சத்குருவுடன் கார் ஓட்டிய அந்த 30 நாட்கள்...!
சென்னை பெரம்பூரைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுனர் திரு.ஐயப்பன், “நதிகளை மீட்போம்!” பயணத்தில் சத்குருவுடன் 30 நாட்கள் கார் ஓட்டிய தனது நெகிழ்ச்சி மிக்க அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்!
 
 

மனிதர்களில் பலவிதமானவர்கள் இருக்கிறார்கள். ஒரு சிலர் தியானத்தில் திளைப்பார்கள். ஒரு சிலர் பக்தி மார்க்கத்தில் உச்சத்தினை அடைவார்கள். மனதில் எந்தவித கணக்கும் இன்றி பக்தியில் கரைந்து போகும் அனுபவம் அவ்வளவு எளிதாக அனைவருக்கும் வாய்ப்பதில்லை. கண்களில் கண்ணீரும் உள்ளத்தில் அன்பும் பொங்கிவர வலம் வரும் இவர்களைப் புரிந்துகொள்வது சற்று சிரமம்தான். அந்த உணர்வின் அழகும் இனிமையும் விவரிக்க இயலா அழகு நிரம்பியது.

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஐயப்பன் அவர்களுக்கு வண்டி ஓட்டுவதே வாழ்க்கை. சென்னையில் ஒரு தனியார் கம்பெனியுடன் இணைந்து செயல்படும் டாக்சி டிரைவர். ஒரு நாளைக்கு இத்தனை சவாரி என்ற தனது அன்றைய இலக்குகளை பூர்த்தி செய்தால்தான் அன்று அவரது வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க முடியும் என்கிற நிலை.

சத்குருவுடன் போகப் போகிறோம் என நினைத்தேனே! இதுவரை எந்த அழைப்பும் வரவில்லையே! எனக்கெல்லாம் இந்த வாய்ப்பு எப்படி கிடைக்கப் போகிறது,’’ என்று என்னையே நான் நொந்துகொண்டேன்.
ஒருமுறை லிங்கபைரவி தேவி யந்திராவை ஈஷா யோக மையத்திலிருந்து சென்னை கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று ஈஷாவிலிருந்து அழைப்பு வந்தது ஐயப்பன் அவர்களுக்கு.

“தேவியை பத்திரமாக சென்னை கொண்டு வந்து சேர்த்த அனுபவம் மனதில் பசுமை மாறாமல் இருக்கிறது. ஆதியோகி ரத யாத்திரையின்போது ஆதியோகி ரதத்தை ஓட்டிய அனுபவமோ பேரானந்தத்தை அளித்தது. அந்த சிவபெருமானையே வைத்து என் கரங்களால் இழுத்துச் சென்றதுபோல் இருந்தது,” எனக் கூறுகிறார் ஐயப்பன் அண்ணா.

“செப்டம்பர் மாதம், ‘நதிகளை மீட்போம் பாரதம் காப்போம்‘ என்ற இயக்கத்திற்காக சத்குருவே கார் ஓட்டி ஒரு மாதம் பயணம் செல்லவிருக்கிறார். இதில் சத்குருவுடன் செல்ல டிரைவர் தேவைப்படுகிறது. உன்னால் வர முடியுமா?” என்று கேட்டார்கள்.

“இப்படி ஒரு வாய்ப்பா?” என என் மனதில் நினைத்துக் கொண்டேன். இந்தப் பிறவியில் கிடைத்த மிகப் பெரிய பாக்கியமாக அதைக் கருதினேன்.

எப்போது ஈஷா யோக மையத்தில் இருந்து அழைப்பு வரும் எனக் காத்திருந்தேன். ஒரு மாதம் கழிந்தது. மையத்திலிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. செப்டம்பர் 1ம் தேதி அன்று விழிப்புணர்வு பேரணியில்கூட கலந்துகொண்டேன். அன்று வரை எந்த அழைப்பும் வரவில்லை. அன்று வழக்கம் போல சவாரி ஏற்றிக்கொண்டு சென்னை சாலைகளை வலம் வந்தேன். என் உடல் மட்டுமே அங்கிருந்தது. மனமெல்லாம் சத்குருவை நாடியிருந்தது.

பின்னர் வீட்டிற்குச் சென்றவுடன் எனக்குள் ஒருவிதமான வெறுமையை உணர்ந்தேன். “சத்குருவுடன் போகப் போகிறோம் என நினைத்தேனே! இதுவரை எந்த அழைப்பும் வரவில்லையே! எனக்கெல்லாம் இந்த வாய்ப்பு எப்படி கிடைக்கப் போகிறது,’’ என்று என்னையே நான் நொந்துகொண்டேன். இரவு 11.30 மணி ஆகிவிட்டது. தனிமையில் அமர்ந்து அழுதேன். அழுதுகொண்டே அன்று தூங்கிவிட்டேன்.

ஆனந்தத்தில் துள்ளிய தருணம்!
மறுநாள் காலை 8 மணிக்கு எனக்கு ஈஷாவிலிருந்து அழைப்பு வந்தது. “நதிகளை மீட்போம் இயக்கத்திற்கு சத்குருவின் பயணத்தில் சேர்ந்து செல்ல நீங்கள் வருகிறீர்களா?” என்றனர்.

“அட! இதற்காகத்தானே காத்திருந்தேன்”- நான் ஆனந்தத்தில் துள்ளினேன்.

நான் ஓட்டிக் கொண்டிருக்கும் வண்டியை என் கம்பெனியில் கொடுத்து விட்டு அன்றைய கணக்குகளை சமர்ப்பித்துவிட்டு உடனே வந்து விடலாம் என்று கிளம்பினேன். அன்று நாள் முழுக்க எனக்கு சவாரி வந்து கொண்டே இருந்தது. இரவு 11 மணிக்கு கடைசி சவாரி. மையத்திலிருந்து, “நீங்கள் வருகிறீர்களா? இல்லையா?” என கேட்கத் துவங்கி விட்டார்கள். 11 மணி சவாரியை இறக்கி விட்டு விட்டு அதிகாலை 3 மணிக்கு என் கம்பெனி வாசலில் போய் நின்றேன்.

“எனக்கு ஒரு மாதம் விடுமுறை வேண்டும். நான் கிளம்புகிறேன்,” என்றேன்.

“ஒரு மாதமா? எதற்கு?”

“நான் சத்குருவுடன் போகிறேன். இது என் வாழ்நாள் முழுக்க தேடினாலும் கிடைக்காத வாய்ப்பு,” என்றேன். எனது டிரைவிங் லைசன்ஸ் வேண்டும் என்றேன்.

“முதலாளி தற்போது இல்லை. பிறகு வந்து பாருங்கள்,” என்றார்கள்.

எனக்கோ நேரம் ஆகிக் கொண்டிருந்தது. ஈஷாவிலிருந்து அழைப்புகள் வந்துகொண்டே இருந்தது. என் ஒரிஜினல் லைசன்ஸ் இல்லாமல் போக முடியாது. இந்த வாய்ப்பு என்னை விட்டு கை நழுவிப் போய் விடுமோ என எண்ணி கவலையில் ஆழ்ந்தேன்.

அன்றைய வசூல் பணத்தைக் கொடுத்து விட்டு கணக்குகளை சமர்ப்பிக்கலாம் என சென்றேன். சற்றும் எதிர்பாராத விதமாக அங்கே முதலாளி அமர்ந்திருந்தார். எப்படியோ பேசி அவரிடம் லைசன்சை வாங்கிவிட்டேன்.

அடுத்தபடியாக என் மனைவி. அன்றளவில் என் கையில் இருந்த தொகை ரூபாய் 500தான். கோவை செல்ல டிக்கெட் ரூபாய் 160. நான் ரூபாய் 250ஐ எடுத்துக்கொண்டு என் மனைவியிடம் மீதி உள்ள ரூபாய் 250 ஐ அளித்தேன்.

வெறும் 250 ரூபாயை கையில் கொடுத்து விட்டு, “நான் ஒரு மாதம் கழித்துத்தான் வருவேன். பார்த்துக்கொள்” என்றேன். குழந்தைக்குக் காய்ச்சல் வேறு இருக்கும் நிலையில், மறுவார்த்தை பேசாமல் தலை ஆட்டினாள் என் மனைவி.

ஈஷா யோகா வகுப்புக்குச் செல்லாத அவளை நினைத்தேன். என் கண்களில் கண்ணீரே ஓடித் தீர்ந்தது. ஈஷாவைப் பற்றி எதுவுமே தெரியாமல் என்னை இன்முகத்துடன் அனுப்பி வைக்கும் அவளை நினைத்து அழுதேனா? சத்குருவின் கருணையை நினைத்து அழுதேனா? தெரியவில்லை. சிந்திக்கக்கூட நேரமில்லாத அந்த நிலையில் ஓடிச்சென்று முன்பதிவு ஏதுமின்றி டிக்கெட் வாங்கிக்கொண்டு அந்த இரயிலை பிடித்தேன்.

எதிர்பாராதபோதும் கிடைத்த உதவி...

ஈஷா யோக மையத்தினை அடைந்ததும் இனி ஆனந்தமே... சத்குருவுடன் 30 நாட்கள் இருக்கப் போகிறேன். எனக்கு இந்தப் பிறவியில் இந்த வரம் மட்டுமே போதும் என்றிருந்தது.

இரவு பகலாக வண்டி ஓட்டினோம். களைப்பு என்ற வார்த்தையே இல்லை. சத்குருவின் வண்டி பறந்தது. அதன் பின்னாலேயே நாங்கள் தொடர்ந்து சென்றோம். சில நேரங்களில் வேகம் 140ஐத் தாண்டும்போது பங்கேற்பாளர்கள் பயத்தில் “கொஞ்சம் மெதுவா போங்க”ன்னு சொல்லுவாங்க. ஒவ்வொரு ஊரிலும் பங்கேற்பாளர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். நாங்கள் மதுரையை அடைந்ததும் ஒரு தன்னார்வத் தொண்டரிடமிருந்து அழைப்பு வந்தது. “உங்கள் குடும்பத்திற்கு ஏதாவது செலவுக்கு பணம் வேண்டுமா?” என்றார்.

அவரே சென்று எங்கள் வீட்டில் 10,000 ரூபாயை கொடுத்துவிட்டுச் சென்றார். நான் எதையும் எதிர்ப்பார்க்கவில்லை. எனக்கு என் குரு மட்டுமே போதும். அவர் நமக்காக நிறைய கொடுத்திருக்கிறார். அவர் அளித்த இந்த “பிரம்மானந்த ஸ்வரூபா” என்ற இந்த மந்திரமே எனக்குப் போதும்.

நான் எங்கே எந்த நிலையில் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தாலும் சரி. எதுபோன்ற வாகன நெரிசலில் இருந்தாலும் சரி, சரியாக 6.20 ஆனதும் பிரம்மானந்த ஸ்வருபா உச்சரிக்கத் துவங்கிவிடுவேன். இது சாதாரண மந்திரம் அல்ல. இப்படிப்பட்ட மந்திரத்தை சத்குரு நமக்கு கொடுத்திருக்கிறார். இதைவிட வேறு என்ன வேண்டும் என்கிற உணர்வே என்னுள் எப்போதும் மேலோங்கி இருக்கிறது.

வட மாநிலங்களில் கிடைத்த வரவேற்பு!

கோவையிலிருந்து சென்னை வரும்போது அதிவேகத்தில் வந்தோம். பாண்டிச்சேரியைத் தாண்டி கோபி லிங்கபைரவிக்குச் சென்றோம். அங்கிருந்து கிளம்புவதற்கு தாமதமாகிவிட்டது. அங்கிருந்து மைசூர் செல்லும் வழியில் ஒரு காடு இருக்கிறது. அது மிகவும் ஆபத்தான வளைவுகள் கொண்ட பகுதி. 27 கொண்டை ஊசி வளைவுகளை நள்ளிரவில் எந்த சிரமமும் இன்றி கடந்தோம். இதெல்லாம் சத்குருவின் கருணையே. அவருடன் பயணிக்கிறோம் என்ற உணர்வில் எந்த பயமும் ஏற்படவில்லை.
வட மாநிலங்களுக்குச் செல்லச் செல்ல, ரேலி ஃபார் ரிவர்ஸ் பேரணிகளில், கூட்டம் குறைந்துவிடும் என்று எண்ணினோம். ஆனால், வடக்கு நோக்கிச் செல்லச் செல்லக் கூட்டமும் ஆதரவும் அதிகரித்துக்கொண்டே சென்றது.

மத்தியப் பிரதேச முதல்வர் ஒரு தியான அன்பரைப் போலவே இருந்தார். ஒரு முதல்வரைப் போலவே பழகவில்லை. அவரது எளிமை எங்களை மிகவும் கவர்ந்தது. ஒவ்வொரு டிரைவரையும் பார்த்து “சாப்பிட்டீர்களா? சாப்பாடு நன்றாக இருந்ததா?” எனக் கேட்டார். இராஜஸ்தானில் முதல்வர் பதவியில் இருக்கும் ஒருவர் சத்குருவின் கால்களில் விழுவதைக் கண்டு நெகிழ்ந்து போனேன்.

பாபா ராம்தேவ் ஆசிரமம் சென்றதும் சத்குரு எங்களுடன் பேசினார். “நீங்கள் அனைவரும் பொறுப்பாக வண்டி ஓட்டினீர்கள்,” என்று கூறினார். இனி எனக்கு வேறென்ன வேண்டும்!!

என் வாழ்வின் நோக்கம் சத்குருவை எண்ணி எண்ணி நெகிழ்ந்து கவிதைகள் எழுத வேண்டும் என்பதுதான். எனக்கு ஓய்வு கிடைக்கும்போது வார்த்தைகளால் வெளிப்படுத்த இயலாத என் அன்பை வார்த்தைகளைப் போட்டு கவிதைகளாய் அவர் முன் சமர்ப்பிக்க ஆசைப்படுகிறேன். எனக்கு வேறு எதுவும் ஆசை இல்லை,” என்று கூறி நம்மையும் கண்ணீரில் ஆழ்த்துகிறார் ஐயப்பன்.

 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1