அன்று ஒரு நாள், வெறும் 7 பேருடன் தொடங்கிய 13 நாட்கள் ஈஷா யோகா வகுப்பு, பல வண்ணங்களாக மாறி 7 நாட்களாக பல லட்சம் மக்கள் வாழ்க்கையில் மற்றத்தை ஏற்படுத்த, இப்போது 1 நாள் வகுப்பாக இன்று சத்குருவின் முன்னிலையில் 2157 பேர்... ஆதியோகி ஆலயத்தில் "சத்குருவுடன் ஒரு நாள்" எப்படியிருந்தது?

'சத்குருவுடன் ஒரு நாள்' என்ற நிகழ்ச்சி சத்குருவால் திடீரென்று அறிவிக்கப்பட்டது, ஈஷா மக்களிடத்தில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றே கூற வேண்டும். நிகழ்ச்சியில் பங்கேற்பதில் ஈஷா வகுப்பு செய்யாதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டாலும், ஏற்கனவே ஈஷா வகுப்பு செய்தவர்களும் சத்குருவைக் காண வேண்டும், அவருடன் ஒரு நாள் இருக்க வேண்டும் என்ற ஆவலில் கணிசமான அளவில் கலந்துகொண்டனர்.

ஈஷா மையத்திலுள்ள ஆதியோகி ஆலயத்தில் நடைபெற்ற இந்த வகுப்பில், 2157 பேர் கலந்துகொண்டனர். இந்த யோகா வகுப்பானது, வாழ்க்கையைப் புதிய கோணத்தில் சிந்திக்கவும், உணரவும் பெரும் வாய்ப்பாக அமைந்தது.

நேற்று காலை 9 மணி முதல் இரவு 7 மணிவரை நடைபெற்ற இந்த வகுப்பில் கலந்துகொள்ள தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்திருந்தனர்.

பல கோணங்களில் வாழ்க்கையைப் பற்றி சத்குரு பேசப் பேச, பங்கேற்பாளர்கள் அவரின் பேச்சுக்குக் கட்டுப்பட்டதுபோல் அமைதியாக வகுப்பில் அமர்ந்திருக்க, இடையிடையே சங்கரன்பிள்ளையை சுட்டிக்காட்டவும் அவர் தவறவில்லை. அது மட்டுமா, சங்கரன்பிள்ளையைப் போல ஒருவரை எழுந்து நடித்துக் காட்டவும் செய்துவிட்டார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஹெலிகாப்டர் பயணம் உணர்த்தியது என்ன?

பல்வேறு தலைப்புகளில் சத்குரு பேசியபோது, தான் அமெரிக்காவில் பக்கக் கதவுகளைக் கழற்றியபடி 1000 மீட்டருக்கு மேல் பறந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அங்கே சூரிய கதிர்களே இல்லாமல் கிட்டத்தட்ட உடல் நடுங்க, சூழ்நிலையறிந்து கீழிறங்கி வந்ததாகவும் கூறினார்.

"நாளை காலை சூரியன் வரவில்லையென்றால், அடுத்த 18 மணி நேரத்தில் பூமியின் மேலுள்ள அனைத்து உயிரினங்களும் அழிந்துவிடும். பூமியின் பாதாளத்தில் வாழும் ஒருசில கிருமிகள் மட்டுமே உயிர் பிழைத்திருக்கும். எனவே தினம் தினம் சூரியன் வந்துவிடும் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். தினமும் சூரியன் எழுந்ததைப் பார்த்ததும் நாம் அதற்காக ஆனந்தப் புன்னகை சிந்தலாம்," என்றார்.

இப்படி இயற்கையின் உன்னதத்தை அங்கே உணர்த்திய சத்குரு, நாம் ஆனந்தப்படுவதற்கு நிறைய காரணங்கள் இருப்பதைச் சுட்டிக் காட்டினார்.

பேசாமல் அமர்ந்த ஆதிகுரு!

"ஆதிகுருவின் சக்திநிலையைப் பார்த்தபோது அவரைச் சுற்றி பல ஆயிரம் பேர் கூடினர். ஆனால் அவர் பேசாமல் பல நாட்கள் அமர்ந்ததால் அனைவரும் சென்றுவிட்டனர். இறுதியில் உறுதியுடன் தீவிரமாக இருந்தது 7 பேர் மட்டுமே! அந்த ஏழுபேரில் ஒருவர் தமிழர். அவர்தான் தென்னகத்தில் ஆன்மீகக் கலாச்சாரத்தை வேரூன்றச் செய்த அகத்திய முனி. அந்த ஏழுபேரிடம் ஆதிகுரு தன் 5 விரல்களைக் காட்டினார். அதாவது பஞ்சபூதங்களை நம் ஆளுமையில் எடுத்தால், நாம் இந்த பிரபஞ்சத்தையே உணர்ந்து கொள்ளலாம். நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் இந்தப் பஞ்சபூதங்களுக்கு நாம் உரிய கவனம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் நமது உடல் மற்றும் இந்தப் பிரபஞ்சம் என இரண்டுமே இந்த ஐந்து பூதங்கள் சேர்ந்துதான் உருவாகியுள்ளது."

இப்படி பஞ்சபூதங்களின் மேன்மையைப் பற்றி விளக்கிய சத்குரு, நாம் ஒவ்வொரு முறை உணவருந்தும் முன்பும் அந்த உணவு உருவாவதற்கு காரணமான பஞ்சபூதங்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு உண்ண வேண்டும் என்றார்.

சத்குருவே நேரடியாக நடத்திய இந்த யோக வகுப்பில், யோக நமஸ்காரம், நாடி சுத்தி, ஈஷா கிரியா, போன்ற புதிதான யோக வடிவங்களையும் அவர் கற்றுக் கொடுத்தார்.

சத்குருவுடன் இருந்த ஒரு நாள்14

வகுப்பு இடைவேளையில் ஈஷா சமஸ்கிருதி குழந்தைகள், நம் பாரம்பரிய தற்காப்புக் கலையான களரிப்பயட்டை செய்து காண்பித்தனர். கடந்த ஜுன் மாதம் தேசியக் களரிப்பயட்டு சேம்பியன்ஷிப் போட்டிகளில், ‘ஈஷா சமஸ்கிருதி’ மாணவர்கள் தமிழ்நாட்டின் சார்பாகக் கலந்துகொண்டு தங்கம், வெள்ளி, வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒரு நாள் யோகப் பயிற்சி நிறைவுக்குப்பின் பங்கேற்பாளர்கள் தத்தமது ஊருக்குத் திரும்ப ஈஷாவிலிருந்து கோவைக்கு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

சத்குருவுடன் இருந்த ஒரு நாள்15