தமிழ்ப் பத்திரிக்கைகளின் முன்னணி ஓவியரான ஷ்யாம் தன் உணவு அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்...

ஷ்யாம்:

எங்கள் ஊர் ராஜபாளையம். எங்கள் பேரில் 'ராஜா'ங்கிறது கூடவே இருக்கும். எங்கள் தாத்தா கிட்டம்ம ராஜா 108 வயதுவரை ஆரோக்கியமாக வாழ்ந்தார். அவருடைய மகன்கள் மூக்கையராஜா, அயோத்திராஜா. என் பேர் தர்மராஜா...!

shyam anna

என்னுடைய உணவு அனுபவங்கள் உன்னதமானது என்றுதான் சொல்லவேண்டும். எங்கள் தாத்தா புதுசு புதுசா 'ரெசிபி' செய்வார்! ஆமாம், அவர் தயாரிக்கும் உணவு வகைகள் உடம்புக்கு அத்தனை உன்னதமானவை.

நான் சிறுவனாக வளர்ந்த காலத்திலே, எங்கள் ஊரில் இயற்கையாக வளர்ந்த காய்கறிகளும், பழங்களும் மிக அதிகம். பொதிகை மலையை ஒட்டிய ஊர் என்பதால் மலையும், காடுமாக இயற்கை வளம் அதிகம். அங்கே பப்பாளிப்பழம் எல்லாம் கொட்டிக் கிடக்கும். நாங்கள் விளையாட்டாக காலில் போட்டு மிதிப்போம். இப்போது எங்கள் அம்மா சென்னையில் பப்பாளிப் பழத்தை காசு கொடுத்து வாங்கிவிட்டு, "பாருடா, நீங்களெல்லாம் எப்படி அலட்சியப்படுத்தினீங்க. இப்போது அதே பழத்தை சத்தான உணவு என்று ஏகப்பட்ட காசு கொடுத்து வாங்குகிறீர்கள்" என்று புலம்புவார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இயற்கை உணவுகள் எங்கள் ஊரில் கிடைத்த மாதிரியே, நிறைய வயதான பெண்மணிகள் ஏகப்பட்ட பேர் வீட்டில் இருப்பார்கள். அவர்கள் ஆளுக்கு ஒரு வேலையை செய்வார்கள். ஒரு கிழவி தயிரில் இருந்து வெண்ணெய் எடுக்க, ஒரு பாட்டிலில் மோரை ஊற்றிக் குலுக்கிக்கொண்டே இருப்பார்கள். இப்படி நிறைய பேர் உண்டு. வாசலில் ஒரு பிடி அரிசியை வாங்கிவிட்டு, ஒரு கட்டுக் கீரையைக் கொடுத்துட்டுப் போவார் கீரைக்காரக் கிழவி!

அங்கே பனங்கிழங்கு காடாக இருக்கும். அது அவ்வளவு ருசியாக இருக்கும். அதை கோணிக்கோணியாக எடுத்துக்கொண்டு வந்து பெரிய பெரிய அண்டாக்களில் வேக வைப்பார்கள். காலை முதல் இரவு வரைக்கும் வேகும். அந்த வாசனை அப்படியே ஊரைத் தூக்கும். மறுநாள் அதை உரித்து வெளித்தோலை எடுத்துவிட்டு, நடுவிலே இருக்கும் கிழங்கை நன்றாக காய வைப்பார்கள். அப்புறம் அதை அரைத்து மாவாக பெரிய பாட்டில்களில் போட்டு வைப்பார்கள். அதைத்தான் தினமும் காலையில் பாலில் கலந்து கொடுப்பார்கள். இன்றைக்கு இருக்கின்ற ஹார்லிக்ஸ், பூஸ்ட் பானமெல்லாம் அது முன்னால் தோற்றுப் போய்விடும். அவ்வளவு ருசியாக இருக்கும்!

முளைக்கீரையை லேசாக வேகவைத்து தயிரில் போட்டு, கடுகு, மிளகு தாளித்து சாப்பாட்டிற்கு கலந்துக்கொள்ளப் போடுவார்கள். என்ன ருசியாக இருக்கும்!

பெரியவர்கள் செய்யும் கைப்பக்குவம் இயற்கையில் விளைந்த பொருள்கள் என்று இரண்டுமாக சேரும்போது ருசியோடு கூட மிகுந்த சத்துணவாகவும் ஆகிவிடுகிறது. அதனால்தான் நோய் நொடியில்லாமல் எங்கள் தாத்தா மாதிரி 108 வயது வரைக்கும் பலரும் வாழ்ந்திருக்கிறார்கள்.

உங்களுக்கு எங்கள் தாத்தா செய்யும் ரெசிபி இரண்டு சொல்கிறேன்...

தேன் மாங்காய்

எங்கள் ஊரில் சப்பட்டை மாங்காய் என்று கிடைக்கும். ரொம்ப ருசியாக இருக்கும். தேனும் கறுப்பாக இயற்கையான தேனாக எங்கள் ஊரில் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:

சப்பட்டை மாங்காய் - தேவையான அளவு
சுத்தமான தேன் - மாங்காய் மூழ்கும் அளவு

செய்முறை:

  • சப்பட்டை மாங்காயை நன்றாக கழுவி, துடைத்துவிட்டு ஒரே அடி (ஒரு அடிதான்!) அடித்துப் பிளக்க வேண்டும்.
  • அதை சுத்தமான பாட்டிலில் போட்டு மாங்காய்கள் மூழ்கும் அளவுக்குத் தேனை விடவேண்டும்.
  • அதை நன்றாக ஒரு துணிபோட்டுக் கட்டி, பரண்மேல் வைத்துவிட வேண்டியதுதான்.
  • எறும்புகள் வராமல் 'ஏர்டைட்'டாகக் கட்டவேண்டும்.

(இப்படித்தான் ஒவ்வொரு வருடமும் எங்கள் தாத்தா புதிதாக தேன்மாங்காய் செய்து பரண்மேல் வைத்துவிட்டு, போன வருடம் செய்ததை இறக்கி வைப்பார். அதை சிறிய பாட்டிலில் மாற்றி, காலையில் ஒவ்வொரு ஸ்பூன் கொடுப்பார். புளிப்பும், இனிப்பும் ஊறி அமிர்தமாக இருக்கும். கொட்டையெல்லாம் கழன்று பழக்கூழும் தேனும் கலந்து ஒன்றாக இருக்கும். தாத்தாவுக்குத் தெரியாமல் பரண்மேல் ஏறி இந்த மாங்காய் பாத்திரத்தை நக்கி, அடியெல்லாம் வாங்கி இருக்கிறோம்!)

உளுந்து வடாம்

தேவையான பொருட்கள்:

உளுத்தம்பருப்பு - ஒரு கிலோ
சீரகம் - 50 கிராம்
மிளகாய் - 20
வெந்தயம் - 50 கிராம்

செய்முறை:

  • எல்லாவற்றையும் தனித்தனியே ஊற வைக்க வேண்டும்.
  • பிறகு மிளகாய், சீரகம், வெந்தயம் இவற்றை ஒன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
  • உளுந்தம் பருப்பை உப்புப் போட்டு ஒன்றிரண்டாக கெட்டியாக அரைக்க வேண்டும்.
  • எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கிள்ளிக் கிள்ளி வெயிலில் காயவைக்க வேண்டும்.
  • நன்கு காய்ந்த பிறகு பொரித்து அப்படியே சாப்பிடலாம்.
  • காரக்குழம்பு, சாம்பார் என எல்லாவற்றிலும் போடலாம். ரொம்பவுமே சுவையாக இருக்கும்.