சத்குருவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கும் பொருட்டு புனே நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 23-ம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரி அவர்கள், புனே மாநில அமைச்சர் திரு.கிரிஷ் பாபத், மக்களவை உறுப்பினர் திரு.அனில் சிரோலி மற்றும் சத்குருவுடன் ஏராளமான பத்திரிக்கையாளர்களும் கலந்துகொண்டனர்.

வறண்டு வரும் நம் இந்திய நதிகளை மீட்பதற்காக ‘நதிகளை மீட்போம்; பாரதம் காப்போம்’ என்ற பெயரில் 16 மாநிலங்களுக்கு விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டதற்காக சத்குருவிற்கு இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது மஹாராஷ்டிரா மாநில பத்திரிக்கையாளர் சங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் திரு.நிதின் கட்கரி அவ்விருதினை வழங்கி கௌரவித்தார்.

sadhguruvirku-vaazhnaal-saadhanaiyaalar-viruthu-tamilblog-twitterimg

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு அவர்கள் நிகழ்ச்சியில் பேசியதாவது:

“அழிந்துவரும் நதிகளை மீட்டெடுக்கும் பணியில் மஹாராஷ்ட்ரா மாநில அரசு மிகுந்த ஆர்வத்துடன் ஈடுப்பட்டு வருகிறது. வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட யவத்மால் பகுதியில் உள்ள வாகாரி நதியை மீட்டெடுக்கும் பணியில் ‘நதிகளை மீட்போம்’ இயக்கம் ஈடுப்பட்டுள்ளது. அந்த பகுதி இன்னும் சில ஆண்டுகளில் மீண்டும் புத்துயிர்பெறும்.

நாம் வாழ்வதற்கு மிகவும் அத்தியாவசியமான நீர் மற்றும் மண்ணை நாம் வளமாக வைத்துகொள்ள வேண்டும். மண் வளம்பெற வேண்டுமானால், மழை பெய்ய வேண்டும். விலங்குகளின் சாணங்கள் உரமாக வேண்டும். மரங்களிலிருந்து இலை தழைகள் மண்ணில் விழுந்து மட்க வேண்டும். அதற்கு தேவையானவற்றை நாம் செய்யவேண்டும்.

தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் பயன்படுத்தப்பட்ட தண்ணீரை முறையாக மறுசுழற்சி செய்து விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த வேண்டும். நீர் மேலாண்மை, மரம் வளர்ப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு ஆகிய பணிகளில் சமூகத்தில் உள்ள அனைவரின் பங்களிப்பும் மிக அவசியம்” இவ்வாறு சத்குரு பேசியமர்ந்தார்.

மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.நிதின் கட்கரி அவர்கள் நிகழ்ச்சியில் பேசும்போது, கங்கை நதியை மீட்டெடுப்பதற்கு மத்திய அரசு மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து விவரித்தார்.

நதிகளை மீட்போம் இயக்கம் பற்றி…

‘நதிகளை மீட்போம்; பாரதம் காப்போம்’ என்ற விழிப்புணர்வு பேரணியை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 2017ஆம் ஆண்டு மேற்கொண்டார். அவர் 9,300 கி.மீ தூரம் கார் ஓட்டிச் சென்று 16 மாநிலங்களுக்கு பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்தப் பேரணி தேசிய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சுமார் 16 கோடி பேர் ‘நதிகளை மீட்போம்’ இயக்கத்துக்கு மிஸ்டு கால் மூலம் ஆதரவு அளித்தனர்.

இதையடுத்து, இந்திய நதிகளை மீட்பது தொடர்பாக ‘நதிகளை மீட்போம்’ இயக்கம் தயாரித்த விரிவான திட்ட அறிக்கையை நிதி ஆயோக் அமைப்பு ஏற்றுக்கொண்டு அதை செயல்படுத்துமாறும் அனைத்து மாநில அரசுகளுக்கும் பரிந்துரை அளித்தது. இந்த அறிக்கையை ஐ.நா அமைப்பும் அங்கீகரித்துள்ளது. முதல்கட்டமாக, மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களுடன் ஈஷா அறக்கட்டளை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டு இவ்வியக்கம் பணிகளை செய்துவருகிறது.

ஆசிரியர் குறிப்பு : மேலும் விவரங்களுக்கு Rally For Rivers முகநூலில் இணைந்திடுங்கள்.