ந்தேன்.

வரும் பதிவில், மரணபயத்தை தாண்டி கேதார் நுழைவாயிலை அடைந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் எழுத்தாளர். அசுர நீர்வீழ்ச்சியை பயத்துடன் கடந்து சென்றபோது எழுத்தாளர் உணர்ந்தவற்றை அறிந்துகொள்ள காத்திருங்கள்!

குறிப்பு: ஈஷாவுடன் இமாலயம் செல்ல வாருங்கள். வரும் செப் 15 அன்று துவங்கவுள்ள இந்த இமாலயப் பயணத்தில் நீங்களும் பங்குகொள்ள முன்பதிவுகள் அவசியம்.

தொடர்புக்கு: 94 88 111 333, 94 88 111 555

வலைதளம்: www.sacredwalks.org