ஒரு பந்து ஒருவர் வாழ்க்கையையே மாற்ற முடியும் என்பதற்கு மற்றுமோர் உதாரணம் கொளப்பலூர் பாட்டி என்று அழைக்கப்படும் நாகமணி பாட்டி. இவரின் சுவாரஸ்யமான கதையைப் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

இவரை எறிபந்து உலக சூப்பர் ஸ்டார் என்றுதான் சொல்ல வேண்டும். சர்வதேச அளவில் விளையாடுபவர் அல்ல, ஜிம்மிற்கு சென்று கட்டுமஸ்தான உடலினால் எதிரணி வீரர்களை மிரட்டுபவரும் அல்ல. கண்டாங்கி சேலையை வரிந்து கட்டிக் கொண்டு, தன் எதிரிலுள்ள வீரர்களை துவம்சம் செய்வதில் கெட்டிக்காரர். ஆனால், சச்சின் டெண்டுல்கர் கூட யாரென தெரியாத கிராமத்து பாட்டி இவர்.

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் மரியா ஷரபோவா போன்ற வீராங்கனைகள் விளையாடுவது போல் இருந்தது பாட்டியின் விளையாட்டு

தமிழக அளவில் கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஈஷா அறக்கட்டளையின் கிராம ஒலிம்பிக் போட்டிகளின் அதிரடி நாயகி, கொளப்பலூர் பாட்டி என அனைவராலும் செல்லமாக, மரியாதையாக அழைக்கப்படும் நாகமணி பாட்டி, 73 வயது இளைஞர் இவர். கால்களில் இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்திருந்தாலும் இவரது கரைபுரண்டோடும் உற்சாகத்தால் மொத்த அணியையே வெற்றிக்கு அழைத்துச் செல்பவர். இதுவரை 6 முறை வெற்றிக் கோப்பையை இவரது அணி சுவைத்திருக்கிறது, 6 முறை இரண்டாம் இடத்தை பிடித்து கோபியைச் சேர்ந்த முருகன்புதூர் அணிக்கு கோப்பையை பாட்டி அணி விட்டுக் கொடுத்தும் இருக்கிறது.

கோபிச்செட்டிப்பாளையத்தில் ஈஷா அறக்கட்டளையின் இலவச கிராம யோக வகுப்புகளின் மூலம் விளையாட்டிற்கு பரிச்சயமானபோது பாட்டிக்கு வயது 61, இன்று 73 வயதிலும் விடாக்கண்டனாய் எதிரிகளை விரட்டியடித்துக் கொண்டிருக்கிறார் பாட்டி. இவரது ஊரைச் சேர்ந்த பெண்கள் சிலர் திருமணம், படிப்பு என வெளியூர்களுக்கு காணாமல் போனாலும் இத்தனை வருடங்களாய் இடைவிடாமல் நாகமணி பாட்டி கொளப்பலூர் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது அவரது உற்சாகத்திற்கு சான்று. கொளப்பலூர் அணியில் பாட்டியின் மருமகளும், பேத்தியும் இணைந்து விளையாடுவது, தலைமுறை தலைமுறையாய் இவர்களை தொத்தியிருக்கும் உயிரோட்டம், ஆர்வத்தினை நமக்கு சொல்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

2007ம் ஆண்டு, கோவையில் நடந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற பாட்டியின் கொளப்பலூர் அணி, நடிகர் விஜய் அவர்களின் கைகளால் வெற்றிக் கோப்பையை பெற்றது. பரிசளித்துவிட்டு பேசிய விஜய் அவர்கள், "சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் மரியா ஷரபோவா போன்ற வீராங்கனைகள் விளையாடுவது போல் இருந்தது பாட்டியின் விளையாட்டு," என்று உற்சாகப்படுத்தியதை, பாட்டியை விளையாட்டிற்கு அழைத்து வரும் கோபியை சேர்ந்த செங்கோட்டையன் அவர்கள் நினைவுகூறுகிறார்.

அதே ஆண்டு, ஈஷா அறக்கட்டளை, ஒரே நாளில் அதிக அளவில் மரம் நட்டதற்காக கிடைத்த கின்னஸ் சாதனை அங்கீகாரம், அதைத் தொடர்ந்து மத்திய அரசு ஈஷா அறக்கட்டளைக்கு வழங்கிய "பர்யவரன் புரஸ்கார்" விருதினை அன்றைய குடியரசுத் தலைவர் மறைந்த அப்துல் கலாம் அவர்களது கைகளிலிருந்து பெரும் பேற்றினை ஈஷா அறக்கட்டளை பாட்டிக்கு அளித்தது.

பொதுவாக, விளையாட்டில் தோற்றால் ஏற்படும் விரக்தி, கோபம், பாட்டி அணியிடம் தோற்பவர்களுக்கு ஏற்படுவதில்லை என்று இவர் விளையாடுவதைப் பார்ப்பவர்கள் சொல்கிறார்கள். காரணம் பாட்டி அளிக்கும் உற்சாகம். "கண்ணு பந்த நல்லா பலமா வீசு கண்ணு... கண்ணு, நல்லா இடம் பாத்து பந்த போட கண்ணு... ஒரு பந்த விடக்கூடாது, பலமா புடி கண்ணு..." என்று பாட்டியின் உற்சாக கோஷங்கள் ஆட்டம் முழுவதும் ஒலித்துக் கொண்டே இருக்கும். இதனால் உற்சாகமடைவது கொளப்பலூர் மட்டுமல்ல, இவரது உற்சாகம் எதிரணியினரிடம் தொற்றிக் கொள்ளவும் தவறுவதில்லை.

பாட்டியுடன் விளையாடும் கோபியைச் சேர்ந்த மணி அக்கா, ஈஷாவின் கிராமப் புத்துணர்வு இயக்கம் நடத்தும் விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து பங்குபெற்று வருகிறார். இவர், "என் ஒரு கையில ஒரு கோடி ரூபாய், இன்னொரு கையில பந்து கொடுத்தா, எனக்கு நிச்சயமா பந்துதான் வேணும்னு ஒரு நிமிஷம் கூட யோசிக்காம சொல்வேன். ஏன்னா, எங்க வாழ்க்கைல ஈஷா விளையாட்ட கொண்டு வந்ததுக்கப்புறம் வாழ்க்கை அத்தனை உற்சாகமா, சந்தோஷமா ஆயிடுச்சு. வெக்கப்பட்டுகிட்டு வெளிய வராத எங்கள, ஈஷா பந்து எடுத்து விளையாட வச்சுடுச்சு. எங்களுக்குள்ள இருந்த பயம், தயக்கம் எல்லாம் காணாம போயிடுச்சு. ரொம்ப தைரியமா இருக்கோம்," என்கிறார்.

ஒரு பந்து உலகையே மாற்ற முடியும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள் கூறுவது எத்தனை உண்மை என்பது இவர்களது வாழ்க்கை அனுபவத்தின் மூலம் நம்மால் தெள்ளத் தெளிவாக பார்க்க முடிகிறது. வீட்டில் வறுமை, சொற்ப பணத்திற்காக நாள் முழுதும் ஓயாத கடுமையான வேலை, உடலை சோர்வாக்கிடும் இவர்களது வாழ்க்கைமுறை என எல்லாம் கூடி, அவர்களது மனதையும் உற்சாகமிழக்கச் செய்கிறது. வாழ்வின் நிதர்சனத்தை சந்திக்க மனமில்லாமல் கற்பனை உலகில் மிதக்க திரையரங்குகளும் மதுக்கடைகளும் தவிர ஒரு கிராமத்து இளைஞனுக்கு வேறு வழியே இல்லை. பதினாறு வயதே ஆன இளைஞர் கூட்டம் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகும் அவலநிலையில்தான் தமிழக கிராமங்கள் இருக்கிறது. ஈஷாவின் கிராமப் புத்துணர்வு இயக்கம் கிராமங்களைச் சென்றடைந்தவுடன் அவர்களுக்கு விளையாட்டுக்கள் சொல்லித் தரப்படுகின்றன. இதில் கிடைக்கும் குதூகலத்தால் போதைப் பொருள் பழக்கம் குறைந்து, ஒரு ஆரோக்கியமான சமூகம் உருவாக ஈஷா அறக்கட்டளை வித்திடுகிறது.

இத்தனை உற்சாகமாய் விளையாடும் இந்த கிராமத்து வீரர்களை உற்சாகப்படுத்த, கோவையில் நடைபெறும் இறுதிப் போட்டியை காண, வெற்றி பெறும் வீரர்களுக்கு பரிசளிக்க கிரிக்கெட் வீரர் திரு. சச்சின் டெண்டுல்கர் அவர்கள் செப்டம்பர் 4ம் தேதியன்று கோவை வருகிறார். இவ்வருட "ஈஷா புத்துணர்வு கோப்பையில்" 640 கிராம அணிகள் மோதும் பிரம்மாண்ட ஒலிம்பிக்காய் இது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இப்படி கிராம மக்களின் உடல், உள்ளம் மட்டுமல்ல, அவர்களுக்கு வேலைவாய்ப்பளித்து அவர்களது பொருளாதாரத்திலும் மேம்பாட்டை ஏற்படுத்தி அவர்களது வாழ்வில் மறுமலர்ச்சியை கொண்டுவரும் இந்த ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம் சத்குரு அவர்களால் 2003ம் ஆண்டில் கோபிசெட்டிப்பாளையத்தில் துவங்கி வைக்கப்பட்டது.

ஒரு சிறிய ஊரில் துவங்கப்பட்ட இந்தத் திட்டம் தற்போது பெரிய அளவில் வளர்ந்து ஆயிரக்கணக்கான மக்களை ஈர்த்து வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இவ்வருட “ஈஷா புத்துணர்வு கோப்பை”யை வெல்லப் போவது யார் என்பது கிராம மக்களுக்கு புத்துயிர் அளித்து, குதூகலத்தில் புரட்டிப் போடும் அனுபவமாய் இருக்கப் போகிறது என்பது நிஜத்திலும் நிஜம். பரிசு பெறப் போவது சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து அல்லவா?

இந்த படுசுவாரஸ்யமான கொண்டாட்டத்திற்கு, கள்ளம் கபடம் அற்ற அந்த கிராமத்து முகங்கள் உற்சாகத்தில் துள்ளி விளையாடுவதை பார்ப்பதற்கு, அவர்களை உற்சாகப்படுத்துவதற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். இது கிராமியத்தை கொண்டாட நமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு.

நிகழ்ச்சி பற்றிய விவரங்கள்

இடம் - கொடிசியா மைதானம், கோவை. மாலை 3 மணிக்கு இறுதிப் போட்டிகள் துவங்குகின்றன. அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும், உணவுத் திருவிழாவும். இசை நிகழ்ச்சிகளும், சத்குரு அவர்களது தலைமையில் பரிசளிப்பு விழாவும் நடைபெறும். பரிசினை கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவர்கள் வழங்குவார்கள்.
மேலும் விவரங்களுக்கு 83000 51000; 83000 52000