சூடாகுது பூமி...! Cool ஆக்க என்ன வழி?!
வருடாவருடம் வெப்பம் அதிகமாவதை நாம் கண்கூடாகக் காணும் போதிலும், climate change எனும் உலகளாவிய பருவநிலை மாற்றம் கட்டுக்கதை என்று கூசாமல் பிரச்சாரம் செய்பவர்களைப் பார்த்தால் வேடிக்கையாய்த்தான் உள்ளது. நம்மை ஊட்டி வளர்க்கும் பூமித்தாயைப் பேணிப் பாதுகாக்க நாம் அவசரமாக ஆற்றவேண்டிய கடமையை இக்கட்டுரை நினைவுபடுத்துகிறது.
 
சூடாகுது பூமி...! Coolஆக்க என்ன வழி?! , Soodaguthu bhoomi cool akka enna vazhi?
 

வருடாவருடம் வெப்பம் அதிகமாவதை நாம் கண்கூடாகக் காணும் போதிலும், climate change எனும் உலகளாவிய பருவநிலை மாற்றம் கட்டுக்கதை என்று கூசாமல் பிரச்சாரம் செய்பவர்களைப் பார்த்தால் வேடிக்கையாய்த்தான் உள்ளது. நம்மை ஊட்டி வளர்க்கும் பூமித்தாயைப் பேணிப் பாதுகாக்க நாம் அவசரமாக ஆற்றவேண்டிய கடமையை இக்கட்டுரை நினைவுபடுத்துகிறது.

காக்க காக்க சுற்றுச்சூழல் காக்க இப்பிரச்சனையை
நோக்க நோக்க நொடியில் நோக்க...

நாம் பசுமையாய் மாறி, உலகின் பசுமையை தொந்தரவு செய்யாமல், மக்கள் தொகையைக் கணிசமாகக் குறைப்பதே இந்தப் பிரச்சனைக்கு ஒரே தீர்வு.

இது சஷ்டி கவசமல்ல, இன்று நம் உலகைக் காக்க நாம் சொல்ல வேண்டிய உலக கவசம். இதைச் சொல்லாவிட்டால் நம்மைக் காக்க அந்த கந்தனாலும் முடியாது.

குன்றில் குடியிருந்தவன் கந்தன், இன்று அவன் பாணியைப் பின்பற்றி 15வது மாடியில் குடியிருப்பது வெகு சாதாரணமாகி விட்டது. ஜன்னலிலிருந்து எட்டிப் பார்த்தால் மலைக் குன்றைவிட ஒரு பூதாகரமான எஃபெக்ட் கிடைக்கிறது, இந்த விண்ணுயற வளர்ந்த கட்டிடங்களில். சும்மா கிடைக்குமா இந்த சுகம்? மூச்சு முட்ட மலையேற வேண்டாம், ஒரு சொட்டு வேர்வை சிந்த வேண்டாம்! லிஃப்ட் சுவிட்சை தொட்டால், அடுத்த கணம் 15வது மாடியில்...

சுற்றி நமக்கு மரம்? தேவையில்லை!
ஓடிக் கொண்டிருக்கும் நதியின் சலனம்? பிடிக்கவில்லை!
பாடிக் கொண்டு வரும் குருவிகள்? ஐயோ தொந்தரவு தாங்கவில்லை!
பறந்து வரும் தட்டான்கள்? ரசிக்க நேரமில்லை...
இது ஆபத்தா? மனித இனத்தின் வளர்ச்சியா?

15, 20 வருடங்களுக்கு முன், ஒரு வருடத்திற்கு 160 நாட்களுக்கு நீரை பகுத்து வழங்கிய வானம் இன்று முப்பதே நாட்களில் கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்க்கிறது. பாஸ்ட் பார்வேர்ட் (Fast Forward) உலகல்லவா?

“அதனால் என்ன? எப்படியோ தண்ணி கிடைத்து விடுகிறது” என்பவரா நீங்கள்... என்ன செய்ய கூகுல் நம்மை படுத்தும் பாடு, சுற்றுசூழலும் தெரியவில்லை, சுற்றி நடப்பவையும் புரியவில்லை.

10 வருடங்களுக்கு முன் வருடத்திற்கு 14,000 மாக இருந்த விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை, பேக்ட்டு ஃபுட் (Packed Food) லோகத்தில் 34,000 மாக வளர்ச்சி கண்டுள்ளது. மழைக்கும் விவசாயிக்கும் என்ன சம்பந்தம் என்று மட்டும் கேட்டுவிடாதே சகோதரா!

160 நாட்களில் பெய்ய வேண்டிய மழை 30 நாட்களில் கொட்டினால் மலை கூட தரையாகிவிடும், பாறைகூட கல்லாகிவிடும், அரிப்பில்!

விவசாய நிலம் மட்டும் தாங்குமா?

“ஐயோ என் பாடே இங்க தாங்கல, இதுல விவசாயி பத்தி வேற யோசிக்கணுமா,” என்று நொந்து கொள்பவர்கள், கொஞ்சம் மெனக்கெடாவிட்டால் 100 வருடங்களில் உலகை வாழ முடியாத இடமாக மாற்றி விடுவோம், நம் திறமையால்.

இயற்கையோடு இயைந்து வாழ்ந்து, தன் உடை, தன் உணவு, தன் வாழ்க்கை முறை என அனைத்திலும் இயற்கையே பிரதானமாய் கொண்டு வாழும் விவசாயியின் கதி? இன்று அதோகதி தான். சொகுசு வாகனங்களில் பயணம் செய்து, குளிர்பானங்களால் குளிரூட்டப்பட்டு, ஃபேஸ் புக்கில் முகம் தொலைக்கும் நம்மால், நாம் கக்கும் புகையால் பாதிக்கப்படுவது? அதோ... அதோகதியில் கிடக்கும் அவனேதான், விவசாயிதான்.

விவசாயி காசில்லாமல் சாகிறான், நாம் காசிருப்பதால் தப்பித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் காசிருந்தும் சாகும் நிலைக்கு நாம் தள்ளப்படும் காலம் வெகு தொலைவில் தெரியவில்லை. இயற்கை நிந்திக்கப்பட்டால் அது வெகு அருகில்.

தமிழகத்தில் ஒரு பவர் கட் எப்படி நம் வாழ்க்கை முறையையே மாற்றிவிட்டதோ, அதைப்போல் நம் ஆரோக்கியத்தை, நம் வாழ்க்கையை, நம் உயிரை, நம் விதியை முற்றிலுமாக புரட்டிப் போடும் சக்தி இயற்கைக்கு இருக்கிறது. இங்கொன்றும் அங்கொன்றுமாக தன் விசிடிங் கார்ட்டை காட்டித் தன் தீரத்தை நமக்கு புரிய வைக்க இயற்கை தவறவே இல்லை. பூகம்பமும் தண்ணீர் பற்றாக்குறையும், கேன்ஸரும் நாம் இயற்கையிடம் கேட்டுப் பெற்ற வரங்கள்.

வரத்தை தவத்தால் மாற்றியமைக்க முடியும் நம்மால், நாம் கைகூடி முனைந்தால்!

தற்சமயம் உலகத்தின் நிலப்பரப்பில் ஏழு சதவிகிதம் மழைக் காடுகள், இந்த ஏழு சதவிகிதம் மழைக் காடுகள் தான் உலகிற்கு தேவையான 60 சதவிகித ஆக்ஸிஜனை கக்கிக் கொண்டிருக்கிறது. இந்த காட்டையும் நம் உத்தரங்களுக்கும், நம் மேஜைகளுக்கும், நம் தேவைகள் அத்தனைக்கும் பயன்படுத்த அழிக்கும் பட்சத்தில் உலகின் வெப்பம் நாலு டிகிரி உயரும், வெகு சீக்கிரத்தில்.

பெரிய நம்பர்னா கோடிக்கு மேல போனாதான் என்னும் மிதப்பில் இருக்கும் நமக்கு 4 டிகிரி என்ன செய்யும் என்று சொல்லித்தான் பார்ப்போம்...

2010 ல் ரஷ்யாவில் சூடான அனல் காற்று வீசியதில் 55,000 பேர் மாண்டனர், நாட்டினுடைய 25 சதவிகித விளை நிலங்கள் அனலில் வெந்துபோனது. நாடு 27,50,00,000 கோடி ரூபாயை இந்த ஒரே தாக்குதலில் இழந்து, நஷ்டத்தில் உழன்றது. இதில் தனிமனித பாதிப்பை சற்றே சிந்தித்துப் பாருங்கள்.

குளுமையான மாதங்கள் இல்லாமல் போய்விடும், அப்புறம் நிரந்தரமாய் நாம் “மார்கழிதான் ஓடிப்போச்சு...” என்று பாட வேண்டியதுதான். வெப்ப பூமி இன்னும் அதிக வெப்பமாகும், மழை நிலங்கள் அதிகப்படியான மழை பெறும். பாலைவனங்கள், தன் பாலையை விஸ்தரிக்கும். அப்புறமென்ன பஞ்சம், பட்டினி சகட்டுமேனிக்கு தலை விரித்தாடும்.

தற்சமயம் உணவிருந்தும் அனைவருக்கும் போய்ச்சேராத நிலையில் இருக்கும் நாம், இருக்கும் உணவை அடித்துக் கொண்டு பிரித்துக் கொள்வதில் வெகு சீக்கிரம் போய் சேர்ந்து விடுவோம்.

சரி பிரச்சனையின் தாக்கம் ஓரளவிற்கு புரிந்தது, நான் என்ன செய்ய? எனும் நம் ஒவ்வொருவருக்கும் விடையும் தெரியும்...

“மரம் வளர்ப்பு, மக்கள் தொகை கட்டுப்பாடு”

வரும் 5, 10 வருடங்களில் மரம் வளர்ப்பை நோக்கி நாம் செயல்படாவிட்டால் கோடி கோடியாய் கொட்டினாலும் நம்மால் மரங்களை மீட்டு இந்த பூமியைப் பிழைக்கச் செய்ய இயலாது என்கிறார் சத்குரு.

நாம் பசுமையாய் மாறி, உலகின் பசுமையை தொந்தரவு செய்யாமல், மக்கள் தொகையைக் கணிசமாகக் குறைப்பதே இந்தப் பிரச்சனைக்கு ஒரே தீர்வு.

எனக்கு சுனாமி வந்தால்தான் இயற்கையின் பலம் புரியும், வறுமை வாட்டினால்தான் உணவின் வலிமை என் நெஞ்சில் வலுப்பெறும், வெக்கை நோயால் பலர் செத்தால்தான் நாம் செய்து கொண்டிருப்பது அசுர வேலை என்று புரியும் என்பவர்களெல்லாம், சற்று ரிலாக்ஸ்டாக இருந்து அனுபவித்து புரிந்து கொள்ளலாம்.

சுற்றுச்சூழல் சீர்கேடு, சாபக்கேடாய் நம் கண் முன் மலர்வதற்குள், நம்மையும் காத்து நம் குழந்தைகளுக்கும் ஓரளவு வளமான பூமியை விட்டுச் செல்ல நினைப்பவர்கள், மரம் நட்டு வளர்க்கலாம், மக்கள் தொகை பெருகுவதைத் தடுக்க, தனிப்பட்ட முறையில் நம் குடும்பத்தில் நம்மால் என்ன செய்ய இயலுமோ அதைச் செய்யலாம்.

பல முறைகளும், பல தொண்டு நிறுவனங்களும் இதனை நமக்கு மிகச் சுலபமாக மாற்றி அமைத்துள்ளன. ஏன் பல பன்னாட்டு நிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் தன்னால் தனியாய் செய்ய இயலாததை இதுபோல் தொண்டு நிறுவனங்களுடன் கரம் கோர்த்து செய்கின்றன.

ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் மூலம் நாம் ஏற்படுத்திய விழிப்புணர்வின் மூலம் பல பெரிய நிறுவனங்கள் நம்முடன் கைகோர்த்துள்ளன. ஏப்ரல் 2009ம் ஆண்டு முதல் L&T ன் சென்னை மனப்பாக்கம் பிரிவு நாற்றுப்பண்ணையை பராமரித்து அசாதாரணமாக 8 லட்சம் கன்றுகளை வளர்த்துள்ளது. மேலும், 5,500 மரங்களை நட்டு, பராமரித்து வளர்த்து வருகின்றது.

சென்னையிலுள்ள மைரிஸ், மஹேந்திரா சத்யம், மும்பை ஆக்சிஸ் ம்யூசுவல் பன்ட், பெங்களூரு டெல்பி, பூனாவைச் சேர்ந்த ஆன்கோர் ஐபிஎம் போன்ற நிறுவனங்களும் நம்முடன் கைகோர்த்து பல ஆயிரம் மரங்களை நட்டு பராமரித்து வருகின்றன.

இது கார்ப்பரேட் பராமரிப்பு... ஆனால் தனிமனிதனால் செய்ய இயலாதது, தனிமனித இதயத்தில் இடம் பெறாத எந்தவொரு நற்செயலும் பயன்பெறாது, புரட்சியாய் மலராது.

தற்சமயம் தேவைப்படுவதெல்லாம் பசுமை புரட்சியல்ல, பசுமை மலர்ச்சி... நம் இதயங்களிலும் அதன் பலனாய் இவ்வுலகிலும் அதனை மலரச் செய்வோமா? நாம் வெளியிடும் கார்பன் அசுத்தங்களுக்கு பிராயசித்தமாய் நாம் ஒவ்வொருவரும் நடுவோம் 5 மரங்கள்!

உங்கள் கரம் கருப்பா, பச்சையா? பச்சையாய், பசுமையாய் மாற மற்றுமொரு அற்புத வாய்ப்பு இங்கே உங்கள் வாசலில்...

உங்களுக்காக பசுமைக் கரங்கள் திட்டம் மரம் நடும்...

உங்கள் மரம் எங்கு வளர்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். உங்கள் மரம் உயிர் பிழைக்கும் வரை 2 வருடங்களுக்கு பராமரிப்பு செய்யப்படும்.

ஒரு மரத்திற்கு ரூ.100/- மட்டுமே!

“எனக்காக மரம் நடுங்கள்” என்று வேண்டுவோர்... ‘ISHA OUTREACH’ என்று வரைவோலை/காசோலை எடுத்து
பசுமைக் கரங்கள் திட்டம், ஈஷா யோகா மையம்,
வெள்ளியங்கிரி மலைச்சாரல், கோவை - 641 114.

என்கிற விலாசத்திற்கு அனுப்பி வைக்கவும். உங்கள் மின்னஞ்சலையும் குறிப்பிட்டால் உங்கள் மரம் எங்கு வளர்கிறது என்கிற விவரம் மின்னஞ்சலில் மட்டும் அனுப்பி வைக்கப்படும்.

தொ.எண்: 94425 90081

மின்னஞ்சல்: projectgreenhands@ishafoundation.org

ஆன்லைன் மூலமாக மரம் நட விரும்புவோர்... www.giveisha.org/pgh என்கிற இணையதளம் மூலம் நன்கொடை வழங்கலாம்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1