Day Three


24 Jun - 9.01pm

'யோகீஷ்வராய மஹாதேவாய' - சத்குருவின் காந்தக் குரலில் நிகழ்ச்சி அரங்கம் முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது பாடல்...

10,069 பங்கேற்பாளர்களும், 2000 தன்னார்வத் தொண்டர்களும் சத்குரு நடந்து வரும் அந்த நடைமேடையை நோக்கி கூப்பிய கரங்களுடன் கண்களில் ஆனந்தக் கண்ணீரோடு, நெஞ்சில் ஆழ்ந்த அமைதியோடு நகர்கிறார்கள். அனைவருடனும் சத்குரு, கூப்பிய கரங்களுடன் கண்கள் ஈரமாக...

முதல் முறையாக தன்னார்வத் தொண்டு புரிவதற்காக பாண்டிச்சேரி வகுப்புக்கு சென்னையில் இருந்து வந்திருந்த திருமதி. மஹேஷ்வரி, இங்கு நடந்த நிகழ்வுகளைப் பார்த்து பிரமித்துப் போய் பகிர்ந்து கொள்கிறார்.

"இங்கு வருவதற்கு முன்பு சந்தேகங்களின் குவியல்களாக இருந்த மக்களின் இதயங்களை சத்குருவின் சக்திவட்டம் ஆட்கொண்டுவிட்டது.

பெற்ற தாயால் மகனை மாற்ற முடியவில்லை. ஆசிரியரால் மாணவர்களை மாற்ற முடியவில்லை. முதலாளிகள் தொழிலாளர்களை திருப்திபடுத்த முடியவில்லை. சத்குரு என்ற ஒரு தனிமனிதர் இந்த 2 1/2 நாட்களில் 10,069 மக்களை எந்தவித போதனையும் இன்றி அவர்களது வாழ்வின் அடிப்படையையே மாற்றியது எப்படி?

ஏன் சத்குருவை விளம்பரம் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்டவர்கள் அனைவரும் சத்குரு போன்ற ஒரு மனிதரை உலகம் முழுவதும் தெரியப்படுத்தாவிட்டால், அது நமது தலைமுறையின் குற்றமாகிவிடும் என்று இப்போது கூறுகிறார்கள்.

சத்குரு அப்படி என்ன செய்தார்? பித்தளையை தங்கமாக்கினாரா? காற்றிலிருந்து விபூதி எடுத்தாரா? எதுவும் இல்லை. பிறகு அப்படி என்னதான் நடந்தது?

ஒவ்வொருவரையும் உள்நிலையில் இயல்பாக மலரச் செய்தார்.

இது வார்த்தைகளால் விவரிக்க முடியாத பரிமாணமாக இருந்தாலும் கடினமான வழி அல்ல. விருப்பதோடு வந்து அமர்ந்தால் சாதாரண மனிதரும் எளிதில் இதை உணர்ந்து செல்ல முடியும். என்று கண்ணீர் மல்க நம்மிடம் பகிர்ந்து கொண்டு, உள்ளே செல்கிறார், தானும் சத்குருவுடன் சேர்ந்து கொண்டாட்டத்தில் பங்கு கொள்ள...

இந்த வகுப்பின் வெற்றிக்கு, ஈஷா-பாண்டிச்சேரி மக்களின் அன்பும் ஈடுபாடும்தான் காரணம் என்று மீண்டும் மீண்டும் சொல்லி பெருமிதம் அடைந்த சத்குரு, இவ்வளவு சிறிய நகரில் 10,000திற்கும் மேற்பட்ட மக்களை ஒரே இடத்தில் பிசிரில்லாமல் ஒருங்கிணைத்து அற்புதம் நிகழ்த்தி இருக்கிறார்கள் இவர்கள் என்றும் பாராட்டினார்.

"நீங்கள் திறந்த நிலையில் இருந்தால் ஒவ்வொரு ஷணமும் உங்களுடன் இருப்பேன்," என்ற சத்குருவின் சத்திய வார்த்தைகள் மக்கள் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது...

பிரிய மனமில்லாமல் தன்னை சூழ்ந்துக் கொண்ட கூட்டத்திடம் கை கடிகாரத்தை காட்டி பிரிந்து சென்றார் சத்குரு!
பாண்டிச்சேரியில் அடித்த இந்த ஆனந்த அலை, அடுத்து நாகர்கோவில் நோக்கி செல்ல தயார் ஆகிறது...

24 Jun - 7.12pm

 

முதல் நாள்...
இவர் யாரென தெரியவில்லை

இரண்டாம் நாள்...
பேச்சில் ஈர்ப்பவரோ??

மூன்றாம் நாள்
இதென்ன விந்தை
தாயின் அரவணைப்பா
பல பிறவி பிணைப்பா
துடிக்கின்ற உயிரை தொட்டு விட்டபின்
பிரிந்திட மனமில்லை
விட்டு விட்டு செல்லாதீர்கள் !!

அன்பின் வலியில் அரங்கம்…

 

24 Jun - 6.43pm

புதிய மக்கள் முன்னிலையில் புதிய வெளியீடுகள்...

இந்த பாண்டிச்சேரி வகுப்பில், சில புது புத்தகங்கள், டிவிடிக்கள் மற்றம் 'Chanting Box' வெளியிடப்பட்டது.

நம் கலாச்சாரத்தில் பாரம்பரியமாக இருந்து வரும் பல்வேறு சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்களுக்குப் பின்னால் இருக்கும் அறிவியல்பூர்வமான உண்மைகளை சத்குரு அவர்கள் விளக்கும் 'சம்பிரதாயங்கள் எதற்காக?'

சத்குரு அவர்களுடன் பிரபலங்கள் உரையாடும் நிகழ்ச்சிகளின் வரிசையில் 'மதவாதம்' என்ற தலைப்பில் தமிழ் திரைப்பட இயக்குனர் திரு. எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் 'குலதெய்வ வழிபாடு அவசியமா?' என்ற தலைப்பில் முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களின் உரையாடல்கள்...

சமீபத்தில் கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற 'மஹாபாரதம்' நிகழ்ச்சியில் சத்குரு அவர்கள் விவரித்த கர்ணனின் கதை தமிழ் சப்டைட்டிலுடன் 'Karna - The Fate's child' என நான்கு புதிய டிவிடிக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சத்குரு அவர்களின் குரலில் 'பிரம்மானந்த சொரூபா' மற்றும் 'சம்போ சிவ சம்போ' உச்சாடனங்களை தொடர்ந்து பல மணி நேரம் ஒலிக்கச் செய்யும் 'Chanting Box' அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும் பள்ளிக் குழந்தைகளுக்குத் தேவையான நோட்டுப் புத்தகங்களும் ஈஷா புகைப்படங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

24 Jun - 5.57pm

ஈஷாவும் பாண்டிச்சேரியும் - ப்ளாஷ்பேக் 3!

ப்ளாஷ்பேக் 2ல் நாம் படித்தது போன்றே, எப்போதும் எதிர்ப்பார்ப்புகளை மீறி நம்மை பிரமிக்க வைப்பதே பாண்டிச்சேரி தன்னார்வத் தொண்டர்களின் தனிச்சிறப்பு.

சமீபத்தில் நடைபெற்ற ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் சத்சங்கத்தில் சத்குரு அவர்கள், "இதற்கு அடுத்த கட்டமாக இங்கிருக்கும் மக்கள் ஈஷா யோகாவை பெறும்விதமாக நானே நேரிடையாக இங்கு ஈஷா யோகா வகுப்பு நடத்த முடிவு செய்திருக்கிறேன். உங்களால் எத்தனை பேரை இந்த வகுப்பில் கலந்து கொள்ளச் செய்ய முடியும்?" என்று கேட்டார்.

"பத்தாயிரம் பேர், சத்குரு," என்று பதில் வந்தது நம் பாண்டிச்சேரி தன்னார்வத் தொண்டர்களிடமிருந்து. அதற்கு சத்குரு, "ஐயாயிரம் பேரை கொண்டு வந்தீர்கள் என்றால் போதும். அத்தனை மக்கள் கலந்து கொள்வதே மிகப் பெரிய ஆன்மீகத் திருவிழாவாக இருக்கும்," என்று கூறினார்.

அன்று அவர்கள் சொன்ன சொல்லை இன்று நிறைவேற்றிக் காட்டிவிட்டார்கள்.

இதெல்லாம் இரவு பகலாக அயராது உழைக்கும் தன்னார்வத் தொண்டர்களின் சாதனைதான் என்று குறிப்பிடும்போது அதை சற்றும் ஏற்காமல், “நாங்கள் ஒன்றும் செய்யவில்லை, இதெல்லாம் சத்குருவின் அருளில்தான் நடக்கிறது,” என்று அன்புடன் கூறுகிறார்கள் நம் பாண்டிச்சேரி-ஈஷாவினர்!

ஈஷா என்பது ஒரு அமைப்பல்ல, அது மனிதர்கள்தான் என்று சத்குரு சொல்வது இங்கே நினைவிற்கு வருகிறது. இம்மனிதர்களை பார்க்கும்போது இவை எத்தனை உண்மையான வார்த்தைகள் என்றே சொல்ல தோன்றுகிறது.

24 Jun - 5.31pm

தீட்சைக்கு பின் இவர்கள் என்ன சொல்கிறார்கள்...

“வாழ்க்கைல ஒரு தெளிவு வந்திருக்கு, இனிமே கோயிலுக்கு போய் அத கொடு இத கொடுன்னு கேட்காம ஈடுபாட்டோட செயல் செய்யப் போறேன்,” என்று உறுதி எடுக்கிறார் கடலூரை சேர்ந்த சுகுணா.

“நம்ம கலாச்சாரத்தில இருக்கற விஷயத்தையெல்லாம் நான் மூடநம்பிக்கைனு நெனச்சேன். சத்குரு அதையெல்லாம் மாத்தி நம் கலாச்சாரத்தின் பெருமையை எனக்கு புரிய வைத்துவிட்டார்,” என்று நன்றி பொங்க கூறுவது பாண்டிச்சேரியை சேர்ந்த M.tech மாணவி செண்பகம்.

“நான் கர்ப்பமாக இருக்கிறேன். எனக்கு இது ஐந்தாவது மாதம். இந்த வகுப்புக்கு வந்தா குழந்தையுடைய மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று ஒரு தன்னார்வத் தொண்டர் சொன்னார். அதனால்தான் நான் இந்த வகுப்புக்கு வந்தேன்.

என்னால வீட்ல கால் மணி நேரம் கூட தொடர்ந்து உட்கார முடியாது. நான் இங்க எப்படி நாள் முழுக்க உட்கார்ந்திருக்கேன்னு எனக்கே ஆச்சர்யமா இருக்கு.

சத்குரு தீட்சை கொடுக்கற சமயத்தில என் உடம்பெல்லாம் அதிர்வை உணர்ந்தேன். சத்குரு கஞ்சீரா வாசிசப்ப ஒரு கணம் என் குழந்தை நெகிழ்ந்ததை என்னால உணர முடிந்தது,” என்று உணர்வு பொங்க கூறுகிறார் பாண்டிச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த தனவதி.

இவர் பகிர்ந்துக் கொண்டதற்குப் பிறகு நடந்த அடுத்த வகுப்பில் சத்குரு குழந்தை பெறுவதைப் பற்றி பேசினார். "குழந்தை பெறுவது என்பது ஒரு இனப்பெருக்க செயல் அல்ல, இது அடுத்த தலைமுறையை உருவாக்கும் செயல். அடுத்த தலைமுறை நம் தலைமுறையை விட உயர்வாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்கள் ஷாம்பவி மஹா முத்ரா பயிற்சி தொடர்ந்து செய்ய வேண்டும்,” என்றார். என்ன ஒரு பொருத்தம்!!

24 Jun - 4.32pm

மக்கள் சத்குருவை பற்றிய புத்தகங்களையும், ஈஷா காட்டுப்பூவையும் ஆர்வமாக கேட்டு வாங்குகிறார்கள்.

“சத்குருவுடன் சத்சங்கம், ஒரு விநாடி புத்தர், ஈஷா ருச்சி புத்தகம், லிங்கபைரவி போட்டோ, சத்குருவின் குரலில் CHANTING BOX, ஆகியவற்றை மக்கள் அதிகமாக வாங்கிச் செல்கின்றனர்.

வகுப்பில் இப்போது ஓடிக் கொண்டிருக்கிறதே அந்த பாட்டு சிடி இருக்கிறதா என்று மக்கள் ஆர்வமாக கேட்கிறார்கள், லிங்கபைரவி பாடல்கள் அடங்கிய “ஏ தேவி” சி டி முழுமையாக தீர்ந்துவிட்ட்து, தற்போது வருபவர்களிடம் இல்லை என்று சொல்லி அனுப்புகிறேன்“ என்று மதுரையை சேர்ந்த south zone stockist செந்தில் அண்ணா கூறுகிறார்

மானசரோவர் கயிலாய யாத்திரை ஸ்டாலில் மக்கள் மிகவும் ஆர்வமாக விவரங்களை கேட்டு செல்கின்றனர். சுமார் 200 பேர் தங்கள் அடுத்த கயிலாய யாத்திரைக்கு தகவல் சொல்ல சொல்லி பெயர் கொடுத்திருக்கின்றனர்.

24 Jun - 2.58pm

இரண்டாம் நாள் பயிற்சியிலேயே பல மாற்றங்களை உணர்ந்த பங்கேற்பாளர்களின் பகிர்வுகள்...

“எனக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்திருப்பதால் நான் வெகு நாட்களாக முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தேன். நேற்று இரவு நான் ஆழ்ந்து தூங்கினேன். இன்று தான் என் வாழ்வில் முதல் முறை அலாரம் இல்லாமல் எழுந்திருக்கிறேன். இவ்வளவு நேரம் தொடர்ந்து உட்கார்ந்திருந்தும் எனக்கு எந்த அசௌகரியமும் இல்லை. என் முதுகுவலியிலிருந்து விடுதலை ஆனது போல் உணர்கிறேன்,” கூறுகிறார் பாண்டிச்சேரியை சேர்ந்த இல்லத்தரசி அபர்ணா.

“மைக்ரைன் (migraine) தலைவலியால் அவதிப்பட்டு வந்த நான், இன்று காலை யோகப் பயிற்சி செய்தவுடன் புது ரத்தம் பாய்ந்தது போல் உணர்ந்தேன். தலைவலி போய் விட்டது” கள்ளக்குறிச்சி அரசு பள்ளியில் கணித ஆசிரியையாகப் பணிபுரியும் அன்புமதி ஆச்சர்யத்துடன் கூறுகிறார்.

"இந்த யோகா பண்ணுவது எனது உடலை நானே கவனிப்பது போல் இருக்கிறது, அதுமட்டுமல்லாமல் இங்கே நடக்கும் ஒவ்வொரு செயலும் மிகக் கச்சிதமான முறையில் நடப்பதைப் பார்க்க அருமையாக இருக்கிறது. மற்றும் தன்னார்வத் தொண்டர்களின் ஈடுபாடு ஆச்சர்யத்தை கொடுக்கிறது, மற்ற இடங்களைலெல்லாம் காசு கொடுத்தால் கூட இத்தனை ஈடுபாட்டோடு செயலாற்ற மாட்டார்கள்" - சுமித்ரா, தட்டான்சாவடி.

24 Jun - 2.54pm

ஷாம்பவி மஹாமுத்ரா தியான தீட்சை..

போதனை அல்ல இது..
வேதனை போக்கிடும் மந்திரம் அல்ல
கற்றுக்கொடுப்பது அல்ல
கற்றுக் கொள்வதும் அல்ல - அறியாமை
விட்டு விடுதலை ஆகிட குருவிடம் இருந்து பெற்றுக் கொண்ட விதை
கண்டதோ உண்மையின் காட்சி, கண்களோ மூடிய நிலையில்
குருவின் கருணையில் வெடித்திடும் பேரானந்தம்
விவரிக்க வார்த்தைகள் இல்லை…

24 Jun - 12.31pm

தீட்சைக்காக காத்திருக்கிறார்கள்...

இரண்டு நாட்களாக சத்குரு பேசி புரிய வைத்த செய்திகளும், பேசாமல் புரிய வைத்த செய்திகளும், சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசையும், தன்னார்வத் தொண்டர்களின் செயல்களும் பங்கேற்பாளர்களை ஷாம்பவி மஹாமுத்ரா தியானத்திற்கான தீட்சைக்கு தயார்படுத்தியுள்ளது...

நான்கு மாதங்களாக பாண்டிச்சேரியெங்கும் நடைபெற்ற தன்னார்வத் தொண்டர்களின் மகத்தான செயல்கள் இந்த சில நிமிடங்களுக்காகவே...

இவர்கள் தியானலிங்க பிரதிஷ்டை தினத்தில் தீட்சை பெறப் போவது மற்றுமோர் சிறப்பு.

பங்கேற்பாளர்கள் சத்குருவின் அருள் மடியில்.

24 Jun - 11.16am

ஈஷாவும் பாண்டிச்சேரியும் - ப்ளாஷ்பேக் 2!

2010 ஆம் ஆண்டு சத்குரு அவர்கள் நடத்திய ஆனந்த அலை சத்சங்கத்தின் போது அதற்கான செயல்பாடுகளில் தன்னார்வத் தொண்டர்களின் அர்ப்பணிப்பு இன்றளவும் மறக்க முடியாததாகவே இருந்து வருகிறது.

நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்த மைதானம் பெரிய குப்பை மேடாக இருந்தது. தன்னார்வத் தொண்டர்கள் அந்த இடத்தை மளமளவென்று சுத்தம் செய்தனர். ஆனால் நிகழ்ச்சி நடப்பதற்கு முந்தையநாள் பெரும் காற்றும் பேரிடியுமாக மழை கொட்டித் தீர்த்தது.

ஒரே நாளில் 700 லாரி லோடு மணல் அடித்து சேறும் சகதியும் குப்பையும் கூளமுமாக இருந்த அந்த இடத்தை 30,000 மக்கள் ஆனந்தத்தை அற்புதமாய் அனுபவிக்கும் இடமாக மாற்றினர் பாண்டிச்சேரி-ஈஷாவினர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இன்று பாண்டிச்சேரியில் எந்த ஒரு பெரிய அரசியல் கட்சிக் கூட்டமோ அல்லது மாநாடோ நடந்தால் அது அந்த மைதானத்தில் நடைபெறும் வகையில் முதன்முதலாக தளம் அமைத்துக் கொடுத்தது பாண்டிச்சேரி-ஈஷா தான்.

24 Jun - 7.53am

சத்குரு வருவதற்காக மேடை தயாராகிக் கொண்டிருக்கிறது.

இந்த வகுப்பிற்காக விடுமுறை கிடைக்காததால் புதன் இரவு மற்றும் வியாழன் பகல் என்று தொடர்ந்து 24 மணி நேரம் வேலை செய்து வெள்ளியை விடுமுறை நாளாக்கி விட்டார் சென்னை வேளச்சரியை சேர்ந்த வெண்ணிலா அக்கா.

Sitel India ல் பணிபுரியும் இவர் எந்த துறையில் தன்னார்வத் தொண்டு செய்ய வேண்டும் என்று கேட்கும் போது துப்புரவு துறையை தேர்ந்தெடுத்தார்.

இங்கு வேலை அதிகம் ஆனால் தன்னார்வத் தொண்டர்கள் மிகவும் குறைவு.

எனக்கு சுத்தம் செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட இடம் ஒதுக்கப் பட்ட்து. இந்த ஜமக்காளத்தை எல்லாம் எப்படி தூக்கப் போறோம்னு நினச்சேன். ஆனால் எப்படியோ வேலை நடந்து விட்டது. கொஞ்சம் நேரம் விட்டா மைதானத்ல மலை மாதிரி குப்பை சேர்ந்து விடும். தொடர்ந்து ஓய்வில்லாமல் சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். குப்பை தொட்டியையும் அடிக்கடி காலி செய்து கொண்டே இருக்க வேண்டும். 12 மணிக்கு தூங்க போனா காலைல 2 மணிக்கு எழுந்துக்கற மாதிரி இருக்கு.

மற்றவர் சாப்பிட்ட தட்டை எடுத்துப் போடுகிறோம் என்ற உணர்வே இல்லை. மக்கள் குப்பை போடும் போது எனக்கு கோபமே வரவில்லை. நான் வீட்டில் இது போன்ற வேலைகள் செய்ததே கிடையாது.

எனக்கு மனம் மிகவும் நிறைவாக இருக்கிறது. உடலில் வலி இருந்தாலும் அது எனக்கு பெரிதாகப் படவில்லை.

ஆனால் ஒரே ஒருமுறை நான் நிகழ்ச்சி நடக்கும் ஹாலுக்குள் நுழைய அனுமதி கிடைக்காதா என்று ஏங்கினேன்.

இன்று காலை என்னை சத்குரு அமரும் மேடையை சுத்தம் செய்ய அழைத்தார்கள். இந்த பிறவி பயனை அடைந்தது போல் உணர்ந்தேன். இது எனக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியம். சத்குரு அமரும் மேடையில் கால் வைக்க எனக்கு மனமில்லை. நான் மண்டியிட்டு நின்று கொண்டே சுத்தம் செய்தேன். சத்குருவின் பாதம் படும் இந்த இடத்தில் அவரது கால்களை எந்த கல்லும் குத்தி விடக்கூடாது என்பதில் நான் ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து சுத்தம் செய்தேன்,“ கண்களில் கண்ணீர் பெருக்கோடு பகிர்ந்து கொள்கிறார்.

இது போன்ற பல தன்னார்வத் தொண்டர்களின் அர்பணிப்பிலும் ஆனந்தக் கண்ணீரிலும் இன்றைய தீட்சை நாள் துவங்குகிறது.

Day Two


23 Jun - 7.39pm

நாளை இறுதி நாள்...

“நேத்து மாலை அம்மாவுக்கு ரொம்ப காய்ச்சல், வகுப்பு முடிந்து வரும் போது காய்ச்சல் குணமாகி அம்மா ஒரு குழந்தை போல் வந்தார். இந்த மண்டபத்தை வெளியில் இருந்து பார்க்கும் போது, எனக்கு வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வமாக உள்ளது.” நிகழ்ச்சி முடிந்து கிளம்பும் தன் அம்மாவை அழைத்துப் போக வந்திருந்த குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த சிந்தியா.

சென்னை நுங்கம்பாக்கத்திலிருந்து வந்து வகுப்பில் கலந்து கொண்ட பங்கேற்பாளர் திரு. ராஜேந்திரன் அவர்கள் “நான் என்ன சொல்றது, கண் கலங்குது, பேரானந்தம்னு சொல்லூவாங்களே அத நான் உணர்ந்தேன். பல கோயில்களுக்கும் பல ஆன்மீகத் தலங்களுக்கும் போயிருக்கேன், ஆனா நான் இது போல எதையும் உணர்ந்ததில்லை. எனக்கு தன்னார்வத் தொண்டு செய்ய வேண்டும் என்று ஆவலாக இருக்குது. இனி நான் வேறெங்கும் செல்லப் போவதில்லை,” என்றார்.

மூன்று நாள் வகுப்பில் இரண்டாம் நாள் வகுப்பே பலருக்கு நெஞ்சை தொடுவதாய் அமைந்திருக்கிறது. நாளை வகுப்புடைய இறுதிக் கட்டம், மக்கள் மனதில் பெருத்த எதிர்பார்ப்பையும், தாக்கத்தையும் ஏற்படுத்தி விடை பெற்றிருக்கிறது இன்றைய தினம்.

இந்த ஆனந்த அலை நாளைய சுனாமிக்காக காத்திருக்கிறது.

மீண்டும் காலையில் சந்திப்போம்

23 Jun - 7.12pm

23 Jun - 6.45pm

"நம் கால்களில் ஒரு குறிப்பிட்ட பகுதி உள்ளது. ஒருவரை இவ்விடத்தில் தாக்கினால் அவர் உயிர் இழக்க நேரிடும். என்ன காலில் அடித்தால் ஒருவர் இறந்து விடுவாரா! ஆம், அது அப்படித்தான்.

நம் உடலில் சில குறிப்பிட்ட பகுதிகள் உள்ளன, இவ்விடங்கள் மிகவும் சூட்சுமமானவை. அதனால் உங்கள் குதி கால்களை மூலாதாரத்தில் வைத்து அமரும்போது, இவ்விடத்தில் ஏற்படும் அழுத்தத்தினால் உங்கள் சக்தி நிலை மேல் நோக்கி செல்லும்," என்று அர்த்த சித்தாசனத்தின் குணங்களை பற்றி சத்குரு விளக்கினார்.

"சித்தாசனம் என்று ஒன்று உள்ளது. உங்களில் அநேகமாக அனைவராலுமே அதனை செய்ய முடியாது, அது மிகவும் கடினமானது. எனவே நமக்கு அது வேண்டாம். நாம் அர்த்த சித்தாசனா செய்யலாம்," என்று சித்தாசனத்தை பற்றியும் குறிப்பிட்டார் சத்குரு

அனைவரும் உடலளவில் செய்யும் பயிற்சிகளில் இருந்து சூட்சுமமாக செய்யும் பயிற்சிகளுக்கு நகர்ந்துள்ளனர்

23 Jun - 5.42pm

சம்ஸ்கிருதி குழந்தைகளின் களரி வந்தனத்துடன் துவங்கியது வகுப்பு.

குழந்தைகளின் பால்மனம் மாறாத முகங்கள் படபடப்பு இல்லாத அசைவுகள், அவர்கள் உடல் வளையும் தன்மை நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது!

மேடையில் நடந்து கொண்டே வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறார் சத்குரு.

23 Jun - 2.29pm

ஈஷாவும் பாண்டிச்சேரியும் - ப்ளாஷ்பேக் 1!

2000 ஆம் ஆண்டு திருவள்ளுவர் பேருந்து நிலையத்திற்கு பின்னால் இருக்கும் ரோட்டரி அரங்கத்தில்தான் முதல் முதலாக ஈஷா வகுப்பு பாண்டிச்சேரியில் துவங்கியது. முதல் வகுப்பிலேயே நூற்றிக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் நாள், தமிழகத்தையும், புதுச்சேரியையும் சுனாமி பேரலை தாக்கியது. இந்த சோகமான சூழ்நிலையில் செய்வதறியாது திகைத்து நின்றிருந்த பாண்டிச்சேரி மக்களுக்கு, உடனடியாக கோவை வெள்ளியங்கிரியிலிருந்து உதவிக்கரம் நீண்டது. ஆம்! திக்கற்று நின்ற பாண்டிச்சேரி மக்களுக்கு திசை காட்டும் வகையில் சத்குரு அவர்கள் முதன்முறையாக பாண்டிச்சேரிக்கு அப்போதுதான் வருகை தந்தார்.

அப்போது ஆதரவற்றவர்களுக்கு பணம் பொருள், உடலுதவி என தன்னார்வத் தொண்டர்கள் எல்லா வகையிலும் தங்களை அர்பணித்தனர்.

ஈஷா-பாண்டிச்சேரியில் ஓர் புதிய சகாப்தம்...

23 Jun - 12.26pm

கிட்டத்தட்ட 12 மணி நேர உழைப்பிற்கு பின் 14000 பேருக்கான உணவு தயாராகி பேக்கிங்கிற்காக வெளியே வந்தது. மதிய உணவு இடைவேளைக்கு முன் பேக்கிங் முடிக்கப் பட வேண்டும்.

மிகவும் பரபரப்பாக பேக்கிங் நடந்து கொண்டிருக்கிறது. உணவு பரிமாறும் இந்த செயலை அர்ப்பணிப்புடன் செய்யும் நம் தன்னார்வத் தொண்டர்கள் இங்கே...

23 Jun - 11.08am

சத்குருவின் மேடைப் பேச்சு கேட்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது... நகைச்சுவையை கேட்டு ஆனந்தமாக கைதட்டி சிரிக்கலாம் என்று சுகமாக அமர்ந்திருந்த மக்களுக்கு “சுகமில்லை இது சுத்தியல்” என்பது போல அவரது கேள்விகள் அவர்களை துளைத்தெடுத்தது.

சத்குரு 20 நிமிட இடைவேளை என்று சொல்லி மேடையிலேயே இருந்தார்.

தொடர்ச்சியாக மணிக்கணக்கில் அமர்ந்திருக்கும் மக்கள் இடைவேளை என்று அறிவித்தும் கூட சத்குருவை விட்டு நகரவே இல்லை.

சம்ஸ்க்ருதி குழந்தைகளின் அழகான குரலில் பைரவி பாடல்கள் இந்த சூழ்நிலையையே மாற்றியது.

10000 பேர் 20 நிமிட இடைவேளை... ஆனால் எங்கும் மௌனம் மௌனம்...

23 Jun - 10.57am

சத்குரு 5 நிமிடம் முன்பே வகுப்பிற்குள் நுழைந்து பொறுமையாக அனைவரும் உள்ளே வரும்வரை காத்திருந்தார்.

இன்றைக்கு சமுதாயத்தில் தாமதமாக வந்தால் தான் விஐபி என்றாகிவிட்டது. சரியான நேரத்திற்கு வருபவர்களை முட்டாளாகத்தான் பார்க்கிறோம்," என்று லேட்டாக வந்த பங்கேற்பாளர்களை பார்த்து வேடிக்கையாக பேசினார். பாண்டிச்சேரி சூழ்நிலையை மனதில் கொண்டோ என்னவோ மக்கள் இதனை முழுமையாக ரசித்தனர்!

சவுண்ட்ஸ் ஆப் ஈஷாவின் மெல்லிசையுடன் இன்றைய வகுப்பு துவங்கியது.

இளைஞரும் முதியவரும் படித்தவரும் பாமரரும் சத்குருவின் உரையை கவனமாக கேட்கிறார்கள்.

அவர்கள் சிறு வயதிலிருந்தே மனதில் பதித்து வைத்திருந்த நம்பிக்கைகளை உடைத்து எறிய எவர் வந்தாலும் ஒன்று அங்கு விவாதம் நடக்கும் அல்லது அங்கு பெரிய சண்டை நடக்கும்.

ஆனால் அதே வேலையை செய்யும் சத்குருவுடன் அனைவரும் ஆனந்தமாக சிரித்துக் கொண்டும் கைதட்டிக் கொண்டும் இருக்கின்றனர்.

23 Jun - 7.46am

மீண்டும் ஒன்றிணைந்தனர்...

இரவு 9 மணிக்கு வகுப்பு முடிந்து வீடு சென்றவர்கள் அயர்ந்து தூங்கி அடுத்த நாள் வகுப்பிற்கு தாமதமாக வந்து விடக்கூடாது என்று சத்குரு “நாளை 7.30 மணி சரியாக வகுப்பு துவங்கிவிடும். 7.30 மணி என்றால் 7.30 மணி 7.45 இல்லை," என்று நகைச் சுவையாக நேரத்தின் முக்கியத்துவத்தை புரிய வைத்தார். “கடைசி நேரத்தில் மூச்சு வாங்க ஓடி வர வேண்டாம். ஒரு 3 நிமிடம் முன்னாலேயே வந்து விடுங்கள்,” என்றார்.

சத்குருவின் இந்த வார்த்தைகள் மற்றும் முந்தைய நாள் வகுப்பு அவர்களிடம் ஏற்படுத்திய ஆர்வம் அவர்களை அதிகாலையிலேயே இங்கு வரவழைத்துவிட்டது.

சரியாக 6 மணிக்கே பங்கேற்பாளர்கள் கூட்டம் வெளியில் கூடி நிற்க, இத்தனை ஆர்வத்தை எதிர்பார்க்காத தன்னார்வத் தொண்டர்கள் அவசர அவசரமாக தங்களை தயார் செய்து கொண்டு பங்கேற்பாளர்களை வரவேற்கின்றனர்.

உள்ளே நுழைந்தவர்கள் தேவையில்லாத பேச்சோ உடலசைவோ இல்லாமல் அமைதியாக கண் மூடி அமர்ந்திருக்கிறார்கள்.

சத்குரு நேற்று புறப்படும் போது “நாளை காலை அதிசயம் நடக்கும்“ என்று சொன்னார். அது இது தானோ?

தண்ணீரில் நடப்பதோ காற்றில் பறப்பதோ அதிசயம் அல்ல என்று கூறும் சத்குருவின் அருளில் நனைந்தவருக்கோ இந்த அதிகாலை சூரியனும் அதிசயம்தான்!

சத்குரு சரியாக 7.30 மணிக்கு வந்து விடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். 7.30 மணி வகுப்பிற்கு சரியாக 6.55 க்கே வந்தவர் பொறுமையாக அரை மணி நேரம் வெளியிலேயே நிற்கிறார்.

நம் கலாச்சாரத்தில் குருவிற்காக ஒரு சிலர் பல ஆண்டுகள் காத்திருந்ததாக கதைகள் உண்டு. இத்தனை பெரிய மகான் அன்பாக பொறுமையாக தன் சீடர்களுக்காக காத்திருக்கிறார்.

23 Jun - 6.17am

சமையலோ சமையல்

நேற்று காலையிலிருந்தே இடைவெளி இல்லாமல் பரபரப்பாக போய் கொண்டிருக்கும் சமையல் அறையின் வாசம் நம்மை தானாகவே உள்ளே அழைக்கிறது.

இரவு 11 மணிக்கு உறங்கச் சென்ற வேலையாட்கள் காலையில் 2 மணிக்கே விழித்தெழுந்து களத்தில் இறங்கிவிட்டனர்.

சுமார் 3000 பேருக்கு காலை உணவும் சுமார் 14000 பேருக்கு மதிய உணவும் எந்த ஆர்பாட்டமும் இன்றி அமைதியாக தயாராகிக் கொண்டிருக்கிறது.

அதிகாலை 2 மணிக்கு ஆரம்பித்த இந்த மதிய உணவு தயாரிப்பு சுமார் 12 மணி அல்லது 1 மணிக்குதான் முடிவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

உணவு தயாரிப்புகளை கவனித்துக் கொள்ளும் ராஜபாளையத்தை சேர்ந்த தினேஷ் அண்ணா இதை பற்றி கூறும் போது...

”நான் எல்லா மெகா வகுப்புக்கும் சமையலறையின் பொறுப்பை ஏற்கிறேன், அந்த அனுபவம் இருப்பதால் சரியான நேரத்திற்கு என்னால் செயலை திட்டமிட முடிகிறது. மிகவும் சீக்கிரமாக செய்தாலும் உணவு கெட்டுவிடும், நேரம் தாழ்த்தினாலும் வகுப்பு நேரம் பாதிக்கப்படும். இதெல்லாம் எப்படி நடக்கிறது என்றே தெரியவில்லை. இத்தனை பேருக்கு நாங்கள் உணவு தயாரிக்கிறோம் என்பது போலவே தெரியவில்லை. இத்தனைக்கும் இங்கு சமையல் செய்பவர்களில் பெரும்பாலோர் வேலையாட்கள் தான்!! தன்னார்வத் தொண்டர்கள் இல்லை!! இவர்களிடம் இவ்வளவு ஈடுபாடு பார்ப்பது ஆச்சர்யமாக இருக்கிறது,” என்றார்.

Day One


22 Jun - 10.42pm

வீடு, குடும்பம் என்ற எந்த சிந்தனையும் இல்லாமல் உணவு தண்ணீர் என்ற எந்த உடல் தேவையும் ஏற்படாமல் முதல் நாளிலேயே இப்படி மக்கள் உட்கார்ந்திருப்பது அதிசயத்திலும் அதிசயம்தான்.

ஒரு சிறு உடலசைவும் இல்லாது அமர்ந்திருக்கும் மக்கள் அதே சமயத்தில் மிகுந்த விழிப்புடன் இருக்கிறார்கள்!

சத்குரு ஈஷா கிரியா என்ற சக்திவாய்ந்த தியானத்தை அளிக்க, பங்கேற்பாளர்கள் ஒரு குரு தன்னுள் உள்நிலை மாற்றம் செய்ய முதல் நாளிலேயே முழுதாக அனுமதித்தனர்.

23 வருடங்கள் அனுபவம் வாய்ந்த G4 Security Services துணைமேலாளர் திரு. குமார் அவர்கள் தனது செக்யூரிட்டி அனுபவத்தை குறிப்பிடும் போது தனது இத்தனை வருட அனுபவத்தில் எந்த சத்தமும் சலசலப்பும் இல்லாமல் அமைதியாக துவங்கி அமைதியாக நிறைவடைந்த இந்த நிகழ்ச்சி போல் வேறெங்கும் கண்டதில்லை என்று கூறுகிறார்.

நாளை காலை 2 மணிக்கு பொழுது விடிவது நம் தன்னார்வத் தொண்டர்களுக்கு, பங்கேற்பாளர்களின் காலை உணவு தயாரிப்பிற்காக...

மீண்டும் காலையில் இணைவோம்!

22 Jun - 8.10pm

சத்குரு மேடையில்...

பங்கேற்பாளர்களின் பதிவு முடிந்து 10,069 பங்கேற்பாளர்களுடன் தற்போது வகுப்பு துவங்கிவிட்டது.

இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பே பதிவு செய்து காத்திருக்கும் பங்கேற்பாளர்களின் முகத்தில் ஆனந்த பூரிப்பு தெரிகிறது. உணவு தூக்கம் கவனமில்லாமல் சுமார் நான்கு மாதங்களாக உழைக்கும் தன்னார்வத் தொண்டர்கள் தங்கள் கனவு இன்று நினைவாகியுள்ள நிறைவில் உள்ளனர்.

இந்த வகுப்பை எப்படி உள்வாங்கிக் கொள்வது என்று பங்கேற்பாளர்களுக்கு குறிப்புகள் கொடுக்கப்பட்டது. ஈஷாவைப் பற்றிய அறிமுக வீடியோ திரையிடப்பட்ட்து.

சரியாக 5.55திற்கு சத்குரு அரங்கத்தின் வாசலில்...

குறிப்புகள் முடிந்ததும் சத்குரு உள்ளே நுழைந்தார்.

இத்தனை பெரிய கூட்டம் வேறு எங்கிருந்தாலும் ஒரு சிறு சலசலப்பாவது இருந்திருக்கும். அத்தனை பேரும் அமைதியாக எழுந்து நின்று சத்குருவை வரவேற்றனர். உள்ளே நுழைந்ததும் கண் மூடி அமர்ந்த சத்குருவின் அருள் அரங்கம் முழுவதும் நிரம்பி வழிந்தது. உள்ளெழுச்சி பாடல் துவங்கியது.

சத்குரு பேச ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே மக்கள் சிரிப்பலையில்... கைத்தட்டல்களின் ஒலியில் அரங்கம் அதிர்கிறது.
ஒரு சிறு கவன சிதறல் கூட இல்லாமல் அனைவரும் சத்குருவின் பேச்சை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

22 Jun - 5.45pm

அரங்கு நிறைந்த பங்கேற்பாளர்களுடன்...

தாகூர் கலைக்கல்லூரி மைதானம் தன்னார்வத் தொண்டர்களின் கைவண்ணத்தில் தெய்வீகத்தின் இருப்பிடமாய் மாறியுள்ளது. சாம்பிராணி புகை சூழ்நிலையையே மாற்றிவிட, சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் மெல்லிசை மனதிற்கு இனிமையை சேர்த்துள்ளது.

4 மணிக்கே மக்கள் வர ஆரம்பித்துவிட்டனர்.

மருத்துவமனையிலும் கல்லூரி சேர்க்கையிலும் கூட காத்திருக்க மறுக்கும் மக்கள் ஒரு யோகா வகுப்பிற்கு வந்து பொறுமையாக வரிசையில் காத்திருந்து உள்ளே நுழைந்து கொண்டிருக்கிறார்கள்.

பல பங்கேற்பாளர்கள் காலையிலிருந்தே இங்கு வந்து உட்கார்ந்திருக்கிறார்கள்.

பங்கேற்பாளர்களுக்கு விநியோகிக்கப்படும் காட்டுப்பூவின் முதல் பக்கத்தில் சத்குருவின் புகைப்படம். ஒரு பெண்மணி சத்குருவின் படம் கண்டதும் மிகவும் மரியாதையுடன் கண்களில் ஒத்தி பிரசாதம் போல் பெற்றுக் கொண்டார்!

வேலூரிலிருந்து வரும் ஒரு கல்லூரி HOD நீங்க “எதை எதிர்ப்பார்த்து இந்த வகுப்பிற்கு வந்திருக்கிறீர்கள்,” என்று கேட்ட போது, “நான் விஜய் டிவில அவர் நிகழ்ச்சி பார்த்திருக்கிறேன். ரொம்ப எளிமையா அதே சமயம், மக்கள் ஏத்துக்கற மாதிரி சொல்றார். அதனால நான் அவரை பார்க்க வந்திருக்கிறேன்,” என்றார்.

ஒரே குடும்பத்திலிருந்து வந்திருக்கும் 10 பங்கேற்பாளர்கள் “ஒரு கல்யாணத்திற்கு புறப்படுவது போல் நாங்க குடும்பத்துடன் வந்துவிட்டோம்,” என்று ஆனந்தமாக சொன்னார்கள்.

மக்களின் இந்த ஆர்வம் மற்றும் திறந்த மனநிலை தன்னார்வத் தொண்டர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தற்சமயம் ஏற்படுத்தியுள்ளது.

22 Jun - 5.15pm

பசுமைப் பள்ளி இயக்கம் தொடக்க விழாவில் சத்குரு பேசியதிலிருந்து...

பாண்டிச்சேரி பசுமைப் பள்ளி இயக்கம் தொடக்க விழாவில் பேசிய பல அமைச்சர்களும் முக்கிய பிரமுகர்களும் தானே நிகழ்வு ஒரு பேரழிவு என்று பேசினர்.

அதற்கு பிறகு பேசிய சத்குரு அவர்கள், "தானே நிகழ்வு ஒரு பேரழிவு அல்ல, அது இயற்கை நிகழ்வு," என்றார். கடற்கரை காற்றை ரசிக்கும் கடற்கரை வாசிகளான நீங்கள், சுகமாக காற்று வாங்கிக் கொண்டு, புயல் ஏற்படும் போது அதனை சீரழிவு என்று அழைக்கக் கூடாது. நமக்கு இந்த சூழ்நிலையை கையாள தெரியாததால்தான் இதனை நாம் பேரழிவு என்று அழைக்கிறோம்," என்றார்.

மரம் நடுவதின் முக்கியத்துவத்தை பற்றி பேசிய சத்குரு, நீங்கள் அனைவரும் இதற்கு கைக் கொடுப்பீர்களா என்று கேட்ட போது, அங்கே கூடியிருந்த அனைத்து பள்ளிக் குழந்தைகளும் எழுந்து நின்று "செய்வோம்" என்று ஒன்றாக உறுதி எடுத்துக் கொண்டது காண்போர் நெஞ்சங்களை நெகிழச் செய்வதாய் அமைந்திருந்தது.

குழந்தைகளிடம், "நீங்கள் பசிச்ச வயிறாக இருக்கக் கூடாது, நீங்கள் பசுமைக் கரங்களாக இருக்க வேண்டும்," என்று சத்குரு சொன்னதற்கு குழந்தைகளிடம் பெருத்த வரவேற்பு கிடைத்தது.

பாண்டிச்சேரி குழந்தைகள் தங்கள் ஊரை பசுமையாக்கும் நிச்சயமான படியினை இன்று எடுத்துள்ளனர்.

குழந்தைகளுடன் கைகோர்த்துள்ள பசுமைக் கரங்களுக்கு வாழ்த்துக்கள்!

22 Jun - 4.58pm

சத்குருவின் பாண்டிச்சேரி வருகையில் மற்றுமோர் முக்கியப் பதிவு... புதுச்சேரி பசுமைப் பள்ளி இயக்கம் (Green School Movement).

புதுச்சேரி மாநிலத்தின் மாண்புமிகு முதல்வர் திரு. என். ரங்கசாமி அவர்கள் முதல் மரக்கன்றினை நட்டு இத்திட்டத்தைத் துவக்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் கடந்த வருடம் ஈரோடு, கோவை மாவட்டங்களில் 500 பள்ளிகளில் படிக்கும் 25000 குழந்தைகள் இணைந்து மொத்தம் 10 லட்சம் மரக் கன்றுகளை நட்டனர்.

இவ்வருடம் கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இத்திட்டம் செயல்படுத்தப் படவுள்ளது.

பசுமைத் தமிழகத்தை நோக்கிய மிகப் பெரிய படிக்கல்லாய் இத்திட்டம் அமையும்.

புதுச்சேரி பசுமைப் பள்ளி இயக்கத்தின் வாயிலாக பாண்டிச்சேரியில் உள்ள 150 பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் 3 லட்சம் மரக் கன்றுகளை நடவுள்ளனர் என்பது சிறப்புச் செய்தி.

22 Jun - 4.00pm

"ஏம்பா அங்க ஈஷா யோகா சாமி வர்றாரே, நீங்க அந்த குரூப்பா? நாட்ல எவ்ளோ கொலை, குத்து நடக்குது? இப்ப என்னத்துக்கு யோகா? ஊர்ல பிரச்சனை தீருமா சொல்லுங்க! வகுப்புக்கு வந்தா எல்லாம் சரியாயிடுமா?"

அன்பர், “மக்கள் சந்தோஷமாக இருப்பதற்கு யோகா அவர்களுக்கு துணையாய் இருக்கும்...”

ஈஷா யோகா அன்பரின் பொறுமையான வார்த்தைகளில் கொஞ்சம் நிதானித்தார் அந்த ஆட்டோ டிரைவர்.

"சந்தோஷத்தை வச்சு என்ன செய்யறது பா...?"

"எல்லாரும் சந்தோஷமா இருந்தா பிரச்சனையே இருக்காதே..."

இப்போது அங்கே சில கணங்கள் மௌனம் நிலவியது...

பின்பு சற்று யோசித்தவராக...

"சரி, உங்க சாமி வர்ற நேரம் இந்த ஊரு நல்லாயிருக்கட்டும்" என்று சொல்லி இறங்க வேண்டிய இடம் வந்தவுடன் ஆட்டோவை நிறுத்தி சற்று கண் கலங்கியவராய் இருந்தார்...

சத்குருவின் பாண்டிச்சேரி வருகை பல தரப்பு மக்களிடம் பலவிதமான நம்பிக்கைகளை ஏற்படுத்தி உள்ளது.

மேலே நாம் கண்டது உள்ளூர் ஆட்டோ டிரைவரின் நம்பிக்கை!

கோடையின் வெப்பத்திலும் புன்னகை முகங்களாய் வலம் வரும் தன்னார்வத் தொண்டர்கள், தெருவெல்லாம் சத்குருவுடனான ஈஷா யோகா வகுப்பு அறிவிப்புப் பலகைகள், திறந்த மனநிலையுடன் சத்குருவின் வகுப்பிற்காக எதிர்பார்த்திருக்கும் பங்கேற்பாளர்கள், சத்குருவின் பாதம் படக் காத்திருக்கும் தாகூர் கலைக் கல்லூரி மைதானம் என பாண்டிச்சேரி நகரமே களை கட்டியுள்ளது.

காசு கொடுத்து கூட்டம் சேர்க்கும் அரசியல் கட்சிகள், “அனுமதி இலவசம்" என்று கொட்டை எழுத்தில் விளம்பரம் செய்யும் ஆன்மீக அமைப்புகள் பல இருக்க, அங்கெல்லாம் கூடாத மக்கள் கூட்டம், இங்கே தங்கள் சொந்தக் காசு கொடுத்து, புகைப்படம் கொடுத்து, பல நிபந்தனைகளை ஏற்று, பதிவு செய்து சத்குருவுக்காக காத்திருக்கிறார்கள்.

பாண்டிச்சேரி தன்னார்வத் தொண்டர் நந்தகோபால் அண்ணா "இங்க 12,000 பேருக்கு ஏற்பாடு செஞ்சிருக்கோம், ஆனா இன்னிக்கி நிலவரப்படி பார்த்தா 15,000 மக்கள் வந்துடுவாங்களோன்னு பயமா இருக்கு. வந்த மக்கள திருப்பி அனுப்ப மனசு வரலைங்க. சத்குருதான் பாத்துக்கணும். என்னோட ஆசையெல்லாம் எத்தனை பேர் சத்குருவை தேடி வர்றாங்களோ அத்தனை பேருக்கும் இங்க இடம் உண்டாக்கி தரணும்ங்கறதுதான்..." என்று அக்கறை தோய்ந்த கவலையுடன் பேசுகிறார்.

"ஏற்பாடுகள் எல்லாம் சுமுகமா போயிட்டு இருக்கு. இங்க 2000திற்கும் மேற்பட்ட ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் தமிழ்நாட்டோட பல பகுதிகள்ல இருந்து கூடியிருக்காங்க. இத்தனை பேர் ஒரே நிகழ்ச்சிக்காக ஒன்றிணைஞ்சா, செய்ய முடியாததுன்னு எதுவுமே இல்ல" என்று தெம்பளிக்கிறார் ஸ்வாமி ருமதா.

"பாண்டிச்சேரி க்ளாஸ் ஸ்பெஷலா, சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா இரண்டு தமிழ் பாடல்களை ரிலீஸ் செய்யுது. காத்திருங்க..." என்று உற்சாகத்தைத் தூண்டுகிறார் ஈஷாவின் வாத்திய இசைக் கலைஞர் பரத்.

மேலும் பல சுவையான தகவல்களுடன், நிகழ்வுகளுடன் பாண்டிச்சேரியிலிருந்து... அடுத்த சில மணி நேரங்களில் சந்திப்போம்!