சாரநாத்தில், தாங்கள் பார்த்த புத்தர் கால கலைப்பொருட்களை பற்றிக் கூறும் மஹேஷ்வரி, சத்குருவை யாரென்றே அறியாத போதிலும் கங்கா ஆரத்தியை நடத்துபவர்கள், ஆரத்தியை நடத்தித் தரும்படி சத்குருவுடம் கேட்டுக்கொண்ட நிகழ்வை நயமாக விவரிக்கிறார்...

காசி - உண்மையைத் தேடி... பகுதி 4

மஹேஷ்வரி:

காசி வந்தா ஏதாச்சு விட்டுட்டு போகணுமா? என்று ஒருவர் கேள்வி கேட்டபோது, “என்ன பாவாக்காயை விட்டுவிடச் சொன்னாங்களா?” என்று கேட்டு அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தினார் சத்குரு.

“பாவக்காயெல்லாம் விட வேண்டாம் உங்க கோபத்தை விடுங்க! உங்க கோபத்தை விட முடியவில்லைன்னா, குறைந்தபட்சம் உங்கள் கோபமான வார்த்தைகளையாவது விடுங்க!” என்றார்.

சத்குருவின் சத்சங்கத்தில் தேவையான சூழ்நிலையை உருவாக்க சவுன்ட்ஸ் ஆப் ஈஷா குழுவினர் இருந்தனர். அவர்கள் பாடிய பாடல்களில், நாங்கள் அனைவரும் சிவனில் கரைந்தோம். வெறும் எங்கள் 440 பேருக்காக ஆசிரமத்திலிருந்து காசிக்கு இசைக்குழு வரவழைக்கப்பட்டதை எண்ணி நாங்கள் மிகவும் பிரம்மிப்படைந்தோம். காசியை நாங்கள் முழுதுமாக உணர்ந்து செல்ல என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதுவெல்லாம் முழுமையாக செய்யப்பட்டிருந்தது. சத்சங்கம் முடிந்ததும் சாப்பிட்டுவிட்டு சாரநாத் புறப்பட்டோம்.

சாரநாத் - புத்தர் தனது ஞானத்தை முதலில் சீடர்களுக்கு வழங்கிய இடம். இங்கே ஒரு அழகான கோயில் இருக்கிறது. புத்தமதத்தை ஆதரித்த அசோகர் மற்றும் பல அரசர்களால் உருவாக்கப்பட்ட புத்தர் சிலைகள், ஸ்தூபங்கள் மற்றும் பல கலைநயம் மிக்க பொருட்கள் அந்நியர் படையெடுப்பால் சிதிலமடைந்த நிலையில், தொல்பொருள் கண்காட்சியகத்தில் வைத்திருப்பதை பார்த்து திரும்பினோம்.

மாலை, கங்கா ஆரத்திக்கு கிளம்பினோம். கங்கா ஆரத்திக்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தபோது, அனைவரும் ஷாப்பிங் செய்யத் துவங்கிவிட்டனர். அங்கு ஷாப்பிங் செய்வதற்கு நிறைய பொருட்கள் இருக்கிறது. கைவினை வேலைப்பாடுகள் நிறைந்த மரச்சாமானிலிருந்து பொம்மைகள், பட்டுப் புடவைகள் என காசி நகர வீதிகள் வண்ணமயமாக இருந்தது. எதை வாங்குவது, எதை விடுவது என்று திக்குமுக்காடிப் போனோம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கங்கா ஆரத்தியில் கலந்து கொள்வதற்காக, 'இராஜேந்திர பிரசாத் காட்' முன் அனைவரும் அமர்ந்தோம். சத்குரு இன்னும் சிறிது நேரத்தில் வரப் போகிறார் என்றதும், அனைவரும் குதூகலத்துடன் கங்கைக் கரையில் காத்திருந்தோம்.

கங்கையின் விஸ்தாரம் மிக பிரம்மாண்டமான காட்சியாக இருந்தது. கங்கை மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தாள். கங்கையை காண்பதே மிகப் பெரிய ஆன்மீக அனுபவமாக இருந்தது. அதில் குளித்தால் எப்படி இருக்கும்? ஆனால் கங்கையில் குளிக்கக் கூடாது என்ற தடை உத்தரவு வேறு இருந்தது. கரையிலிருந்தே கங்கையை வணங்கிவிட்டு சத்குருவுக்காக காத்திருந்தோம்.

இந்த இனிமையான மாலைப் பொழுது, கங்கையின் குளுமை இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் சத்குரு வரப் போகிறார் என்பது பேரானந்தத்தை ஏற்படுத்தியது. கங்கை நதிக்கரையில் ஈஷா அன்பர்கள் அல்லாத பொது மக்களும் அமர்ந்திருந்தனர். ஆரத்தியை நடத்துபவருக்கோ சத்குருவென்றால் யாரென்றே தெரியாது. சூழ்நிலை எப்படி இருக்கும் என யோசித்துக் கொண்டு அமர்ந்திருந்தோம்.

ஆனால் ஆரத்தியை நடத்தும் அவர்கள் கங்காவுக்கு ஆரத்தி செய்யும் முன் சத்குருவை வரவேற்று அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் சத்குருவின் கைகளாலே கங்கைக்கு கற்பூர ஆராதனை செய்ய சொல்லி அன்புடன் வேண்டினர்.

பொது மக்கள் அனைவரும் 'இவர்தான் சத்குரு' என பேசிக் கொண்டிருந்தனர். சத்குருவை தெரியாத இந்த வடஇந்திய மக்கள், மாறி மாறி அவரவர் கேமிராவில் சத்குருவை போட்டோ எடுத்தது, மிகவும் நெகிழ்வாக இருந்தது. சத்குரு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு குழந்தை போல் சிரித்துக் கொண்டிருந்தார். கங்கா ஆரத்தி மிகவும் பக்தி பரவசம் ஊட்டும் அனுபவமாக இருந்தது. 'கங்கா மாதா கி ஜே!' எனும் கோஷம் கங்கை கரை முழுக்க எதிரொலித்தது.

ஹர ஹர மஹாதேவ ஷம்போ! ஹர ஹர மஹாதேவ ஷம்போ! என்னும் மந்திரத்தில் கங்கையின் கரையில் கரைந்து போன எங்களுக்கு இன்னுமொரு இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. சத்குரு நாளை காலை மீண்டும் நம்மை சந்திக்க போகிறார் என்பதுதான் அது...

(பயணிப்போம்...)

அடுத்த வாரம்...

சத்சங்கத்தில் சத்குருவின் முன் அமர்ந்தபோது ஏற்பட்ட சக்தி அதிர்வுகள்; புத்தகயா பயணம் என சத்சங்க துளிகளையும் புத்தகயா அனுபவத்தையும் நம்முடன் பகிர்கிறார் மஹேஷ்வரி!

காசி புனித பயணம்

ஒளியின் நகரம் என்றழைக்கப்படும் காசி, 15000 வருடங்கள் பழமையானது. ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு பின்பும், இன்றளவும் இந்நகரம் உயிரோட்டமாகவும், அதிர்வுமிக்கதாகவும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்த்த வண்ணம் உள்ளது. புனிதமான இந்நகரத்திற்கும், மேலும் பல்வேறு புனித ஸ்தலங்களுக்கும், ஈஷாவிலிருந்து யாத்திரை அழைத்துச் செல்வது வழக்கம்.

அவ்விதத்தில், வரும் காசி யாத்திரை நவம்பர் 21-25 தேதிகள் வரை நடக்கவுள்ளது.

மேலும் விபரங்களுக்கு: sacredwalks.org

தொ.பே: +91 9488 111 333
இ -மெயில்: tn@sacredwalks.org

Akash Mondal @ flickr