உலக மக்களின் ஆரோக்கியத்திற்கு சமீபத்தில் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் நோய்களில் முக்கியமானது, சர்க்கரை வியாதி! இந்நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உலக சுகாதார தினத்தில் நிகழ்ந்த ஈஷா சிறப்பு மருத்துவ முகாம் குறித்து சில வரிகள்!

உலக அளவில் சுமார் 347 மில்லியன் மக்கள் சர்க்கரை வியாதி என்று சொல்லப்படும் நீரிழிவு நோய்க்கு ஆளாகியுள்ளனர். உடல் உழைப்பு குறைந்துவிட்டது மற்றும் உடற்பருமன் அதிகரிப்பு போன்ற காரணங்களால், உலக அளவில் அதிகமாக பரவிவரும் நோயாக சர்க்கரை வியாதி இருப்பதை நாம் பார்க்கமுடிகிறது. 2030ஆம் ஆண்டில் நீரிழிவு நோய் 7வது பெரிய உயிர்க்கொல்லும் நோயாக மாறியிருக்கும் என கணிக்கப்படுகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உலக சுகாதாரத்தை முன்னிட்டு (ஏப்ரல் 7), ஆலாந்துறை ஈஷா கிராம மருத்துவமனை மற்றும் Dr.மோகன் அவர்களின் நீரிழிவு சிறப்பு மையம் இணைந்து, இலவச சிறப்பு மருத்துவ முகாமை நடத்தின. காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை நிகழ்ந்த இந்த முகாமில், சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.

உலக சுகாதார தினத்தில் இந்த சர்க்கரை வியாதி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், இந்த மருத்துவ முகாம் அமைந்தது. அதுமட்டுமல்லாமல், அனைவருக்கும் இலவச இரத்த சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டதோடு, சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

நீரிழிவு நோயின் தாக்கத்தை குறைப்பது & வரும்முன் காப்பது:

  • ஆரோக்கியமான உடல் எடையை சீராக தக்கவைத்து வருதல்
  • சுறுசுறுப்பான உடல் செயல்பாடுகள் - அனைத்து நாட்களிலும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களுக்கு, முறையான தீவிரமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுதல். உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க கூடுதலான செயல்பாடுகள் தேவைப்படும்.
  • யோகப்பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
  • ஒரு நாளுக்கு 3 அல்லது 5 முறை பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொண்டு, சர்க்கரை உணவுகள் மற்றும் கெட்ட கொழுப்புகளைத் தவிர்த்து, நல்ல கொழுப்புகொண்ட உணவுப்பொருட்களை உட்கொள்ளுதல்; வெள்ளை அரிசி உணவுகளைத் தவிர்த்து சிறுதானிய உணவுகள், பச்சைக்காய்கறிகள் மற்றும் பிற பாரம்பரிய உணவுமுறைகளை முறையாகக் கடைப்பிடித்தல்
  • புகைப்பிடித்தலை முற்றிலும் தவிர்த்தல் - புகைப்பிடித்தல் இதயக்குழாய் நோய்கள் (cardiovascular diseases) வர அதிகம் காரணமாக அமைகிறது.

மேற்கூறிய சில ஆலோசனைகளைக் கடைப்பிடித்தால் சர்க்கரை வியாதி இல்லாத உலகத்தை நாம் சாத்தியமாக்கலாம்!

முகாமில் வழங்கப்பட்ட பிற உதவிகள்

ஏப்ரல் 7ஆம் தேதி நிகழ்ந்த முகாமில் இலவச பல் மருத்துவமும் வழங்கப்பட்டது. இலவச ‘பல் எக்ஸ்-ரே’ போன்ற பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கான பரிசோதனையும், தேவைப்படுவோருக்கு குறைந்த செலவில் மேல்சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மேலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் தொடர்பான பொதுவான பிரச்சனைகளுக்கும் இலவச பொது மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தேவைப்படுவோருக்கு தகுந்த மருத்துவமனைக்கு உரியவகையில் பரிந்துரை செய்யப்பட்டது. பொதுமருத்துவத்திற்கான மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

ஈஷா கிராம மருத்துவமனையின் சிறப்பம்சங்கள்

கிராமப்புற ஏழை மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் ஈஷா கிராம மருத்துவமனைகள் நிறுவப்பட்டுள்ளன. பொதுமருத்துவம், சிறப்பு பல்மருத்துவம், இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைக் கூடம், இ.சி.ஜி. வசதி போன்ற பல்வேறு மருத்துவ வசதிகள் இங்கே வழங்கப்படுவதோடு, குறைந்த விலையில் மருந்துகள் வழங்கப்படுகின்றன. ஈஷாவிற்கு அருகிலுள்ள ஆலாந்துறையில் அமைந்துள்ள ஈஷா கிராம மருத்துவமனை காலை 9 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வருகிறது.

தொடர்புக்கு: 94425 90021, 0422 2651298