32 நாடுகளைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் தங்கள் உள் வளர்ச்சிக்காக ஈஷா யோகா மையத்தில், பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்தலத்தில் 7 மாதங்கள் தங்கி வாழ்ந்திட இணைந்துள்ளார்கள்.

நெருப்பு இருக்கும் இடத்தில், ஒளியும் பிரகாசிக்கும் அல்லவா. ஆன்மீக சாதனை தீவிரமடையும் போது உண்டாகும் உள் வெளிச்சம் பழைய தூசுபடிந்த வினைகளை அழித்து, தெளிவு மற்றும் சமநிலையை ஆதாரமாகக் கொண்ட விழிப்புணர்வு நிலையைத் தருகிறது. சாதனா பாதை பங்கேற்பாளர்கள், ஹட யோக பயிற்சிகள், சக்தி சலன கிரியா, ஷாம்பவி மஹாமுத்ரா, பக்தி சாதனா மற்றும் ஆதியோகி பிரதட்சனை உள்ளிட்ட பல்வேறு தீவிர ஆன்மீக பயிற்சிகளை முறையாக செய்து வருகின்றனர். சாதனா பாதை பங்கேற்பாளர்களுக்காகவே, பிரத்யேகமான பாவஸ்பந்தனா வகுப்பும் கூட நடந்தது, இது அவர்களின் உள்நிலை அனுபவத்தை மென்மேலும் ஆழப்படுத்தியது.

நாம் சாதனா பாதையின் கிட்டத்தட்ட ஒருபாதியைக் கடக்க இருக்கிறோம். சக்தியூட்டப்பட்ட தலத்தில், முழு அர்ப்பணிப்புடன் ஆன்மீகப் பயிற்சிகளை முறையாக மேற்கொள்வதனால் ஏற்படும் தாக்கங்களையும், பலன்களையும் பங்கேற்பாளர்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.

உள்நிலை ஆய்வு

ஒருவர் ஆன்மீகப் பாதையில் வளர்ச்சி காணும்போது, வாழ்வில் பின்னோக்கிப் பார்த்து தமக்குள் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றி ஆராய்வது ஒரு பயனுள்ள அனுபவமாக இருக்கும். கடந்த சில மாதங்களாக, தாங்கள் மேற்கொண்டு வரும் தீவிர ஆன்மீகப் பயிற்சிகள், தங்களின் வாழ்க்கை அனுபவத்தை எவ்வாறு மாற்றியுள்ளது என்பதைப் பற்றி பங்கேற்பாளர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள்.

life-in-sadhanapada-when-sadhana-begins-to-catch-fire-ishablog-participants-meditating

உள்நிலையில் உராய்வு குறைந்துள்ளது

“எனக்குள் நிகழ்ந்துள்ள ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் என்னவென்றால், எப்போதாவது ஏதேனும் தவறு நடந்தால், நான் என்னைச்சுற்றிப் பார்ப்பதில்லை, எனக்குள்ளேயே ஆழ்ந்து பார்க்கிறேன். என்னை நான் உணரும் விதமும், என் சொற்களையும், செயல்களையும் உபயோகப்படுத்தும் திறனும் பெரிதும் அதிகரித்துள்ளது. இதனால், எனக்குள்ளும், என்னைச் சுற்றியுள்ளவற்றினோடும் கொண்ட உராய்வுகள் அனைத்தும் வெகுவாகக் குறைந்துவிட்டன.” – வைஷ்ணவி, 26, ஆந்திரா

தீவிரமான உயிராற்றல்

"நாள் முழுவதும் என் சக்திநிலையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை என்னால் உணர முடிகிறது, நான் மிகவும் துடிப்பாகவும், ஆற்றலுடனும், ஆக்கப்பூர்வமாகவும், செய்யும் எந்தவொரு செயலிலும் முழு ஈடுபட்டையும் உணர்கிறேன். சாதனா பாதை துவங்கியதிலிருந்தே நான் மிகவும் சமநிலையுடன் தெளிவாக இருப்பதைக் காண்கிறேன். இதில் மிக அற்புதமான மாற்றம் என்னவென்றால் உயிராற்றலின் தீவிரம். இது மாயாஜாலம் போல நம்பமுடியாததாக உள்ளது – இதை ஒருவர் அனுபவிக்க மட்டுமே முடியும். உண்மையில் சாதனா பாதை என் வாழ்க்கையில் ஒரு உன்னதமான பெரிய படி” – கபில், 18, மகாராஷ்டிரா

ஆதியோகி பிரதட்சனை + ஏகாதசி = வெடித்தெழும் ஆற்றல்

life-in-sadhanapada-when-sadhana-begins-to-catch-fire-bakthi-sadhanapada

சாதனா பாதையின் ஒரு முக்கிய அங்கம் ஆதியோகி பிரதட்சனை – தியானலிங்கம் மற்றும் 112 அடி ஆதியோகியை வலம்வருதல், இது கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் நடைபயணம். சக்திவாய்ந்த மந்திர உச்சாடனத்துடன், ஒரு குறிப்பிட்ட முத்திரையைக் கொண்டு வலம்வரும் பிரதட்சனை என்பது ஈஷா யோக மையத்தில் உள்ள பல்வேறு பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களின் சக்தியை நம்முள் நிலைபெறச் செய்யும் ஒரு எளிய வழியாகும். மாதம் இருமுறை வரும் விரத நாளான ஏகாதசி அன்று மேற்கொள்ளப்படும் ஆதியோகி பிரதட்சனை மேலும் தீவிரமான அனுபவத்தை வழங்குகிறது.

இந்த அனுபவம் எனக்குள் பெருவெடிப்பை உண்டாக்கியது>

"ஏகாதசி நாள் வந்தாலே நான் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறேன், ஏனெனில் அளப்பரிய ஆற்றலை எனக்குள் உணரக்கூடிய சாத்தியத்தை இது தருகிறது. நாங்கள் ஏகாதசி நாளிலே விரதம் இருக்கிறோம், அதற்காக நான் மனதளவில் தயாராக இருப்பதால், எனக்கு பசிகூட எடுப்பதில்லை. பிரதட்சனை செய்யும் சமயத்தில், ஏதொவொரு போதையில் இருப்பதைப் போலவே நான் உணர்கிறேன், ஆனால் மிகுந்த விழிப்புநிலையுடனும் அதீத சமநிலையுடனும் இருக்கிறேன். நான் மந்திர உச்சாடனத்தை பக்தியுடன் உரக்கச் சொன்னபோது, எனக்குள் ஏதோ ஒன்று பெரிய அளவில் ஆர்த்தெழ ஆரம்பித்தது. திடீரென்று நான் என் உடலை உணரமுடியாத அளவுக்கு இலகுவாக உணர்ந்தேன். அப்போது ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சில நொடிகள், என் உடல் என்னிடமிருந்து தனியாகப் பிரிந்து இருப்பதாக உணர்ந்தேன் – இங்கு நடந்து கொண்டிருக்கும் நபர் ஒருவராகவும் இந்த விழிப்புணர்வுள்ள நபர் வேறொருவராகவும் உணர்ந்தேன். அன்றைய தினம் இந்த அனுபவம் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பல பிரதட்சனைகள் செய்த பிறகும் நான் சோர்வடையவே இல்லை. உண்மையில் அது எனக்கு மென்மேலும் சக்தியளித்தது. ஒவ்வொரு ஏகாதசியும் எனக்குப் புதிய புதிய அனுபவங்களைத் தருகிறது, ஒவ்வொரு முறையும் நான் பிரதட்சனை செய்யும்போது அது என்னை ஆச்சரியப்படுத்தத் தவறுவதே இல்லை. இத்தகைய ஒரு செயல்முறையில் பங்கேற்றுள்ளதற்கு நான் மிகவும் கடமைப்பட்டவனாக இருக்கிறேன்.”– முர்ச்சனா, 24, அசாம்

பக்தி சாதனா

ஒருவரின் உள்ளத்தில் பக்தி நிலைபெற்றிருக்கும்போது எந்தத் தடையும் ஒரு பொருட்டல்ல. இந்த அம்சத்தை வளர்ப்பதற்காக சத்குரு பக்தி சாதனாவை வடிவமைத்துள்ளார்.

நான் மிகுந்த உயிர்ப்புடன் உணர்கிறேன்

“பக்தி சாதனா என்னை மிகவும் வளப்படுத்தியுள்ளது. நான் என்னைச் சுற்றியுள்ளவற்றை உணரும் மற்றும் பார்க்கும் விதமும், என் அடிப்படையுமே முற்றிலும் மாறிவிட்டது. இதற்கு முன்பு, நான் எதற்கு மதிப்பளிக்க வேண்டும், எதற்கு கூடாது, எது மகத்துவமானது, எது மகத்துவமற்றது என்றவாறெல்லாம் பிரித்திருந்தேன். பக்தி சாதனா செய்ய ஆரம்பித்த பிறகு, இப்போது நான் பார்க்கும் அனைத்திற்கும், என் அறிவுக்கு எட்டிய அனைத்திற்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு, அவை எல்லாம் மதிக்கப்பட வேண்டியவை என்று நான் உணர ஆரம்பித்தேன். பக்தி சாதனா எனது ஈகோவை ஓரங்கட்டி வைத்துவிட்டு என்னை மிகவும் உயிர்ப்புடன் இருக்க வழி செய்துள்ளது. நான் வாழ்க்கையை வணங்கக் கற்றுக்கொண்டுள்ளேன்.” – மிருதுலா, 24, மகாராஷ்டிரா

ஒரு முக்கியமான தரச்சோதனை

life-in-sadhanapada-when-sadhana-begins-to-catch-fire-monthly-meet

ஒவ்வொரு மாதமும், முழு குழுவும் ஒன்றாகச் சந்தித்து சத்குருவின் வீடியோக்களைப் பார்க்கிறார்கள், அவர்களின் தினசரி பயிற்சிகளை சரிசெய்து கொள்கிறார்கள் மற்றும் அவர்களின் அனுபவங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். கடந்த மாதம் எப்படி இருந்தது என்பதைப் பற்றி கலந்தாலோசிக்க அனைவரும் ஒன்றிணைவதால், இது அவர்கள் ஏற்றுக்கொண்ட நோக்கத்தின் சாரத்தை நினைவுகூர்ந்து, மீண்டும் புதுப்பித்து, வரவிருக்கும் மாதத்திற்குத் தயார்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமைகிறது.

நான் எவ்வாறு இருக்க விரும்புகிறேன் என்பதற்கான அடிப்படையை அமைக்கிறது

"இந்த இடத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றாக இருப்பது பரஸ்பர உறவை மேலும் வலுப்படுத்துகிறது. நாங்கள் எங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது, நான் எதற்காக இங்கே இருக்கிறேன் என்ற நோக்கமும் புத்துயிர் பெறுகிறது. இது எங்களின் இந்த உன்னத பயணத்தில் தரச்சோதனை போல செயல்படுகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு நான் எவ்வாறு இருந்தேன், இப்போது நான் எவ்வாறு இருக்கிறேன் என்பதை பரிசோதனை செய்து என்னை நானே மதிப்பீடு செய்துகொள்ள உதவுகிறது. வரவிருக்கும் மாதத்தில் நான் எவ்வாறு இருக்க விரும்புகிறேன் என்பதற்கான அடிப்படையை இது அமைக்கிறது.” – இந்திரதீப், 35, டெக்சாஸ், அமெரிக்கா

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வாழைப்பழத்திலே பிரிவு - ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்

life-in-sadhanapada-when-sadhana-begins-to-catch-fire-edgardo-Baran-banana

யோக மையத்தில், நமது உள்ளார்ந்த கட்டாயங்களும், நமது விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் மற்றவர்கள் மீது நாம் எவ்வாறு எதிர்பார்ப்புகளைத் திணிக்கிறோம் என்பதும் தொடர்ந்து நினைவுபடுத்தப்படுகின்றன.

இது மிகவும் பழுத்துவிட்டது!

எழுதியவர் பாரன், 35, ஆஸ்திரேலியா

“பிக்ஷா ஹாலில், இன்வோகேஷன் முடிந்த பிறகு கண் திறந்து பார்த்தேன். தன்னை என்னிடம் அர்ப்பணிக்கக் காத்திருக்கும் பழுத்த வாழைப்பழத்தின் பொன்னிற ஒளியைக் கண்டேன், பாக்கியவானாக உணர்ந்தேன்.

அப்பழத்தின் கருத்த வெளிப்புறத் தோலில் நீர் வடிந்து இருந்தது. ஒன்று அதனது காலம் கடந்து விட்டிருக்கக் கூடும் அல்லது இது ஒரு ஞானப்பழமாக இருக்கக்கூடும். உண்டுப்பார்க்கலாமே என எண்ணினேன்.

அதன் கருத்தத் தோலை உரித்தபோது, பழுத்த மஞ்சள்நிற பழத்தைக் கண்டேன், ஆனால் பழுப்பு மற்றும் வெள்ளை நிற பாகங்களும் தென்பட்டன. நான் நம்பிக்கையுடன் சாப்பிட்டுப் பார்த்தேன், அது சற்று புளிப்பு சுவையுடன் இருந்தது.

அதன்பின் எனக்கும் அங்கு அன்னசேவையில் ஈடுபட்டிருந்த வாலண்டியருக்கும் இடையில் நடந்த உரையாடல் இது:

நான்: இந்த வாழைப்பழம் கெட்டுப்போய்விட்டது. வேறொரு பழத்தைத் தருகிறீர்களா?

வாலண்டியர் : ஆனா, இது சாப்பிட நல்லா இருக்கும்.

நான்: நான் பழுத்த வாழைப்பழங்களை சாப்பிடுவேன், ஆனால் இது மிகவும் பழுத்து, கெட்டுப்போய்விட்டது.

வாலண்டியர்(வாழைப்பழத்தை கவனமாக ஆராய்ந்த பிறகு): வாழைப்பழத்தை சாப்பிடுவதற்கு உகந்த நிலை இதுதான். நான் வாழைப்பழத்தை இந்த நிலையில்தான் சாப்பிடுவேன்.

நான்: அப்படியென்றால், இதை நீங்களே சாப்பிடுங்கள்...

நான் என் தட்டைப் பார்த்து கீழே குனிந்தேன், தன் வாழ்வை எனக்காக அர்ப்பணித்தும் புறக்கணிக்கப்பட்டு அழுதுகொண்டிருந்த அந்த மஞ்சள்நிற வாழைப்பழத்தைப் பார்த்தேன். ஒருவித குற்ற உணர்ச்சியை உணர்ந்தேன், நான் செய்ததன் எதிர்வினை என் மனதில் எதிரொலித்தது - ‘அப்படியென்றால், இதை நீங்களே சாப்பிடுங்கள்... அப்படியென்றால், இதை நீங்களே சாப்பிடுங்கள்... இதை நீங்களே சாப்பிடுங்கள்...’

‘இந்த வாழைப்பழத்தை நாமே சாப்பிடலாம்,’ என நினைத்தேன். எதிர்வினையாக நான் சொன்னதற்காக இன்று பிற்பகலில் அந்த வாலண்டியரிடம் மன்னிப்பு கேட்கலாம் என்றிருந்தேன். ஆழ்ந்த ஆராய்ச்சிக்குப் பிறகு, நான் மிகவும் எச்சரிக்கையுடன் சாப்பிட ஆரம்பித்தேன், மஞ்சள், பழுப்பு மற்றும் வெள்ளை நிறமான பகுதிகளுக்கு இடையில், தேர்வு செய்து கவனமாகக் கடித்து சாப்பிட்டேன். இந்த செயல் அபாயங்களைக் கடந்து ஒரு குன்றின் உச்சியில் நடப்பதைப் போல இருந்தது.

பழம் சற்று புளிப்பாகவே இருந்தாலும் இதை சாப்பிடுவது நல்லதுதான் என்று நினைத்தேன். என் விருப்பு வெறுப்புகளே வாழைப்பழத்தின் மீதான ஒருவித நிர்ப்பந்தத்தை உருவாக்குகிறதென நினைத்தேன்.

அந்த நாளின் பிற்பகுதியில், அந்த வாலண்டியர் இரண்டாவது முறை பரிமாறுவதற்காக என்னை அணுகினார்:

வாலண்டியர்: சாரி... : நான் வருந்துகிறேன்...

நான்: இல்லை, இல்லை, நான்தான் மன்னிப்பு கேட்க வேண்டும். நான் அப்பழத்தை சாப்பிட்டுவிட்டேன், அது நன்றாகவே இருந்தது - நீங்கள் சொன்னது சரிதான்.

வாலண்டியர்: இருந்தாலும்... சாரி...

நான்: நீங்கள் வருத்தப்பட தேவையில்லை. உங்களுடன் அப்படி பேசியதற்காக நான் வருத்தப்படுகிறேன்.

வாலண்டியர்: இல்லை, நீங்கள் சாப்பிட்டதைப் போலவே ஒரு வாழைப்பழத்தை நானும் சாப்பிட்டேன், அதனால் இப்போது எனக்கு வயிற்று வலி ஆரம்பித்துவிட்டது. அந்த வாழைப்பழம் கெட்டுப்போய்விட்டது, நீங்கள் அதை சாப்பிட்டிருக்கக்கூடாது!

நான்: …

நாங்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் சிரித்து, வணங்கி விடைபெற்றோம்! நாம் முழு விழிப்புணர்வு நிலையில் ஒவ்வொரு கணமும் இருக்க இயலாவிட்டாலும், ஒவ்வொரு நாளும் அதை நோக்கிய முயற்சிகளை கட்டாயம் மேற்கொள்ள முடியும் என்பதை எனக்கு உணர்த்திய தருணமாக இதை நான் பார்க்கிறேன்.”

life-in-sadhanapada-when-sadhana-begins-to-catch-fire-edgardo-Baran

இது அதிகமாகப் பழுத்துவிட்டதாகத் தெரியவில்லை!

எழுதியவர் எட்கர்டோ, 22, புவேர்ட்டோ ரிக்கோ

“பிக்ஷா ஹாலில், நான் சாப்பிடுவதற்கு முன்பு, சிறிது நேரம் சேவை செய்ய விரும்புவேன். அன்று நான் ஒருவருக்கு வாழைப்பழத்தை பரிமாறினேன், அது மிகவும் பழுத்ததாகவும் கெட்டுப்போய் விட்டதாகவும் அவர் என்னிடம் கூறினார். நான் வாழைப்பழத்தைப் பார்த்தேன். எனக்கு பழுத்த வாழைப்பழங்கள் என்றால் பிடிக்கும், அதனால் நான் இது நல்ல வாழைப்பழம்தான் என்று சொன்னேன். அவர் ‘ஆ, அப்படியென்றால் நீங்களே அதை சாப்பிடுங்கள்’ என்று சொன்னார். அவர் அதைச் சொன்னபோது, நான் சூழ்நிலைக்கு எதிர்வினையாக நடந்து கொண்டுள்ளேன் என்பதை உணர்ந்தேன்.

அதன் பிறகு, நான் சாப்பிட உட்கார்ந்தபோது, கறுப்புநிற வாழைப்பழத்தைத் தேடினேன். ‘இதை நான் ஒருவருக்கு பரிமாறும்போது, அதை சாப்பிட நானும் தயாராக இருக்க வேண்டும்’ என்று நான் நினைத்தேன். எனவே நான் நன்றாகப் பழுத்த வாழைப்பழத்தை எடுத்துக்கொண்டேன். நான் அதை உரிக்க ஆரம்பித்தபோது, ஒருவிதமான வாசனை வந்தது. ஆனால் பழுத்த வாழைப்பழம் நல்லதுதானே என்று நினைத்ததால் அதை சாப்பிட முடிவு செய்தேன். நான் வாழைப்பழத்தை வாயில் வைத்தவுடன், என் வயிறு சிறிது பிசைய ஆரம்பித்தது! நான் அப்படியும் முழு வாழைப்பழத்தையும் சாப்பிட்டு முடித்தேன். பின்பு எனது சேவைக்காக நான் வந்தபோது நான் செய்த முதல் காரியம் பாரனைத் தேடி அவரிடம் மன்னிப்பு கேட்டதுதான். நான் நிலைமையை தவறாக மதிப்பிட்டுவிட்டேன், சூழ்நிலை அறியாமலேயே நடந்துகொண்டேன் என்று அவரிடம் சொன்னேன். அவர் மிகவும் எளிய மனம் கொண்டவராக இருந்தார், இந்த சூழ்நிலையை முற்றிலும் மாறுபட்ட விதத்தில் அணுகினார். நாங்கள் சிரித்துக்கொண்டே விடைபெற்றோம். இதுபோன்ற சின்ன சின்ன தருணங்கள்தான் எனது சாதனை எவ்வளவு தாக்கத்துடன் செயல்படுகிறது என்பதை எனக்குக் காட்டுகிறது.”

வேலை நடந்துகொண்டே இருக்கிறது

இன்னும் நீண்ட தூரம் பயணப்பட வேண்டியுள்ளது, ஆனால் ஒவ்வொரு பங்கேற்பாளரும் அவர்கள் தங்கள் பாதையில் ஊன்றி இருப்பதை நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்.

உண்மையான சுதந்திரம்

"நான் எதை நினைக்கிறேனோ அதைச் செய்வதுதான் சுதந்திரம் என்றுதான் நான் எப்போதும் நினைத்திருந்தேன், ஆனால் இங்கு வந்த பிறகுதான் உண்மையான சுதந்திரத்தை நோக்கி படிப்படியாக முன்னேறுகிறேன் - உண்மையான சுதந்திரம் என்பது நமது விருப்பு வெறுப்புகளிலிருந்து விடுபடுவதுதான். நான் செய்யும் செயல் எதுவானாலும் அதில் மேலும்மேலும் ஈடுபாட்டையும் மகிழ்ச்சியையும் காண்கிறேன். உண்மையிலேயே சுதந்திரமாக இருப்பதன் அர்த்தத்தை நான் கொஞ்சம் அனுபவித்து வருகிறேன் என்று நினைக்கிறேன்.” – ஹிமான்ஷு, 24, உத்தரகண்ட்

life-in-sadhanapada-when-sadhana-begins-to-catch-fire-ishablog-participants-laughing

இப்போது அவ்வளவு சீரியஸாக இல்லை

“நான் எனது தனிப்பட்ட எல்லைகளுக்குள்ளேயே வாழ்ந்து வந்தேன். நான் எப்போதும் ஒரு சீரியஸான முகத்தை சுமந்த படியே இருந்தேன், என்னைச் சுற்றி நான் எழுப்பிய சுவர்களை உடைக்க மக்கள் பெரும்முயற்சி செய்ய வேண்டியிருந்தது. இப்போது நான் ஒரு குழந்தையைப் போல, எவ்வித சிரமமும் இன்றி எல்லோரிடமும் மகிழ்ச்சியுடனும் அன்புடனும் பழகுகிறேன். இன்னும் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் என்னவென்றால், ஒருவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், சூழ்நிலை எப்படி இருந்தாலும், என்னால் விழிப்புணர்வுடன் எதிர்கொள்ள முடிகிறது அல்லது நான் கட்டாயமான விதத்தில் நடந்துகொண்டால் அடுத்த கணமே என்னால் நான் இவ்வாறு எதிர்வினையாக நடந்துகொண்டேன் என்பதை உணர முடிகிறது. இதுபோன்ற ஒரு நிலை சாத்தியம் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை, என்னுள் இருந்த நிர்ப்பந்தமான எதிர்வினைகளையே என் இயல்பான சுபாவமாகக் கருதி வாழ்ந்து வந்தேன் – ஆனால் உண்மையில் அது ஒரு பொய்.” – வினீதா, 30, பஞ்சாப்

உடல் மற்றும் மனதிற்கு அப்பால் ஏதோ

"என் உடலும் மனமும் முன்பு இருந்த அதே போராட்டங்களைத்தான் இப்போதும் கடந்து செல்கின்றன, ஆனால் நான் என்ன செய்கிறேன் என்பதையும், என்னுள் நான் எப்படி இருக்கிறேன் என்பதையும் முன்பு இருந்த அளவிற்கு என் உடலும் மனமும் இப்போது நிர்ணயிப்பதில்லை. என் உடலும் மனமும் என் உணர்வில் முதன்மையான இடத்திலிருந்து பின்னே சென்றுவிட்டன. மேலும் சுகந்தமான ஏதோ ஒன்று என் உணர்வுநிலையின் மையப்பரப்பை ஆக்கிரமித்துவிட்டது.” – அஸ்வினி, 27, ஓஹியோ, அமெரிக்கா

சாதனா பாதை - வாழ்க்கைக்கான காப்பீடு

life-in-sadhanapada-when-sadhana-begins-to-catch-fire-sadhguru-sathsang-with-sadhanapada

சத்குரு (சாதனா பாதை பங்கேற்பாளர்களுடன் உரையாற்றியபோது): ஒரு ஆன்மீக ஆர்வலருக்கும் பொருள்சார்ந்த வாழ்க்கை முறையில் ஈடுபட்டுள்ளவருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் - பொருள்சார்ந்த வாழ்க்கை முறைகளில் இருப்பவர்கள் வாழ்க்கை அவர்களுக்கு எப்போதாவது கசையடி கொடுத்தால் ஓடுவார்கள். ஏதேனும் பொருளாதாரப் பிரச்சனை இருந்தால் அல்லது குடும்பத்தில் யாராவது உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அல்லது ஏதேனும் நடக்கக் கூடாதது நடந்துவிட்டால், அவர்கள் ஓடிவிடுவார்கள். ஆனால் ஒரு ஆன்மீக சாதனையாளர் என்றால், அவர் தனக்குத்தானே கசையடி கொடுத்துக் கொள்கிறார் என்று பொருள். மற்றவர்கள் இதை உங்களுக்குக் கொடுக்கும் வரை என்று நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை! உங்களின்மேல் செய்யக்கூடிய அனைத்தையும் நீங்களே செய்துவிடுகிறீர்கள். எனவே வேறு யாரும் உங்களை எதுவும் செய்ய முடியாது. இதுவே சுதந்திரமென்று உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால், நான் பல ஆண்டுகளாக தனித்திருந்து, உச்சி முதல் பாதம் வரை எல்லா வழிகளிலும் என்னை நானே விமர்சித்தேன், இன்று மக்கள் என்னைப்பற்றி என்ன சொன்னாலும் பரவாயில்லை. அதையெல்லாம்தான் நான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே! அதனால் என்ன?

உங்கள் உடல், உங்கள் மனம் மற்றும் உங்கள் சக்திநிலை உங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் தடையாக இருக்கக்கூடாது - இந்த ஒரு விஷயத்தை நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும். சாதனா பாதை என்பதன் அர்த்தமே இதுதான். உங்களிடம் ஒரு குறுகிய கால அளவு மட்டுமே உள்ளது, இன்னும் கிட்டத்தட்ட மூன்றரை மாதங்களே உள்ளன. நீங்கள் இதில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சரியான முறையில் இதை நீங்கள் பயன்படுத்தினால், உங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த காலகட்டத்தை ஒரு காப்பீடு போல எண்ணிக் கொண்டாடுவீர்கள். இந்த சமயத்தில் உங்களை நீங்கள் நன்கு மேம்படுத்திக்கொண்டால், வாழ்க்கை உங்களை நோக்கி எதை எறிந்தாலும் பரவாயில்லை, எதுவுமே உங்களைத் திணறடிக்க முடியாது என்பதை நீங்கள் காண்பீர்கள். அந்த உறுதி உங்களுக்குள் நிலை பெறும்போது, உலகில் மகத்தான பல செயல்களை நீங்கள் செய்வீர்கள். அதை நீங்கள் செய்ய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

அடுத்து வருவது…

பல்வேறுவிதமான ஆன்மீக ஆர்வலர்களின் தாய்வீடு போன்ற ஈஷா யோக மையமானது, எல்லாவிதமான ஆன்மீக சாதனையாளர்களின் தனிப்பட்ட ஆன்மீக செயல்முறைக்கு ஊட்டமளிக்கும் விதத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் அவருடைய உள்நிலை வளர்ச்சிக்கான பல்வேறு வகையான ஆன்மீக செயல்முறைகள் இங்கே வழங்கப்படுகின்றன என்பது தற்செயலாக நிகழ்வதல்ல. “சாதனா பாதையில் வாழ்க்கை” ன் அடுத்த பதிப்பில், சாதனா பாதை பங்கேற்பாளர்கள் மகிழ்ச்சியுடன் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் பல்வேறு சேவைகளின் தனித்துவமான சுவாரசியங்களைப் பற்றி அறிவோம்!

ஆசிரியரின் குறிப்பு: சாதனா பாதை பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும், அடுத்து வரவிருக்கும் சாதனா பாதைக்கு முன்பே பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.