சிவனும் பார்வதியும் பத்ரிநாத்திலிருந்து கேதார்நாத்துக்கு இடம்பெயர்ந்த காரணம்...?
சிவனும் பார்வதியும் குடியிருந்ததாக கூறப்படும் பத்ரிநாத் கோயிலை விஷ்ணு தந்திரமாக கைப்பற்றியது எப்படி என்ற புராண கதையின் சுருக்கத்தை இங்கே விளக்கியுள்ள எழுத்தாளர், பத்ரிநாத்தில் விற்பனையாகும் சாலகிராம கற்கள் பற்றியும் அதன் தன்மையை பரிசோதிக்க ஈஷா அன்பர்கள் பயன்படுத்திய சுவாரஸ்ய வழிமுறை என்ன என்பது பற்றியும் விவரிக்கிறார்!
 
 

இமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள்! - எழுத்தாளர் அஜயன் பாலா -பகுதி 11

சிவனும் பார்வதியும் குடியிருந்ததாக கூறப்படும் பத்ரிநாத் கோயிலை விஷ்ணு தந்திரமாக கைப்பற்றியது எப்படி என்ற புராண கதையின் சுருக்கத்தை இங்கே விளக்கியுள்ள எழுத்தாளர், பத்ரிநாத்தில் விற்பனையாகும் சாலகிராம கற்கள் பற்றியும் அதன் தன்மையை பரிசோதிக்க ஈஷா அன்பர்கள் பயன்படுத்திய சுவாரஸ்ய வழிமுறை என்ன என்பது பற்றியும் விவரிக்கிறார்!

திரு. அஜயன் பாலா:

இமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள்! - எழுத்தாளர் அஜயன் பாலா, writer ajayan balaநாரதர் சொல்லைக்கேட்டு விஷ்ணு தானும் சிவனை போல உலகை பரிபாலனை செய்ய வேண்டி இமயமலையில் பல இடங்களை தேடி இறுதியில் பத்ரிநாத்தை கண்டுபிடித்தார்.

அங்கு ஏற்கனவே வீற்றிருக்கும் சிவனையும் பார்வதியையும் விரட்ட வேண்டி குழந்தையாக அவதாரமெடுத்து கோவில் வாசலில் அமர்ந்து கதறியழ சிவன் எவ்வளவோ தடுத்தும் பார்வதி வெளியே சென்று அந்த குழந்தையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டார்.

சிவன் புன்னகையுடன் நான் முதலிலேயே சொன்னேனே. என் பேச்சை மீறி குழந்தை என்று நம்பி கையிலெடுத்தாய். இப்போது அனுபவிக்கிறாய் என்று விவரம் கூற பார்வதி தன் தவறை உணர்ந்தார்.

மடியில் குழந்தை ரூபத்தில் அமர்ந்த விஷ்ணு சிவனை நோக்கி ஒரு வெற்றி புன்னகை பார்க்க சிவன் பார்வதியின் அறியாமையை எண்ணி உள்ளத்துக்குள் புன்னகைத்தார்.

ஒருநாள் சிவனும் பார்வதியும் பத்ரிநாத் கோவில் வாசலில் இருந்த வெந்நீர் ஊற்றுக்கு குளிக்க சென்றனர். குளித்து முடித்து விட்டு வீடு திரும்பியபோது அதுவரை அவர்கள் தங்கியிருந்த கோவில் வாசல் பூட்டப்பட்டு கிடந்தது.

இருவரும் கதவை தட்டி தட்டிப் பார்க்க கதவு திறக்கப்படவில்லை.

சிவனுக்கு புரிந்துவிட்டது. ஆனால் பார்வதியோ குழப்பத்துடன் சிவனை ஆச்சர்யத்துடன் பார்த்தார்.

சிவன் புன்னகையுடன் நான் முதலிலேயே சொன்னேனே. என் பேச்சை மீறி குழந்தை என்று நம்பி கையிலெடுத்தாய். இப்போது அனுபவிக்கிறாய் என்று விவரம் கூற பார்வதி தன் தவறை உணர்ந்தார்.

இப்போது சிவன் முன்பு இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று அந்த இடத்தையே தன் நெற்றிகண்ணால் எரித்து சாம்பலாக்குவது.

இன்னொன்று இந்த இடமே வேண்டாம் என முடிவு செய்து வேறு இடத்திற்கு சென்று ஆட்சி செய்வது. இவற்றில் இரண்டாவதை தேர்வு செய்து இருவரும் புறப்பட்டனர். அங்கிருந்து மலைகளினூடாக நடந்தால் கேதார்நாத் 12 கி.மீ தான். இப்படியாகத்தான் சிவனும் பார்வதியும் பத்ரிநாத்திலிருந்து கேதார்நாத்துக்கு வந்து தஞ்சமடைந்தனர் என சத்குரு கூறி பத்ரிநாத்துக்கு விஷ்ணு வந்த கதையை கூறி முடித்தார்.

நீண்ட நேரமாக அங்கேயே நின்றுகொண்டிருந்த காரணத்தால் பத்ரிநாத் கர்ப்பகிரகத்திலிருந்து ஒரு குண்டு பெண்மணி வெளியேரச் சொல்லி சைகை காண்பித்தார். அது கோவில் என்பதோ புனிதமான இடம் என்பதோ அங்கு வரவேண்டி பலரும் பல நூறு மைல்கள் கடந்து வந்துள்ளார்கள் என்பதோ அந்த திபெத்திய குண்டுப் பெண்ணுக்கு தோன்றவில்லை போல. அவளைப் போல் காவலுக்கு இருந்த இன்னொரு பெண்ணிடம் எதையோ பேசி சிரித்துக் கொண்டு கைகளால் எங்களை வெளியேறுமாறு சைகை செய்து கொண்டிருந்தாள். ஒருவேளை தினசரி வாடிக்கையாகிப் போன அவளது வாழ்க்கை, அவளை இப்படி மாற்றியிருக்கலாம் என்றெண்ணியப்படி வெளியே வந்தோம்.

பிரகாரத்தின் வெளியே மண்டபத்தில் ஏதோ பஜனை சப்தம் கேட்டு அருகில் போனபோது அங்கு நான் கண்ட காட்சி வினோதமாகவும் அவ்விடத்தை விட்டு அசையவிடாமலும் செய்தது. மண்டபத்தில் மையமாக ஒரு வயது முதிர்ந்த பெண்மணி அமர்ந்திருக்க அவர் அருகே இருந்த ஒலி நாடாவின் வழி ஒரு உள்ளம் உருகும் குரலில் கிருஷ்ணா பஜன் ஒலிக்க, கண்கள் மூடி ஆழ்நிலையில் அதனை கோரஸாக திரும்ப கூறியபடி பலரும் லயித்திருந்தனர். அனைவருமே வெளிநாட்டினர். அரக்கு மற்றும் மஞ்சள் நிறத்தில் உடுத்தியிருந்தனர். ஆனாலும் அனைவரது முகங்களிலும் கருணையும், அன்பும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. சுற்றி வட்டமாக அமர்ந்திருப்பவர்கள் ஒருவர் கையை இன்னொருவர் பற்றியபடியோ அல்லது ஒருவர் தோளில் இன்னொருவர் சாய்ந்தபடியோ உயிர்சக்தியால் உள்ளம்பிணைப்பு கொண்டிருக்க அமர்ந்திருந்தனர். ஒட்டுமொத்தமாக அந்த இடம் முழுக்கவும் ஒருவித ஆற்றல் மின்சாரம் போல பரவிகொண்டிருக்க பலரும் அவர்களோடு அமர்ந்தோ அல்லது வெறும் வேடிக்கை பார்த்தோ தங்களையும், அந்த ஆற்றலோடு சங்கமித்துக் கொண்டிருந்தனர். நானும் அவர்களோடு ஒருவனாக அமர்ந்து கண்மூடி இசையில் லயிக்கத் துவங்கினேன்.

பின் குறிப்பிட்ட இசை முடிந்து அனைவரும் அப்படியே அசையாமல் அமர்ந்துகிடக்க நான் அருகிலிருந்த வெள்ளைக்கார பெண்ணிடம் பேச்சு கொடுத்தேன். அவர்கள் ஜெர்மனியிலிருந்து வந்திருப்பதாகவும், அங்கிருக்கும் ஒரு ஆன்மீக குருவின் ஆசிரமத்திலிருந்து வந்திருப்பதாகவும் கூறினார். அந்த பாடலை பாடியவர் பெயர் குருமாயி என்றனர். இதற்கு முன் நான் அப்படி ஒரு இசையைக் கேட்டதில்லை. ஈஷா பயணத்தில் எங்களோடு வந்த பத்திரிக்கையாளர் மஞ்சுளா ரமேஷ் அவர்களும் அந்த இசையால் ஈர்க்கப்பட்டு என்னிடம் அவர்களது இணையமுகவரியை வாங்கி வைத்துக் கொள்ளும்படி கூறினார். நானும் வாங்கிக்கொண்டு வெளியே வந்தேன்.

என்ன அண்ணா வீட்டுக்கு சாலகிராமம் வாங்கிட்டீங்களா?

குரல் கேட்டு திரும்பியபோது அங்கு வாசுகி அக்காவும், அவரது கணவர் ராமகிருஷ்ணாவும் நின்று கொண்டிருந்தனர். எங்கள் பேருந்தின் கலகலப்புக்கு இவர்களும் ஒரு முக்கிய காரணகர்த்தா.

வாசுகி அக்கா மிக நல்ல பாடகி. அவரது கணவரோ நன்றாக பக்கவாத்தியம் போடுவார். மனைவி மட்டுமல்லாமல் பேருந்தில் யார் பாடினாலும் வஞ்சனையில்லாமல் கைகளை தட்டி உற்சாகப்படுத்துவார். உடன் அவ்வப்போது அவரும் தன்குரல் வளத்தை காண்பித்து மனைவிக்கு நான் சளைத்தவனில்லை என நிரூபிப்பார். நகைச்சுவையுணர்வு நிரம்பிய அவருடைய பேச்சு படு சுவாரசியம். இப்போது அவர்கள் சாலகிராமம் பற்றி கேட்டபோதுதான் எனக்கு வீட்டிலிருந்து புறப்படும்போது சாலகிராமம் வாங்கி வரும்படி என் அம்மா விரும்பி கேட்டது நினைவுக்கு வந்தது.

என் முன் நின்று கொண்டிருந்த அவர்கள் இருவரிடமும் ஆமாம் வாங்க வேண்டும் போகலாமா என்றேன்.

பத்ரிநாத்தின் விசேஷம் அங்கிருக்கும் அங்காடிகள். ருத்ராட்சம், ஸ்படிகம் மற்றும் சாலக்கிராமக்கல் ஆகியவற்றுக்கு பத்ரிநாத்தான் விசேஷமான இடமாம். பத்ரிநாத் கோவிலின் மூலவரே ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சாலகிராமக்கல் என்பதால் இங்கு கிடைக்கும் சாலகிராமகல்லுக்கு விசேஷம் அதிகம். விஷ்ணுவின் அம்சம் என நம்பப்படுகிறது. எங்களுடன் தேனி செந்தில் அண்ணா சேர்ந்துகொள்ள அனைவரும் கடைக்குள் புகுந்தோம். இதுபோன்ற அங்காடிகளில் போலிகளும் இருக்கும் என்பதால் எது உண்மையான கல் எது போலி என தரம் பிரித்து வாங்குவதில் எங்களுக்குள் தடுமாற்றம் உண்டாக இப்போது உதவிக்கு வந்தார் சேலம் மகேஷ்.

நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஒரு நிமிடத்தில் நான் உங்களுக்கு எது உண்மையான கல் எது போலி என கண்டுபிடித்து சொல்கிறேன் என சொன்ன கையுடன் தன் கழுத்திலிருந்த ருத்ராட்ச மாலையை கழற்றி வலக்கையில் உயர்த்தி பிடித்துக்கொண்டார். அங்காடிக்காரர் எங்கள் முன் நீட்டிய சாலகிராமக்கல்லை வாங்கி அவர் தன் இடக்கையின் உள்ளங்கையில் வைத்தப்படி ஏற்கனவே பிடித்த ருத்ராட்சத்தின் கீழே அதன் மேலே படாதவாறு கொண்டு வந்தார். இப்போது இந்த ருத்ராட்சம் வலம் இடமாக சுற்றினால் அதனுள் உயிர்சக்தி நிரம்பியுள்ளது என்பது உண்மை. இடப்பக்கம் சுற்றினால் அது போலியான கல் என்று கூறியதோடு இப்போது அதனை செய்து காட்ட தயாராக, எல்லோரது பார்வையும் ருத்ராட்சத்தின் மீதே குவிந்திருந்தது. அதற்குள் அங்கு இன்னும் சிலரும் சூழ அனைவருமே அதனையே பார்க்கத் துவங்கினர்.

ஒருசில நிமிடங்கள் வரை ருத்ராட்சத்தில் எந்த அசைவுமில்லை. கடைக்காரரோ அலட்சியமாக அதனை பார்த்துக்கொண்டிருந்தார்.

சிலநிமிடங்கள் யாரும் சத்தம் போடாமல் வைத்தகண் வாங்காமல் ஆங்கில படத்தின் இறுதி காட்சி போல பார்த்துக் கொண்டிருக்க, ருத்ராட்சம் மெல்ல இடம் வலமாக தானாக சுழல துவங்கியது.

அதை பார்த்த அனைவராலும் சட்டென அதனை நம்ப முடியவில்லை. கடைக்காரர் முகத்தில் புன்னகை. தான் விற்பது அசலான பொருள் என நிரூபணமானதால் உண்டான மகிழ்ச்சி.

சுற்றியிருந்தவர்களில் சிலருக்கோ எப்படி ருத்ராட்சமாலை தானாக சுற்றும் என ஆச்சர்யப்பட்டனர்.

இன்னும் சிலரோ இல்லை. இவர் தான் கையால் சுற்றுகிறார் எனக்கூற, அப்படி கூறியவரை அழைத்து மகேஷ் அவர் கையில் அந்த ருத்ராட்ச மாலையையும் சாலகிராமத்தையும் கொடுத்து செய்து பார்க்கும்படி கூற இப்போது அவர் அதேபோல சாலகிராமத்தை உள்ளங்கையில் பிடித்து ருத்ராட்சத்தை இன்னொருகையால் உயர்த்திப் பிடித்தார்.

அனைவரது பார்வையும் இப்போது மீண்டும் அங்கு குவியத்துவங்க நானும் அதனையே பார்க்க துவங்கினேன். ருத்ராட்சமாலை சற்று நேரம் அமைதியாக நின்று கொண்டிருக்க நான்தான் அப்பவே சொன்னேன்ல என ஒருவர் சிரித்தப்படி குரல் உயர்த்தினார்.

அவர் அப்படி சொல்லி முடிக்கும் முன்பே ருத்ராட்சம் மெல்ல அசையத் துவங்கியது. மிக நிதானமாக அது முன்பு போலவே இடம் வலமாக சுற்றியது. முன்பை விட வேகமாக.

வரும் பதிவில், ருத்ராட்சம் பற்றி சில தகவல்களை பகிர்ந்துகொள்ளும் எழுத்தாளர், இந்தியாவின் கடைசி கிராமம் மானாவிற்கு சென்ற அனுபவங்களையும், இந்தியாவின் கடைசி டீக்கடையில் தான் பெற்ற பெருமை என்ன என்பதையும் கூறுகிறார்!


குறிப்பு: ஈஷாவுடன் இமாலயம் செல்ல வாருங்கள். வரும் செப் 15 அன்று துவங்கவுள்ள இந்த இமாலயப் பயணத்தில் நீங்களும் பங்குகொள்ள முன்பதிவுகள் அவசியம்.

தொடர்புக்கு: 94 88 111 333, 94 88 111 555

வலைதளம்: www.sacredwalks.org

 

'இமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள்! - எழுத்தாளர் அஜயன் பாலா' தொடரின் பிற பதிவுகள்

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1