சிறப்பாக நிறைவடைந்த வட அமெரிக்க பைக் பயணம்

வட அமெரிக்க பூர்வக்குடி மக்களின் பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் மற்றும் ஆன்மீக அடித்தளத்தை ஆராய்ந்து அறியும் நோக்கில், சத்குரு மேற்கொண்ட மோட்டார் சைக்கிள் பயணம் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது. 37 நாட்கள் 19 மாகாணங்கள் வழியாக 9477 மைல்களை மோட்டார் சைக்கிளில் பயணித்து வந்த சத்குரு, மீண்டும் டென்னஸியிலுள்ள ஈஷா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்னர் சயின்ஸை வந்தடைந்தார்.

அமெரிக்கா பற்றிய மேம்போக்கான பார்வையை மாற்றியமைத்து, வட அமெரிக்க பூர்வக்குடிகள் மற்றும் அங்குள்ள நிலப்பரப்புகளின் ஆன்மீக மறைஞானத்தை வெளிக்கொண்டு வந்துள்ள சத்குருவின் இந்த பயணம், அமெரிக்கர்களுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் உள்ள தேடல் மிக்க உயிர்களுக்கு உத்வேகத்தை அளிப்பதாக அமைந்தது.

சத்குருவுடன் தமிழக சிறைத்துறை டி.ஜி.பி மற்றும் சிறைவாசிகள் கலந்துரையாடல்

சிறைவாசிகளின் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழக சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் சுனில்குமார் சிங், சத்குருவுடன் கடந்த நவம்பர் 9 அன்று ஆன்லைன் வாயிலாக கலந்துரையாடினார்.

ஒரு மணி நேரம் நடந்த இந்த கலந்துரையாடல் நிகழ்வு தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் டி.ஜி.பி மட்டுமின்றி சிறைத்துறை உயர் அதிகாரிகள், சிறை காவலர்கள் மற்றும் சிறைவாசிகள் ஆகியோரின் பல்வேறு கேள்விகளுக்கு சத்குரு பதில் அளித்தார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

குறிப்பாக, கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது, எதிர்மறை எண்ணங்களை எப்படி தவிர்ப்பது, மன வேதனையில் இருந்து எப்படி வெளிவருவது, இறந்த காலத்தில் நடந்த சம்பவத்தின் குற்ற உணர்ச்சியில் இருந்து எப்படி மீள்வது என்பது போன்ற பல்வேறு கேள்விகளை சிறைவாசிகள் சத்குருவிடம் கேட்டனர்.

அனைத்து கேள்விகளுக்கும் மிக எளிமையாகவும், குட்டிக் கதைகளை கூறியும் சத்குரு பதில் அளித்தார்.

கலந்துரையாடலில், தண்டனை காலம் முடிந்து வெளிவரும் சிறை கைதிகள், விடுதலைக்கு பிறகு சமூகத்துடன் மீண்டும் ஒன்றிணைவதில் நிறைய சிரமங்களை சந்திப்பதாகவும், அவர்களுக்கு வேலை கொடுக்க பலரும் தயங்குவதாகவும் கூறி, இதற்கான தீர்வு குறித்து சத்குருவிடம் டி.ஜி.பி கேட்டார். அதற்கு பதில் அளித்த சத்குரு, “நீங்கள் விரும்பினால் தொழில்துறையினருடன் பேசி, விடுதலையாகும் சிறைவாசிகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்க முயற்சி எடுக்க முடியும்” என கூறினார்.

கொரோனா பாதிப்பு மிகுந்த சவாலான இச்சூழலில், தமிழகத்தில் 8,165 ஆண் சிறைவாசிகள், 3,453 பெண் சிறைவாசிகள் மற்றும் 3,971 சிறை ஊழியர்களுக்கு ஈஷா யோகா ஆசிரியர்கள் மூலம் ஆன்லைன் வாயிலாக யோகா கற்றுக்கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சத்குருவின் தீபாவளி வாழ்த்து செய்தி

கொரோனா நோய்த்தொற்று தொடர்ந்து அச்சுறுத்தி வரும் இச்சூழலில், தீபாவளியை எவ்விதத்தில் கொண்டாட முடியும் என்பது பற்றி சத்குரு எடுத்துக்கூறி தனது வாழ்த்து செய்தியை பகிர்ந்துகொண்டார். ஒவ்வொருவரும் தங்கள் நல்வாழ்விற்காக ஒன்று, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்காக ஒன்று மற்றும் மனிதநேயத்திற்காக ஒன்று என மொத்தம் மூன்று விளக்குகளை தீபாவளி தினத்தன்று ஏற்றிவைத்துக் கொண்டாடுமாறு சத்குரு கேட்டுக்கொண்டார்.

கத்தாருக்கு முதல் ஏற்றுமதியை செய்த வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம்

விளைபொருட்களுக்கு சரியான விலை நிர்ணயம் மற்றும் இடைத்தரகர் தலையீடு இன்றி விவசாய விளைபொருட்களை விற்பனை செய்தல் ஆகிய நோக்கத்துடன், ஈஷா விவசாய இயக்கத்தின் வழிகாட்டுதலில் கோவை சுற்றுவட்டார விவசாயிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் முதன்முதலில் கத்தார் நாட்டிற்கு தனது விவசாய விளைபொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது குறித்து சத்குரு, ட்விட்டர் பதிவில் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.